• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

“வெட்டிக்காடு” சுயுபுனைவின் வெளிப்பாடு... ஓர் திறனாய்வு

Google Oneindia Tamil News

புதுச்சேரி: மன்னார்குடியில் பிறந்து, அரசின் உதவித் தொகையைப் பெற்று பொறியியல் படித்த ரவிச் சந்திரன், இன்று அமெரிக்க குடிமகன். உயரியப் பதவியில் சிங்கப்பூரில் பணி புரிந்து வரும் அவரின் தன் புனைவு நூல் மிக முக்கியமான வரலாற்று பதிவு என்று முனைவர் மு. இளங்கோவன் கூறியுள்ளார்.

வெட்டிக்காடு புத்தகம் குறித்து மு. இளங்கோவன் எழுதியுள்ள விமர்சனம் இனி...

இலக்கிய வடிவமும் பாடுபொருளும் படைப்போரும் ஒவ்வொரு காலத்திலும் வேறுபட்டு வந்துள்ளமையை இலக்கிய வரலாற்றின் தொடர்ச்சியைக் கவனிக்கும்பொழுது அறியமுடிகின்றது. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உலகம் முழுவதும் இலக்கியப்போக்குகளில் புதுப்புது மாற்றங்களைக் காணமுடிகின்றது. அதில் ஒன்று சுயபுனைவு (Auto Fiction) என்னும் வெளியீட்டு முறை. தன் இளமைக் கால வாழ்க்கையைப் புனைவுகளை இணைத்து வெளிப்படுத்தும்பொழுது அரிய படைப்பாக இலக்கியம் உருவாகிறது.

Vettikkadu Auto Fiction review

தம் இளமைக்கால வாழ்க்கையைப் படைப்பாக்குவதில் மேற்குலகப் படைப்பாளிகள் முன்னின்றதைத் திறனாய்வாளர்கள் எடுத்துரைக்கின்றனர். 1977 இல் சுயபுனைவு என்னும் சொல்லை வழங்கியவர் செர்ஜ் தூப்ரோவ்ஸ்கி (Serge Doubrovsky). குறிப்பாகப் பிரெஞ்சுத் தேசத்தில் வாழ்ந்த படைப்பாளிகள் மிகச் சிறந்த புனைவு இலக்கியங்களைத் தந்துள்ளனர். ஹினெர் சலீமின் அப்பாவின் துப்பாக்கி என்னும் புனைவு இலக்கியம் குர்தீஸ்தான் விடுதலைப் போரை மிக அழகிய வடிவில் தந்துள்ளது. சலீம் சுயபுனைவாகத் தம் படைப்பை உருவாக்கினாலும் குர்திஸ்தானின் பழைய வரலாறு, பண்பாட்டுச்சிறப்பு, வாழ்க்கை முறை என அனைத்தையும் நுட்பமாகப் பதிவுசெய்திருப்பார்.

சுயபுனைவு வடிவில் தமிழில் நிறைய படைப்புகள் சிறுகதையாகவும், புதினமாகவும், திரைப்படமாகவும், கவிதைகளாகவும் வந்துள்ளன. கி. ராவின் பிஞ்சுகள் என்ற குறுநாவல் சுயபுனைவுக்கு நல்ல சான்று. பேராசிரியர் த. பழமலய் அவர்களின் சனங்களின் கதை குறிப்பிடத்தக்க படைப்பு. சேஷாசலத்தின் ஆகாசம்பட்டு, சிற்பியின் கிராமத்து நதி குறிப்பிடத்தக்க கவிதை இலக்கியங்களாகும். கிராமப்புறத்து நிகழ்வுகள், கதைமாந்தர்கள், சொல்லாட்சிகள் கொண்டு புதிய இலக்கியப் போக்காக இத்தகு நூல்கள் வெளிவந்த பிறகு பல்வேறு படைப்புகள் தமிழில் வெளிவந்தன. குறிப்பாக நடுநாட்டு இளைஞர்கள் தங்கள் படைப்புகளில் தங்கள் வாழ்க்கை, பழக்க வழக்கம், குடும்ப அமைப்பு, ஊர், உறவு, தெய்வம் என அனைத்தையும் உள்ளடக்கிய படைப்புகளை வழங்கினர். தங்கர்பச்சானின் ஒன்பது ரூபாய் நோட்டு, வெள்ளைமாடு, குடிமுந்திரி உள்ளிட்ட படைப்புகளைச் சொல்லலாம். கி. தனவேல் இ.ஆ.ப. அவர்களின் செம்புலச் சுவடுகள் நூலில் புதுக்கூரைப்பேட்டை (இன்றைய நெய்வேலியின் பகுதி) மக்களின் வாழ்க்கைச் சுவடுகள் பதிவாகியுள்ளன.

