"யாரோ மேல வர்றாங்கன்னு நினைக்கிறேன்".. ஃப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (9)
- ராஜேஷ்குமார்
மாடிப்படிகளில் ஏறிக்கொண்டிருந்த சந்திரசூடனும், கபிலனும் பின்னால் எழுந்த காலடிச்சத்தத்தைக் கேட்டுவிட்டு மேற்கொண்டு நகராமல் அப்படியே ஆணியடித்தாற்போல் நின்றார்கள்.
சந்திரசூடன் குரலைத் தாழ்த்தினார்.
" கபிலன்...... யாரோ மேல ஏறி வர்றாங்கன்னு நினைக்கிறேன் "
" ஆமா..... ஸார் "
" நாம இங்கேயே நின்னு யார் வர்றாங்கன்னு பார்த்துடலாம்" இருவரும் அப்படியே மூச்சு காட்டாமல் நின்றார்கள்.
மாடிப்படிகளில் யாரோ மெதுவாய் ஏறிக்கொண்டிருந்தார்கள். முப்பது விநாடிகளுக்குப் பிறகு ஒரு பெண்ணின் உருவம் அரையிருட்டில் தெரிந்தது.
சந்திரசூடன் உற்றுப் பார்த்தார்.
பெண் மூச்சிரைக்க மேலேறி வந்து கொண்டிருந்தாள். சந்திரசூடனையும், கபிலனையும் பார்த்ததும் சற்றே திடுக்கிட்டுப் போனவளாய் கீழே இறங்க முயன்றாள். சந்திரசூடன் குரல் கொடுத்தார் சத்தமாய்.
" யாரது .... ? "
அவள் இறங்காமல் அப்படியே நின்றாள்.
" மேல வா "
அந்தப்பெண் தயக்கத்தோடு படிகள் ஏறி மேலே வரவும் சந்திரசூடன் தன் கையில் இருந்த செல்போன் டார்ச்சை அவளை நோக்கி நகர்த்த வெளிச்சத்தில் குளித்தாள் அந்த இளம்பெண். அழகாக இருந்தாள். வியர்த்துப் போன முகம் டார்ச் வெளிச்சத்தின் காரணமாய் பாதரசம் தடவினாற் போன்று மினுமினுத்தது. நடுக்கமான குரலில் கேட்டாள்.
" ஸார்.... நீங்க ஏஸிபி சந்திரசூடன்தானே .... ? "
" ஆமா .... "
ஸார்.... எம் பேரு கோபிகா... எதிரில் இருக்கிற எல் அப்பார்ட்மெண்ட்ல குடியிருக்கேன். நீங்க காரை பார்க் பண்ணிட்டு கீழே இறங்கறப்ப நான் உங்களை என்னோட ஃப்ளாட் ஜன்னலில் இருந்து பார்த்துட்டு வேக வேகமா.... வர்றேன் "
சந்திரசூடன் தன் முகம் நிறைய வியப்பு காட்டினார்.
" என்னை உனக்கு எப்படி தெரியும் .... ? "
" ஸார்.... நீங்க ரெண்டு வருஷத்துக்கு முந்தி நான் படிச்சிட்டிருந்த காலேஜூக்கு வந்து ஒரு நாப்பது நிமிஷம் மோட்டிவேஷன் ஸ்பீச் கொடுத்தீங்க.... ரொம்பவும் அருமையான ஸ்பீச். அன் ஃபர்கெட்டபிள் "

" எந்த காலேஜ் .... ? "
" ஸ்டெல்லா மேரீஸ். நான் அங்கே எம்.ஏ. ஜர்னிஸிஸம் பண்ணிட்டிருந்தேன் ஸார். இப்ப நான் ஒரு தனியார் டி.வி.சானலில் நியூஸ் ரீடராய் ஒர்க் பண்ணிட்டிருக்கேன் "
" தட்ஸ் குட் "
" ஸார்.... நானே உங்களை நேர்ல வந்து பார்க்கணும்ன்னு நினைச்சுட்டு இருந்தேன். ஃபார்ச்சுனேட்லி நீங்களாகவே இந்த அபார்ட்மெண்ட்டுக்கு இன்னிக்கு வந்தது எனக்கு ஆச்சர்யமாயிருக்கு " சந்திரசூடன் புருவங்களை உயர்த்தினார்.
" என்னை எதுக்காக பார்க்கணும்ன்னு நினைச்சே? "
" அது வந்து ஸார்.... " கோபிகா குரலை இழுக்க சந்திரசூடன் கபிலனைப் பார்த்தபடி கேட்டார்.
