For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"பேச்சையே காணோம்?".. ஃப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (3)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

மாத்யூ சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு வெகுவாய் குரலைத் தாழ்த்தினான்.

" ஸார்..... இந்தக் காரும் கார்க்குள்ளேயிருந்து வெளியே எடுத்துப் போட்டிருக்கிற இந்தப் பொண்ணோட டெட்பாடியும் இங்கே இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் நமக்கு ஆபத்து. நம்ம ஒர்க்சாப்பில் இருந்து உடனடியாய் அப்புறப்படுத்தியாகணும். பாடியை எடுத்து கார்ல போட்டுகிட்டு இங்கிருந்து பத்து கிலோமீட்டர் தள்ளி ஆள் நடமாட்டம் இல்லாத ஒதுக்குப்புறமான இடத்துக்கு கொண்டு போய் நிறுத்திட்டு வந்துடலாம். எப்படியும் அடுத்த சில மணி நேரத்துக்குள்ளே தனியா நிக்கிற காரைப் பார்த்துட்டு யாராவது போலீஸூக்கு தகவல் கொடுக்கலாம். போலீஸ் கைக்கு கார் போயிட்டா அதுக்கப்புறம் இந்தப் பொண்ணோட டெட்பாடிக்கு பதில் சொல்ல வேண்டிய வேலை காரோட ஒனர் கங்காதரனுக்குத்தான்.... "

Flat number 144 Adhira apartment episode 3

ரகுநாத் தாடையைத் தடவிக்கொண்டு மெளனமாயிருக்க மாத்யூ கேட்டான்.

" என்ன ஸார் பேச்சையே காணோம் ? "

" கார் புதுசாயிருக்கேன்னு பார்க்கிறேன். பிரிச்சு மேஞ்சா மூணு நாலு லட்ச ரூபாயை ரெண்டு நாளைக்குள்ளே பார்த்துடலாம் "

" ஸார் நமக்கு இப்ப பணம் பெரிசில்லை.... போலீஸ்கிட்ட மாட்டிகிட்டா இந்த கார் திருட்டு ஒரு கொலைக் கேஸா மாறிடும். செத்த பொண்ணு யார்ன்னு தெரியலை..... கொலை பண்ணின நபர் இந்தப் பொண்ணை ரொம்பவும் கொடூரமான முறையில் கொலை பண்ணியிருக்கான். போலீஸ் கையில் மாட்டினோம்ன்னா கொலையை நாமதான் பண்ணினோம்ங்கிற அளவுக்கு கேஸை பின்னி கோர்ட்ல நிக்க வெச்சு கழுத்துல தூக்குக் கயிறை மாட்டற அளவுக்கு கொண்டு போயிடுவாங்க "

" மாத்யூ...... நீ ரொம்பவும் பயப்படறே ? "

" பயப்படறதுக்கு பயப்பட்டுதான் ஆகணும் ஸார். நான் சொல்றதை சொல்லிட்டேன்..... அப்புறம் உங்க இஷ்டம்..... "

" சரி....பாடியை எடுத்து டிக்கியில போடு. காரை நீயே ஒட்டிகிட்டுப் போய் பத்து கிலோ மீட்டர் தள்ளி சி.சி.டி.வி. காமிரா இல்லாத இடமாய்ப் பார்த்து நிறுத்திட்டு வந்துடு...... பையன் பாண்டிக்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம் "

" ஒரு கை பிடிங்க ஸார்..... பாடியைத் தூக்கி டிக்கியில் போட்டுடலாம்...... "

இருவரும் மூச்சைப் பிடித்து அந்தப் பெண்ணின் உடலைத் தூக்கி டிக்கிக்குள் திணித்தார்கள். மாத்யூ ஒரு துணியை எடுத்து டிக்கியின் மேற்புறத்தில் பரவியிருந்த உறைந்து போன ரத்தத்தை துடைத்து சுத்தமாக்கினான்.

" பாடியை எந்த ஏரியாவுக்கு கொண்டு போறதாய் உத்தேசம் ? "

" வண்டலூர்க்குப் பக்கத்துல பெருங்களத்தூர் ஏரியாவில் இடிஞ்சு போன ஒரு பழைய கட்டிடமும், அதையொட்டி ஒரு குப்பைமேடும் இருக்கிறது உங்களுக்கு தெரியும்ன்னு நினைக்கிறேன் ஸார் "

" ம்.... தெரியும் சொல்லு "

" அந்த குப்பை மேட்டுப்பகுதியில் காரைக் கொண்டு போய் நிறுத்திடலாம் ஸார்.... "

" சரி..... எப்படியோ டிஸ்போஸ் பண்ணிட்டு வா..... நீ போற வழியில டோல்கேட் எதுவும் இல்லையே ? "

" இல்ல ஸார்...... "

" சரி..... கிளம்பு...... "

மாத்யூ காரின் ட்ரைவிங் இருக்கைக்கு போய் உட்கார்ந்தான். சாவியை நுழைத்து இக்னீஷியனை உசுப்பினான். கார் ஒரு முறை கனைத்துவிட்டு மெளனமாயிற்று.