Vettikkadu Auto Fiction review

வெட்டிக்காடு என்னும் தம் ஊர்ப் பெயரில் பொறியாளர் இரவிச்சந்திரன் எழுதியுள்ள நூல் சுயபுனைவு வடிவில் வந்துள்ள சிறந்த நூலாக புலப்படுகின்றது. பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பலர் நல்ல மதிப்பெண் எடுத்து மாநில அளவில் முதன்மை பெற்றுப் பாராட்டுப் பெறுவதை ஆண்டுதோறும் காண்கிறோம். இப்படித் திறன் படைத்த மாணவ மாணவியர் பிற்பாடு என்ன ஆனார்கள் என்பதை அவர்களே சொன்னால்தான் உண்டு. இந்நூல் பள்ளியில் பத்தாம் வகுப்பில் மாநில முதன்மை பெற்ற கிராமத்து மாணவரான இரவிச்சந்திரன் கல்வி தனக்கு ஏற்றம் தந்ததை விளக்கும் நூல்.

இரவிச்சந்திரன் இப்போது உலகளாவிய அளவில் முன்னோடித் தொலைத்தொடர்பு கட்டமைப்புத் திட்டங்களில் (Telecommunications Network) மின்னணுப் பொறியாளராக பணியாற்றுகிறார். மிகச் சிறந்த எழுத்தாளராகவும் மலர்ந்துள்ள இவர் அமெரிக்கக் குடியுரிமை பெற்று, பணியின் காரணமாகச் சிங்கப்பூரில் வசித்துவருகிறார். ஒவ்வொரு நாளும் அலுவல் காரணமாக கண்டம்விட்டுக் கண்டம் பறக்கிறார். வானுலக வாழ்க்கை வாழ்ந்து வந்தாலும் தாம் பிறந்த வெட்டிக்காடு என்னும் சிற்றூரின் நினைவு இவரைப் பேயைப் போல் பிடித்தாட்டியதால் தம் அனுபவங்களை 2003 முதல் எழுதத் தொடங்கினார்.

இரவி 17 வயது வரை தஞ்சை மாவட்டம் மன்னார்குடிக்கு அருகில் உள்ள வெட்டிக்காடு ஊரில் வாழ்ந்து, சராசரி உழவர் குடும்பத்தின் அனைத்து வகையான மேடுபள்ளங்களையும் கடந்து, கிண்டிப் பொறியியல் கல்லூரியில் மின்னணுப் பொறியியல் படித்து, தெற்கு ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகத்தில் மேலாண்மைப் பட்டம் (எம்.பி.ஏ) பெற்றவர். பத்தாம் வகுப்பில் மாநில அளவில் தர முதன்மை பெற்று, இந்திய அரசின் உதவித் தொகைபெற்றுப் பொறியியல் கல்வி பெற்றவர். இவரின் உள்ளம் கிராமத்து இளைஞனின் உள்ளம். பதினேழு வயது வரை வாழ்ந்து பெற்ற அனுபவங்கள் ஆழ்மனத்துள் புதைந்து கிடந்து, நேரமும் சூழலும் உந்தித் தள்ள அவை சிறுகதை, கவிதை, எழுத்துரை எனப் படைப்புகளாக வெளிவந்துள்ளன.

