For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"பயமாயிருக்கு ஸார்" .. ஃப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (2)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

வெகுவாய் முகம் மாறிப் போனார் ரகுநாத். காரின் டிக்கியை கலவரமாய் பார்த்துக்கொண்டே மாத்யூவிடம் திரும்பினார்.

" அது ரத்தம்தானே ? "

மாத்யூ பக்கத்தில் போய்ப் பார்த்துவிட்டு உதறும் குரலில் "ஆமா ஸார்..... அப்படித்தான் தெரியுது...... " என்றான்.

" டிக்கியை ஒப்பன் பண்ணு..... "

Flat number 144 Adhira apartment episode 2

மாத்யூ தன்னுடைய பேண்ட் பாக்கெட்டில் கையை நுழைத்து அந்த சி ஷேம் ஷாக்கிங் ஃபேக் கார் சாவியை எடுத்து அதன் முன்புறம் இருந்த பட்டனை இரண்டு முறை அழுத்தினான். டிக்கி டப் என்ற சத்தத்துடன் திறந்து கொண்டது. ரகுநாத் கேட்டார்.

" நேத்து ராத்திரி காரைக் கடத்திகிட்டு வந்து இங்க நிறுத்தும்போது இந்த ரத்தக்கறையை நீ கவனிக்கலையா மாத்யூ? "

" கவனிக்கலை ஸார்.... நேத்து ராத்திரி பூராவும் கரண்ட் இல்லை.... கேன்வாஸ் படுதாவால் மூடின காரை இப்பத்தான் நான் பார்க்கறேன்.... "

" சரி.... டிக்கியைத் திறந்து உள்ளே என்ன இருக்குன்னு பாரு ? "

ரகுநாத் சொல்ல மாத்யூ இருந்த இடத்தை விட்டு அசையாமல் அப்படியே நின்றான.

" என்ன .... நான்.... சொன்னது காதுல விழலையா ? "

" பயமாயிருக்கு ஸார்...... "

" என்னது பயமா.... ? சரி இந்த டிக்கியை திறந்து உள்ளே என்ன இருக்குன்னு பார்த்துச் சொல்றதுக்கு போலீஸூக்கு போன் பண்ணி இங்கே வரச் சொல்லட்டுமா ......... ? "

" ஸாரி ஸார்..... உள்ளே என்ன இருக்குன்னு இப்ப பார்த்துடறேன் " சொன்ன மாத்யூ டிக்கியை நோக்கிப் போய் அதன் கைப்பிடி பாகத்தில் கையை வைத்து சிறிது சிறிதாய் டிக்கியைத் தூக்கினான்.

*******

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை ஒட்டியிருந்த ட்ராஃபிக் விஜிலன்ஸ் என்றப் பலகையோடு தெரிந்த கட்டிடத்திற்குள் அஸிஸ்டெண்ட் கமிஷனர் சந்திரசூடன் இறுகிய முகத்துடன் நாற்காலிக்கு சாய்ந்திருந்தார்.

கையில் இருந்த டிஸ்போஸல் டம்ளரில் டீ மூச்சுவிட்டுக்கொண்டிருந்தது.

எதிர்ச்சுவரில் ஒரு பெரிய டி.வி.திரை சென்னையின் நேற்றைய இரவு நேரச் சாலைகளைக் காட்டிக்கொண்டிருந்தது.

அவர் அருகே உட்கார்ந்திருந்த விஜிலன்ஸ் ஆபீஸர் ராமானுஜம் திரையைப் பார்த்தபடியே விபரம் சொல்லிக்கொண்டிருந்தார்.

" ஸார்..... ட்ராக்கிங் மிஸ்ஸிங் வெகிகிள்ஸ் சிஸ்டம் போலீஸ் பேட்ரோலிங் ரிப்போர்ட் இந்த இரண்டையுமே மிக்ஸிங் பண்ணி இதுவரைக்கும் சிட்டியோட தொன்னூறு சதவீத சாலைகளை பார்த்துட்டோம். உங்க நண்பர் கங்காதரனின் காரான ப்ளு கலர் மாருதி ஸ்விப்ட் எந்த ஒரு சி.சி.டி.வி.காமிராவோட பார்வைக்கும் தட்டுப்படலை. நெல்சன் மாணிக்கம் மெயின் ரோட்டிலிருந்த ஒன்பதாவது குறுக்குத்தெருவில் நிறுத்தியிருந்த காரைத் திருடின நபர் அதை மெயின் ரோட்டுக்கு கொண்டு வந்திருந்தா கண்டிப்பா சி.சி.டி.வி.காமிராவுக்கு மாட்டியிருக்கணும். அப்படி ஏதும் நடக்காதது ஆச்சர்யமாயிருக்கு ஸார் "

" இன்னொரு தடவை சரியாய் மானிட்டரிங் பண்ணிப் பாருங்க ராமானுஜம் "

" ஸாரி ஸார்..... இதுவரைக்கும் மூணுதடவை போட்டுப் பார்த்துட்டோம். நேத்து ராத்திரி பத்து மணியிலிருந்து இன்னிக்குக் காலை ஆறு மணி வரைக்கும் சிட்டியில் பதிவான எல்லா முக்கியமான சி.சி.டி.வி. ஃபுட்டேஜ்க்களை போட்டுப் பார்த்ததும் வி குட் நாட் ஃபைண்ட் எனிதிங்க். காரைக் கடத்தின பேர்வழி ஏதோ ஒரு டெக்னாலஜியை யூஸ் பண்ணியிருக்கணும் "

" அது எதுமாதிரியான டெக்னாலஜின்னு நம்ம விஜிலன்ஸ் டிபார்ட்மெண்ட்டால கண்டுபிடிக்க முடியாதா ......... ? "

" ஐ ஹேவ் நோ எனி ஐடியா ஸார்..... பட் வீ கேன் டூ ஒன்திங்க் "

" என்னான்னு சொல்லுங்க "

" சைபர் க்ரைம் பிராஞ்சை இந்த கேஸ்ல இன்வால்வ் பண்ண வெச்சா ஏதாவது ரிசல்ட் கிடைக்கலாம் ஸார் "

" சைபர் க்ரைம் சேம்பர்ல இப்ப யார் டிஜிடல் செக்சன்ல இருக்காங்க .. ? "

" மிஸ்டர் சிவசங்கர். டெல்லியில் போன ஆறு மாசத்துக்கு முன்னாடி வரை சைபர் அண்ட் இன்ஃபர்மேஷன் செக்யூர்ட்டி டிவிசன்ல சிஸ்டம்ஸ் அட்மினிஷ்ட்ரேட்டராய் இருந்திருக்கார். ஹைலி இண்டலிஜென்ட் பர்சன் ஸார்"

"அவர்க்கு போன் போட்டு கொடுங்க. நான் பேசறேன் "

" ஒரு நிமிஷம் ஸார் " என்று சொன்ன ராமானுஜம் தன்னுடைய செல்போனை எடுத்து கான்டாக்ட் ஆப்ஷனுக்கு போய் சிவசங்கர் செல்போன் எண்ணைத்தேடி எடுத்து தொடர்பு கொண்டார்.

மறுமுனையில் ரிங் போனதும் செல்போனை சந்திரசூடனிடம் நீட்டினார் ராமானுஜம்.

" ஹேவ் ஏ டாக் ஸார்...... ஹி ஈஸ் ஆன் த லைன் "

செல்போனை வாங்கிக்கொண்டு பேச ஆரம்பித்தார் சந்திரசூடன்.

*******

மாத்யூ காரின் டிக்கியைக் கொஞ்சம் கொஞ்சமாய் திறக்க ரகுநாத் தன்னுடைய பயப்பார்வையை டிக்கிக்குள் கொண்டு போனார்.

ஒரு பெரிய பாலீதீன் கவரால் உருவாக்கப்பட்ட மூட்டையொன்று அவருடைய முதல் பார்வைக்குத் தட்டுப்பட்டது. காற்றில் மருந்து வாடை பரவி நாசிக்குள் பரவியது.

" மாத்யூ......... அந்த மூட்டைக்குள்ளே என்ன இருக்குன்னு பாரு...... "

" ஸ....ஸார்....உள்ளே ஏதோ டெட்பாடி மாதிரி தெரியுது. ஸ்மெல் வராமே இருக்கிறதுக்காக குளோரின் மருந்தை ஸ்பிரே பண்ணியிருக்காங்க..... டிக்கி பூராவும் ரத்தம் பரவி உறைஞ்சு போயிருக்கு "

" மொதல்ல மூட்டையை வெளியே இழுத்துப் போடு..... "

" பாண்டியைக் கூப்பிடலாமா ஸார்.. ? "

" வேண்டாம்.... அவன் சின்னப்பையன் பயந்துக்குவான். நீயே இழுத்துப் போடு..... "

மாத்யூ மூச்சை அடக்கிப் பிடித்துக்கொண்டு அந்த பாலிதீன் மூட்டையைப் பிடித்து இழுத்து கீழே தள்ளினான். அது சத்தம் இல்லாமல் தரையில் விழுந்து உருண்டது. ஒரு நைலான் கயிற்றால் இறுக்கிக் கட்டப்பட்டிருந்த அந்த மூட்டையின் மேல் ரத்தக்கறைத் திட்டுக்கள் பரவலாய் தெரிய ரகுநாத் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு குரலைத் தாழ்த்தினார்.

" மாத்யூ......... "

" ஸார் "

" இது ஒரு பெரிய பிரச்னையா மாறும் போலிருக்கே ? இந்த காரோட ஒனர் பேர் என்ன .. ? "

" கங்காதரன்ன்னு ஆர்.சி.புக்ல பார்த்தேன் ஸார் "

" ஆளை நீ நேர்ல பார்த்தியா .. ? "

" நான் பார்க்கல ஸார்..... வழக்கம் போல இருட்டான தெருப்பகுதியில் நிறுத்தியிருக்கிற கார்களை நோட்டம் விட்ட போது இந்தக் கார் ஒண்ணுதான் புதுசு மாதிரி தெரிஞ்சுது. லேஸர் பீம் கீயை உபயோகப்படுத்தி கார் லாக்கை ஒப்பன் பண்ணி அடுத்த நிமிஷமே காரைக் கிளப்பிகிட்டு வந்துட்டேன் "

" அந்த கங்காதரன் தன் காரோட டிக்கிக்குள்ளே இப்படியொரு டெட் பாடி இருக்கப்போய்த்தான் காரை இருட்டான தெருவுல நிறுத்திட்டு போயிருக்கான். இந்த பாடியை டிஸ்போஸ் பண்ண சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்திட்டிருந்திருக்கான் போலிருக்கு. நம்ம போதாத நேரம் காரை இங்கே கொண்டு வந்துட்டோம். இனிமேல் காரைக் கடத்துறதுக்கு முன்னாடி டிக்கியை செக் பண்ணிப் பார்த்துட்டு கிளப்பிகிட்டு வரணும் "

" சரி இப்ப இதை என்ன பண்றது ஸார் ..... ? "

" மொதல்ல மூட்டையோட முடிச்சைப் பிரி. உள்ளே இருக்கிற பாடி ஆணா.... பெண்ணா அது என்ன கண்டிஷன்ல இருக்குன்னு பார்த்துடலாம்...."

மாத்யூ தன்னுடைய கர்ச்சீப்பை எடுத்து மூக்குப்பகுதியையும், வாய்ப்பகுதியையும் சேர்த்து கட்டிக்கொண்டு மூட்டையை நோக்கி குனிந்து முடிச்சின் மேல் கையை வைத்தான்.

நைலான் கயிற்றால் இறுக்கமாய் போடப்பட்ட அந்த முடிச்சு அவிழ்வதற்கு அடம் பிடித்தது. ஒரு ஐந்து நிமிடப் போராட்டத்துக்குப் பிறகு முடிச்சு நெகிழ்ந்து கொடுக்க, மாத்யூ அந்தக் கயிற்றை உருவினான். ரத்தக் கறைகளோடு இருந்த அந்த பாலிதீன் மூட்டையிலிருந்து கன்னங்கரேலென்ற கரிய நிறத்தில் அந்தப் பெண்ணின் உடல் சலனமில்லாமல் வெளிப்பட்டு மல்லாந்து விழுந்தது. கிழிந்து போன சுடிதார் உடை உடம்பின் மானத்தைக் காப்பாற்ற, ஒட்டுமொத்த உடலும் அடர்த்தியான கருப்பு நிறத்தில் தெரிந்தது.

