• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"பக்கத்துல வாடா"... ஃப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (5)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

இன்ஸ்பெக்டர் அரவிந்தன் அதிர்ந்து போனவராய் அப்படியே நின்றார். ஒரு சிலவிநாடிகளுக்குப்பின், சுய உணர்வுக்கு மீண்டவர் தனக்குப் பக்கத்தில் இருண்ட முகங்களோடு நின்றிருந்த கான்ஸ்டபிள்களை ஏறிட்டார்.

" வெட்டுப்பட்டு கீழே கிடக்கிற ஆள் ரகுநாத்தானே ? "

" ஆமா..... ஸார்...... "

Flat number 144 Adhira apartment episode 5

" ப்ளட் இன்னும் ஃப்ரீஸ் கூட ஆகலை. நாம வர்றதுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் சம்பவம் நடந்திருக்கும்ன்னு நினைக்கிறேன். ஆள் போயிட்டானா இல்ல இன்னமும் உடம்புல உயிர் இருக்கான்னு போய் பாரு" கான்ஸ்டபிள்களில் இரண்டு பேர் ரகுநாத் விழுந்து கிடந்த இடத்தை நோக்கி வேகமாக போக, அரவிந்தன் திரும்பி உடல் நடுக்கத்தோடு நின்றிந்த சிறுவன் பாண்டியை பார்த்தார். கையசைத்துக் கூப்பிட்டார்.

" பக்கத்துல வாடா "

" ஸ.....ஸார்....... " தயக்கத்தோடு வந்தான்.

" என்னடா..... இதெல்லாம்....... ? "

பாண்டி அழ ஆரம்பித்தான். " எ....எ....எனக்கொண்ணும் தெரியாது ஸார்.... முதலாளியும் மெக்கானிக் மாத்யூ அண்ணனும் என்னை வொர்க் ஷாப் வாசல்லயே நிக்க வெச்சுட்டு கஸ்டமர்ஸ் யாரும் உள்ளே வராதபடி பார்த்துக்கோன்னு சொல்லிட்டு உள்ளே போனாங்க.. நான் காவலுக்கு இருந்தேன். அப்பத்தான் நீங்க வந்தீங்க...... ஸார் "

" மெக்கானிக் மாத்யூ எங்கே? "

" தெரியல..... ஸார் "

" சரி..... இது திருட்டு கார்தானே ? "

பாண்டி தலைகுனிந்தபடி பேசாமல் நின்றான்.

" சொல்லுடா..... இது திருடிகிட்டு வந்த கார்தானே ? "

" ஆ.... ஆமா ஸார் "

" இந்த கார் திருட்டு வேலை எத்தனை நாளா நடக்குது ? "

அரவிந்தன் கோபமாய் குரலை உயர்த்தி கேட்டுக் கொண்டிருக்கும் போதே கான்ஸ்டபிள்களில் ஒருவர் பக்கத்தில் வந்தார்.

" ஸார்..... கழுத்துல அரிவாள் வெட்டு ஆழமாய் விழுந்து தலையே துண்டாகியிருக்கு. ஸ்பாட் டெட் ஸார்.... மெக்கானிக் மாத்யூவுக்கும் இந்த ரகுநாத்துக்கும்...... திருட்டுக்கார் சம்பந்தமாய் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு இப்படியொரு அரிவாள் வெட்டுல போய் முடிஞ்சிருக்கலாம்ன்னு நினைக்கிறேன் "

அரவிந்தன் மையமாய் தலையாட்டினார்.

" என்னோட யூகமும் அதுதான்..... அந்த மாத்யூ ரொம்ப தூரம் தப்பிச்சுட்டுப் போயிருக்க முடியாது.... இந்த தோப்புக்குள்ளேதான் எங்கேயாவது பதுங்கியிருக்கணும் " சொன்னவர் தனக்கு அருகில் இருந்த இரண்டு கான்ஸ்டபிள்களை ஏறிட்டார்.

" ராகவன், பசுபதி "

" ஸார் "

" ரெண்டு பேரும் உள்ளே போய் தேடுங்க.... அவன் கையில ஆயுதம் இருக்கலாம். தாக்க முயற்சி பண்ணினா ஒரு செக்கண்ட் கூட லேட் பண்ணாமே சுட்டுத்தள்ளுங்க.... ம்..... போங்க "

" எஸ்.... ஸார்...... " சொல்லிவிட்டு இருவரும் வேகமாய் நகர முயன்ற விநாடி அந்த தடுமாற்றமான முனகல் சத்தம் காற்றில் கலந்து பலஹீனமாய் கேட்டது.