தம் கிராமத்து இளமைக்கால நினைவுகளையும் சில உண்மை நிகழ்வுகளையும் அவ்வப்பொழுது கட்டுரையாக்கிய இவர், இவற்றைத் தொகுத்து வெட்டிக்காடு என்னும் தலைப்பில் நூலாக்கியுள்ளார். வெட்டிக்காடு, காடுவெட்டி என்னும் ஊர்ப்பெயர்கள் பண்டைக்காலத்தில் மக்கள் காடு கரம்புகளை அழித்து ஊராக்கிய வரலாற்றைச் சொல்கின்றன. அந்த வகையில் வயலும் வயல்சார்ந்த பகுதியுமாக விளங்கும் வெட்டிக்காடு என்னும் சிற்றூரில் வாழ்ந்த சோமு ஆலம்பிரியர் என்னும் நெல்வணிகரின் மகனாகப் பிறந்து, படிப்புடன் ஊடுதொழிலாக ஆடுமாடுகளை மேய்ப்பது ஏரோட்டுவது, பனங்காய் வெட்டுவது, நாவல்பழம் பறிப்பது என்று கிராமத்துக்குரிய அனைத்துப் பொழுதுபோக்குகளையும் பயின்ற ஒரு பட்டிக்காட்டுச் சிறுவனின் இளமைக்கால நிகழ்வுகள்தான் இந்த வெட்டிக்காடு நூலின் உள்ளடக்கமாக விரிந்து நிற்கின்றது.

வெட்டிக்காடு நூலில் கரைந்த எழுத்தாளர் வேல. இராமமூர்த்தி, முனைவர் ம.இராசேந்திரன், நீதியரசர் நாகமுத்து ஆகியோரின் அணிந்துரைகள் நூலின் சிறப்புகளை இனங்காட்டியுள்ளன. இரவிச்சந்திரனின் இன்றைய வளர்ச்சி நிலையையும், கடந்துவந்த பாதைகளையும் வியப்புடன் பார்த்து மகிழும் அணிந்துரை அறிஞர்கள் தங்கள் இளமைக் கால நிகழ்வுகளையும் கிராமப்புறங்கள் நாகரிக வளர்ச்சியால் அடையாளங்களை இழந்து வருவதையும் மறவாமல் பதிவுசெய்துள்ளனர்.

சமூக பொருளாதார மேல்சாதிக்காரர்களால் வரலாறு எழுதப்படும் சூழலில் அடித்தட்டு மக்களின் வரலாறு (Subaltern History) எழுதப்பட்டு வருவதை வரவேற்கும் சுந்தர்ராஜ் மாணிக்கம் போன்றவர்களை நினைக்கும்பொழுது வெட்டிக்காடு நூலின் முக்கியத்துவம் விளங்கும்.

பன்னிரண்டு தலைப்புகளில் அமையும் வெட்டிக்காடு நூல் உழைக்கும் மக்களின் வாழ்க்கை வரலாற்றைச் சிறப்பாகப் பதிவுசெய்துள்ளது.

வெட்டிக்காடு என்னும் முதல் தலைப்பில் ஊர் அமைவிடம், உழவுத்தொழில் செய்யும் மக்களின் நிலை, ஊரின் காலைக்காட்சி உள்ளிட்ட தாம் பதினேழு ஆண்டுகள் வாழ்ந்த ஊரின் சிறப்புகளை இரவி பதிவுசெய்துள்ளார். உழுதல், விதைத்தல், பறித்தல், நடுதல், அறுத்தல் என்று ஆறு மாதம் ஊர் அமர்க்களப்படும். இங்கு நடவுப்பாடல் வழியாகவும், தெருக்கூத்துகள் வழியாகவும் இசைத்தமிழ் வளர்ந்ததை இரவிச்சந்திரன் குறிப்பிடுகின்றார். மாடுமேய்த்தலும், ஆடுமேய்த்தலும் கிராமங்களின் தேசியத்தொழிலாகும். கபடி விளையாடுதல், ஓரியடித்தல், கிளிகோடு பாய்தல், பந்தடித்தல், பட்டம் விடுதல் போன்ற கிராமத்து விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன.

