Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் தி.மு.க. போராட தயங்காது- கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

DMK will protest against ADMK govt if it throws reservations, says Karunanidhi
சென்னை: இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் போராட வேண்டிய நிலை வந்தால் திமுக போராடத் தயங்காது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை...

திராவிட இயக்கக் கொள்கைகளையும், சின்னங்களையும் வேரோடும், வேரடி மண்ணோடும் குழி தோண்டி புதைக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு முதல்வர் ஜெயலலிதாவின் அ.தி.மு.க. அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. சமூக நீதி எனப்படும் இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் 1921ஆம் ஆண்டு நீதிக் கட்சி ஆட்சியில் தொடங்கிய போர்க்களத்தில் மாறி மாறி வரும் வெற்றி தோல்விகளுக்கிடையே - திராவிட இயக்கத்தின் உயிரோட்ட முழக்கமான சமுதாயத்தில் கல்வி, வேலை வாய்ப்புகளில் முன்னேறியுள்ளோர் தவிர்த்து ஏனைய பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோருக்கான இட ஒதுக்கீடு தொடர்பான தீர்ப்புகள் பலவற்றைப் பெற்று மகிழ்ச்சியும் அடைந்திருக்கிறோம்; மனக்கலக்கமும் பெற்றிருக்கிறோம்.

மாநிலத்திலோ, மத்தியிலோ ஆட்சிப் பொறுப்பை ஏற்போரைப் பொறுத்து இந்தச் சமூக நீதிப் போராட்டத்தில் வெற்றி தோல்விகள் அமைந்திருக்கின்றன. இப்போது ஜெயலலிதா எடுத்துள்ள முடிவினால் சமூக நீதிக் கொள்கைக்கு மீண்டும் ஒரு சோதனை ஏற்பட்டிருக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவின்படி ஓமந்தூரார் வளாகத்தை உருவாக்கி, அங்கே மிக எழிலுறக் கட்டி முடிக்கப்பட்டு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியும், பிரதமர் மன் மோகன் சிங்கும் நானும் கலந்து கொண்டு திறந்து வைத்தோம் என்ற ஒரே காரணத்திற்காக புதிய தலைமைச் செயலகக் கட்டிடத்தையே இரண்டரை ஆண்டுக் காலமாக பூட்டி வைத்த முதல்வர், தற்போது அதே கட்டிடத்தில் புதிய மருத்துவமனையை நடத்தப் போவதாக அறிவித்து, தலைமைச் செயலக அலுவலகத்திற்காகவும், சட்டப் பேரவைக்காகவும் எனத் திட்டமிட்டு கட்டப்பட்டிருந்த கட்டிடத்தை மருத்துவமனைக்கு உரிய விதத்தில் மாற்றுவதற்காக, பல கோடி ரூபாய், மக்களின் வரிப் பணத்தை வீண் விரயம் செய்து மாற்றியமைத்து, தற்போது அந்த மருத்துவ மனையில் பணியாற்றுவதற்காக டாக்டர்களையும், அலுவலர்களையும் தேர்ந்தெடுக்கும் பணியிலே ஈடுபட்டிருக்கிறார்.

இந்த அதிகாரிகளையும், டாக்டர்களையும் தேர்ந்தெடுப்பதற்கான அரசாணை தான் 27-12-2013 அன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. வேண்டுமென்றே, கழக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடத்தை மருத்துவ மனையாக மாற்றுகின்ற காரணத்தால், தற்போது அங்கே நியமிக்கப்படவுள்ள அதிகாரிகளுக்கும், டாக்டர்களுக்கும் சம்பளத்தையும் மிக அதிக அளவிலே அறிவித்திருக்கிறார்கள்.

அங்கு இயக்குர் பதவிக்கான மாதாந்திர சம்பளம் எவ்வளவு தெரியுமா? இரண்டரை இலட்சம் ரூபாய். தலைமைச் செயலாளருக்குக் கூட, ஏன் முதல் அமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும் கூட இந்த அளவிற்கு சம்பளம் இருக்குமா என்று தெரியவில்லை! மூத்த மருத்துவ ஆலோசகர் என்று 14 பேரை நியமிக்கப் போகிறார்களாம்; அவர்களுக்கான ஊதியம், தலா ஒன்றரை இலட்சம் ரூபாய். இணை மருத்துவ ஆலோசகர் என்று 13 பேரைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்களாம். என்ன சம்பளம் தெரியுமா? ஒருவருக்கு ஒரு இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய்! இளநிலை ஆலோசகர்கள் என்று 23 பேரை நியமிக்கப் போகிறார்களாம்; அவர்களுக்கெல்லாம் தலா ஒரு இலட்சம் ரூபாய் ஊதியம்.

