For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆண்டுகள் பத்து கடந்தாலும் அது ஒரு அழியாத சுவடு!

Google Oneindia Tamil News

- புன்னியாமீன்

உலக வரலாற்றில் காலத்துக்கு காலம் ஏதாவதொரு இயற்கை அனர்த்தம் மக்கள் மனங்களில் அழியா சுவடுகளை ஏற்படுத்தவே செய்கின்றன. இயற்கை அனர்த்தங்கள் எனும்போது மனிதனின் சக்திக்கப்பாட்பட்டது. கொள்ளை நோய்கள், சூறாவளிகள், நில அதிர்வுகள், எரிமலை வெடிப்புக்கள், கடும் மழை, வெள்ளம், கடும் வறட்சி.... இவ்வாறு இயற்கை அனர்த்தங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த வகையில் ஆசிய பிராந்திய கடலோர மக்களுக்கு 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி ‘சுனாமி'யாக வந்த இயற்கை அனர்த்தம் அழிக்கமுடியாத கரைபடிந்த சுவட்டினைப் பதித்து விட்டது.

கடந்த 2004 ஆம் ஆண்டு 26 ஆம் திகதி நத்தார் பண்டிகையை கொண்டாடிய சந்தோசத்தில் திளைத்திருந்த மக்களை, துயரத்தின் எல்லைக்கு கொண்டுசெல்லும் நிலையில் அந்த கோர சம்பவம் நடந்தேறியது. இந்து சமுத்திரத்தின் அருகில் உள்ள இந்தோனேசியாவின் தீவுக் கூட்டங்களில் ஒன்றான சுமாத்திரா தீவின் வடக்கே கடலுக்கு அடியில் காலை 6.58 மணிக்கு 9.0 ரிச்டர் அளவில் ஏற்பட்ட நில நடுக்கமானது சுனாமியைத் தோற்றுவித்தது.

சுனாமி பேரலைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், இந்தோனேசியா, இலங்கை, இந்தியா, தாய்லாந்து, அந்தமான் தீவுகள் என 14 நாடுகளைச் சேர்ந்த இரண்டு இலட்சத்து 50 ஆயிரத்து 676 உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் வீடுகள், கட்டிடங்கள், வாகனங்கள், உயிரினங்கள் என கண்ணிமைக்கும் நொடியில் அனைத்தும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. இதில் இந்தோனேசியாவில் ஒரு இலட்சத்து 84 ஆயிரம் உயிர்களும் இலங்கையில் 35 ஆயிரத்து 322 பேரும் பலியானதாக அன்றைய ஆரம்ப அறிக்கை கூறியது.

சுனாமியின் அதிர்வில் குலுங்கிய இலங்கை

சுனாமியின் அதிர்வில் குலுங்கிய இலங்கை

சுனாமியின் தாக்கத்தால் அதிகளவான அழிவுகளை எதிர்கொண்ட இரண்டாவது நாடு இலங்கை. இங்கு சுமார் 35,322 பேரின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டதோடு, சுமார் 516,150 பேர் வரை இடம்பெயர்ந்துள்ளனர். அத்துடன் சுமார் 119,562 கட்டிடங்கள் முற்றாக சேதமடைந்தன. வடக்கு-கிழக்கு உள்ளிட்ட கடற்கரையோரப் பிரதேசங்களே அதிகளவான அழிவுகளை சந்தித்தன.

