For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"அது எங்க இருக்கு"... ஃப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (6)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

சந்திரசூடன் பார்வையில் திகைப்பு பரவியது. நாராயணியை தன் பரந்த நெற்றி சுருங்க ஏறிட்டார்.

" என்ன சொன்னீங்க.... அதிரா அபார்ட்மெண்ட்டா ..... ? "

" ஆமா "

" அது எங்கே இருக்கு ..... ? "

" ஈஞ்சம்பாக்கம் "

" ஈஞ்சம்பாக்கம்ன்னா இங்கிருந்து இருபது கிலோமீட்டர் தூரமாவது இருக்குமே ..... ? "

" ம்....இருக்கும் "

" அங்கே எதுக்கு போனீங்க ..... ? "

Flat number 144 Adhira apartment episode 6

" அந்த அதிரா அபார்ட்மெண்ட்ல எங்களுக்கு சொந்தமான ஒரு ஃப்ளாட் இருக்கு.... அதை வித்துடலாம்ன்னு ரொம்ப நாளாவே ஒரு எண்ணம். அது சம்பந்தமாய் ஒரு புரோக்கர்கிட்டே சொல்லி வெச்சிருந்தோம். நானும் அவரும் கல்யாண ரிசப்ஷனுக்குப் புறப்பட்டு போற நேரத்துல புரோக்கர்கிட்டயிருந்து போன் வந்தது. ஃப்ளாட்டை வாங்க பார்ட்டி ஒருத்தர் பிரியப்படறதாகவும், இன்னிக்கே பார்த்து ரேட் பேச விரும்பறதாகவும் சொன்னார். மேரேஜ் ரிசப்ஷனுக்கு கொஞ்ச லேட்டா கூட போய்க்கலாம்ன்னு நினைச்சு நாங்க ஈஞ்சம்பாக்கம் புறப்பட்டுப் போனோம். புரோக்கர் அங்கே பார்ட்டியோடு வெயிட் பண்ணிட்டிருந்தார். ஃப்ளாட் பார்ட்டிக்கு பிடிச்சிருந்தாலும் ரேட் படியலை. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசியும் பிரயோஜனமில்லாததால நானும் அவரும் புறப்பட்டு வந்துட்டோம் "

" நீங்க ஃப்ளாட்ல பார்ட்டியோடு பேசிட்டிருக்கும்போது உங்க காரை எந்த இடத்துல பார்க் பண்ணியிருந்தீங்க .... ?
"
" அபார்ட்மெண்ட்டுக்கு கீழே இருக்கிற பார்க்கிங் ஏரியாவுலதான் நிறுத்தியிருந்தோம் "

" அந்த இடத்துல உங்க காரைத் தவிர வேற ஏதாவது காரோ வாகனமோ நின்னுட்டிருந்ததா .... ? "

நாராயணி லேசாய் முகம் மாறி கலவரமானாள்.

" எதுக்காக இவ்வளவு விரிவா விசாரணை பண்ணிட்டிருக்கீங்க. ஏதாவது பிரச்சனையா .... ? "

" பிரச்சனைதான்.... அந்த பிரச்சனை என்னான்னு பின்னாடி சொல்றேன். இப்ப நான் கேட்கிற கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லிட்டு வாங்க. உங்க காரைத் தவிர அந்தப் பார்க்கிங் ஏரியாவில் வேற ஏதாவது வாகனங்கள் இருந்ததா.... ? "

நாராயணி தன்னுடைய வியர்த்த முகத்தை புடவைத் தலைப்பால் ஒற்றிக்கொண்டே சில விநாடிகள் யோசித்துவிட்டு சொன்னாள்.