பதிவாளர் என்று 14 பேர், மாதாந்திர ஊதியம் 70 ஆயிரம் ரூபாய். நிலைய மருத்துவர் என்று 19 பேர், மாதம் 50 ஆயிரம் ரூபாய் ஊதியம். மேலும் இந்தப் பதவிகளுக்கெல்லாம் "There is no reservation for these posts"என்று, அதாவது இந்தப் பதவிகளுக்கு"இட ஒதுக்கீடு"" கிடையாது. ஊதியம் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு என்று குறிப்பிட்டுள்ள அடுத்த வரியிலேயே அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அரசின் அந்த உத்தரவில், பத்தி 7இல் "சி" பகுதியில், "Rule of Reservation is not applicable for the posts of Senior Consultants, Associate Consultants, Junior Consultants, Registrar and Residents. However, persons belonging to OBC/BC/MBC/SC/ST and women candidates are encouraged to apply"என்று வெளியிடப்பட்டுள்ளது.

திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் அரசின் இந்த ஆணையைக் கடுமையாக எதிர்த்து அறிக்கை வெளியிட்டதுடன், இதனை அ.தி.மு.க. அரசு திரும்பப் பெறாவிட்டால், தமிழகம் கொந்தளிக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார். அ.தி.மு.க. அரசு சமூக நீதி இலட்சியத்திற்கு எதிராகச் செயல்படுவதென்பது இது முதல் முறையல்ல; 2013, ஆகஸ்ட் மாதம் 17, 18ஆம் தேதிகளில், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.

அப்போதே நான் "கேள்வி-பதில்" பகுதியில், "தகுதித் தேர்வுக்கு மொத்த மதிப்பெண் 150. தேர்ச்சி பெறுவதற்கு 90 மதிப்பெண்கள் பெற வேண்டும், அதாவது 60 சதவிகிதம். இரண்டு முறை ஏற்கனவே நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்ததால், அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்ததால், குறைந்த பட்சம் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்காவது சலுகை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், தேர்ச்சி மதிப்பெண்ணில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. தேர்ச்சி பெற அனைத்துப் பிரிவினருமே 150 மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று தான் வைக்கப்பட்டது.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோர், உயர் வகுப்பினரைப் போலவே 60 சதவிகிதம் மதிப்பெண் பெற வேண்டும் என்பது தமிழகத்திலே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் வழிகாட்டுதலுக்கு விரோதமானதாகும்.

தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி, ஆந்திராவில் முன்னேறிய வகுப்பினருக்கு 60, பிற்படுத்தப்பட்டோருக்கு 50, தாழ்த்தப்பட்டோருக்கு 40 சதவிகிதம் மதிப்பெண்கள் என்றும் - அஸ்ஸாமில் உயர் சாதியினருக்கு 60, மற்றவர்களுக்கு 55 சதவிகிதம் என்றும் - ஒரிசாவில் உயர்சாதியினருக்கு 60 சதவிகிதம், மற்றவர்களுக்கு 50 சதவிகிதம் மதிப்பெண்கள் என்றும் தகுதி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் ஜெயலலிதாவின் அ.தி.மு.க. அரசு அனைத்துப் பிரிவினருக்கும் 60 சதவிகித மதிப்பெண் என்று கல்வி மற்றும் சமூக நிலைகளில் பிற்படுத்தப்பட்டோரையும், மிகப் பிற்படுத்தப்பட்டோரையும், தாழ்த்தப்பட்டோரையும் முன்னேறிய வகுப்பினரைப் போலவே கருதி, நிர்ணயித்துள்ளது என்பது, தந்தை பெரியார் அவர்களின் சமூக நீதி கொள்கைக்கு எதிரானதும், இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு முற்றிலும் விரோதமானதுமாகும்.