வெட்டிக்காட்டில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி பெருந்தலைவர் காமராசரின் கல்விக்கொடையால் கிடைத்தது. இரண்டு ஆசிரியர்களுடன் எழுபத்தைந்து மாணவர்களைக் கொண்டு பீடுநடைபோட்ட பள்ளி அது. இரவிச்சந்திரன் நான்காம் வயதில் அடம்பிடித்துப் பள்ளிக்குச் சென்றது முதல் சுப்பிரமணியன் ஆசிரியரிடம் அகரம் பயின்றது வரையிலான செய்திகளைப் படிக்கும்பொழுது கிராமத்து மனிதர்கள் அனைவரும் தங்களின் இளமை வாழ்க்கைக்குக் கட்டாயம் திரும்புவார்கள். ஒன்றாம் வகுப்பில்(1973) சேர்ந்தது தொடங்கி தம் வாழ்க்கைக் குறிப்புகளை இந்நூலில் பதிவு செய்துள்ளார் இரவி. வேப்பங்குச்சியில் பல்துலக்கியது, கிராமத்து ஏரிகளில் குளித்தமை பற்றி விளக்கும் இரவிச்சந்திரன் பேஸ்ட், பிரஷ், சோப் நாங்கள் பார்க்காதது என்கின்றார். பழைய சோறும் தயிரும் உணவாக அமைந்த கிராமத்து வாழ்க்கையில் இட்டிலி, தோசை போன்ற உணவுகள் பொங்கல் தீபாவளியில்தான் கிடைக்கும் என்கின்றார். நம் உணவு, பழக்க வழக்கம், பண்பாட்டு மாற்றங்கள் எவ்வாறு மாற்றங்களைச் சந்தித்துள்ளன என்பதை எதிர்காலத் தலைமுறைகள் அறிந்துகொள்வதற்கு இந்த நூல் ஒரு சமூக ஆவணம்.

அக்கா திருமணத்தன்றும் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்ததைப் பாராட்டிய சுப்பிரமணியன் சாரின் பேருள்ளம் இந்த நூலில் பதிவாகியுள்ளது. பள்ளிக்கு நாள்தோறும் செல்லும் பழக்கத்தை நினைவூட்டும் இரவி, பின்னாளில் இரண்டு முறை விடுப்பெடுக்க நேர்ந்தமைக்கான காரணத்தையும் கூறத் தயங்கவில்லை, பன்னிரண்டு ஆண்டு பள்ளி வாழ்க்கையில் மஞ்சள் காமாலை நோயும், கடுங்காய்ச்சலும் விடுப்பெடுக்க வைத்ததைக் குறிப்பிடுகின்றார் (பக்கம்42). எட்டுக் கிலோ மீட்டர் தொலைவிலிருந்த மன்னார்குடிப் பள்ளிக்குப் பேருந்தில் செல்லக் காசு இல்லாத பொழுது, நடந்தே சென்றுள்ளதையும் காலில் செருப்பில்லாமல் நடந்துபோனதால் தார் காலில் படிந்து சுட்ட நிலையையும் படிக்கும்பொழுது இரவியின் வறுமை வாழ்க்கை கண்ணீர்வரச் செய்கின்றது.

அரசுபள்ளிகள் ஆதரிப்பார் இன்றிக் கிடக்கும்பொழுது, இன்றைய கான்வெண்டு கல்விக்கூடங்கள் வேன்களிலும் ஆட்டோக்களிலும் கிராமத்துப் பிள்ளைகளைச் சீருடைகளில் அள்ளிக்கொண்டு போவதைக் காணும்பொழுது தமிழகக் கல்வி வரலாறு இருவேறு துருவங்களில் பயணம் செய்வதை உணரலாம். 'எருமை மாடு மேய்க்கிறவனுக்கும் மாட்டுக்கறி திங்கிறவனுக்கும் படிப்பு வராது" என்று சுப்பிரமணியன் ஆசிரியர் சொன்னதை நினைத்த இரவி மாடுமேய்க்க மறுத்த நிகழ்வும் பதிவாகியுள்ளது. எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் இளமை வாழ்க்கையைத் திறந்து காட்டியுள்ள இரவியின் எழுத்துகள் தமிழ்க் கல்வி வரலாற்றை அறிய விரும்புவர்களுக்குப் பேருதவி புரிவன.

