For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'தந்தையானவன்'...

By Staff
Google Oneindia Tamil News

'தந்தையானவன்'...

சூர்யா

திரைப்பட பெயர்: Pedar (Father)
மொழி: ஈரானி
இயக்குனர்: மஜித் மஜிதி

" இப்பிரபஞ்சத்தின் முடிவில்லா விரிவின் முன், இழந்த தேசத்திற்கான மன்னனின் கவலைக்கும் உடைந்த பொம்மைக்கான குழந்தையின் கண்ணீருக்கும் அதிக வித்தியாசம் இல்லை "
-இது அமெரிக்காவின் மிகப்பெரும் இலக்கிய கர்த்தாக்களில் ஒருவரான மார்க் ட்வைன் சொன்னது.

உலக திரைப்பட இலக்கணமும் அறிமுகம் இல்லாத எவரையும் மஜித் மஜிதியின் திரைப்படங்கள் கவர்ந்து விடும் என்பதை சொல்ல தேவையில்லை.

சிறிதும் நாடகத்தன்மை இல்லாது அதிகமான இயல்பும் எளிமையும் குழந்தைகளின் உளவியலை மாறுபட்ட வாழ்வியலை நெகிழ்ச்சியான திரைப்படங்களாக வடிவமைத்தைலையே வழக்கமாக கொண்ட மஜித் மஜீதியின் மற்றொருமோர் உன்னத படைப்பு Pedar.

நாம் எல்லோரும் நம் குடும்பத்தோடு மகிழ்ச்சியுடன் வாழும் இந்த வேளையில் எத்துனையோ பேர் இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு மூலையிலும் இல்லாத அல்லது இழந்து விட்ட தத்தம் உறவுக்காக ஏங்கி கொண்டுதான் இருப்பார்கள்.

அப்படி தந்தையின் பிரிவால் துடிக்கும் ஒரு சிறுவனின் கதை தான் இந்த திரைப்படம்.
---------------------------------------------------------

சிறுவன் மெஹ்ரோலா கடந்த நாலு மாதமாக துறைமுகத்தையொட்டிய மொத்த வியாபார கடையில் கடுமையாக உழைத்து விடுமுறையில் ஊருக்கு கிளம்புகிறான். நாலு மாத சம்பளத்தில் பாதியை மட்டும் கொடுக்கிறான் முதலாளி. மீதியை விடுமுறையில் இருந்து வந்தததும் தருவதாகவும் இல்லாட்டி நீ திரும்பி வரமாட்டாய் என்கிறான்.

முதலாளி மீது கோபம் கொண்டாலும் அதை மறந்து ஊருக்கு போகப்போகும் மகிழ்ச்சியில் மார்கெட்டுகளில் தேடித்தேடி பொருட்களை வாங்குகிறான். எதுவுமே தனக்கில்லை. ஆறுமாத்திற்கு முன் ஒரு விபத்தில் தந்தையையிழந்த அவன் மூன்று தங்கைகளுக்கும் அம்மாவுக்கும் மட்டுமே

தொலை தூர பயணத்தின் முடிவில் ஊர் சென்றடைகிறான். ஒடையில் முகம் கழுவும் போது அவனது தந்தையுடன் எடுத்த புகைப்படம் ஒடை நீரில் விழுந்து அடித்து செல்கிறது. எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை.

அதையும் மறந்து தாயையும் தங்கைகளையும் காண மகிழ்ச்சியோடு வீட்டை நோக்கி ஒடும் போது வழியில் நண்பன் லத்தீப்பை சந்திக்கிறான்.

அம்மாவும் தங்கைகளும் உன் வீட்டில் இல்லை. அந்த போலீஸ்காரனுக்கும் உங்க அம்மாவிற்கும் கல்யாணமாகிவிட்டது, எல்லோருமே அவர் வீட்டில் தான் வசிக்கிறாங்க என்ற அதிர்ச்சியை மெஹ்ரோலாவால் நம்பவும் முடியவில்லை. தாங்கி கொள்ளவும் இயலவில்லை.

இரண்டு மாதங்களுக்கு முன் அவனது தங்கைக்கு ஏற்பட்ட நோய்க்கு அதிக செலவிட்டதாகவும் அதனாலேயே உங்கம்மாவை அந்த போலீஸ்காரன் கல்யாணம் செய்ததாகவும் ஊரெல்லாம் பேசிக்கிறாங்க என்கிறான் லத்தீப்.

போலீஸ்காரருக்கு சரியான பாடம் புகட்டுகிறேன் என்கிறான் மெஹ்ரோலா.