" கபிலன்.... உங்களுக்கு கோபிகாவைத் தெரியுமா? "
" தெரியும் ஸார். ... ரெண்டு வருஷத்துக்கு முந்தி அபார்ட்மெண்ட்டோட அஸ்ஸோசியேஷன் மீட்டிங்கில் ஒரு தடவை பார்த்திருக்கேன். அன்னிக்கு அந்த மீட்டிங்ல இவங்க ரொம்பவும் கோபமாய் பேசினதாய் ஞாபகம் "
கோபிகா தலையசைத்தாள். " எஸ்... அன்னிக்கு சத்தம் போட்டது உண்மைதான். அபார்ட்மெண்ட்ல பெண்களுக்கு போதுமான பாதுகாப்பில்லை. ஆர்மியிலிருந்து ரிடையரான அதிகாரி ஒருவரை இந்த அபார்ட்மெண்ட்டுக்கு செக்யூரிட்டி ஆபீஸராய் போடணும்ன்னு சொன்னேன். அதுக்கு போதுமான ஆதரவு கிடைக்காததினால சத்தம் போட்டேன். அந்த சத்தத்துக்கு இந்த நிமிஷம் வரைக்கும் பதில் கிடைக்கலை. அபார்ட்மெண்ட்டுக்கு அஸ்ஸோசியேஷன்னு ஒண்ணு இருந்தாத்தானே இதுமாதிரியான பிரச்சினைகளும், கோரிக்கைகளும் வரும்ன்னு சொல்லி அந்த அஸ்ஸோசியேஷன்னையே இப்ப டிஸ்ஸால்வ் பண்ணிட்டாங்க. இது சம்பந்தமாய் உங்களைப் பார்த்து ஒரு புகார் மனு கொடுக்கலாம்ன்னு நினைச்சுட்டிருந்தேன் ஸார் "
உம் பேரு என்னான்னு சொன்னே... ? "
" கோபிகா ஸார் "
" கல்யாணமாயிடுச்சா ... ? "
" ஆயிடுச்சு ஸார் "
" ஹஸ்பெண்ட் என்ன பண்றார் ... ? "
" அவர் ஒரு லாயர். சிருஷ்டி ஸாஃப்ட்வேர் கம்பெனியில் லீகல் அட்வைஸராய் இருக்கார் பேர் தனசேகர் "
" சரி.... இந்த அதிரா அபார்ட்மெண்ட்ல என்ன பிரச்சினை...? என்கிட்டே ஏதோ புகார் மனு தரணும்ன்னு சொன்னியே... அது என்ன மனு... ? "
கோபிகா சில விநாடிகள் மெளனமாய் இருந்துவிட்டு குரலைத் தாழ்த்தியபடி கேட்டாள்.
" ஸார்.... மிஸ்டர் கபிலன் உங்ககிட்ட ஏதும் சொல்லையா ... ? "
சந்திரசூடன் தலையாட்டினார். " ம்..... சொன்னார். .... இந்த அபார்ட்மெண்ட்ல சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்துட்டு வர்றதா சொன்னார். அது சம்பந்தமான விபரங்களைத் தெரிஞ்சுக்கத்தான் வந்தேன். இங்கே ஒரு முறையான விசாரணை நடத்தினா எல்லா உண்மைகளும் வெளியே வந்துடும் "
" அந்த கடவுளாப் பார்த்துதான் உங்களை இங்கே சரியான நேரத்துக்கு அனுப்பி வெச்சிருக்கார் ஸார் "
" யூ மே பி கரெக்ட்.... சட்டத்துக்கு புறம்பான விஷயங்கள் எந்தப் பகுதியில் நடந்தாலும் சரி.... அதை எந்த பொறுப்புள்ள போலீஸ் அதிகாரியும் பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டார். இந்த அபார்ட்மெண்ட்டுக்குள்ள நான் இன்னிக்குத்தான் முதல் தடவையா வர்றேன். பகல் நேரத்துலயே இந்த அபார்ட்மெண்ட்டைப் பார்க்கும்போதே அடி வயித்துல சின்னதா ஒரு திகில் வருது. அப்நார்மலான விஷயங்கள் எந்த இடத்துல நடந்தாலும் அது இப்படிப்பட்ட தோற்றத்துலதான் இருக்கும்..... கபிலன் சில விஷயங்கள் சொன்னார். அது அபார்ட்மெண்ட்டைப் பற்றிய பொதுவான விஷயங்கள். என் மனசுக்குள்ளே நிறைய கேள்விகள் இருக்கு. அந்தக் கேள்விகளுக்கான பதில்கள் எனக்கு உன்கிட்டயிருந்த கிடைக்கும்ன்னு நினைக்கிறேன். வில்....யூ..... கோப்ரேட் வித் மீ..... "
" ஷ்யூர் ஸார்....."