கிண்டிப் பொறியியல் கல்லூரியில் சேரும் தம் பதினேழாம் வயதுவரை மாடுமேய்த்த வரலாற்றை நினைவுகூர்ந்துள்ளார். படிப்பறிவு இல்லாத அம்மாவுக்கு மாடுமேய்ப்பதைச் செய்யாத மகன்மேல் எப்பொழுதும் கோபம்தான். எழுதிய நோட்டுகளைக் கிழித்தமை, நான்காம் வகுப்பில்தான் ஏபிசிடி படிக்கத் தொடங்கியது, ஐந்தாம் வகுப்பில் ஆங்கிலத்தில் பெயர் எழுதியது என்று பூர்வாசிரம வரலாறு பதிவாகியுள்ளது. ஆங்கிலத்தில் 36 மதிப்பெண் வாங்கியதற்குத் திட்டித் தீர்த்த இந்திரா டீச்சர், "பர்ஸ்ட் ரேங் மாணவன் சீனிவாசன் ஆங்கிலத்தில் 98... நீயெல்லாம் கிராமத்துல மாடு மேய்க்கதான் லாயக்கு"(பக்கம் 52) என்று கூறிய கண்டிப்புச் சொற்களும் அவமானச் சொற்களும்தான் இரவியை உயர்ந்த இடத்திற்குக் கொண்டுவந்து நிறுத்தியுள்ளன. அதே இந்திரா டீச்சர் இரவியின் மாநில முதன்மை மதிப்பெண் பார்த்து, வாழ்த்தியிருப்பது நெகிழ்ச்சி! தம் இளமைக்கல்விக்கு வித்திட்ட சுப்பிரமணியன் சார், முத்துக்கிருஷ்ணன் சார் இருவரையும் நன்றியுடன் நினைவு கூர்ந்துள்ளார்.

பள்ளியைத் திறப்பது, கூட்டுவது, மணி அடிப்பது, உணவுக்குரிய பொருள்களை எடுத்துத் தருவது, உணவு சமைப்பது, பரிமாறுவது, ஆசிரியர்களுக்குத் தேநீர் வாங்கி வருவது, ஆசிரியர்களின் வயல்வேலைகளின் பொழுது அதற்குரிய குற்றேவல் செய்வது, ஆசிரியர்கள் வராதபொழுது வகுப்புகளை அமைதியாகப் பார்த்துகொள்வது, பள்ளியைப் பூட்டிச் செல்வது வரையிலான கிராமப்புறப் பள்ளிப் பணிகளை மனந்திறந்து எழுதியுள்ளார். இந்த வாழ்க்கையை இன்றைய மாணவர்கள் கேட்பதற்குக்கூட வாய்ப்பில்லை.

தேர்வில் பார்த்து எழுதுவது தவறு என்பதை அடிப்படைக் கொள்கையாக வைத்திருந்த இரவி தம் கிண்டிப் பொறியியல் கல்லூரிச் சம்பவங்களை நினைவுப்படுத்தி, அங்கும் தான் பார்த்து எழுதாமல் நேர்மையாக எழுதியதைப் பதிவு செய்கின்றார். தவறு செய்வதற்குரிய வாய்ப்பு வந்தாலும் அங்கும் நேர்மையுடன் நடந்து கொள்ளும் உயர்பண்பே இவருக்கு வாழ்க்கையில் முன்னேற்றங்களைத் தந்தது என்கின்றார். வெட்டிக்காடு தொடக்கப்பள்ளியில் பெற்ற படிப்பு, நேரம் தவறாமை, ஏற்றுக்கொண்ட பொறுப்புகளைத் முழுமனத்துடன் திறம்படச் செய்தல், நேர்மை போன்ற பண்புகளே முன்னேற்றத்திற்குக் காரணம் என்கின்றார்.

இந்நூலில் இடம்பெற்றுள்ள உன்னால்முடியும் தம்பி என்ற சிறுகதையில் சண்முகம் என்ற பாத்திரத்தின் வழியாக இரவி தம் இளமைக்கால வாழ்க்கையைப் பதிவு செய்துள்ளார். வெட்டிக்காட்டுக்கு அருகில் உள்ள மூவாநல்லூர் கிராமத்தில் ஏழாம் வகுப்புப் படித்தபொழுது கடலைச் செடிக்குத் தண்ணீர் இறைத்திருக்கிறார். பெற்றோரோ கல்விக்கு ஆதரவு தரவில்லை. இந்நிலையில் ஆசிரியர் இராஜகோபால் என்பவர் கொடுத்த ஊக்கமும் சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. கிராமப்புறத்து மாணவர்கள் கல்வி கற்பதில் உள்ள தடைகளையும் உதவிய ஆசிரியர்களின் செயல்பாடுகளையும் இரவி நினைவு கூர்ந்துள்ளார். வறுமையில் படித்து முன்னேறி, அமெரிக்காவில் தொழில்நுட்ப நிறுவனத்தின் பொறியாளராக உயர்வு பெற்றுத் தாம்படித்த பள்ளிக்குச் சிறப்பு விருந்தினராக வந்த நிலையை அழகிய கதையாக்கிக் காட்டியுள்ளார். கவிதை, கதை, உரைநடை என்று பல்வேறு வடிவங்களில் இந்தப் படைப்பை அமைத்துள்ளார்.