" இப்படியும் கருப்பாய் ஒரு பெண் இருப்பாளா ..... ? "

ரகுநாத் உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கும்போதே மாத்யூ பயத்தில் முகம் வெளிறிப் போனவனாய் அவரை ஏறிட்டான்.

" ஸ.....ஸார்...... இந்த கருப்பு நிறம் பெண்ணோட நிறம் கிடையாது..... கருப்பு பெயிண்டை பூசியிருக்காங்க..... "

" என்ன சொல்றே..... கருப்பு பெயிண்டா..... ? "

" ஆமா ஸார்..... பாருங்க..... உடம்பு முழுவதும் ஏதோ சுவர்க்கு பெயிண்ட் பூசற மாதிரி நேர்த்தியாய் பூசியிருக்காங்க" சொன்னவன் பெண்ணின் நெற்றியில் தன்னுடைய இடது கையின் ஆட்காட்டிவிரலை அழுத்தமாய் வைத்து எடுத்தான். விரலில் ஒட்டிக்கொண்ட பெயிண்டைக் காட்டினான்.

" பாருங்க ஸார் "

ரகுநாத் பார்த்துவிட்டு அதிர்ந்து போனவராய் நடுக்கத்தோடு காரின் மீது சாய்ந்து கொண்டார். அவருடைய உடம்பு வியர்வை மழையில் ஒரு குளியல் போட்டுக் கொண்டிருந்தது.

" மாத்யூ....... இந்த காரோட ஒனர் கங்காதரன் ஒரு சாதாரணப்பட்ட நபராய் இருக்க வாய்ப்பில்லை. ஒரு பெண்ணை இப்படி கொடூரமாய் கொலை பண்ணியிருக்கான்னா அவன் ஒரு மனுஷனாகவே இருக்க மாட்டான்"

" ஸார்..... இப்போதைக்கு அந்த கங்காதரனைப் பத்தி கவலைப்படறதுக்கோ பயப்படறதுக்கோ நேரம் இல்லை. அடுத்தபடியா நாம இப்ப என்ன பண்ணப் போறோம் ..... ? "

" மொதல்ல இந்த பாடியை டிஸ்போஸ் பண்ணனும் ..... ? "

" எங்க கொண்டு போய் எப்படி டிஸ்போஸ் பண்றது ஸார்..... ? "

" பக்கத்தில் இருக்கிற சவுக்குத்தோப்புக்கு கொண்டு போய் ஆழமாய் குழி தோண்டி புதைச்சுட வேண்டியதுதான். அதுக்கப்புறம் காரை டிஸ்மேண்டில் பண்ணி ஸ்பேர் பார்ட்ஸ்களாய் மாத்திடலாம் "

" வேண்டாம் ஸார் "

ரகுநாத் திகைத்தார் " என்னது வேண்டாமா..... ? "

" ஆமா ஸார்..... நீங்க சொன்ன ரெண்டுமே வேண்டாம் "

" அப்புறம் .... என்ன பண்றதாம் ..... ? "

" இப்ப இந்தப் பிரச்சினையிலிருந்து நாம தப்பிக்கறது முக்கியமா.... இல்லையா ..... ? "

" ரொம்பவும் முக்கியம் "

" அப்படீன்னா அதுக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கு ஸார் "

" என்ன ..... ? "

[அத்தியாயம் : 1 , 2, 3]

English summary
Flat number 144 Adhira apartment (Episode 2) is a new crime thriller serial written by writer R Rajeshkumar. பிரபல நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதும் ' ஃப்ளாட் நெம்பர் 144 அதிரா அப்பார்ட்மெண்ட்' கிரைம் நாவலின் முதல் எபிசோடை இந்த பக்கத்தில் காணலாம்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X