" நான் இப்போ கபிலனோட ஃப்ளாட்டுக்கு போயிட்டிருக்கேன். என்னோட முதற்கட்ட விசாரணையை அங்கிருந்துதான் ஆரம்பிக்கப் போறேன். உன்னால இப்ப எங்க கூட வர முடியுமா .... ? "
" இது என்ன கேள்வி ஸார்..... நான் உங்ககிட்டே சொல்ல வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு. கபிலன் இங்கே குடியில்லாததால அவர்க்கு நிறைய விஷயங்கள் தெரிய வாய்ப்பில்லை. நான் ரெண்டு வருஷ காலமாய் இந்த அபார்ட்மெண்ட்லேயே இருக்கிறதால பல விஷயங்களை என்னால சொல்ல முடியும் வாங்க ஸார் போகலாம் "
சந்திரசூடன் அகலமாய் மலர்ந்தார். படிகளில் ஏறிக்கொண்டே சொன்னார்.
" கோபிகா.... உனக்கு இருக்கிற இந்த துணிச்சல் ஆண் மகனான கபிலனுக்கு கூட இல்லை. இந்த அபார்ட்மெண்ட்ல அவர்க்கு சொந்தமா ஒரு ஃப்ளாட் இருந்தும்கூட இங்கே வர்றதுக்கு ரொம்பவும் பயப்பட்டார். நான்தான் தைரியம் சொல்லி கூட்டிட்டு வந்தேன்"
" அவர் பயப்பட்டதுல நியாயம் இருக்கு ஸார். ஏன்னா இந்த அபார்ட்மெண்ட்ல அப்படிப்பட்ட அநியாயங்கள் நடந்திருக்கு. அந்த அநியாயங்களுக்கு சாட்சிகளும் இருக்கு "
மூன்று பேரும் படிகளில் ஏறி மாடியின் நான்காவது தளத்துக்கு வந்தார்கள். கபிலன் சற்று முன்பாக நடந்து போய் 427 என்று எண்ணிட்ட அந்த ஃப்ளாட்டை நெருங்கி கதவில் தொங்கிக் கொண்டிருந்த பூட்டை சாவியால் விடுவித்து திறந்தான். உள்ளே போய் சுவரின் இடதுபுறமாக இருந்த சுவிட்ச் போர்ட்டை நெருங்கி இரண்டு சுவிட்ச்களைத் தொட எல்.இ.டி.பல்புகள் உயிர்பிடித்துக்கொண்டு வெளிச்சத்தை பரப்பியது. கபிலன் கதவைச் சாத்தி தாழிட்டான். பிறகு சந்திரசூடனுக்கும், கோபிகாவுக்கும் சோபாவைக் காட்டிவிட்டு எதிரில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தான்.
சந்திரசூடன் சோபாவுக்கு நன்றாய் சாய்ந்து அமர்ந்தபடி கோபிகாவை ஒரு சிறிய புன்னகையோடு பார்த்தார்.
" நீ இந்த அபார்ட்மெண்ட்டைப்பற்றி என்ன சொல்லப் போறே.... ? "
" ஸார்.... இந்த அதிரா அபார்ட்மெண்ட்ல மர்மமான முறையில் ஆறு பேர் இறந்து போயிருக்காங்கன்னு கபிலன் சொல்லியிருப்பார். அதுல நாலு பேர் பெண்கள் இரண்டு ஆண்கள் "
" ம்.... சொன்னார் "
" அதுமட்டுமில்லை ஸார். இந்த அபார்ட்மெண்டில் குடியிருந்தவங்க யாரும் சந்தோஷத்தோடும், மனநிம்மதியோடும் இருந்தது இல்லை. எவ்வளவோ நல்ல நிலைமையில் இருந்தவங்க கூட இங்கே குடி வந்து திரும்பிப் போகும்போது நஷ்டத்தோடுதாந் போயிருக்காங்க... பாதிக்கும் மேற்பட்ட அபார்ட்மெண்ட் குடியிருப்பு வாசிகள் அவங்களோட ஃப்ளாட்டுகளை வந்த விலைக்கு வித்துட்டுப் போயிட்டாங்க. அதிரா அபார்ட்மெண்ட்டுக்கு இந்த ஈஞ்சம்பாக்கம் ஏரியா மக்கள் என்ன பேர் வெச்சிருக்காங்கன்னு தெரியுமா ஸார் .... ? "
சந்திரசூடனின் புன்னகை சற்றே பெரிதாயிற்று.
