• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"ஸ்பாட்டுக்கு போயிட்டு இருக்கீங்களா ?".. ஃப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (4)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

போலீஸ் ஜீப் முடிச்சூரின் புறநகர் சாலையில் எண்பது கிலோ மீட்டர் வேகத்தில் சீறிக் கொண்டிருக்க ஜீப்பின் பின் இருக்கையில் உட்கார்ந்திருந்த அரவிந்தன் செல்போனை தன் காதுக்கு கொடுத்திருந்தார். மறுமுனையில் ராமானுஜம் பேசினார்.

" என்ன ஸ்பாட்டுக்கு போயிட்டு இருக்கீங்களா ? "

" ஆமா ராமானுஜம் ...... இன்னும் ஒரு அரை மணி நேரத்துக்குள்ளே நாங்க கார் க்யூர் ரிப்பேர் சென்டர்க்கு போயிடுவோம்"

Flat number 144 Adhira apartment episode 4

" அந்த ரகுநாத் பழைய எம்.எல்.ஏன்னு சொல்றீங்க. அவரோட பொலிடிக்கல் பேக்ரவுண்ட எப்படியிருக்குன்னு பார்த்துக்குங்க. அப்புறம் நமக்கே பேக்ஃபயர் ஆயிடப்போகுது...... "

" நோ.. நோ.... நான் விசாரிச்சுட்டேன். அந்த ஆள் அப்படியொன்னும் பவர்ஃபுல் பர்சன் கிடையாது. மொதல்ல ஸ்பாட்டுக்குப்போய் பார்க்கிறேன். கார் அந்த ஒர்க்சாப்பில் இருந்தா உடனடியாய் கைது பண்ணி ஸ்டேஷனுக்கு கொண்டு போய் உட்கார வெச்சு ஒரு ஃபார்மல் என்கொய்ரியை ஆரம்பிச்சுட வேண்டியதுதான்"

" பி காஷியஸ் அரவிந்தன்...... பொதுவா கார் திருட்டுல சம்பந்தப்படறவன் தனியாளாய் இருக்கமாட்டான். அவனுக்குப் பின்னாடி ஒரு கும்பல் இருக்கும். நீங்க எச்சரிக்கையோடு அந்த எல்லைக்குள் நுழையறது நல்லது...... "

" பயப்பட வேண்டிய அவசியமில்லை ராமானுஜம். ஜீப்ல நாலு கான்ஸ்டபிள்ஸ் ஆர்ம்ஸோட இருக்காங்க. ஏதாவது பிரச்சினையின்னா அதை சுலபத்துல சமாளிக்க முடியும்... நான் ஸ்பாட்டுக்குப் போய் நிலவரத்தைப் பார்த்துட்டு உடனடியாய் உங்களை காண்டாக்ட் பண்றேன்

" ஓ.கே...... உங்க போன்காலுக்காக வெயிட் பண்ணிட்டிருக்கேன்...." மறுமுனையில் ராமானுஜம் போன் இணைப்பை துண்டித்துவிட அரவிந்த் தன் செல்போனை அணைத்து பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டு ஜீப் ட்ரைவரின் முதுகைத் தொட்டார்.

" முத்துகுமார்..... ரோடுதான் காலியாய் கிடக்கே.... வண்டியைக் கொஞ்சம் விரட்டு....... "

அடுத்த விநாடியே ஜீப்பின் ஸ்பீடா மீட்டர் முள் நூறைத் தொட வாகனத்தின் வேகம் காற்றைக் கிழித்தது.

*******

காரின் பானெட்டைத் திறந்து இரண்டு நிமிஷ நேரம்

செலவழித்து அதனுடைய இணைப்புகளையெல்லாம் உற்றுப் பார்த்துவிட்டு மறுபடியும் பானெட்டைச் சாத்தினான் மாத்யூ.

சற்று தள்ளியிருந்த ரகுநாத் கேட்டார்.

" என்னாச்சு மாத்யூ? "

" கார்ல எந்த பிரச்சினையும் இருக்கிறமாதிரி தெரியலை ஸார் "

" அப்புறம் ஏன் ஸ்டார்ட்டாக மாட்டேங்குது. கார்ல பெட்ரோல் இருக்கா இல்லையா ? "

" பெட்ரோல் இருக்கு ஸார்..... முக்கால் டேங்க் பெட்ரோல் இருக்கிறதாய் ஃப்யூவல் மீட்டர் காட்டுதே "

" சரி..... மறுபடியும் ஒரு தடவை காரை ஸ்டார்ட் பண்ணிப் பாரு"

கார்க்குள் ஏறி உட்கார்ந்தான் மாத்யூ. சாவியைத் திருகி இக்னீஷியனை உசிப்பினான். கார் சின்னதாய் கனைத்துவிட்டு நிசப்தம் காத்தது.

