India
  • search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஃப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் .. "கு....கு.....குட்மார்னிங்" (1)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

அஸிஸ்டெண்ட் கமிஷனர் சந்திரசூடன் காக்கி யூனிஃபார்ம்க்குள் நுழைந்து கண்ணாடி பார்த்து, தலைசீவிக்கொண்டிருந்த போது மனைவி ஹம்சினியின் குரல் பின்னால் எழுந்தது.

" என்னங்க "

" ம்....... சொல்லு "

" உங்க ஃப்ரெண்ட் கங்காதரன் உங்களைப் பார்க்க வந்திருக்கார் "

சந்திரசூடன் கண்ணாடியினின்றும் வியப்போடு திரும்பினார்.

" கங்காதரனா..... இவ்வளவு காலையில் எதுக்காக வந்திருக்கார்ன்னு தெரியலையே ? என்ன விஷயம்ன்னு கேட்டியா? "

Flat number 144 Adhira apartment episode 1

" நான் கேட்க முடியுமா ..... நீங்களே போய்க் கேளுங்க. மனுஷன் கொஞ்சம் டென்ஷனாய் இருக்கார். கண்ணெல்லாம் சிவந்து முகம் வெளிறி போய் பார்க்கவே என்னவோ போல் இருக்கார் "

ஹம்சினி சொல்லிவிட்டு கிச்சனை நோக்கிப் போய்விட, சந்திரசூடன் அறையினின்றும் வெளிப்பட்டு ஹாலுக்கு வந்தார்.

ஹாலை ஒட்டியிருந்த வரவேற்பறையின் ஒரமாய் போடப்பட்டிருந்த சோபாவில் இருப்புக்கொள்ளாமல் உட்கார்ந்திருந்த அந்த நடுத்தர வயது கங்காதரன் மெல்ல எழுந்து நின்றார். சந்திரசூடன் ஒரு மெல்லிய புன்னகையுடன் "குட்மார்னிங்..... வாங்க கங்காதரன் " என்றார்.

கங்காதரன் குரலில் சுரத்தே இல்லாமல் மெல்ல முனகினார்.

" கு....கு.....குட்மார்னிங் "

"மொதல்ல உட்கார்ங்க... என்ன இவ்வளவு காலை நேரத்துல வந்திருக்கீங்க..... ? " சொல்லிக்கொண்டே கங்காதரனின் தோள் மீது கையை வைத்தார்.

அவர் மறுபடியும் சோபாவுக்கு சாய்ந்தார்.

" ஸாரி ஃபார் த டிஸ்டர்பன்ஸ்..... நீங்க ஸ்டேஷனுக்கு கிளம்பிப் போயிட்டிருக்கீங்க போலிருக்கு..... ? "

" ஆமா.... இன்னிக்கு என்னோட பீட் ஏரியாவுக்கு ஒரு மினிஸ்டர் தேர்தல் பிரசாரத்துக்காக வர்றார்..... மக்களுக்கு பாதுகாப்பு தராமே போனாலும், மந்திரிகளுக்கு பாதுகாப்பு கொடுத்து ஆகணுமே.....? அதான் கிளம்பிட்டிருக்கேன்... ஒண்ணும் பிரச்சனையில்லை. ஒரு அரைமணி நேரம் லேட்டாய் கூட போலாம்.... ரொம்பவும் டென்ஷனாய் இருக்கீங்க.... என்ன விஷயம் சொல்லுங்க ..... ? "

கங்காதரன் சில விநாடிகள் மெளனமாய் இருந்துவிட்டு மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தார்.

" மூணு மாசத்துக்கு முந்தி ஒரு புது மாருதி ஸ்விப்ட் கார் வாங்கினது உங்களுக்குத் தெரியும்ன்னு நினைக்கிறேன் "

" ம்..... தெரியும்.... கலர் கூட அட்லாண்டிக் ப்ளு. போன மாசம் காஸ்மாபாலிடன் கிளப்புக்கு நான் வந்திருந்தபோது உங்களை அந்தக் காரோடு பார்த்தேன்.... அந்த கார் சம்பந்தமாக ஏதாவது பிரச்சினையா ..... ? "

" நேத்து ராத்திரி பத்து மணியிலிருந்து அந்தக் காரைக் காணோம் "

சந்திரசூடன் நிமிர்ந்து உட்கார்ந்தார்.