" சொன்னாத்தானே தெரியும் .... ? "
" சந்திரமுகி அபார்ட்மெண்ட்"
" வெரி இண்ட்ரஸ்டிங்க்.... இங்கே பேய் இருக்குன்னு மக்கள் நம்பறாங்க போலிருக்கு... "
" அந்த நம்பிக்கை பொய்ன்னு சொல்ல வர்றீங்களா ஸார் .... ? "
" பின்னே அது என்ன உண்மையா .... ? "
" உண்மைதான் ஸார் "
சந்திரசூடனின் பார்வையில் ஒரு ஏளனம் கலந்து கோபிகாவை அளந்தது.
" நீ எம்.ஏ. ஜர்னலிஸ்சம் படிச்சுட்டு ஒரு தனியார் டி.வி.சானலில் நியூஸ் ரீடராய் ஒர்க் பண்றதா சொன்னே. ஆனா பேய் இருக்குன்னு மத்தவங்க சொல்றதை நீ நம்பறது எனக்கு ஆச்சர்யமாய் இருக்கு...... "
" ஸார்... இந்த உலகத்துல நல்லதுன்னு ஒண்ணு இருந்தா கெட்டதுன்னு ஒண்ணு இருக்கும். இந்த பெளதீக உண்மையை நீங்க ஒத்துக்கறீங்களா இல்லையா.... ? "
" எஸ்....ஐ....... அக்ரி வித் யூ. ஆனா நீ சொன்ன இந்த பேய் விஷயம் பெளதீக உண்மையோடு ஒத்துப் போகாதே "
" சில உண்மைகள் ஒத்துப் போகாதமாதிரிதான் இருக்கும் ஸார். நான் இப்ப சொல்லப்போகிற விஷயங்களை கொஞ்சம் உன்னிப்பா கவனிங்க ஸார். இந்த அபார்ட்மெண்ட் கட்டி ஆறு வருஷமாச்சு.... இங்கே அறுபது எழுபது வயதைக் கடந்த எத்தனையோ வயசானவங்க பலவிதமான நோய்களோடு போராடிகிட்டு இருக்கும்போது கூட யாருக்கும் மரணம் வரலை. ஆனா முப்பது வயசு கூட தாண்டாத ரெண்டு ஆண்களும், இருபத்தஞ்சு வயசைக்கூட தாண்டாத நாலு இளம் பெண்களும் வருஷத்துக்கு ஒருத்தரா மர்மமான முறையில் இறந்து போயிருக்காங்க. செத்தவங்க யார்க்குமே எந்த நோயும் இல்லை "
" அந்த ஆறு பேரும் இறந்தது இயற்கையான மரணம்தான்னு அந்தந்த ஃபேமிலியைச் சேர்நத டாக்டர்ஸே சொல்லியிருக்கும்போது அது மர்மமான மரணங்கள்ன்னு எப்படி சொல்ல முடியும் கோபிகா .... ? "
கோபிகா சில விநாடிகள் எதுவும் பேசாமல் தலைகுனிந்தபடி மெளனம் காத்தாள்.
சந்திரசூடன் கேலியான குரலில் கேட்டார்.
" என்ன பேச்சையே காணோம் .... ? "
" ஸார்..... நான் ஒரு விஷயம் சொன்னா நீங்க நம்பணும் "
" என்ன .... ? "
" அந்த ஆறு பேரும் இயற்கையா சாகலை "
" அப்படீன்னா கொலையா .... ? "
" இல்லை "
" அப்புறம் .... ? "
" அமானுஷ்ய மரணங்கள் "
சந்திரசூடன் சிரிக்க, கோபிகாவின் குரல் வெகுவாக தாழ்ந்து கிசுகிசுப்பாக மாறியது.
" சிரிக்காதீங்க ஸார்.. அதெல்லாம் அமானுஷ்ய மரணங்கள்தான்னு சொல்றதுக்கு என்கிட்ட ஆதாரங்கள் இருக்கு" சொன்ன கோபிகா சோபாவினின்றும் சற்றே திரும்பி உட்கார்ந்து ஜாக்கெட்டின் மறைவுப் பகுதிக்குள் கையை நுழைத்து அந்த செல்போனை எடுத்தாள்.
[அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10]
-
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
"கோடீஸ்வரர்".. ராஜ்யசபா எம்பியாகும் தேமுதிகவின் எல்கே சுதீஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர் -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications