For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணைய மாநாடு-2012

Google Oneindia Tamil News

Annamalai university
- முனைவர் மு.இளங்கோவன்

உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் (உத்தமம்) அமைப்பின் சார்பில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மொழியியல் உயராய்வு மையத்தில் பதினொன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2012 திசம்பர் மாதம் 28 முதல் 30 வரை மூன்று நாள் நடைபெற உள்ளது.

உத்தம நிறுவனம் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் தன்னார்வத் தொண்டு நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு பன்னாட்டு அமைப்பு ஆகும்.

கணினி, இணையம் ஆகியன தொடர்பாகத் தமிழின் பயன்பாடுகள் பற்றிய ஆய்வுகள் உலகெங்கிலும் தமிழர்களிடையே பரவும் வகையில் உலகத் தமிழ் இணைய மாநாடுகளைக் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக உத்தம நிறுவனம் நடத்திவருகிறது. உத்தம நிறுவனம் உலகத் தமிழர்களைக் கணினி வாயிலாக இணைப்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

இது வரை ஏழு மாநாடுகளை அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, ஜெர்மனி, ஆகிய நாடுகளில் முன்னணிப் பல்கலைக் கழகங்களோடு இணைந்தும், தமிழகத்தில் மூன்று மாநாடுகளைத் தமிழக அரசின் முழு ஆதரவோடும் உத்தம நிறுவனம் நடந்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தொடர்பான கணினி சார் மொழியியல் துறையில் குறிப்பிடத்தக்க ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மொழியியல் உயராய்வு மையத்தில் வரும் திசம்பர் 28 முதல் 30 வரை "உலகத் தமிழ் இணைய மாநாடு 2012" ஐ நடத்த உத்தமத்தின் செயற்குழு முடிவெடுத்துள்ளது.

அண்ணாமலைப் பல்கலைக் கழக மொழியியல் துறைப் பேராசிரியர் மா. கணேசன் அவர்கள், மாநாட்டின் உள்ளூர்க் குழுவுக்குத் தலைமை தாங்கவிருக்கிறார். உத்தமம் அமைப்பின் துணைத்தலைவர் திரு. இளந்தமிழ்(மலேசியா) அவர்கள் மாநாட்டின் பன்னாட்டுக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.

முந்தைய இணைய மாநாடுகளைப் போலவே வரும் 2012 மாநாடும் கருத்தரங்கு, கண்காட்சி, மக்கள் கூடம் என்று மூன்று முனைகளில் செயல்படும். ஆய்வுக் கருத்தரங்கு நிகழ்வுகள் திசம்பர் 28,29 ஆகிய இரண்டு நாட்களில் நடக்கவிருக்கிறது.

கண்காட்சியும் மக்கள் கூடமும் திசம்பர் 28, 29, 30 ஆகிய மூன்று நாள்களில் நடக்கும். மாநாட்டுக்குப் பதிவு செய்த பேராளர்கள் மட்டுமே கருத்தரங்கு மற்றும் பயிலரங்கில் கலந்து கொள்ள இயலும். கண்காட்சியிலும், சமூகக் கூடத்திலும் பொதுமக்கள் பார்வையாளர்களாகப் பங்கேற்கலாம்.

கருத்தரங்குகளில் பல்வேறு ஆய்வாளர்கள் கணினித்தமிழ் குறித்த தங்களின் ஆய்வுகளை ஏனைய ஆய்வாளர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

மாநாட்டின் கருத்தரங்கக் குழுவுக்கு முனைவர் பத்ரி சேஷாத்ரி அவர்கள் தலைமைப் பொறுப்பு ஏற்றுள்ளார். கருத்தரங்குக் குழு மாநாட்டுக்கான ஆய்வுக் கட்டுரைகளைத் தேர்வு செய்வதுடன், கருத்தரங்குகளைச் செவ்வனே நடத்தும் பொறுப்பையும் வகிக்கும்.

இவ்வாண்டின் கருத்தரங்குக்குச் "செல்பேசி மற்றும் பலகைக் கணினிகளில் தமிழ்க் கணிமை" என்ற தலைமைக் கருத்தை ஒட்டிய ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. இது தவிர, கணினி சார் மொழியியல், திறவூற்று மென்பொருள் ஆய்வுகள், மின்வணிக முறைகள், கணினி வழி தமிழ் கற்றல் மற்றும் கற்பித்தல் போன்ற கணித்தமிழ் வளர்ச்சிக்குப் பயன் தரும் பல்வேறு ஆய்வுத் துறைகளிலும் கட்டுரைகளை அனுப்பலாம்.

இணைய மாநாடுகள் ஆய்வாளர்களின் கருத்துப் பரிமாற்றத்துக்கு வழிவகுப்பது மட்டுமல்லாமல், மக்கள் கூடத்தின் மூலம் கணித்தமிழ் நுட்பங்களைப் பரப்புதல், கணித்தமிழ் மென்பொருட்கள் மற்றும் கருவிகளைக் கண்காட்சிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிமுகம் செய்தல் போன்ற பல்வேறு செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. சிதம்பரத்தில் இம்மாநாட்டை நடத்துவதால் கண்காட்சி, மற்றும் மக்கள் கூடம் மூலம் கணித்தமிழ் வளர்ச்சி பற்றிய செய்திகளை ஊர்ப்புற மக்களிடையே எடுத்துச்செல்ல இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.

தமிழ்நாடெங்கும் கண்காட்சிகள் நடத்திக் கணித்தமிழ் மென்பொருள்களைப் பற்றிய செய்திகளைப் பரப்பி வந்திருக்கும் கணித்தமிழ்ச் சங்கம் இம்மாநாட்டின் கண்காட்சி அரங்கைப் பொறுப்பேற்று நடத்தவிருக்கிறது. கண்காட்சி அரங்குக் குழுவுக்குக் கணித்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு. வள்ளி ஆனந்தன் அவர்கள் தலைமைப் பொறுப்பேற்று நடத்தவிருக்கிறார்.

இவ்வாண்டு மாநாட்டின் மக்கள் கூடம் மூலம் கணித்தமிழ் நுட்பங்களை இத்துறையின் வல்லுநர்கள் மாணவர்களிடையே பரப்புதல், பயிலரங்குகள் நடத்திக் கணித்தமிழின் நுட்பங்களைப் பயிற்றுவித்தல், கணினி வழியாகக் கற்கும் மற்றும் கற்பிக்கும் பல்வேறு முறைகளை ஆசிரியர்களிடம் பரப்புதல் போன்ற முயற்சிகளைச் செய்ய உள்ளனர்.

கணித்தமிழ்ப் பயிலரங்குகளைத் தமிழ்நாடு மட்டுமல்லாமல், மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் நடத்தி வந்திருக்கும் முனைவர் மு. இளங்கோவன் அவர்கள் மக்கள்கூடக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்கிறார்.

தமிழ் இணைய மாநாட்டுக்கு உரிய ஆய்வுச் சுருக்கங்களை அனுப்பவேண்டிய கடைசி நாள் 20 அக்டோபர் 2012 ஆகும். மாநாட்டுக் குழு ஆய்வுச் சுருக்கங்களைப் பரிசீலித்து மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகளைத் தேர்ந்தெடுக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரையாளர்களுக்கு 10 நவம்பர் 2012-நாளுக்குள் தகவல் தெரிவிக்கப்படும்.

கீழ்க்கண்ட தலைப்புகளில் மாநாட்டின் அரங்குகள் நடைபெற உள்ளது:

செல்பேசிகள் மற்றும் பலகைக் கணினிகளில், முக்கியமாக ஐ.ஓ.எஸ், ஆண்டிராய்டு தளங்களில் தமிழைப் படித்தல், தமிழில் எழுதுதல்.

மின் புத்தகங்கள், மின் இதழ்கள் ஆகியவற்றைக் கைக் கருவிகளில் கொண்டுவர உதவும் செயலிகள் மற்றும் தொழில்நுட்பம்.