" ம்....ம்.....ம்மா..... ஆ..... "

திடுக்கிட்டுப் போன அரவிந்தன் திரும்பிப் பார்த்தார்.

ஐம்பதடி தூரம் தள்ளியிருந்த ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த டூல்ஸ் அறைக்கு பின்புறமிருந்து அந்தச் சத்தம் கேட்டது. அரவிந்தன் வேகவேகமாய் போய் அறையின் பின்புறத்தை எட்டிப் பார்த்தார்.

தலையில் ரத்த காயத்துடன் மல்லாந்து விழுந்துகிடந்த மெக்கானிக் மாத்யூவின் உடல் வலியில் துடித்து லேசாய் புரண்டபடி தெரிய பாண்டி கத்தியபடி ஒடினான். அழுகையில் குரல் வெடித்தது.

" அண்ணே..... "

அரவிந்தன் குரல் கொடுத்தார். " டேய்..... பக்கத்துல போகாதே..... இவன்தான் மாத்யூவா ? "

" ஆமா ஸார்..... "

அரவிந்தன் மண்டியிட்டு மாத்யூ அருகே உட்கார்ந்து அவனுடைய தோளை மெல்லத் தொட்டார். பின்தலையில் தேங்கியிருந்த ரத்தம் கழுத்தில் ஒரு கோடு போட்டுக்கொண்டு மெல்ல இறங்க பாதி விழிகள் சொருகியபடி அவரைப் பார்த்தான் மாத்யூ. உதடுகளும், கன்னச்சதையும் துடித்தன.

" ஸ.....ஸ.....ஸார் "

அரவிந்தன் குனிந்து " சொல்லு....... உன்னையும் ரகுநாத்தையும் இப்படி வெட்டியது யாரு ? " என்று கேட்க மாத்யூ பேச முடியாமல் திணறி மூச்சு வாங்கினான்.

" ஸ.... ஸார்...... "

" சொல்லு...... யாரவன் ? "

"செ....செ.....செல்வதுரை...... ஸார் "

" செல்வதுரையா..... யாரது ? "

" ர......ர.......ரகுநாத்... ஸா...ஸாரோட ப......ப......பங்காளி ஸார். இந்த வொர்க் ஷாப் இருக்கிற இடம்..... சம்பந்தமாய் .....ரெண்டு பேர்க்குமே பல வருஷப் பகை.... இ....இ...இன்னிக்கு திடீர்ன்னு செல்வதுரை த....த.....தன்னோட ஆட்களோடு வ.....வந்து........ "

மாத்யூ சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவனுடைய விழிகள் எதிர்பாராத ஒரு விநாடியில் நிலைத்துப்போய் இலக்கில்லாமல் வெறித்தது. அரவிந்தன் பார்த்துக்கொண்டிருக்கும்போதே மாத்யூவின் உயிர் பிரிந்தது.

*******

ஃபாரன்ஸிக் சயின்ஸ் டிபார்ட்மெண்ட்டின் செங்காவி நிறக் கட்டிடம். மாலை ஆறு மணி.

ஃபாரன்ஸிக் பயோமெட்ரிக் கான்ஃப்ரன்ஸ் அறையில் அஸிஸ்டெண்ட் கமிஷனர் சந்திரசூடன், இன்ஸ்பெக்டர் அரவிந்தன், விஜிலென்ஸ் ஆபீஸர் ராமானுஜம் மூன்று பேரும் பாறையாய் இறுகிப் போன முகங்களோடு உட்கார்ந்திருக்க, ஃபாரன்ஸிக் இன்வெஸ்டிகேட்டர் பெர்ணான்டோ ஆங்கிலத்தில் அழுத்தம் திருத்தமான குரலில் பேசிக்கொண்டிருந்தார்.

" இதுபோன்ற ஒரு கொடூரமான கொலையை நான் கடந்த பத்தாண்டுகளில் பார்த்தது இல்லை. காரின் டிக்கிக்குள் அடைக்கப்பட்டிருந்த அந்தப் பெண்ணின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்து பார்த்தபோது அதிர்ந்து போனேன். அந்தப் பெண்ணை அடையாளம் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக அவளுடைய முழு உடம்பையும் ஒரு அங்குலம் விடாமல் கொலையாளி கருப்பு பெயிண்ட்டால் சீராக பூசியிருப்பது தெரிந்தது. அப்படி பெயிண்ட் பூசப்படும்போது அவள் சுய உணர்வோடு இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம் அவளுடைய உடம்பில் டேட் ரேப் ட்ரக்ஸ் எனப்படும் ஜி.ஹெச்.பி. மயக்க மருந்து இரண்டு ஆம்பியூல் என்ற அளவில் கலந்து இருந்ததுதான். டேட் ரேப் ட்ரக்ஸ் எனப்படும் மருந்து அந்தப் பெண்ணுக்கு கொடுக்கப்பட்டு இருந்தாலும் அவள் கற்பழிக்கப்பட வில்லை என்பது இன்னொரு வியப்பான விஷயம் "

பெர்ணான்டோ மேற்கொண்டு பேசும் முன்பு அஸிஸ்டெண்ட் கமிஷனர் சந்திரசூடன் குறுக்கிட்டார்.

" அப்படியென்றால் இந்த கொலையின் நோக்கம் என்னவாக இருக்கும் "

" கற்பழிப்பு இல்லை என்று எடுத்துக் கொள்ளலாமா ? "

பெர்ணான்டோ தலையசைத்தார். " என்னுடைய எண்ணமும் அதுதான். கொலையாளியின் நோக்கமானது அந்தப் பெண்ணை அவமானப்படுத்தி பிறகு கொலை செய்வதாகக்கூட இருக்கலாம். முதலில் இந்தப்பெண் யார் என்பதைக் கண்டுபிடித்தால் மட்டுமே கொலை யாரால் எதற்காக ஏன் செய்யப்பட்டது போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கும். ஆனால் இந்த பெண் யார் என்பதைக் கண்டுபிடிப்பது சிரமம் "

இன்ஸ்பெக்டர் அரவிந்தன் பெர்ணான்டோவை ஒரு வியப்புப் பார்வையால் நனைத்தார்.

"ஏன் ஸார்...... அந்தப் பெண் யார் என்பதை கண்டுபிடிப்பதில் என்ன சிரமம் ? அவளுடைய உடம்பில் பூசியிருக்கிற பெயிண்டை தின்னர் மாதிரியான லிக்விட்டை உபயோகித்து ரிமூவ் செய்தால் அடையாளம் தெரிய வாய்ப்ப்பு இருக்கிறதே ? "

பெர்ணான்டோ பெருமூச்சுவிட்டார் " யூ ஆர் கரெக்ட் மிஸ்டர் அரவிந்தன்..... ஆனால் அந்தப் பெண்ணின் உடம்பிலிருந்து பெயிண்டை ரிமூவ் செய்ய முடியாது. காரணம் உடம்பு டீகம்போஸிங் ஸ்டேஜில் இருப்பதுதான். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்படி அந்தப் பெண் இறந்து 24 மணி நேரத்துக்கு மேலே ஆகிவிட்டது. உடம்பின் செயலற்ற செல்களும், பெயிண்ட்டும் இணைந்துவிட்டதால் இனி எதுமாதிரியான ரசாயனத்தை பயன்படுத்தி பெயிண்டை எடுக்க முயன்றாலும் உடம்பின் சதைப்பாகமும் சேர்ந்துதான் வரும்.... பெயிண்ட் பூசியிருக்கிற இந்த நிலைமையில் பார்த்தால்கூட முகம் ஒரளவுக்கு பிடிபடலாம். ஆனால் பெயிண்டை நீக்க நினைத்தால் இப்போது நாம் பார்க்கிற முகமும் அடியோடு சிதைந்து போகும். இந்த நிமிஷம் இருக்கிற இவளுடைய முகத்தை பார்மல் டி ஹைடின் உதவியால் மேற்கொண்டு சிதையாமல் பார்த்துக்கொள்வதுதான் முக்கியம் "

பெர்ணான்டோ பேசிக்கொண்டிருக்கும்போதே, அஸிஸ்டெண்ட் கமிஷனர் சந்திரசூடனின் செல்போன் தன்னுடைய டயல்டோனை வெளியிட்டது. பெர்ணான்டோவைப் பார்த்து ஒரு "எக்ஸ்யூஸ்மீ" யை உதிர்த்துவிட்டு அழைப்பது யார் என்று பார்த்தார். மறுமுனையில் டெப்டி கமிஷனர் விநாயகம் அழைத்துக்கொண்டிருந்தார்.
சந்திரசூடன் செல்போனை காதுக்குக் கொடுத்து மெல்ல குரல் கொடுத்தார்.