பாதிக்கப்பட்ட கடற்பரப்புகள்

பாதிக்கப்பட்ட கடற்பரப்புகள்

இலங்கையின் கிழக்கு கல்முனைப் பகுதியை முதலில் தாக்கிய சுனாமி அலையினால் பெரியநீலாவணையிலிருந்து பொத்துவில் வரையுள்ள நீண்ட கடற்கரைப் பகுதிகளே பெருமளவு பாதிப்பை கண்டுள்ளன. திருக்கோவில் தம்பட்டை மற்றும் அக்பர் கிராமம் முழுமையாக அழிந்துள்ளன. 2004இல் ஏற்பட்ட ஆழிப்பேரலையினால் இலங்கையின் பாரிய மனித உயிர்சேதம் அம்பாறை மாவட்டத்திலேயே இடம்பெற்றிருக்கின்றது. இங்கு சுமார் 9 ஆயிரத்திற்கும் அதிக மக்களை கடல் காவுகொண்டுள்ளது. இதற்கு அடுத்ததாக சுமார் 4500 பேர் ஹம்பாந்தோட்டையிலும். சுமார் 3774 பேர் காலியிலும், மட்டக்களப்பில் 2975 பேரும், முல்லைத்தீவில் 2902 பேரும் பலியானதாக ஆரம்ப அறிக்கை கூறியபோதிலும் பின்னர் இவை மாற்றம் ஏற்பட்டது. அதேசமயம் கொழும்பிலிருந்து ஹம்பாந்தோட்டை சென்ற ரயில், அதாவது மிகுந்த சனநெரிசல் மிக்க பயணிகள் ரயில் கடலலையின் சீரற்றத்திற்கு இரையானது. இதில் மிக மகிழ்வுடன் வீடு நோக்கிப் பயணித்தவர்களில் 1700 இற்கும் மேற்பட்ட மக்கள் மாண்டு போனார்கள். இது ஆசியாவின் ரயில் விபத்துக்களில் முக்கியமானதாகவும் உள்ளது.

கடல் மட்டத்திலிருந்து இறங்கிய இந்திய பீட பூமிகள்

கடல் மட்டத்திலிருந்து இறங்கிய இந்திய பீட பூமிகள்

2004 சுனாமி தாக்கத்தினால் சுமாத்திராவின் தென் மேற்குக் கரையிலுள்ள பல தீவுகள் தென்மேற்காக 20 மீற்றர் தூரம் நகர்ந்திருப்பதாகவும் இந்தோனேசியாவின் வடமேற்கு விளிம்பு தென்மேற்காக 30 மீற்றர் தூரம் வரை நகர்ந்திருப்பதாகவும் புவியியலாளர்கள் கூறுகின்றனர். அத்துடன் சுமாத்திராதீவு கடல் மட்டத்திலிருந்து உயர்த்தப்பட்டுள்ளதாகவும் பர்மா மற்றும் இந்திய பீட பூமிகள் கடல் மட்டத்திலிருந்து கீழ் இறங்கி இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

சுனாமி அலையின் வேகம்

சுனாமி அலையின் வேகம்

சுனாமி அலையின் வேகம் உயர் நிலப்பரப்பை அணுகும் போது அதிகரிக்கின்றது. சுனாமி அலைகள் மணிக்கு 805 கிலோ மீற்றர் வேகத்தில் உட்செல்லக் கூடியதாகும். சுனாமி அலையானது ஒரு வினாடிக்கு இருநூறு தடவை சுழல்வதால் கடலுக்குள் இருந்து மணலையும் சேறு, பாசி போன்ற பொருட்களையும் காவிக்கொணடு நிலப் பகுதிக்குள் பிரவேசிக்கின்றது. எமது நாட்டின் கரையோரப் பகுதிகளில் சுமார் இருநூறு மீற்றருக்கும் அதிகமான தூரம் தனது ஆதிக்கத்தைச் செலுத்தியுள்ளது.

சுனாமி தாக்கியது முதல் முறையல்ல

சுனாமி தாக்கியது முதல் முறையல்ல

தமிழகத்தை சுனாமி தாக்கியது இது முதல் முறையல்ல. 4000 ஆண்டுகளுக்கு முன்பே தாக்கியுள்ள அதேநேரம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டிலும் பூம்புகார் என்ற காவிரிப்பூம்பட்டினத்தை கடல்கொள்ளையிட்டுள்ளது. தமிழகத்தின் தென் பகுதி பெரிய நிலப்பரப்பாக இருந்துள்ளது. இப்போதுள்ள இலங்கை, மாலைதீவு, தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளெல்லாம் ஒன்றாக இணைந்திருந்த நாடுகளாகும். இந்த பெருநிலப்பரப்பை வெளிநாட்டவர் லெமூரியா என குறிப்பிட்டுள்ளனர். பண்டைய தமிழர் இலக்கியத்தில் குமரிக் கண்டம் என குறிப்பிடுகின்றனர்.