" என்னது காரைக் காணோமா ..... ? "

" ஆமா "

" எப்படி ..... ? "

" நேத்து ராத்திரி ஒரு ரிலேடிவ் வீட்டு மேரேஜ் ரிசப்சனுக்கு நானும் என்னோட ஒய்ஃப்பும் கார்ல போயிருந்தோம். பார்க்கிங் மெயின் ரோட்டில் கிடைக்காமல் போகவே பக்கத்துத் தெருவில் காரை ஒதுக்குப்புறமாய் பார்க் பண்ணிட்டு ஃபங்க்சனை அட்டெண்ட் பண்ணிட்டு பத்து மணிக்கு வெளியே வந்து காரை நிறுத்தியிருந்த இடத்துக்குப் போனோம். கார் அங்கேயில்லை. அதிர்ச்சியாகி அந்தத் தெருவில் இருந்த ஆட்களிடம் விசாரிச்சோம். யார்க்கும் தெரியலை "

சந்திரசூடன் குறுக்கிட்டு கேட்டார்.

" காரை எந்தத் தெருவில் பார்க் பண்ணியிருந்தீங்க ..... ? "

" நெல்சன் மாணிக்கம் மெயின் ரோட்டிலிருந்து ஒன்பதாவது குறுக்குத் தெருவில் ஒரு மரத்துக்கு கீழே நிறுத்தியிருந்தோம். அந்த இடத்துல போதுமான வெளிச்சமில்லை. காரை அங்கே ஃபார்க் பண்ணும்போதே என்னோட ஒய்ஃப் அந்த இடத்துல ஃபார்க் பண்ணாதீங்க. ஆள் நடமாட்டம் இல்லை. இருட்டாயிருக்குன்னு சொன்னா. அப்படி அவ சொன்னதை நான் பொருட்படுத்தாமே இருந்தது எவ்வளவு பெரிய தப்புன்னு இப்பத்தான் தெரியுது "

" சரி.... உங்க ஏரியா பீட் போலீஸ் ஸ்டேஷன்ல கார் காணாமே போனது சம்பந்தமா புகார் பண்ணிட்டீங்களா ..... ?

" நேத்து ராத்திரி பதினோரு மணிக்கு கே-3 அமிஞ்சிக்கரை போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுத்துட்டேன். ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் புகாரை பதிவு பண்ணிட்டு உடனடியாய் சில நடவடிக்கைகள் எடுத்தார். காரைப் பற்றின எந்த ஒரு தகவலும் கிடைக்காததால என்னை நாளைக்கு காலையில் வாங்கன்னு சொல்லி அனுப்பிட்டார். ராத்திரி பூராவும் தூக்கமில்லை. இன்னிக்குக் காலையில் எந்திரிச்சதும் எனக்கு உங்க ஞாபகம் வந்தது. ஒரு அஸிஸ்டெண்ட் கமிஷனராய் இருக்கிற உங்ககிட்ட இந்த விஷயத்தைச் சொன்னா கொஞ்சம் கூடுதலான கான்சன்ட்ரேஷன் கிடைக்குமே என்கிற நம்பிக்கையில் உங்களைப் பார்க்க வந்தேன்"

" காரோட ஆர்.ஸி.புக் காப்பி இருக்கா ..... ? "

" கொண்டு வந்திருக்கேன் " சொன்ன கங்காதரன் தன் கையில் வைத்து இருந்த சிறிய ஃபைலைப் பிரித்து அதிலிருந்து ஆர்.ஸி.புக்கின் ஜெராக்ஸ் காப்பியை எடுத்துக்கொடுத்தார். அதை வாங்கி மேலோட்டமாய் பார்வையிட்ட சந்திரசூடன் ஒரு சிறிய புன்னகையோடு நிமிர்ந்தார்.