" அது அபார்ட்மெண்ட்டோட பேஸ்மெண்ட் ஏரியாவோட கார் பார்க்கிங். அதனால அங்கே குடியிருக்கிறவங்களோட கார்கள் மட்டுமே நின்னுட்டிருந்தது "

" வேன் ஏதாவது இருந்ததா.... ? "

" நான் கவனிக்கலை..... "

" சரி.... உங்க ஃப்ளாட்டை வாங்க வந்த பார்ட்டியோடு பேசிட்டு ஒரு மணி நேரம் கழிச்சு கீழே வந்த நீங்க காரோட டிக்கியைத் திறந்து பார்த்தீங்களா ..... ? "

" இல்லை ..... கல்யாண ரிசப்ஷனை அட்டெண்ட் பண்ணனுமே என்கிற அவசரத்துல உடனே அங்கிருந்து புறப்பட்டு விட்டோம். அதுவுமில்லாமே காரோட டிக்கியை அந்த நேரத்துல திறந்துப் பார்க்க வேண்டிய அவசியமும் எங்களுக்கு ஏற்படலை "

சந்திரசூடன் மேற்கொண்டு பேசும் முன்பு நாராயணி சந்திரசூடனை சற்றே கோபமாய் ஏறிட்டுப் பார்த்து கையமர்த்தினாள். குரல் நடுங்க பேசினாள்.

" நீங்க என்னை விசாரிக்கிற விதத்தைப் பார்த்தா ஏதோ ஒரு பெரிய பிரச்சனை நடந்திருக்கும் போலிருக்கே. அது என்னான்னு சொல்லுங்க. நானும் என்னோட ஹஸ்பெண்ட்டும் ஏற்கனவே கார் காணாமே போன விஷயத்துல ஏகப்பட்ட டென்ஷனோடு இருக்கோம். நீங்களும் ஏதேதோ கேள்விகளைக் கேட்டு டென்ஷன் படுத்தாதீங்க.
எதுக்காக இந்த விசாரணைன்னு தெரிஞ்சுக்கலாமா ..... ? "

சந்திரசூடன் சில விநாடிகள் நாராயணியையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு மெல்ல சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு குரலைத் தாழ்த்தினார்.

" உங்க காரோட டிக்கியில் ஒரு பெண்ணோட டெட்பாடி இருந்தது "

நாராயணியின் கையில் இருந்த ஃப்ளாஸ்க் அதிர்ச்சியில் நழுவ முயன்றது. விழாமல் பிடித்துக்கொண்டாள்.

" எ....எ....என்ன சொல்றீங்க..... டெட்பாடியா ..... ? "

" ஆமா "

" எ...எ....எப்படி ..... ? "

" அது எப்படீன்னு.... நீங்கதான் சொல்லணும் "

" என்ன விளையாடறீங்களா......? காரை திருடிகிட்டு போனவங்ககிட்டே இந்த கேள்வியைக் கேட்கணும் "

" நீங்க சொல்றது ரொம்பவும் சரி ஆனா காரைத் திருடிகிட்டு போன நபர்கள் இப்போ உயிரோடு இல்லையே....... அந்தக் கார் திருட்டுல சம்பந்தப்பட்ட ஒரு பையன் கொடுத்த வாக்குமூலப்படி அந்தக் காரைத் திருடின நபர்களுக்கும் கொலை செய்யப்பட்டு டிக்கியில் அடைபட்ட பெண்ணுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்கிற உண்மை நிரூபணம் ஆகியிருக்கு "

நாராயணியின் பார்வை இப்போது ஒரு தீப்பொறியாய் மாறி சந்திரசூடனை தகித்தது.