இரண்டாவது தடவை சாவியைத் திருகி ஆக்ஸிலேட்டரை அழுத்த அது நீளமாய் கனைத்துவிட்டு நிசப்தம் காத்தது.
ரகுநாத் எரிச்சலான குரல் கொடுத்தார்.

" என்னாச்சு.... ? "

" தெரியலை ஸார்....ஏதோ ஸ்டார்ட்டிங் ட்ரபுள் "

" புதுக்கார்ல எப்படி ஸ்டார்ட்டிங் ட்ரபுள் வரும் .... ? "

" அதான் ஸார்.... தெரியலை.... இப்ப என்னான்னு பார்த்துடறேன்...." சொன்னவன் காரின் பானெட்டைத் திறப்பதற்கான பட்டனை அழுத்திவிட்டு காரினின்றும் கீழே இறங்கினான்.

*******

சைபர் க்ரைம் ப்ராஞ்ச் செல். நேரம் காலை மணி ஒன்பதரை.

அஸிஸ்டெண்ட் கமிஷனர் சந்திரசூடன் விஜிலென்ஸ் ஆபீஸர் ராமானுஜம், சைபர் அண்ட் சிஸ்டம்ஸ் அட்மினிஷ்ட்ரேட்டர் சிவசங்கர் மூன்று பேரும் ஹோம் தியேட்டரில் இருந்த அந்தப் பெரிய ஸ்கீரினுக்கு முன்பாய் உட்கார்ந்து சி.சி.டி.வி. புட்டேஜ்களை உன்னிப்பாய் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரு பத்து நிமிஷம் பார்த்ததுமே சிவசங்கர் ஸ்கீரில் இருந்த சி.சி.டி.வி. புட்டேஜ் காட்சியை ஃப்ரீஸ் செய்துவிட்டு சந்திரசூடனிடம் திரும்பினார்.

" ஸார்..... காரைத் திருடின நபர் ஒரு ஹைடெக் பேர்வழியாய் இருக்க வாய்ப்பு அதிகம். சக்தி வாய்ந்த சி.சி.டி.வி.காமிராக்களை ஜாமர் மூலமா முடமாக்கறதுங்கிறது சாதாரண விஷயம் கிடையாது. இதுபோன்ற சி.சி.டி.வி.காமிரா ஜாமர்களை தயாரிக்கிற கம்பெனிகள் சீனாவில் மிக அதிகம். ஆனா அந்த நாட்டில் சி.சி.டி.வி.காமிரா ஜாமர்களை யாரும் உபயோகப்படுத்த முடியாது. உபயோகப்படுத்தினது தெரிய வந்தா பத்து வருஷ ஜெயில் தண்டனை நிச்சயம்...... சீனாவில் தயாரிக்கப்படுகிற ஜாமர்கள் வெளிநாடுகளில் விற்பனை செய்வதற்கு மட்டுமே..... இப்படிப்பட்ட ஜாமர்களோட விலையும் ரொம்பவும் அதிகம்ங்கிறதால சாதாரண நபர்கள் கார் திருட்டில் ஈடுபட முடியாது "

" மிஸ்டர் சிவசங்கர்...! நீங்க சொல்றதைப் பார்த்தா இந்த கார்த் திருட்டுக்குப் பின்னாடி ஹைடெக் சயின்ஸ் தெரிந்த ஒரு பணக்கார நபராகத்தான் இருக்க முடியும் இல்லையா ......... ? "

" மே.....பி....... ! "

" சரி.... இப்ப இந்தக் காரைக் கண்டுபிடிக்க முடியுமா.... முடியாதா ?"