அய்யனார்சாமி என்ற சிறுகதையில் புலவர் சுவுந்தரராசன் பகுத்தறிவுக் கொள்கையுடையவர் எனவும், அச்சம் என்பதை அறியாதவர் எனவும் தவறு செய்யும் மாணவர்களைத் தண்டிப்பதில் தயக்கம் காட்டாதவர் எனவும் அறிமுகம் செய்கின்றார். அதே நேரத்தில் ஏழை மாணவர்களுக்குப் புத்தகம், குறிப்புச்சுவடி வாங்கித் தருவதுடன் தம் மன்னார்குடி வீட்டுக்கு விடுமுறை நாளில் வரச்செய்து உணவு கொடுத்துப் படிப்புச் சொல்லித் தருவார் என்றும் அவரின் பொறுப்பார்ந்த ஆசிரியப்பண்புச் சிறப்பையும் நமக்கு அறிமுகம் செய்துள்ளார். புலவர் ஐயா தம் இடுப்பில் கத்தியை எப்பொழுதும் சொருகியிருப்பார் எனவும் ஒருமுறை விடுப்பு தராத தலைமையாசிரியரின் மேசைமீது கத்தியை எடுத்துக் குத்தி, மிரட்டியதையும் இக்கதையில் இரவி குறிப்பிட்டுள்ளார். மாணவர்கள் செய்யும் குறும்புகளைக் கவனித்துப் புலவர் கடும் தண்டனை கொடுத்ததால் பல மாணவர்கள் பள்ளிக்கு வராமல் போனதையும் குறிப்பிடுகின்றார். கடைசி பெஞ்சு இராமமூர்த்தி அய்யனார்சாமி போல் அருள் சொன்னதை விளக்கியுள்ள காட்சி இரவியிடம் மிகச்சிறந்த எடுத்துரைப்பு ஆற்றல் உள்ளதை நமக்கு நினைவூட்டுகின்றது.

கொட்டாப்புலிக் காளைகள் என்ற தலைப்பில் இரவி எழுதியுள்ள செய்திகள் படிப்பவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டும் நிகழ்வுகளாக விரிந்துள்ளன. அப்பா பட்டுக்கோட்டைச் சந்தையிலிருந்து வாங்கிவந்த கன்றுக்குட்டிகள் வளர்ந்து ஏரோட்டவும், வண்டியில் பூட்டவும் பழக்கிய நிகழ்ச்சிகளைக் கண்முன்கொண்டுவந்து இரவி நிறுத்துகின்றார். அப்பா, அம்மா, வீட்டு வேலையாள் நாகநாதன் மூவர்தான் அந்தக் கொட்டாப்புலிக் காளைகளைப் பிடிக்க முடியும் என்ற நிலையில் ஊரில் சண்டியராக வலம் வந்த வேணு ஆலம்பிரியரை அந்த மாடுகள் முட்டி வேலியில் தள்ளியதையும் அம்மாவின் குரலுக்குப் பணிந்து அந்த மாடுகள் அம்மாவை நெருங்கி வந்ததையும் அறியும்பொழுது நமக்கு ஆச்சரியத்தை இந்தக் கதை ஏற்படுத்துகின்றது.