மாத்யூ தொடர்ந்து நான்கைந்து முறை முயற்சி செய்து பார்த்துவிட்டு எரிச்சலோடு காரினின்றும் இறங்கினான்.

" கார் ஏன் ஸ்டார்ட்டாக மாட்டேங்குதுன்னு புரியலை ஸார்.... நேத்து ராத்திரி நான் ஒட்டிகிட்டு வந்தபோது வண்டியில் எந்த பிரச்சினையும் இருக்கிற மாதிரி தெரியலை. ஒரு புதுக்காரை ட்ரைவ் பண்ணினா எதுமாதிரியான ஃபீல் கிடைக்குமோ அது எனக்கும் கிடைச்சது ஸார் "

" சரி.... உன்னோட ஃப்ரண்ட் ஸ்டீபனுக்கு கார் மெக்கானிஸமெல்லாம் அத்துபடி. அவனுக்கு போன் பண்ணி பிரச்சினையை சொல்லு... கார் ஸ்டார்ட்டாக அவன் ஏதாவது டிப்ஸ் தரலாம் "

" இப்ப போன் பண்ணிடறேன் ஸார் " சொன்ன மாத்யூ தன்னுடைய செல்போனை எடுத்துக்கொண்டு அந்த ஸ்டீபனைத் தொடர்பு கொள்ள, அவன் உடனே இணைப்பில் கிடைத்தான். உற்சாகமாய் குரல் கொடுத்தான்.

" என்ன மாத்யூ..... ராத்திரி புது மீனை பிடிச்சிட்டே போலிருக்கு...... வெட்டி கூறு போட்டியா இல்ல இன்னமும் வெச்சுட்டு இருக்கியா? "

" மீன் இன்னமும் அப்படியேதான் இருக்கு"

" ஏன் என்னாச்சு ? "

" எதிர்பாராத விதமா ஒரு பிரச்சினை.... அந்தப் பிரச்சினை என்னான்னு அப்புறமாய் சொல்றேன்.... முதல்ல நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லு ஸ்டீபன் ? "

" என்ன.... இவ்வளவு டென்ஷனா பேசறே ? விஷயம் என்னான்னு சொல்லு. நேத்து ராத்திரி கொண்டு வந்தது மாருதி ஸ்விப்ட்தானே ? "

" ஆமா..... புது மாருதி ஸ்விப்ட் கார்..... வாங்கி மூணுமாசம்தான் இருக்கும்.... நேத்து ராத்திரி தட்டிட்டு வந்து வொர்க்சாப்ல வெச்சுட்டேன். இப்ப அதை வேற இடத்துக்கு கொண்டு போக வேண்டிய கட்டாயம் கார்ல உட்கார்ந்து இக்னீஷியனைத் தர்றேன்.... கார் ஸ்டார்ட்டாக மாட்டேங்குது..... அடம் பிடிக்குது "

" புதுக்கார்ன்னு சொல்றே........ அது எப்படி ஸ்டார்ட்டாகாமே இருக்கும்...... ? "

" அதான் புரியலை.... பேட்டரி வீக்காக வாய்ப்பில்ல ஏன்னா புது பேட்டரி...... பெட்ரோலும் இருக்கு "

" அப்படீன்னா காரோட ஸ்டீயரிங் வீல் லாக்காகி இருக்கலாம். அதை செக் பண்ணிப் பார்த்தியா ? "

" ம்...... பார்த்தேன்... வீல் லாக் ஆகலை....... "

" இக்னீஷியன் ஸ்விட்ச் ஆஃப்ல இருக்கான்னு பார் "

" பார்த்துட்டேன்..... அது ஆன்ல தான் இருக்கு "

" அப்படீன்னா என்ஜினுக்கு பெட்ரோலை சுத்தப்படுத்தி அனுப்பற ஃபில்டரில் அடைப்பு ஏதாவது இருந்தா கார் ஸ்டார்ட்டாகாது செக் பண்ணு "

" இது புது கார் ஸ்டீபன்.... அப்படியெல்லாம் அடைப்பு ஏற்பட வாய்ப்பில்லை......"