தாயை பார்த்து கடும் கோபம் கொண்டு அவளை கண்டபடி திட்டுகிறான். ஒரு தந்தையின் பொறுப்போடு பணம் சம்பாதிக்க போன நேரத்தில் தான் ஏமாற்றப்பட்டு போனதாய் வருந்துகிறான்.

ஆனால் தாயோ அவர் மிகவும் நல்லவர். இக்கட்டான நேரத்தில் ஆறுதல் தந்தவர் என்று எவ்வளவு எடுத்து கூறியும் ஆழ்மனத்தில் இருக்கும் தந்தையும் பொறுப்பும் சிறு வயதிற்குண்டான கோவமும் முரட்டுதனமும் அவனை எதையும் ஏற்று கொள்ள மறுக்கிறது.

கோபித்து கொண்டு தங்கள் வீட்டிலேயே தனியாக தங்குகிறான். நண்பன் லத்தீப் மூலம் இரவு உணவை கொடுத்தனுப்புகிறாள் தாய்.

கோபம் குறையாதவனாய் மறுநாள் போலீஸ்காரரை சந்தித்து பணத்தை அவர் முகத்தில் விட்டெறிகிறான் மெஹ்ரோலா. அவரோ உன் தாய்க்கு கொடு இந்த பணத்தை ,எனக்கு வேண்டாம், நான் பணத்திற்காகவும் சுகத்திற்காகவும் எதுவும் செய்யவில்லை. மன அமைதிக்காகவே எதையும் செய்வதாய் கூறுகிறார்.

இள இரத்தம் எதையும் புரிந்து கொள்வதாயில்லை.

தான் சம்பாதித்த பணத்தை கொண்டு தனது வீட்டை அலங்கரித்து மூன்று தங்கைகளையும் ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் கூட்டி கொண்டு வந்து விடுகிறான்.

பதறியடித்து ஒடி வருகிறார்கள் தாயும் போலீஸ்காரரும். பயந்து போய் காட்டி கொடுக்கிறான் லத்தீப். குழந்தைகளை அழைத்து சென்று விடுகின்றனர்.

மறு நாள் வீட்டில் மாடிப்படிகளில் விழுந்து அடிபட்டு கடும் காய்ச்சாலால் அவதிப்படுகிறான் மெஹ்ரோலா. மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடுகிறார் போலீஸ்காரர். தன் வீட்டிலேயே தங்க வைத்து அவனை குணப்படுத்த சொல்கிறார். தாயும் அன்போடும் அரவணைப்புடன் அவனை காக்கிறாள்.

ஒரு நாள் இரவு யாருக்கும் தெரியாமல் காவல் பணியின் சின்னமான போலீஸ்காரரின் கைத்துப்பாக்கியை எடுத்து அவரை கொல்ல நினைக்கிறான். அது நடக்காமல் போகவே, தன்னையும் அழைத்து கொண்டு போகும்படி கெஞ்சிய நண்பன் லத்தீப்புடன் தான் வேலை செய்யும் நகரத்தை நோக்கி கைத்துப்பாக்கியோடு இரவோடு இரவாக ஒடிப்போகிறார்கள் இருவரும்.

விடிந்ததும் தன் துப்பாக்கியையும் இரண்டு சிறுவர்களையும் காணாத போலீஸ்காரர் எரிச்சலும் ஆத்திரமும் அடைகிறார்.

நாலு நாள் லீவு சொல்லிவிட்டு நகரத்தை நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் பயணமாகிறார். அலைந்து திரிந்து கண்டும் பிடித்து விடுகிறார்.

லத்தீப்பை ஊருக்கு அனுப்பிவைத்து விட்டு மெஹ்ரோலாவை கை விலங்கிட்டு தனது மோட்டார் சைக்கிளிலேயே அழைத்து வருகிறார்.

இருவருக்கும் பேச எவ்வளவோ இருந்தும் இருவரும் முறைப்பும் வெறுப்பும் கலந்த பார்வை. சில நேரங்களில் இகழ்ச்சி கலந்த புன்னகை. மட்டுமே.

போலீஸ்காரர் ஏமாந்த தருணத்தில் மோட்டார் சைக்கிளோடு தப்புகிறான் மெஹ்ரோலா. பல கைதிகளை வளைத்து பிடித்த தனது தொழில் முறையால் குறுக்கு வழியில் ஒடி மீண்டும் பிடித்தும் விடுகிறார்.

கண்டபடி திரிந்ததாலும் இருவரும் வழியை தவற விட்டு விடுகின்றனர். கொடிய பாலைவன கோடையில் மோட்டார் சைக்கிளும் பழுதடைய கடும் கோவம் கொள்கிறார் போலீஸ்காரர்.