துறைமுக அலைகள்

துறைமுக அலைகள்

சுனாமி பற்றி சிறு விளக்கமொன்றினை இவ்விடத்தில் பெற்றுக் கொள்வது பொறுத்தமானதாக இருக்கலாம். ஜப்பானிய நாட்டில் மீனவர்களின் மீன்பிடித் துறைமுகங்களைத் தாக்கி பெருமளவு சேதங்களை விளைவித்த துறைமுக அலைகளையே அவர்கள் சுனாமி என்று அழைத்தனர். சுனாமி என்பது ஜப்பானிய மொழியில் உள்ள வார்த்தை (சுனாமி:津 波.) ‘ட்சு' சுனாமி. தான் சுனாமி. ‘ட்சு" என்றால் துறைமுகம், ‘னாமி" என்றால் பேரலை என்று பொருள். சுனாமி என்பது துறைமுக பேரலை. சில நிமிடங்கள் முதல் சில நாட்கள் வரை கூட, அதுவும் பல்லாயிரக்கணக்கான இராட்சத அலைகளை உருவாக்கக்கூடியது தான் சுனாமி.

அமைதியான சுனாமி

அமைதியான சுனாமி

இந்த ஜப்பானிய சொல்லை உலகளாவிய ரீதியில் இன்று அனைத்து நாடுகளும் பயன்படுத்துகின்றன. அலையாக வந்து அழிவுகளை ஏற்படுத்தும் கடல் உண்மையில் வெளியிலிருந்து தனக்குப் பாதிப்பு ஏற்படும் வரை அமைதியாகவே இருக்கும். கடல் நம்மைத் தாக்கும் போது அது வேறொரு வகையில் தாக்கத்திற்குள்ளாவதை நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

பூகம்பங்களே காரணம்

பூகம்பங்களே காரணம்

அண்மைக்கால சுனாமி பேரலைகளை நோக்குமிடத்து கடலில் ஏற்பட்ட புகம்பங்களே காரணமாக அமைந்திருந்தன. பூகம்பம் என்பது நிலப்பகுதியில், கடல் பகுதியில், மலைப்பகுதியில் ஏற்படும். நிலப்பகுதியில் ஏற்பட்டால் ஏற்பட்ட நிலப்பரப்பில் உள்ளவை அதிர்ந்து சேதமாகின்றது. கடலில் ஏற்பட்டால் கடலின் ஆழ்பகுதியில் ஏற்படக்கூடிய அதிர்வு சிலநேரங்களில் சுனாமிப் பேரலைகளைத் தோற்றுவிக்கின்றன. மலைப் பிரதேசங்களில் ஏற்பட்டால் மலையில் எரிமலையாக உருவெடுக்கிறது.

பிரியப் பிரிய

பிரியப் பிரிய

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நிலப்படையில் தான் புவியிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது. இயற்கையில் ஏற்பட்ட பல்வேறு தாக்கங்கள் காரணமாக புவி கண்டங்களாக பிரியப், பிரிய, அதன் தட்ப, வெப்ப, இயற்கை சூழ்நிலைகளுக்கு ஏற்ப, பல்வேறு நிலப்படைகள் உருவாயின. இந்த நிலப்படைகள் மீது தான் ஒவ்வொரு கண்டமும் அமைந்துள்ளன. நிலம், கடல் எல்லாவற்றையும் தாங்கி நிற்பது இந்த நிலப்படைகள் தான். இதைத் தான் ‘டெக்டானிக் பிளேட்கள்' என்று புவியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடலாழ பூகம்பம்