மறுமுனையில் ஸ்டீபன் சிரித்தான். " என்ன மாத்யூ...... காரைப் பத்தி எதுவுமே தெரியாத ஆள் மாதிரி பேசிட்டிருக்கே? கார் வாங்கி மூணு மாசமாகியிருக்கலாம்ன்னு சொல்றே..... பொதுவா ஒரு கார் பத்தாயிரம் கிலோ மீட்டரிலிருந்து பதினஞ்சாயிரம் கிலோ மீட்டர் தூரம் ஒடியிருந்தா பெட்ரோலை சுத்தப்படுத்தற ஃபில்டரை மாத்தியாகணும். அந்தக் கார் இந்த மூணு மாசத்துல பத்தாயிரம் கிலோ மீட்டர் ஒடியிருக்கலாமே..... ? முதல்ல அதை செக் பண்ணு. அப்படியே டயமிங் பெல்ட்டையும் நல்ல கண்டிஷன்ல இருக்கான்னு பார்த்துடு "

" நீ சொன்ன இதையெல்லாம் நான் யோசிச்சுப் பார்க்கலை ஸ்டீபன்.... இப்ப எல்லாத்தையும் சரி பார்த்துடறேன் "

" அப்புறம் இன்னொரு விஷயம் ? "

" என்ன ? "

" கார்க்கு தப்பான சாவியைக் கொடுத்து ஸ்டார்ட் பண்ண முயற்சி செஞ்சிருந்தா அடுத்த அரை மணி நேரத்துக்கு வண்டியை ஸ்டார்ட் செய்ய முடியாதபடி ஏதாவது டெக்னாலஜி நுட்பம் அந்த கார்க்குள்ளே இருக்கலாம்..... அதையும் பார்த்துடு "

" அப்படியெல்லாம் இருந்திருந்தா காரை நான் எப்படி கொண்டு வந்திருக்க முடியும்....? கார் ஸ்டார்ட்டாகாமே சண்டித்தனம் பண்றதுக்குக் காரணம் நீ சொன்ன அந்த பெட்ரோல் ஃபில்டர்தான்னு நினைக்கிறேன். அதை இப்ப நான் சரி பார்த்துடறேன் "

" அந்தக் கார்ல வேற ஏதோ பிரச்சினைன்னு சொன்னியே என்ன?"

" இப்ப விளக்கமா சொல்லிட்டிருக்க நேரமில்லை ஸ்டீபன். ஒரு மணி நேரம் கழிச்சு நானே போன் பண்றேன் "
மாத்யூ செல்போனை அணைத்துவிட்டு தன்னையே பார்த்துக் கொண்டு நின்றிருந்த ரகுநாத்தை ஏறிட்டான் மெல்லிய குரலில் சொன்னான்.

" காரை இன்னும் பத்து நிமிஷத்துக்குள்ளே ஸ்டார்ட் பண்ணிடலாம் ஸார் "

" நீ என்ன பண்ணுவியோ... ஏது பண்ணுவியோ எனக்குத் தெரியாது. நான் இந்த சிகரெட்டை குடிச்சு முடிக்கிறதுக்குள்ளே கார் இந்த இடத்தைவிட்டு போயிருக்கணும் " சொன்ன ரகுநாத் சிகரெட் ஒன்றை உதட்டுக்கு கொடுக்க, மாத்யூ டூல் பாக்ஸை எடுக்க பக்கத்தில் இருந்த ஆஸ்பெஸ்டாஸ் வேய்ந்த ஒரு சிறிய அறையை நோக்கி ஒடினான்.

*******

ஜீப் நல்ல வேகத்தில் போய்க் கொண்டிருக்க, சாலையின் இரண்டு பக்கமும் சவுக்குத் தோப்புகள் விடாப்பிடியாய் வந்து கொண்டேயிருந்தன.

இன்ஸ்பெக்டர் அரவிந்தன் கான்ஸ்டபிள் ஒருவரிடம் திரும்பினார். " என்ன குமரேசன்.... போய்கிட்டேயிருக்கோம். அந்த ரகுநாத்தோட கார் க்யூர் ரிப்பேரிங் சென்டர் போர்டு கண்ணிலேயே படலையே.... ? "

" இன்னும் ஒரு கிலோமீட்டர் போகணும் ஸார். தோப்புக்குள்ளே அது கொஞ்சம் மறைவான பகுதி...... போர்டெல்லாம் பார்வைக்குத் தட்டுப்படாது ஸார் "

" நீ அந்த இடத்துக்குப் போயிருக்கியா.... ? "

" ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி என்னோட டூவீலர்ல ஒரு சின்ன ரிப்பேர் பார்க்க வேண்டியிருந்தது. அப்ப போனதுதான் ஸார் "

கான்ஸ்டபிள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஜீப்பின் வேகம் சற்றே குறைய ட்ரைவர் சொன்னார்.

" ஸார்..... ரைட்ல வொர்க்சாப் மாதிரி ஒரு கட்டிடமும் உள்ளே போறதுக்கான மண் ரோடும் தெரியுது. உள்ளே போயிடலாமா .... ? "

" ம்.....போ...... "

கார் யூ டர்ன் எடுத்து மண்பாதைக்குள் நுழைந்தது. சவுக்கு மரங்கள் காற்றுக்கு அசைந்து கொண்டிருக்க, ஜீப் சீரற்ற பாதையில் தத்தி தத்தி ஒடியது. சுற்றிலும் அசாத்திய நிசப்தம்.