கை விலங்கை அவிழ்த்து விட்டு “உன் இஷ்டப்படி ஓடு, வழி தெரியாது எங்கு வேண்டுமானாலும் போ" என்கிறார். ஆனால், மெஹ்ரோலா அவரை விட்டு விலகாமல் அருகிலேயே நடக்கிறான்.

திடீரென பாலைவன்ப் புயல் அடிக்கிறது. சூறாவளியாய் சுற்றும் அந்த புழுதி கலந்த மண்ணில் செய்வதாறியாது திகைக்கின்றனர் இருவரும். நாக்கு வறண்டு தாங்கி கொள்ள முடியாமல் மயங்கி விழுகிறார் போலீஸ்காரர்.

செய்வதறியாது திகைக்கிறான் மெஹ்ரோலா. கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒட்டகங்கள் தெரிகின்றன. ஒட்டகங்கள் திரிந்தால் அவ்விடத்தில் தண்ணீர் இருக்கும் என யூகிக்கிறான். அந்த ஒரு புள்ளியை குறி வைத்து ஒடுகிறான். அவன் யூகம் வீணாகவில்லை. சள சளவென்று ஒடும் ஒரு மெல்லிய நீரோடையை காண்கிறான்.

ஒரு நிமிடமும் தயங்காமல் மீண்டும் ஒடி வந்து போலீஸ்காரரை கைகளை பிடித்து ஒடை வரை இழுத்து வருகிறான். இருவரும் ஒடையில் சரிந்து விழுகின்றனர்.

தண்ணீரின் குளுமை அவனுக்கு இதமாய் இருக்கிறது. தனது தந்தையின் பாதுகாப்பான கரங்களில் வீழ்ந்தது போல் தண்ணீரை பருககூட தோன்றாமல் சில நேரம் வீழ்ந்து கிடக்கிறான்.

அவ்வளவு குளிர்ந்த தண்ணீரில் வீழ்ந்து கிடந்தாலும் சுய உணர்வின்றி கிடக்கும் போலீஸ்காரரின் சட்டைபையிலிருந்து ஒரு புகைப்படம் தண்ணீரில் மிதந்து மெஹ்ரோலா முகத்தில் மோதுகிறது.

தான் தனிமையில் இருக்கும் போது போலீஸ்காரர் பார்த்து புன்னகைக்கும் புகைப்படம் அது.

மெஹ்ரோலாவின் தாயும் அவளது குழந்தைகளுமான புகைப்படம் அது.

அதை பார்த்ததும் மெஹ்ரோலாவின் கண்கள் ஒளிர்கின்றன.

இந்த காட்சியோடு நிறைவடைகிறது திரைப்படம்.

சுட்டெரிக்கும் பாலைவனத்திற்குள்ளும் கடவுள் அளித்த நீரோடையாய் சொல்லணா வேதனையுடன் வாழ்ந்த தாய்க்கு கடவுள் அளித்த ஆதரவாய் போலீஸ்காரர் இருந்த்தை சொல்லாமல் சொல்லி முடித்திருக்கிறார் மஜித் மஜீதி.

ஊரை நோக்கி ஓடும்போது தொலைத்த தனது தந்தையின் புகைப்படைத்தை ஆரம்ப காட்சிகளில் பொறுத்தியிருப்பதை சொல்ல வார்த்தைகளில்லை.

தந்தையின் பொறுப்பு பிள்ளைகளை பெற்றால் மட்டும் தான் வர வேண்டும் என்பதில்லை என்பதை சிறுவன் மெஹ்ரோலா பாத்திர படைப்பின் மூலம் சித்தரித்திருக்கும் இயக்குனரின் உணர்வும் கற்பனை திறனும் அனைத்து தந்தையர்களுக்கும் இத்திரைப்படம் ஒரு பாடம்.

பார்க்க பார்க்க திகட்டாத அழகான மலைகளும் நீரோடைகளும் குளுமையில் கற்பனைகெட்டாத இடங்களிலெல்லாம் சென்று ஒரு திரைப்படைத்தை படைத்து ஒவ்வொரு காட்சியையும் ஒரு கவிதையாய் சொல்ல முற்படும் மஜித் மஜீதியை எத்தனை பாராட்டினாலும் தகும்.

மெஹ்ரோலா நடித்த சிறுவன் Hassan Sadeghi நடிப்பு வியக்க வைப்பது.

1996ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்ப்டம் உலக பல திரை விழாக்களில் பங்கு பெற்றதுடன் ஒன்பது உலக விருதுகளை அள்ளியது.

நல்ல சினிமா ரசிகர்கள் கண்டிப்பாக பார்கக வேண்டிய திரைப்படம் இது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X