" இப்ப நீங்க என்ன சொல்ல வர்றீங்க..... ? "

" நான் கங்காதரன் மேல சந்தேகப்படறதாய் தப்பாய் நினைக்க வேண்டாம். உண்மையிலே கொலை செய்யப்பட்ட அந்தப் பெண் யார், அவ எப்படி உங்க காரோட டிக்கிக்குள்ளே டெட்பாடியாய் அடைக்கப்பட்டா என்கிற உண்மைகளை வெளியே கொண்டு வரணும்ன்னா நீங்க கொஞ்சம் ஒத்துழைக்கணும் "

" ஒத்துழைக்கணும்ன்னா எப்படி ..... ? "

" அந்த அதிரா அபார்ட்மெண்ட்டுக்கு நீங்க என்னைக் கூட்டிட்டு போகணும். காரை அங்கே பார்க் பண்ணின இடம் எதுன்னு நான் பார்க்கணும். ஒருவேளை அந்தப் பெண்ணோட டெட்பாடி அந்த இடத்துல காரோட டிக்கிக்குள்ளே அடைக்கப்பட்டிருந்தா அந்தக் காட்சி சி.சி.டி.வி. காமிராவில் பதிவாக வாய்ப்படிருக்கு. அந்தப் பதிவை நான் பார்க்கணும். நாம போகலாமா ..... ? "

நாராயணி தலையைக் குனிந்து கொண்டு ஒன்றும் பேசாமல் மெளனம் சாதிக்க சந்திரசூடன் கேட்டார்.

" என்ன பேச்சையே காணோம் ..... ? "

" ஸாரி " என்றாள் நாராயணி.

"எதுக்கு ஸாரி ..... ? "

" கடந்த ஆறுமாச காலமாய் அந்த அதிரா அபார்ட்மெண்ட்ல சி.சி.டி.வி. காமிரா யூனிட் செயல்பாட்டில் இல்லை.... "

" ஏன் ..... ? "

"அங்கே நிலைமை சரியில்லை "

" நிலைமை சரியில்லைன்னா ..... ? "

" எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை.... கடந்த மூணு வருஷமாகவே அந்த அதிரா அபார்ட்மெண்ட்டில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தது. அதைக் காரணம் காட்டி நிறைய பேர் அங்கேயிருக்கிற ஃப்ளாட்களை காலி பண்ணிட்டு போயிட்டதால, நல்ல முறையில் இயங்கிகிட்டு இருந்த அபார்ட்மெண்ட் வெல்ஃபேர் அஸ்ஸோஸியேஷனை டிஸ்ஸால்வ் பண்ணிட்டாங்க... இப்போ அங்கே எதுவுமே சரியில்லை....... "

சந்திரசூடனின் மூளைப்பிரதேசம் ரெட்ஜோனாய் மாறியது. குரலை வெகுவாய் தாழ்த்தினார். " அந்த அபார்ட்மெண்ட்டில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கிறதாய் சொன்னீங்க.... அது எதுமாதிரியான சம்பவங்கள்ன்னு சொல்ல முடியுமா ..... ? "

" அது.... வந்து......... "

" எதையும் மறைக்காமே சொல்றது உங்களுக்கு நல்லது.... "

நாராயணி புடவைத்தலைப்பில் நெற்றி வியர்வையை ஒற்றிக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு சொன்னாள்.

" கடந்த மூணு வருஷ காலத்துல அந்த அபார்ட்மெண்ட்டில் ஆறு பேர் மர்மமான முறையில் இறந்து போயிருக்காங்க. அதுல நாலு பேர் பெண்கள். ரெண்டு பேர் ஆண்கள். பெண்களில் ஒருத்தி டி.வி.நடிகை. சினிமாவிலும் ஆக்ட் பண்ணியிருக்கா. இன்னொரு பெண் விமானத்தில் பணி புரிகிற ஏர்ஹோஸ்டஸ், மூணாவது பெண் ஒரு பிரைவேட் காலேஜ்ல புரபசர், நாலாவது பெண் ஒரு ஐ.டி.கேர்ள். ஆண்கள்ல ஒருத்தரி லாயர், இன்னொருத்தர் ரியல் எஸ்டேட் ஒனர் "

சந்திரசூடன் குறுக்கிட்டு கேட்டார்.