வீட்டில் வளர்க்கப்படும் மாடுகள் அறிவுள்ளவையாகவும், மானமுள்ளவையாகவும், வீரமுள்ளவையாகவும் இருப்பதைக் கொட்டாபுலிக் காளைகள் கதை உணர்த்துகின்றன. ஒவ்வொரு நாளும் தம்மைக் கவனிக்கும் அம்மா, அப்பா, நாகநாதனைத் தவிர மற்றவர்களைத் தம்மை நெருங்கவிடாமல் செய்யும் கொட்டாபுலிக் காளைகளைப் போல் வரலாறு படைத்த பல காளை மாடுகள் தமிழகத்தின் கிராமங்களை ஆட்சி செய்துள்ளதை ஒவ்வொரு உழவனும் தங்கள் வாழ்க்கையை எழுதும் பொழுது இதுவரை தமிழுக்குக் கிடைக்காத கதைக்கருக்கள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். தம் குடும்பத்தினருடன் வண்டிமாடுகளை இணைத்துப் புகைப்படம் எடுப்பதையும், மாடுகளின் அருகில் நின்று புகைப்படும் எடுப்பது, வண்டியோட்டுவதுபோல் புகைப்படம் எடுப்பது தமிழகத்து உழவர்களின் விருப்பமாகும்.

கொள்ளிவாய்ப் பிசாசுகள் என்ற கதையில் கிராமங்களில் காலம் காலமாக நம்பப்படும் கொள்ளிவாய்ப் பிசாசுக் கதையைச் சொல்லி தம் அண்ணன் இந்திரஜித் மூலமாகப் பயம் தெளிந்த தம் அனுபவத்தை எழுதியுள்ளார்.

நாவற்பழம் சிறுகதையில் பள்ளி நிகழ்வுகள் பேசப்படுகின்றன. மாரியப்ப கண்டியர் வீட்டின் நாவல்பழம் திருடித் தின்னும் நிகழ்வு தத்ரூபமாக காட்டப்பட்டுள்ளது. இரவி, உப்பிலி, இராதா மூவரும் நாவல் மரத்தில் ஏறி நாவல் பழம் பறிப்பதும் இந்தக் கூட்டுக்கொள்ளையில் பங்கேற்காத இளஞ்செழியன் இரவியின் அப்பாவிடம் பற்றவைப்பதும், அப்பாவின் தண்டனையும் இந்தச் சிறுகதையைச் சுவையுடையதாக்குகின்றது. அன்று அப்பாவிடம் வாங்கிய அடிதான் முதலும் முடிவும் என்று கதையை இரவி முடித்துள்ளார்.

பொங்கல் என்ற தலைப்பில் இரவிச்சந்திரன் எழுதியுள்ள எழுத்துரையில் கிராமங்கள் எவ்வாறு தம் பாரம்பரிய இயல்புகளை இழந்து, தனித்தன்மை கெட்டு மாற்றங்களைச் சந்தித்து வருகின்றன என்பதைப் பதிவு செய்துள்ளார். பொங்கல் திருவிழா உறவினர்கள் ஒன்றுகூடி நடத்தும் பெருவிழாவாக நடைபெற்று மக்களுக்கு மகிழ்ச்சியைத் தந்த நிலை மாறிக் கிராமங்களில் பிரிவுகள் உண்டாகி, மனக் கசப்புகளால் பிரிந்து கிடக்கும் நிலையை எடுத்துரைத்துள்ளார். வழிபாட்டு முறைகள், உறவினரின் ஒன்றுகூடல், சிற்றூர்ப்புறப் பழக்க வழக்கங்கள், கிராமப்புற விளையாட்டுகள், சிற்றூர் வாழ்க்கை முறை, நம்பிக்கைகள், சடங்குகள், வேளாண்மை, பொழுதுபோக்கு உள்ளிட்ட நிகழ்வுகளை அடுத்த தலைமுறைக்கு நினைவூட்டும் எழுத்துரைகளாக இரவியின் எழுத்துரைகள் உள்ளன. ஒற்றுமையுடன் வாழ்ந்த கிராமத்து மக்கள் சண்டை சச்சரவுகளால் போலிஸ், கோர்ட்டுக்குச் செல்லும் நிலையில் உள்ளதைக் கவலையுடன் பதிவுசெய்துள்ள இரவியின் ஆதங்கம் ஒவ்வொரு எழுத்திலும் பதிவாகியுள்ளது.

களவாணி திரைப்படம், குற்றப்பரம்பரை புதினம் குறித்த மதிப்பீடுகளையும் எழுதியுள்ளார்.