" கங்காதரன்...... ! உங்க மனைவி சொன்னது போல் காரை பார்க்கிங் செய்யும்போது ஆள் நடமாட்டம் இருக்கக்கூடிய வெளிச்சமான இடமாய்ப் பார்த்து செலக்ட் பண்ணி காரை நிறுத்தணும். முக்கியமா சி.சி.டி.வி. காமிரா இருக்கிற ஏரியாவில் நிறுத்தறது இன்னமும் பெட்டர். இட்ஸ் ஒ.கே..... வாட் சூட் நாட் ஹேவ் ஹேப்பன்ட் ஹேஸ் ஹேப்பன்ட்..... இனிமே நடக்க வேண்டியதைப் பார்ப்போம். எனக்கு ரெண்டு நாள் டயம் கொடுங்க... கார் எங்கேயிருக்குன்னு ஸ்பாட் அவுட் பண்ணிடலாம் "

" முடியுமா..... ? "

" ஒண்ணும் வொர்ரி பண்ணிக்காதீங்க.... காரை சர்வீஸ்க்கு விட்டதாய் நினைச்சுட்டு ஆபீஸீக்கு போய்ட்டு வாங்க..... நான் என்னோட சைடிலிருந்து இன்வெஸ்டிகேஷனை ஆரம்பிக்கறேன்... கே-3 போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனும் ஒரு எஃப்பிஷியண்ட் போலீஸ் ஆபீஸர்...... நானும் அவர்கிட்ட பேசறேன். உங்க கார் எப்படியும் கிடைச்சுடும்.... ஃபீல் ஃப்ரி..... பி.... கம்பர்டபிள் "

" தேங்க் யூ........ "

" காப்பி சாப்பிடலாமா கங்காதரன்..... ? "

" வேண்டாம்.... வீட்லயிருந்து வரும்போதுதான் சாப்டுட்டு வந்தேன்.... நான் மறுபடியும் உங்களுக்கு எப்ப போன் பண்ணட்டும்..... ? "

" நானே போன் பண்றேன் "

கங்காதரன் மறுபடியும் ஒரு நன்றியைச் சொல்லி விட்டு போய்விட ஹம்சினி உள்ளேயிருந்து வந்தாள்.

" என்னங்க நீங்க பாட்டுக்கு காரைக் கண்டுபிடிச்சு தர்றேன்னு சொல்லிட்டீங்க.... அவரும் நம்பிட்டுப் போயிட்டார். அந்தக் கார் எங்கேயிருக்குன்னு உங்களுக்கு எப்படி தெரியும் ..... ? "

" இனிமேத்தான் யோசிக்கணும் "

*******

சென்னையின் புறநகர்ப்பகுதி முடிச்சூர். காலை ஒன்பது மணி.

சவுக்கு மரங்கள் மண்டிய அந்தப் பகுதியின் உள்ளே ஒரு சிறிய மைதானம் போன்ற காலியிடத்தில் பெயிண்ட் உதிர்ந்து போன கார்கள் திசைக்கொன்றாய் நின்றிருக்க, "கார் க்யூர் ரிப்பேரிங் சென்டர்" என்று சொன்ன எழுத்துக்களோடு பெயர்ப்பலகையொன்று நாற்பத்தைந்து டிகிரி கோணத்தில் சாய்ந்து தொங்கியது. மரத்துக்கு முட்டுக் கொடுத்து சற்றே சாய்ந்திருந்த ஒரு பழைய ஹூண்டாய் கார்க்குக் கீழே படுத்து அதனுடைய உள்ளுறுப்புகளை நோண்டிக்கொண்டிருந்த மாத்யூ குரல் கொடுத்தான்.

" பாண்டி.... ! "

மாருதி ஜென் ஒன்றின் வாயை அகலமாய் திறந்து வைத்து அதற்குள் தலையை விட்டு பாட்டரியின் இணைப்பு வயர்களை சரி பார்த்துக் கொண்டிருந்த இருபது வயது பாண்டி " என்னண்ணே ..... ? " என்றான்.