" மர்மமான முறையில் இந்த ஆறு பேரும் இறந்து போயிட்டதாய் சொன்னீங்க இல்லையா ..... ? "

" ஆமா "

" மர்மமான முறையில்ன்னா அது எப்படிபட்ட மர்மம் ..... ? "

" எனக்குத் தெரியாது..... அப்படித்தான் பேசிகிட்டாங்க "

" சரி.... அந்த ஆறுபேரோட டெட்பாடியும் போஸ்ட்மார்ட்டம் பண்ணப்பட்டதா ..... ? "

" அதுபத்தி எனக்குத் தெரியாது "

" கங்காதரனுக்குத் தெரியுமா ..... ? "

" அவர்க்கும் தெரியாது "

சந்திரசூடன் பெருமூச்செறிந்தார். " நீங்க சொல்ற விபரங்களை வெச்சு பார்க்கும்போது நேற்றைக்கு அந்த அதிரா அபார்ட்மெண்ட்லதான் ஏதோ ஒரு கொலைச்சம்பவம் நடந்து கொலை செய்யப்பட்ட பெண்ணையை டிஸ்போஸ் பண்றதுக்காக அவளோட உடம்பை உங்க காரோட டிக்கிக்குள்ளே போட்டு இருக்கணும்ன்னு நினைக்கிறேன் "

" அது எப்படி..... காரோட சாவி எங்ககிட்ட இருக்கும்போது காரோட டிக்கியை ஒப்பன் பண்ணியிருக்க முடியும் ..... ?
"

" ஒரு ஹைடெக் கிரிமினலுக்கு அதெல்லாம் பெரிய விஷயமே கிடையாது. சர்ட்டைக் கழற்றி மாட்டற மாதிரி எல்லா விஷயங்களையும் ஒரு நிமிஷ நேரத்துல பண்ணி முடிச்சுட்டு போயிட்டே இருப்பாங்க. பை...த....பை.... கங்காதரன் இப்ப நல்லாத் தூங்கிட்டுதானே இருக்கார் ..... ? "

" ஆமா.... ஹைபர் டென்ஷனை கண்ட்ரோல் பண்றதுக்காக ஒரு இஞ்செக்சனைப் போட்டு அவரை தூங்க வெச்சிருக்காங்க "

" மறுபடியும் கண் விழிக்க எவ்வளவு நேரமாகும் ..... ? "

" மூணு மணி நேரமாகும் "

" அதுக்குள்ளே நாம அதிரா அபார்ட்மெண்ட்டுக்கு போயிட்டு வந்துடலாமா ..... ? "
நாராயணி ஆத்திரத்தில் முகம் சிவந்தாள்.

" உங்களுக்கெல்லாம் மனச்சாட்சியே கிடையாதா..... அவர் உங்களுக்கு நண்பர்தானே... இந்த நிலைமையில் என்னை அபார்ட்மெண்ட்டுக்கு வரச் சொல்றீங்களே இது உங்களுக்கே நியாயமாபடுதா ? "

சந்திரசூடன் தன்னுடைய இரு தோள்களையும் சின்னதாய் ஜெர்க் செய்துவிட்டு சொன்னார்.

" நியாயமில்லைதான்.... ஆனா இந்த கேஸை ஆறப்போடாமே உடனடியாய் இன்வெஸ்டிகேட் பண்ணியாகணும். இல்லேன்னா இதனால ஏற்படப்போகிற பின்விளைவுகள் உங்க ஃபேம்லிக்கு பாதகமாய் அமையலாம்..... போலீஸூக்குன்னு சில ஃபார்மாலிடீஸ் இருக்கு. அதை உடனடியாய் நடைமுறைப்படுத்தினால் மட்டுமே உண்மையான குற்றவாளின்னு யார்ஙகிறதை கண்டுபிடிக்க முடியும். என் மேல கோபப்பட்டு பிரயோஜனமில்லை
"

நாராயணி சில விநாடிகள் யோசித்துவிட்டு சொன்னாள்.