அப்பா என்னும் தலைப்பில் எழுபது வயதுவரை வாழ்ந்து, இயற்கை எய்திய தம் தந்தையின் குணநலன்களை இரவி வரலாறாக்கியுள்ளார். ஒவ்வொரு மகனும் தந்தையின் வரலாற்றை எழுதும்பொழுது தமிழகப் பண்பாட்டு வரலாறு முழுமையடையும். அன்பின் வடிவமாகவும், பாசத்தின் உருவமாகவும் விளங்கிய தம் தந்தை சோமு ஆலம்பிரியர் குழந்தைகள் மீது அளவு கடந்த பாசம் கொண்டவர் என்பதைப் பல சான்றுகள் காட்டி விளக்குகின்றார். உழைப்பால் உயர்ந்த தன் தந்தை வெட்டிக்காட்டு மக்களும் சுற்றுவட்டார மக்களும் போற்றும்படியாக வாழ்ந்தவர் என்பதை ஒவ்வொரு கருத்துகளாக அடுக்கிக்காட்டி ஒரு சித்திரமாக நமக்கு வரைந்து காட்டுகின்றார். அப்பா பிள்ளைகளைப் படிக்க வைத்த பாங்கு, கூத்துக்கலையில் அவருக்கு இருந்த ஈடுபாட்டைக் காட்டி, சிலநாளில் குடிப்பது உண்டு என்று பதிவு செய்து நடுநிலையாளராக இரவி நமக்குக் காட்சி தருகின்றார்.

சோமு ஆலம்பிரியார் நேர்மையாளர்; வணிகத்தை உயர்வாகப் போற்றியவர்; தொழில் தர்மம் கடைப்பிடித்தவர்; நம்பிக்கைக்குப் பெயர் பெற்றவர்; தம் பிள்ளைகளின் படிப்பு, பணிக்காக வீட்டிலிருந்த நகைகளை விற்றாலும் உழைத்து வாங்கிய நிலங்களை விற்க மறுத்தவர். தந்தை 69ஆம் வயதில் இயற்கை எய்திய நேரத்தில் இரவியின் செமஸ்டர் தேர்வு தொடங்கியதால் அப்பாவின் இறப்புச் செய்தியைப் பத்துநாள் கழித்துதான் தெரிந்து கொண்டார்." அமெரிக்கக் குடியுரிமை பெற்று இன்று நல்ல வேலையில் ஓரளவு வசதியான வாழ்க்கை. ஆனால் பார்க்கத்தான் அப்பா இல்லை!"(பக்கம் 124) என்று முடித்துள்ளமை நம் கண்ணில் கண்ணீர் வரச் செய்கின்றது.

தேடுகிறேன் என்ற தலைப்பில் பிறந்து வாழ்ந்த வெட்டிக்காடு கிராமத்தில் இருந்த மக்களின் வாழ்க்கைமுறை, பண்பாடு, தொழில் யாவும் மாற்றமடைந்து புதிய தலைமுறை உருவாகிவிட்டதை வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார். உழவுமாடுகள், நடவு, அறுவடை, கதிரடிக்கும் காட்சிகள், ஏற்றம், முச்சந்தி உரையாடல், கோயில் திருவிழாக்கள், கூத்துகள், சிற்றூர் விளையாட்டுகள், உடையலங்காரம் யாவும் மறைந்து வெட்டிக்காடு புதிய வடிவம் பெற்றுள்ளதைக் கண்டு, தாம் ஓடி விளையாண்ட கிராமம் எங்கே என்று கேட்கும் ஒரு கேள்வியில் நூறாண்டு மாற்றம் அடங்கியுள்ளதை உணரலாம்.

நூலில் உள்ள எழுத்துப் பிழைகள் சரிசெய்யப்பட வேண்டும்.

சுய புனைவாகத் தெரியும் வெட்டிக்காடு நூல், தன் வரலாறாகவும், குடும்ப வரலாறாகவும், ஊர் வரலாறாகவும் தமிழர் பண்பாட்டு வரலாறாகவும் உயர்ந்து நிற்கின்றது.

நூல்: வெட்டிக்காடு
ஆசிரியர்: இரவிச்சந்திரன்
பக்கம்: 128
விலை: 150 - 00
கிடைக்குமிடம்: சோ. இரவிச்சந்திரன், 14 ஏ, புளோரா சாலை,
# 08-02அளாளியா பார்க், சிங்கப்பூர் 509 731
மின்னஞ்சல்: vssravi@gmail.com

English summary
Professor M. Ilangovan reviewed Vettikkadu, auto fiction, written by Ravi Chandran.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X