கடலாழ பூகம்பம்

யுரேஷியன் பிளேட், ஆஸ்திரேலியன் பிளேட் இரண்டும், இந்தோனேசியாவின் வடக்கே சுமத்ரா தீவில் மோதியது. அதனால் பூகம்பம் ஏற்பட்டது. அதன் அலைகள் தான் இந்துமா சமுத்திரத்தில் சுனாமியை ஏற்படுத்தியுள்ளதாக புவியியல் ஆதாரங்கள் மூலமாக அறியமுடிகின்றது. அதேநேரம், சுனாமி பேரலைகள் ஏற்பட பல காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன. கடலாழத்தில் ஏற்படும் எத்தகைய பாதிப்புக்களின்போதும், கடலாழ பூகம்பம் தோன்றும்போதும், கடலை ஒட்டிய நிலப்பகுதியில் பூகம்பம் தோன்றும்போதும், மலையில் எரிமலைகள் தோன்றும்போதும், வானில் கிரகங்களின் செயல்பாடுகள் மாறும் போதும், (இது இன்னும் உறுதிப்படுத்தப் படவில்லை) கடலில் பௌதீக மாற்றங்கள் ஏற்படும் போதும், விண்ணிலிருந்து கற்கள் போன்ற கனமான பொருட்கள் கடலில் விழும் போதும். கடலில் காணப்படும் பனிப் பாறைகள் உருகுவதால் நீர்மட்டத்தின் அளவு வேறுபடும் போதும். தகுந்த கரையோரப் பாதுகாப்பு அரண்கள் இல்லாமையால் ஏற்படும் பாரிய கடலரிப்புகளின் போதும் சுனாமிப் பேரலைகள் ஏற்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட இயற்கைக் காரணங்களைத் தவிர தற்காலத்தில் பன்னாட்டு விஞ்ஞானிகளாலும் கடலில் நடத்தப்படும் அணுவாயுதப் பரிசோதனைகளின் பக்கவிளைவுகளாலும் ஏற்படலாம்.

மொராக்கோ சுனாமி

மொராக்கோ சுனாமி

கி.மு., 365ம் ஆண்டு ஜூலை மாதத்தில் கிழக்கு மத்திய தரைக்கடலில் தோன்றி, எகிப்தில் அலெக்சாண்டிரியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதை தற்போதைய கண்டுபிடிப்புகளுக்குட்பட்ட வகையில் முதல் சுனாமி என ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். சமீப கால நிகழ்வுகளை எடுத்துக் கொண்டால், முதன்முதலில் 1755ம் ஆண்டு, நவம்பர் 1ம் தேதி போர்த்துக்கல் நகரான லிஸ்பனில் ஏற்பட்ட பயங்கர பூகம்பம், போர்த்துக்கல், ஸ்பெயின், மொராக்கோ நாடுகளில் சுனாமி பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

கிரகோடா எரிமலை

கிரகோடா எரிமலை

1883ம் ஆண்டளவில் ஜாவா சுமத்ரா இடையே கிரகோடா என்ற பகுதி எரிமலைப் பகுதியாக திகழ்ந்தது. அங்கு ஏற்பட்ட பூகம்பத்தில் அணுகுண்டை விட 10 ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்த வெடிசம்பவம் நடந்தது. பல்லாயிரம் கிலோமீட்டர் தூரத்துக்கு அப்போது சத்தம் கேட்டதாக தகவல் கூறுகிறது. 35 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறாக ஜப்பான் பகுதியிலும் அடிக்கடி சுனாமித் தாக்குதல்கள் இடம்பெற்று வந்துள்ளன. 1964ம் ஆண்டு அலாஸ்கா வளைகுடாவில் மிகப் பயங்கர சுனாமி ஏற்பட்டது. அதன் விளைவாக, அலாஸ்கா, வான்கூவர் தீவு (பிரிட்டீஷ் கொலம்பியா), அமெரிக்காவில் கலிபோர்னியா, ஹவாய் பகுதிகளை தாக்கியது.