" முடியும்..... அதுக்கு ஒரு APPம் டிவைஸூம் இருக்கு. பேரு லேஸர் ட்ராக்கிங்க் சிஸ்டம்..... இந்த சிஸ்டத்தை லேட்டஸ்ட் ஆன்ட்ராய்ட் செல்போனான "கேலக்ஸி இஸட்"டில் இன்ஸ்டால் பண்ணி சி.சி.டி.வி.காமிராக்களின் புட்டேஜ்ஜில் லிங்க பண்ணிட்டா திருடப்பட்ட கார் ஒரு முழு வடிவமாய் தெரியாமே ஒளிப்புள்ளிகளாய் மாறி நகர்ந்து போனது தெரியும். ஆனா குறிப்பா எந்த இடத்துல இருக்குன்னு லொகேட் பண்றது கஷ்டம்..... "

ராமானுஜம் குறுக்கிட்டு சொன்னார். " கார் எந்த ஏரியாவில் இருக்குன்னு தெரிஞ்சா போதும் ஸார். அந்த ஏரியாவை மட்டும் ஒரு டீப் மானிட்டரிங்கிற்கு உட்படுத்தினா கார் இருக்குமிடம் தெரிஞ்சுடும் "

" ரொம்ப கஷ்டம். ட்ரை பண்ணிப் பார்ப்போம்..... " சொன்ன சிவசங்கர் தன்னிடமிருந்த டிவைஸ்கிட்டை எடுத்து உள்ளேயிருந்து அந்த நவீன "கேலக்ஸி இஸட்" போனை எடுத்தார். போனுக்கு உயிர் கொடுத்தவர் ப்ளே ஸ்டோர்க்கு போயி லேஸர் ட்ராக்கிங்க் சிஸ்டத்துக்கான APPயை இன்ஸ்டால் செய்து, அதை கம்ப்யூட்டரில் இருக்கும் சி.சி.டி.வி.புட்டேஜ்களோடு இணைத்தார். வியூ பட்டனைத் தட்ட ஸ்கீரினில் மறுபடியும் சென்னையின் ராத்திரி நேர சி.சி.டி.வி. காமிராக்கள் பதிவு செய்திருந்த காட்சிகள் மெதுவாய் நகர ஆரம்பித்தன.
அடுத்த சில விநாடிகளுக்குள்ளாகவே ஒவ்வொரு ட்ராஃபிக் சிக்னலிலும் வாகனங்களுக்கு மத்தியில் சில ஒளிப்புள்ளிகள் வேகமாய் நகர்வது புலப்பட்டது.

சிவசங்கர் சுட்டிக்காட்டினார்.

" உங்க நண்பரோட கார் அதுவாகத்தான் இருக்கணும். அந்த ஒளிப்புள்ளிகளையே உன்னிப்பாய்ப் பார்த்துட்டு வாங்க "

மூன்று பேரும் பார்க்க ஆரம்பித்தார்கள்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம்.

ராமானுஜம் மேப்பைப் பார்த்துவிட்டு சொன்னார். " ஸார் கார் முடிச்சூரை நோக்கி போகிற மாதிரி தெரியுது "

" எஸ்.... யூ ஆர் கரெக்ட்...... "

" காரோட வெக்கிள் ஐடென்டிஃபிகேஷன் நெம்பர் என்னான்னு தெரியுமா ஸார் " சிவசங்கர் கேட்க சந்திரசூடன் சொன்னார்.

" தெரியும் " என்று சொன்னவர் பேப்பர்ல அந்த எண்ணை எழுதிக் கொடுத்துவிட்டு கேட்டார்.

" இந்த ஐடென்டிஃபிகேஷன் நெம்பரை வெச்சுகிட்டு கார் இருக்கிற இடத்தை லொகேட் பண்ண முடியுமா சிவசங்கர் ......... ? "

" ஒரளவுக்கு முடியும் ஸார்..... மொதல்ல அந்த ஏரியா எதுன்னு கண்டுபிடிப்போம். அதுக்கப்புறம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றி யோசிப்போம்...... "

பார்வையை உன்னிப்பாக்கி மேலும் ஐந்து நிமிடங்களை மானிட்டரிங்கில் செலவழித்த ராமானுஜம் உறுதியான குரலில் சொன்னார்.

" ஸார்.... கார் முடிச்சூர்க்குள்ளிருந்து வெளியே போகலை. ஏதோ ஒரு இடத்துக்கு கொண்டு போய் மறைச்சு வைக்கப்பட்டு இருக்கலாம்ன்னு கெஸ் பண்றேன் "

" அது எந்த இடம் என்பதை எப்படி கண்டுபிடிக்கப் போறோம் ராமானுஜம்......... ? "

" ஒரே ஒரு வழிதான் இருக்கு ஸார் "

" என்ன ..... ? "

" முடிச்சூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்து ஒரு அதிரடி பேட்ரோலிங் சர்ச்சுக்கு ஏற்பாடு பண்ணனும் "

" அந்த ஸ்டேஷனுக்கு இன்ஸ்பெக்டர் யாரு ..... ? "

" அரவிந்தன்னு நினைக்கிறேன். போன மாசம் கூட வண்டலூர்ல ஒரு ஃபங்க்சன் நடந்த போது அவரைப் பார்த்தேன் ஸார். இன்னமும் முடிச்சூர் ஸ்டேஷன்லதான் இருக்காரா இல்லையா வேற ஸ்டேஷனுக்கு ட்ரான்ஸ்பர் ஆயிட்டாரான்னு தெரியலை.... "

" முடிச்சூர் ஸ்டேஷனுக்கு போன் பண்ணிப் பாருங்க"

ராமானுஜம் தன்னுடைய செல்போனை எடுத்துக்கொண்டு முடிச்சூர் போலீஸ் ஸ்டேஷனைத் தொடர்பு கொண்டார். மறுமுனையில் தொடர்பு கிடைத்து ஒரு குரல் கேட்டது.