" ஸார்.... போர்டு தெரியுது.... கார் க்யூர் ரிப்பேரிங் சென்டர்..... உள்ளே நாலைஞ்சு பழைய கார் நிக்குது "

" ஆள் நடமாட்டம் இல்லாத இந்த இடத்துல ஒரு வொர்க்சாப்பை வெச்சிருக்கான் அந்த பழைய எம்.எல்.ஏ. ரகுநாத் உண்மையிலேயே இது வொர்க்சாப்தானா..... இல்லை அந்தப் போர்வையை போர்த்திகிட்டு வேற வேலை ஏதாவது பார்த்துட்டு இருக்கானா? இன்னிக்கு தரோவா செக் பண்ணிப் பார்த்துட வேண்டியதுதான்.... "

தகரத்தாலான காம்பெளண்ட் கதவு அகலமாய் திறந்திருக்க ஜீப் உள்ளே போயிற்று. மரத்தையொட்டி நின்றது. அரவிந்தனைத் தொடர்ந்து நான்கு கான்ஸ்டபிள்களும் இறங்கினார்கள்.

ஒரு பழைய காரின் வீல் போர்ஷனைப் பிரிப்பதில் கவனமாய் இருந்த பாண்டி, போலீஸைப் பார்த்ததும் வியர்த்து
விறுவிறுத்துப் போனவனாய் தயக்க நடை போட்டபடி வந்தான். கான்ஸ்டபிள்களில் ஒருவர் அதட்டினார்.

" வேகமா வாடா...... "

மூச்சு வாங்கியபடி பாண்டி வேகமாய் வந்து நிற்க அரவிந்தன் கேட்டார்.

" உம் பேர் என்னடா .... ? "

" ப.....ப......பாண்டி ஸார் "

" இங்க வேற யார் இருக்காங்க .... ? "

" மெக்கானிக் இருக்கார் ஸார்..... "

" எங்கே அந்த ஆள் .... ? "

பாண்டி திரும்பி நின்று கைகாட்டினான். " அதோ அந்தப் பக்கம் முதலாளியோடு போயிருக்கார் "

" முதலாளி பேர் ரகுநாத்தானே .... ? "

" ஆமா ஸார் "

" ரெண்டு பேரும் அங்கே என்ன பண்றாங்க .... ? "

" அது....அது..... வந்து "

" சொல்லுடா "

" எ....எ....எனக்குத் தெரியலை ஸார் "

" வா....வந்து அந்த இடத்தைக் காட்டு " பாண்டியை முன்னால் நடக்கவிட்டு அரவிந்தனும் கான்ஸ்டபிள்களும் பின் தொடர்ந்தார்கள்.

இரண்டு நிமிஷ நடையில் மரங்கள் சூழ்ந்த அந்தப் பகுதி வர, தள்ளித்தள்ளி தெரிந்த பழைய கார்களுக்கு நடுவே அட்லாண்டிக் ப்ளூ நிறத்தில் மாருதி ஸ்விப்ட் கார் பார்வைக்குத் தட்டுப்பட்டது.

கான்ஸ்டபிள்களில் ஒருவர் கத்தினார்.

" ஸார்..... திருடுபோன கார் இதுதான்னு நினைக்கிறேன் "

" மே.பி " என்று சொல்லிக்கொண்டே காரை நோக்கி வேகமாய் போன அரவிந்தன் சட்டென்று இதயம் அதிர்ந்து போனவராய் நின்றார். பார்வை நடுங்கியது.

காரின் முன்பக்க டயர்க்குப் பக்கத்தில் ரகுநாத் மல்லாந்து விழுந்து கிடந்தார். கழுத்தில் அரிவாள் ஒன்று ஆழமாய் சிவப்பு நிறத்தில் இறங்கியிருக்க சுற்றிலும் சின்னச்சின்ன ரத்த ஆறுகள் வழிந்து மண்ணில் உறைந்து போயிருந்தது. ஈக்கள் வட்டமடித்துக் கொண்டிருந்தன.

( தொடரும்)

[அத்தியாயம் : 1 , 2, 3, 4]

English summary
Flat number 144 Adhira apartment (Episode 4) is a new crime thriller serial written by writer R Rajeshkumar. பிரபல நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதும் ' ஃப்ளாட் நெம்பர் 144 அதிரா அப்பார்ட்மெண்ட்' கிரைம் நாவலின் முதல் எபிசோடை இந்த பக்கத்தில் காணலாம்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X