" ஸார்.... அயாம் சந்திரசூடன் "

"என்ன சந்திரசூடன் ஃபாரன்ஸிக்லதான் இருக்கீங்க போலிருக்கு? "

" ஆமா ஸார் "

" ரகுநாத்தையும், மெக்கானிக் மாத்யூவையும் வெட்டி கொலை செஞ்ச செல்வதுரையை கண்டுபிடிக்கிற விஷயத்துல ஏதாவது முன்னேற்றம் இருக்கா..... ஆளை ஸ்பாட்அவுட் பண்ணிட்டீங்களா ? "

" இல்ல ஸார்..... அந்த செல்வதுரை தலைமறைவாயிட்டான். அவனை கண்டுபிடிக்கிறதுக்காக ஒரு தனிப்படை செயல்பட்டுகிட்டிருக்கு.... ரெண்டு நாளைக்குள்ளே மடக்கிடலாம் "

" கொலை செய்யப்பட்டு கார் டிக்கியில் அடைக்கப்பட்டிருந்த பெண்ணுக்கும், ரகுநாத் மாத்யூ இந்த ரெண்டு பேரும் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்கும்ன்னு நினைக்கிறீர்களா ? "

" அப்படியிருக்க வாய்ப்பில்லை ஸார். ரகுநாத்தோட வொர்க் ஷாப்பில் வேலை பார்த்த பாண்டி என்கிற பையனை விசாரிச்ச போது கார் திருட்டு மட்டும்தான் ரகுநாத், மாத்யூவோட பிரதான தொழிலாய் இருந்திருக்கு... என்னோட ஃப்ரண்ட் கங்காதரனோட காரைத் திருடும்போது மாத்யூவோடு அந்தப் பையன் பாண்டியும் கூடவே இருந்திருக்கான். டிக்கிக்குள்ளே ஒரு டெட்பாடி இருக்கிற விஷயம் தெரியாமலேயே காரைத் திருடிகிட்டு வந்திருக்காங்க"

" அப்படீன்னா இனிமேல் நீங்க விசாரிக்க வேண்டியது உங்க நண்பர் கங்காதரனைத்தான்..... ? "

" எஸ்.... ஸார்...... கங்காதரன் இப்போ ஹாஸ்பிடல்ல இருக்கார். அதான் அவரை விசாரிக்க முடியலை "

" ஹாஸ்பிடல்ல இருக்காரா.... ஏன் என்னாச்சு அவர்க்கு ..... ? "

" கங்காதரன்.... கார் திருடு போன நிமிஷத்திலிருந்தே டென்ஷனாய் இருந்திருக்கார். என்கிட்டே வந்து விஷயத்தைச் சொல்லிட்டு போனவர்க்கு பி.பி.சூட்டப் ஆகி மயக்கமாயிட்டார். உடனே ஹாஸ்பிடலைஸ் பண்ணினதில் இப்போ நார்மல்...... நான் இனிமேல்தான் விசாரிக்கப் போகணும்.... ஸார்"

" அவரோட கார்ல ஒரு பெண்ணோட டெட்பாடி இருந்த விஷயத்தை அவர்கிட்டே சொன்னீங்களா ..... ? "

"இல்ல ஸார்..இனிமேல்தான் சொல்லி என்கொய்ரியை ஆரம்பிக்கணும் "

" மிஸ்டர் சந்திரசூடன் .... அவர் உங்க நண்பர் என்கிற காரணத்துக்காக விசாரணையில் நிதானமான அணுகுமுறை வேண்டாம்..... இனியும் லேட் பண்ணாமே உடனடியாய் ஹாஸ்பிடலுக்கு போய் என்கொய்ரியை ஆரம்பிங்க.... "

" எஸ்.... ஸார்..... "

மறுமுனையில் டெப்டி கமிஷனர் விநாயகம் செல்போனை வைத்துவிட , சந்திரசூடனும் தன்னுடைய செல்போனை அணைத்துவிட்டு ஃபாரன்ஸிக் இன்வெஸ்டிகேட்டர் பெர்ணான்டோவை ஏறிட்டார்.