எனவே ஆசிரியர் தகுதித்தேர்வினை ஆகஸ்ட் திங்களில் நடத்தப் போவதாக அறிவித்துள்ள தமிழக அரசு இந்த முறையாவது இட ஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்றி வேறு மாநிலங்களில் செய்திருப்பதைப் போல; தேர்வுக்கான மதிப்பெண்களில் மாற்றம் செய்து, பின் தங்கிய முதாயத்தினரைக் காப்பாற்ற முன் வர வேண்டும்" என்று விரிவாக தெரிவித்திருந்தேன். எனினும் அதிமுக அரசு சார்பில் அதைக் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை.

மேலும், ஜெயலலிதாவின் அ.தி.மு.க. அரசு, 22-11-1993 அன்று உச்ச நீதி மன்றத்தில், 69 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல் படுத்த மாட்டோம்; 50 சத விகித இட ஒதுக்கீட்டையே நடைமுறைப்படுத்துகிறோம் என்று உறுதி மொழி கொடுத்தது. இதிலிருந்து அவர்கள் மனதிலே எந்ந கருத்து வேரூன்றி இருக் கிறதோ, அதைத் தான் வாய்ப்பு கிடைக்கின்ற நேரத்தில் எல்லாம் வலியுறுத்தி வருகிறார்கள் என்பது வெள்ளிடைமலை. திராவிட இயக்கக் கருத்துகள் வலிவு பெற்று விடக் கூடாது என்பது தான் அம்மையாரின் அடிப்படை எண்ணம் என்பது இப்போது மீண்டும் வெளியாகியிருக்கிறதல்லவா?

31-12-1993 அன்று தமிழகச் சட்டமன்றம் ஒருமனதாக மசோதா ஒன்றினைக் கொண்டு வந்து நிறைவேற்றிக் கொண்ட நேரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆதரவையும் பெற்றிருந்த நிலை அடியோடு மாறி இன்றைக்கு ஜெயலலிதா தானே ஒரு பொறியில் சிக்கிக் கொண்டிருக்கிறார். அதிலிருந்து விடுவித்துக் கொள்ள அவர் மேற்கொண்ட முயற்சி நிலைமையை மேலும் மோசமாக்கி விட்டது.

அரசின் மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தரும்படி பிரதமர் அவர்களை வற்புறுத்துவதற்காக கடந்த ஜூன் மாதம் 25ஆம் தேதி டெல்லி சென்ற போது, தனது தலைமையிலான பிரதிநிதிகள் குழுவில் பங்கேற்க வருமாறு ஜெயலலிதா விடுத்த அழைப்பை அனைத்து முக்கிய எதிர்க்கட்சிகளும் நிராகரித்து விட்டன. திராவிட இயக்கத்தின் அஸ்திவாரமான கொள்கைகளில் ஒன்றான இந்தப் பிரச்சினையில் ஜெயலலிதா உண்மையாக இல்லை, இரட்டை வேடம் போடுகிறார் என்றே அவர்கள் கருதுகிறார்கள்) என்று "ப்ரண்ட் லைன்" இதழில் அப்போதே வெளிவந்திருந்தது.

இதையெல்லாம் மீண்டும் ஒரு முறை மெய்ப்பிக்கும் வகையிலே தான் தற்போது இந்த சிறப்பு மருத்துவ மனைக்கு அதிகாரிகளையும், அலுவலர்களையும் தேர்ந்தெடுக்கின்ற நேரத்தில், இட ஒதுக்கீடு கிடையாது என்று ஜெயலலிதா மீண்டும் ஒரு முறை "சமூக நீதி"யின் குரல்வளையை நெரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

அ.தி.மு.க. அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின் அபாயத்தை எதிர்த்து அறிக்கை வெளியிட்ட இளவல் கி. வீரமணி அவர்கள் போராட்டக் களங்களை உருவாக்கப் போவதாக தெரிவித்திருக்கிறார். இட ஒதுக்கீடு என்பது திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கை. அதற்காக நாம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக யார் எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் திராவிட முன்னேற்றக் கழகம் அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது; தானே களம் அமைத்துப் போராட நேர்ந்தாலும் தயங்காது! என்று தெரிவித்துள்ளார் கருணாநிதி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+