மாபெரும் இயற்கை அனர்த்தம்

மாபெரும் இயற்கை அனர்த்தம்

21ஆம் நூற்றாண்டில் உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட மாபெரும் இயற்கை அனர்த்தங்களுள் 2004 டிசம்பர் 26 ஆம் திகதி சுனாமியே இதுவரை பதிவாகியுள்ளது.
சுனாமி என்றால் ஜப்பான்தான் என்ற நிலை மாறி 2004ஆம் ஆண்டு சுனாமியை உலகளாவிய நாடுகளுக்கே ஒரு எச்சரிக்கையை விடுத்தது. சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச சமூகமும் சர்வதேச அமைப்புகளும் உதவிகளை வழங்கியபோதிலும்கூட, இழப்புகளை ஈடுசெய்ய முடியாது. சுனாமி கற்றுத் தந்த பாடம் இயற்கைப் பேரழிவுகளிலிருந்து எவ்வாறு எம்மைக் காக்கலாம் என்ற உணர்வினை மக்கள் மத்தியில் தோற்றுவித்தது.

சுனாமி முன்னறிவித்தல்

சுனாமி முன்னறிவித்தல்

சுனாமி அறிவித்தல் முன்னேற்பாடாக மேற்கொள்ளப்பட்டுள்ள சில நடவடிக்கைகளை நோக்குவோம். அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில்தான் முதன் முதலாக பசுபிக் பெருங்கடல் பிராந்திய சுனாமி எச்சரிக்கை அமைப்பு நிறுவப்பட்டது. அதற்கு காரணம் 20ஆம் நூற்றாண்டில் சுனாமியால் தாக்கப்பட்ட முதல் இடம் ஹவாய் என்பதினாலாகும்.

தவறான முன்னறிவிப்பு

தவறான முன்னறிவிப்பு

அமெரிக்கா 1949ல் அங்கு பசிபிக் கடல் சுனாமி எச்சரிக்கை அமைப்பை நிறுவியது. அப்போது விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளில் 75 சதவீதம் தவறாக அமைந்தது. இதனால் பொது மக்கள் மூட்டை முடிச்சுகளை எடுத்துக் கொண்டு இடம் பெயர்வதும் மீண்டும் பழைய இடத்துக்கே திரும்புவதும் சலிப்பை ஏற்படுத்தின. செலவும் ஆனது. அதனால் சுனாமி அலை உருவானால் மட்டும் கடலில் இருந்து தகவல் கொடுக்க கருவி வேண்டும் என்பதை உணர்ந்து கண்டுபிடிக்கப்பட்டதுதான் ‘சுனாமி மிதவை கருவி'.

ஹவாயைத் தாக்கிய ராட்சத அலைகள்

ஹவாயைத் தாக்கிய ராட்சத அலைகள்

1960ல் சிலியில் ஏற்பட்ட பூகம்பத்தால் ராட்சத அலைகள் ஹவாயை தாக்கின. இதனால் 12 ஆண்டுக்குப்பின் அங்கு மீண்டும் சுனாமி ஏற்பட்டது. முன்னரே உஷார் தகவல்கள் அனுப்பப் பட்டதால் அங்கு 61 பேர் மட்டுமே பலியானார்கள். அப்போது ஜப்பான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பசுபிக் கடல் நாடுகளுக்கும் எச்சரிக்கை அமைப்பு வேண்டும் என்று உணரப்பட்டது. 1963ல் சர்வதேச சுனாமி எச்சரிக்கை மையம் அமைக்கப்பட்டது. இதில் உறுப்பினராக 26 நாடுகள் உள்ளன. உறுப்பினராக சேர்ந்துள்ள நாடுகளுக்கு மட்டுமே எச்சரிக்கைத் தகவல்களை அனுப்ப வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