திறவூற்றுத் தமிழ் மென்பொருள்கள், தன்மொழியாக்கல்.
இயன்மொழிப் பகுப்பாய்வு: பிழைதிருத்தி, தமிழ் எழுத்துரு பகுப்பி, ஒலி உணர்தல், தேடுபொறிகள், இயந்திர மொழிமாற்றம், தகவல் அகழ்தல் போன்றவை.

தமிழ் இணையத்தின் தற்போதைய நிலை: வலைப்பதிவு, சமூக வலைத்தளங்கள், விக்கிப்பீடியா, குரல் வலை போன்றவை.

தமிழ் தரவுத்தளங்கள்.

கணினி வழி தமிழ் கற்றல் மற்றும் கற்பித்தல் குறித்தான ஆய்வுகள்
தமிழ்க் கணினி சொல்லாக்க ஆய்வுகள்

கணினி வழி தமிழ்மொழி பகுப்பாய்தல் மற்றும் கணினிக்கு தமிழ் மொழியறிவு ஊட்டல் பற்றிய ஆய்வுகள்.

கட்டுரைகளை மின்னஞ்சல் மூலமாக மட்டுமே அனுப்பவேண்டும். ஆய்வுச் சுருக்கங்களும் இறுதிக் கட்டுரையும் திருத்தக்கூடிய வடிவத்தில் மட்டுமே அனுப்பப்படவேண்டும். இவை உரைக் கோப்புகளாக, எச்.டி.எம்.எல் வடிவில், மைக்ரோசாஃப்டு வேர்டு அல்லது ஓப்பன் ஆஃபீஸ் கோப்புகளாக இருக்கலாம். பி.டி.எஃப் போன்ற திருத்தமுடியாத வடிவங்கள் ஏற்றுக்கொள்ள இயலாது. கட்டுரைகள் ஆங்கிலத்திலோ தமிழிலோ அல்லது இரு மொழிகளும் கலந்த வகையிலோ இருக்கலாம். தமிழில் அல்லது இருமொழியில் இருந்தால், யூனிகோட் குறியீட்டில் மட்டுமே இருக்கவேண்டும். பிற குறியீடுகளைக் கொண்டு அனுப்பப்படும் கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

மாநாட்டு மலர் அச்சு வடிவிலும் மின் வடிவிலும் வெளியிடப்படும். ஏற்றுக்கொள்ளப்பட்டு, மாநாட்டில் நேராகப் படிக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகள் மட்டுமே மாநாட்டு மலரில் சேர்த்துக்கொள்ளப்படும். கட்டுரைகளை அனுப்புவோர் நேராக மாநாட்டுக்கு வந்து தங்களின் கட்டுரைகளைப் படிக்கவேண்டும். மாநாட்டுக்கு வர இயலாதோரின் கட்டுரைகளை மாநாட்டுக்குழு ஏற்றுக்கொள்ளாது.

(ஏ4 அளவில்) இரு பக்கங்களுக்கு மிகாது கட்டுரைச் சுருக்கங்களை மாநாட்டு நிகழ்ச்சிகள் குழுவுக்கு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கலாம். கட்டுரை வந்து சேர்ந்தது குறித்து உடனடியாகக் கட்டுரையாளர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாகத் தகவல் தெரிவிக்கப்படும்.

மாநாடு குறித்த கூடுதல் விவரங்களுக்குக் கீழ்க்காணும் மின்முகவரிகளில் மாநாட்டுக் குழுவினருடன் தொடர்பு கொள்ளலாம்.

[email protected]
[email protected]
[email protected]

http://www.infitt.org என்ற உத்தம நிறுவனத்தின் இணையப்பக்கத்தில் இம்மாநாடு குறித்தான செய்திகளை அவ்வப்போது வெளியிட உள்ளனர்.

மாநாட்டில் கலந்துகொள்ள விரும்புவோர் தங்கள் வருகையை உத்தமம் அமைப்பின் இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளும்படி உத்தம நிறுவனத்தின் தலைவர் முனைவர் மணி மு. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

நன்றி: http://muelangovan.blogspot.in/

English summary
Tamil Internet conference 2012 to be held in Annamalai university from Dec 28 to 30.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X