" சரி, என்னோட சன் கபிலன் இப்பத்தான் கிளம்பி ஆபீஸூக்கு போனான். அவனை வேணும்ன்னா வரச்சொல்றேன். அவனைக் கூட்டிகிட்டு அபார்ட்மெண்ட்டுக்கு போங்க "

" தட்ஸ்குட்..... அவருக்கு உடனே போன் பண்ணி வரச் சொல்லுங்க "

நாராயணி தன்னுடைய கைப்பையில் இருந்த செல்போனை எடுத்துக்கொண்டு மகன் கபிலனோடு பேச முயல, சந்திரசூடன் மெல்ல அங்கிருந்து நகர்ந்து, இருபதடி தள்ளிப்போய் ஒரு ஜன்னல் அருகே நின்று கொண்டு தன் சட்டைப் பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்தார். காண்டாக்ட் ஆப்ஷனுக்குப் போய் ஒரு எண்ணைத் தேய்த்துவிட்டு மறுமுனையில் வரப்போகும் குரலுக்காக காத்திருந்தார். அடுத்த அரை நிமிடத்தில் குரல் கேட்டது. சற்றே அதட்டலான தொனி.

" திஸ் ஈஸ்.... ஈஞ்சம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷன்.... ? "

சந்திரசூடன் கேட்டார். " யார் பேசறது .... ? "

" ஸ்டேஷன் ரைட்டர் சண்முகவேல்.... நீங்க யாரு .... ? "

" ஏ.சி.பி. சந்திரசூடன் "

சண்முகவேல் பதட்டப்பட்டார். " ஸாரி ஸார்..... நீங்க யார்ன்னு தெரியாமே கேட்டுட்டேன். என்ன விஷயம் ஸார்.... ? "

" ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் நன்மாறன் இருக்காரா .... ? "

" இருக்கார் ஸார் "

"ரிஸீவரை அவர்கிட்டே குடு... "

மறுமுனையில் ரிஸீவர் கை மாறியது. மரியாதையோடு பவ்யமும் கலந்த குரல் இரண்டாவது விநாடியே கேட்டது.

" ஸ....ஸார்.... நான் நன்மாறன் "

"நன்மாறன்..... உடனே எனக்கு ஒரு இன்ஃபர்மேஷன் வேணும் "

" ப்ளீஸ்.... ஸ.....ஸார் "

" உங்க பீட் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள்ளே அதிரா அபார்ட்மெண்ட் என்கிற பேர்ல அபார்ட்மெண்ட் ஏதாவது இருக்கா .... ? "

ரிஸீவரின் மறுமுனையில் மெளனம்.

சந்திரசூடன் சில விநாடிகள் நிசப்தம் காத்துவிட்டு கேட்டார்.

"என்ன நன்மாறன்..... பதிலையே காணோம். நான் பேசினது உங்க காதுல விழுந்ததா..... ? "

" விழுந்தது ஸார் "

" தென் வாட் ஈஸ் யுவர் ரிப்ளை ..... ? "

" ஸாரி ஸார்.... ப்ளீஸ் ரிபீட் யுவர் கொஸ்டியன் ஸார்.... "

சந்திரசூடன் சூடானார். " அதிரா அபார்ட்மெண்ட் என்கிற பேர்ல உங்க பீட் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள்ளே அபார்ட்மெண்ட் ஏதாவது இருக்கா ..... ? "

" அப்படி எதுவும் இல்லை ஸார் "

( தொடரும்)

[அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6]

English summary
Flat number 144 Adhira apartment (Episode 4) is a new crime thriller serial written by writer R Rajeshkumar. பிரபல நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதும் ' ஃப்ளாட் நெம்பர் 144 அதிரா அப்பார்ட்மெண்ட்' கிரைம் நாவலின் முதல் எபிசோடை இந்த பக்கத்தில் காணலாம்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X