" அந்த டபுள் என்ட்டட் ஸ்பேனர் எடு.... "

" டூல் கிட் உள்ளார இருக்கண்ணே .... ! "

Flat number 144 Adhira apartment episode 1

" போய் எடுத்துட்டு வாடா..... அப்படியே கையோடு அந்த காம்பினேஷன் ஸ்பேனரையும் கொண்டாந்துடு .... ! "

" அண்ணே .... ! "

" என்னடா..... ? "

" நம்ம ஒனர் வர்றாரு..... " பாண்டி குனிந்து குரலைத் தாழ்த்திக்கொண்டு சொல்ல, மாத்யூ ஹூண்டாய் காரின் கீழேயிருந்து தன்னை உருவிக்கொண்டு வெளியே வந்தான். அணிந்திருந்த அழுக்கான டீ சர்ட்டையும் பேண்ட்டையும் க்ரீஸூம், டீஸலும் கலந்த கலவை மேலும் அழுக்காக்கியிருந்தது. காற்றில் டீசல் வாசம்.

" பாண்டி.... ! "

" என்னண்ணே ..... ? "

" கார் வர்ற வேகத்தைப் பார்த்தா ஒனர் ரொம்பவும் கோபமாயிருப்பார் போலிருக்கு....... நீ எதையும் பேசாதே. அவர் கேட்கிற கேள்விகளுக்கு நான் பதில் சொல்லிக்கிறேன் "

" சரியண்ணே"

மாத்யூவும், பாண்டியும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்த டாடா நெக்ஸான் கார் செம்மண் புழுதி பறக்க வேகமாய் வந்து நின்றது. காரினின்றும் இறங்கினார் ரகுநாத்.

ரகுநாத்துக்கு ஐம்பது வயது இருக்கலாம். குபீரென்ற உயரத்தோடு அரசியல்வாதிகளின் யூனிஃபார்மான மொடமொடப்பான வெள்ளை நிற சட்டையையும், வேஷ்டியையும் அணிந்து கண்களுக்கு குளிர் கண்ணாடி கொடுத்து கம்பீரம் காட்டினார்.

மாத்யூ பவ்யமாய் பக்கத்தில் போய் "குட்மார்னிங் ஸார்" என்று சொல்ல ரகுநாத் தன்னுடைய குளிர் கண்ணாடியை கழற்றிவிட்டு அவனை ஒரு நெருப்புப் பார்வையில் நனைத்தார்.

" என்ன அந்த ப்ளு கலர் மாருதி ஸ்விப்ட்டை கலர் மாத்தி பிரிச்சு கூறு போட்டுட்டியா ..... ? "

" இல்ல ஸார் "

" இன்னும் என்ன பண்ணிட்டிருக்கே..... காரைக் கடத்திக்கிட்டு வந்து பனிரெண்டு மணி நேரமாகப் போகுது..... அதை அப்படியே வெச்சுட்டிருக்கிறது எவ்வளவு பெரிய ஆபத்துன்னு உனக்குத் தெரியாதா... இந்நேரத்துக்கு அக்கு அக்காய் பிரிச்சு நம்மகிட்ட இருக்கிற ஸ்பேர் பார்ட்ஸ்களோடு கலந்து அடையாளம் தெரியாதபடிக்கு பண்ணியிருக்க வேண்டாமா..... ? "

"ஸாரி ஸார்.... நேத்து ராத்திரி பூராவும் இந்த ஏரியாவில் கரண்ட் இல்லை.... ஆட்டோமோட்டிவ் ஸ்பிரே பெயிண்ட்டிங் மெஷின் வேலை செய்யறதுல கொஞ்சம் பிரச்சினை இருந்தது. எல்லாத்துக்கும் மேலா காரை பிரிக்கிற டிஸ்மேண்டிலர் டிவைஸ் டூல் ரூமுக்குள்ள இருந்தது. அந்த ரூமோட சாவியை எங்கேயோ கைதவறி வெச்சுட்டேன். கரண்ட் இல்லாததால தேட முடியவில்லை. இப்பத்தான் ஒரு அரைமணி நேரத்துக்கு முன்னாடிதான் டூல் ரூம் சாவி கிடைச்சுது "

Flat number 144 Adhira apartment episode 1

ரகுநாத் எரிந்து விழுந்தார்.