" மிஸ்டர் பெர்ணான்டோ.... நான் ஒரு அவசர வேலையாக கிளம்பிப் போக வேண்டியிருக்கிறது. நீங்கள் அந்தப் பெண்ணின் அடாப்ஸி சம்பந்தப்பட்ட ஃபாரன்ஸிக் விபரங்களை இன்ஸ்பெக்டர் அரவிந்தன், விஜிலென்ஸ் ஆபீஸர் ராமானுஜம் இருவரிடமும் கொடுத்து அனுப்புங்கள்"

" ஷ்யர் ஸார் " பெர்ணான்டோ சல்யூட் வைத்து வழியனுப்ப சந்திரசூடன் நாற்காலியைத் தள்ளிக்கொண்டு எழுந்தார்.

******

வடபழனியில் இருந்த அந்த ஹாஸ்பிடலுக்குள் காரை நுழைத்து பார்க்கிங் ஏரியாவில் நிறுத்திவிட்டு, கீழே இறங்கிய சந்திரசூடன் ரிசப்ஷனில் விசாரித்துக்கொண்டு கங்காதரன் அட்மிட்டாகியிருந்த வார்டுக்குள் நுழைந்தார்.

ரிசப்சனிஷ்ட் பெண் சொன்ன அறை நெம்பரை நினைவு வைத்துக்கொண்டு வராந்தாவில் தேடியபடி, நடக்க வழியிலேயே கங்காதரனின் மனைவி நாராயணி தட்டுப்பட்டாள். கையில் ப்ளாஸ்க்.

சந்திரசூடனை பார்த்ததும் நின்றாள். மெல்ல மலர்ந்தாள்.

" வாங்க "

" கங்காதரன் எப்படியிருக்கார்..... ? "

" தேவலை.... பி.பி.கண்ட்ரோலுக்கு வந்துடுச்சு. இன்னிக்கு ஒருநாள் பார்த்துட்டு வீட்டுக்கு போயிடலாம்ன்னு டாக்டர் சொன்னார். இப்ப நல்லா தூங்கிட்டிருக்கார்.... காணாம போன காரைப்பத்தி ஏதாவது தகவல் கிடைச்சுதா ..... ? "

" ம்...... கிடைச்சுது...... "

நாராயணி முகத்தில் ஒரு மகிழ்ச்சி மின்னல் பளிச்சிட்டு மறைந்தது.

" அவர்கிட்ட சொன்னா ரொம்பவும் சந்தோஷப்படுவார். கார் எங்கேயிருந்தது ..... ? "

" அதைப்பத்தி சொல்றதுக்கு முந்தி உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் "

" என்ன ..... ? "

" காரை வீட்டிலிருந்து எடுத்து கல்யாண ரிசப்ஷனுக்கு போறதுக்கு முன்னாடி உங்க காரோட டிக்கியைத் திறந்து பார்த்தீங்களா ..... ? "

நாராயணியின் முகம் மாறியது.

" எதுக்காக கேட்கறீங்க ..... ? "

" ப்ளீஸ்.... கேட்டதுக்கு பதில் சொல்லுங்க. காரணத்தை அப்புறமா சொல்றேன் "

" திறந்து பார்த்த மாதிரி எனக்கு ஞாபகமில்லை "

" சரி... கல்யாண வரவேற்புக்கு போறதுக்கு முந்தி.... வழியில வேற எங்கேயாவது யாரையாவது பார்க்கப் போயிருந்தீங்களா ..... ? "

சில விநாடிகள் நாராயணி யோசித்துவிட்டு தலையாட்டினாள்.

" ஆமா...... "

" எங்கே ..... ? "

" அதிரா அபார்ட்மெண்ட் "

( தொடரும்)

[அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5]

English summary
Flat number 144 Adhira apartment (Episode 4) is a new crime thriller serial written by writer R Rajeshkumar. பிரபல நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதும் ' ஃப்ளாட் நெம்பர் 144 அதிரா அப்பார்ட்மெண்ட்' கிரைம் நாவலின் முதல் எபிசோடை இந்த பக்கத்தில் காணலாம்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X