சுனாமி பேரலைகள் தகவல்

சுனாமி பேரலைகள் தகவல்

ஆஸ்திரேலியா, கனடா, சிலி, கொலம்பியா, குக் ஐலண்ட்ஸ், கோஸ்டரிகா, தென் கொரியா, வடகொரியா, ஈக்வேடார், எல்சல்வடார், பிஜி, பிரான்ஸ், குவாதமாலா, இந்தோனேஷியா, ஜப்பான், மெக்சிகோ, நியூசிலாந்து, நிகரகுவா, பெரு, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சமோவா, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு மட்டுமே சுனாமி பேரலைகள் பற்றிய தகவல் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இம்முறை மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

கண்காணிப்பு

கண்காணிப்பு

கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன், சுனாமி அலைகள் கடலில் ஏற்படுகின்றனவா என்பதை அறிய சுனாமி எச்சரிக்கைக் கருவிகளால் மட்டுமே முடியும். அவற்றில் உள்ள பிரத்யேக கருவிகள், கடலில் நீர் இயக்கத்தில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கும். நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் கடல் அலைகள் தோன்றினால், அந்த அலைகள் உருவாக்கும் அழுத்த மாறுபாட்டை ஒலி அலைகளாக மாற்றி, அவற்றை சிக்னல்களாக வானில் உள்ள செயற்கைக் கோள்களுக்கு அனுப்பிவைக்கும். அங்கிருந்து தரையில் உள்ள மையங்கள் சிக்னலைப் பெற்றுக் கொள்ளும். அலையின் தன்மையை விஞ்ஞானிகள் அறிந்து அது பாதிப்பை ஏற்படுத்துமானால் எச்சரிக்கைத் தகவல்களை அனுப்புவார்கள்.

இத்தகவலை சுனாமி உருவான 3 நிமிடத்தில் வெவ்வேறு நாடுகளில் உள்ள அலுவலகங்களுக்கு சென்றுவிடும். ஆனால், சுனாமி அலைகள் உருவான இடத்துக்கும் கரைப் பகுதிக்கும் உள்ள தூரத்தைப் பொறுத்துத்தான் அலைகளின் தாக்குதல் வேகம் மற்றும் நேரம் அமையும்.

மக்களுக்கு ஏற்படும் பயம்

மக்களுக்கு ஏற்படும் பயம்

நிலநடுக்கம் ஏற்படும் போதெல்லாம், சுனாமி குறித்த பயம் இனி ஆசிய நாடுகளின் கடலோர பகுதி மக்களுக்கு ஏற்படும். இதைத் தடுக்க தெற்காசியாவுக்கான சார்க், தென்கிழக்கு ஆசிய நாடுகளான பிம்ஸ்டெக், ஆபிரிக்க-ஆசிய கூட்டமைப்புகள் இந்தியாவுடன் இணைந்து கடலில் சுனாமி எச்சரிக்கை அமைப்புகளை நிறுவ வேண்டும். அதை சர்வதேச சுனாமி எச்சரிக்கை அமைப்புக்கு கீழ் கொண்டு வரவேண்டும். எதிர்காலத்தில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய நாடுகளை பட்டியலிட்டு அந்நாடுகள் அனைத்தையும் இந்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரவேண்டும்.

மக்கள் மனங்களில் பதிக்க வேண்டியது அவசியம்

மக்கள் மனங்களில் பதிக்க வேண்டியது அவசியம்

எத்தகைய முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டாலும்கூட, மக்கள் இதனை ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலை உருவானால் மாத்திரமே இவை வெற்றியளிக்கலாம். அண்மைக்காலங்களாக அடிக்கடி சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருப்பதனால் மக்கள் சோர்வடைந்துள்ளதை காணமுடிகின்றது. சிலர் இவற்றை இன்னும் விளக்கமே இன்றி காணப்படுகின்றனர். கருவிகள் பொருத்துவது மாத்திரமல்ல. அவற்றின் செயல்பாட்டின் நிலை பற்றிய உணர்வுகளை மக்கள் மனங்களில் பதிக்க வேண்டியதும் ஒரு முக்கியமான தேவையாகும்.

English summary
After 10 years the sad memories of Tsunami attack still haunt the minds of the people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X