" கடத்திட்டு வந்த காரையாவது பத்திரமா வெச்சிருக்கியா ..... ? "

" வழக்கமான ஸ்கார்ப் யார்ட்ல கான்வாஸ் படுதாவை போட்டு பக்காவா கவர் பண்ணியிருக்கேன் ஸார் "

" வா.... போய்ப் பார்க்கலாம் " சொன்ன ரகுநாத் பயந்து போன முகத்தோடு நின்றிருந்த பாண்டியிடம் திரும்பினார்.

" நீ இங்கேயே நில்லு..... கஸ்டமர் யாரும் உள்ளே வந்துடாதபடி பார்த்துக்க "

அவன் சரியென்று தலையாட்ட மாத்யூவும், ரகுநாத்தும் சற்று ஒதுக்குப்புறமாய் இருக்கும் ஸ்கார்ப் யார்ட்டை நோக்கி நடந்தார்கள்.

" மாத்யூ"

" ஸார் "

கொஞ்ச நாளைக்கு இந்தக் கார்த்திருட்டை நாம நிறுத்தி வைக்கிறது நல்லது "

" ஏன் ஸார் ..... ? "

" போலீஸ் முன்ன மாதிரி இல்லை..... கார்த்திருட்டைக் கண்டு பிடிக்கிறதுக்கே ஸ்பெஷல் ஸ்க்வாட் போட்டு இருக்காங்க. சிட்டியில் இருக்கிற ஒரு தெரு விடாமே சி.சி.டி.வி. காமிராக்களை ஃபிக்ஸ் பண்ணப் போறாங்களாம்..... "

" ஸார்..... நம்மகிட்டே சி.சி.டி.வி. காமிரா ஜாமர் இருக்கும்போது என்ன பயம்..... ? "

" இந்த ஒவர் கான்ஃபிடன்ஸ் வேண்டாம் மாத்யூ. ஒரு ஆறு மாசத்துக்கு ஒழுங்கா கஸ்டமர்களுக்கான கார் சர்வீஸை மட்டும் பண்ணு போதும் "

" சரி..... ஸார்...... " மாத்யூ தலையாட்டிக்கொண்டே நின்றிருந்த பழைய கார்களுக்கு நடுவே நடந்து கான்வாஸ் படுதாவால் மூடப்பட்டிருந்த அந்த கார்க்கு முன்பாய் போய் நின்றான். படுதாவைப் பிடித்து இழுக்க உள்ளே அட்லாண்டிக் ப்ளு நிறத்தில் மாருதி ஸ்விப்ட் பளபளப்பான உடம்போடு நின்றிருந்தது.

" மாத்யூ..... அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்ளே இந்தக் காரோட பெயிண்ட் நிறம் மாறியிருக்கணும். அதுக்கு அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்ளே காரோட ஒவ்வொரு ஸ்பேர் பார்ட்ஸூம் டிஸ்மேண்டலாகி ஸ்டோரிங் செக்சனுக்குப் போயிடணும்...... அதுக்கு முன்னாடி........ "

மேற்கொண்டு பேச்சைத் தொடர நினைத்த ரகுநாத்தின் பார்வை அப்படியே நிலைத்து திகைத்தது.

" மா....மா.....மாத்யூ....... காரோட டிக்கியைப் பாரு "

மாத்யூ பார்த்தான்.

சாத்தப்பட்ட காரின் டிக்கியிலிருந்து வழிந்த ரத்தம் திட்டுத்திட்டாய் கீழே விழுந்து உறைந்து போயிருந்தது.

[அத்தியாயம் : 1 , 2]

English summary
Flat number 144 Adhira apartment is a new crime thriller serial written by writer R Rajeshkumar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X