" எஸ்..... முடிச்சூர் போலீஸ் ஸ்டேஷன் ..... ? "

" இன்ஸ்பெக்டர் அரவிந்த் இருக்காரா ..... ? "

" நீங்க ..... ? "

" நான் ராமானுஜம் சைபர் டிஜிடல் ஃபாரன்ஸிக் டிபார்ட்மெண்ட் "

" ஒரு நிமிஷம் ஸார்..... "

ராமானுஜம் சில விநாடிகள் காத்திருக்க, அடுத்த சில விநாடிகளில் இன்ஸ்பெக்டர் அரவிந்தன் உற்சாகமாய் லைனுக்கு வந்தார்.

" குட்மார்னிங் மிஸ்டர் ராமானுஜம் ..... திடீர்ன்னு போன் பண்ணியிருக்கீங்க..... எனிதிங்க இம்பார்ட்டண்ட் "

" வெரி மோஸ்ட் இம்பார்ட்டண்ட் "

" சொல்லுங்க என்ன விஷயம் ..... ? "

ராமானுஜம் ஒரு இரண்டு நிமிட நேரத்திற்குள் கார் திருடுபோன விஷயத்தையும் அது தற்போது முடிச்சூர் பகுதிக்குள் இருப்பதையும் சொல்லி முடித்தார். எல்லாவற்றையும் கவனமாய் கேட்டுக்கொண்ட அரவிந்த் ஒரு சின்னப் புன்னகையோடு சொன்னார்.

" ராமானுஜம்...... நீங்க சரியான நேரம் பார்த்துதான் போன் பண்ணியிருக்கீங்க ..... ? "

" சரியான நேரமா ..... ? "

" எஸ்..... கடந்த ஆறு மாச காலமாகவே எனக்கு ஒரு தகவல் வந்துகிட்டேயிருந்தது. அதாவது முடிச்சூர்ல ரகுநாத்ன்னு ஒரு பழைய எம்.எல்.ஏ. இருக்கார். அவர் முடிச்சூர்க்கு வெளியே ஒரு சவுக்கு தோப்புக்குள்ளே "கார் க்யூர் ரிப்பேரிங் சென்டர்" என்கிற பேர்ல ஒரு ஒர்க்சாப்பை நடத்திட்டு வர்றார். அது பேர்க்குத்தான் ஒர்க்சாப். சென்னையில் திருடுபோகிற பல கார்கள் ராத்திரியோடு ராத்திரியாய் அந்த ஒர்க்சாப்புக்கு கொண்டு வரப்பட்டு உருத்தெரியாமல் ஸ்பேர் பார்ட்ஸ்களாய் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படறதாய் ஒரு தகவல் எனக்கு கிடைச்சுகிட்டே இருந்தது. சரியான ஆதாரம் கிடைக்காத காரணத்தால் நான் அதில் ஆர்வம் காட்டாமே இருந்தேன். ஆனா இப்போ நீங்க சொல்ற விஷயத்தை வெச்சுப் பார்க்கும்போது, நான் கேள்விப்பட்ட விஷயம் உண்மையாய் இருக்கலாமோன்னு என்னோட மனசுக்குப்படுது. நான் உடனே இப்பவே புறப்பட்டு அந்த ரகுநாத்தோட "கார் க்யூர் ரிப்பேரிங் சென்டர்"ஒர்க்சாப்புக்கு போய் காணாமல் போன கார் அங்கே இருக்கான்னு பார்த்துட்டு உங்களுக்கு போன் பண்றேன் "

" டூ இட் இம்மிடீயட்லி...... வீ ஆர் வெயிட்டிங் ஃபார் யுவர் போன் கால்..... "

[அத்தியாயம் : 1 , 2, 3, 4]

English summary
Flat number 144 Adhira apartment (Episode 3) is a new crime thriller serial written by writer R Rajeshkumar. பிரபல நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதும் ' ஃப்ளாட் நெம்பர் 144 அதிரா அப்பார்ட்மெண்ட்' கிரைம் நாவலின் முதல் எபிசோடை இந்த பக்கத்தில் காணலாம்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X