For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"ப்ளீஸ்.. எதையும் மறைக்காதீங்க"... ஃப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (8)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

சந்திரசூடனின் வியர்வை மினுமினுப்போடு கூடிய அதிர்ச்சியான முகத்தை கவனித்துவிட்ட நாராயணி சற்றே கவலையான குரலில் கேட்டாள்.

" போன்ல ஏதாவது மோசமான செய்தியா .... ? "

" அதெல்லாம் ஒண்ணுமில்லை..... "

" ப்ளீஸ்..... என்கிட்டே எதையும் மறைக்காதீங்க.... விஷயம் சீரியஸ்ன்னு நினைக்கிறேன். எதுவாயிருந்தாலும் சொல்லிடுங்க.... "

சந்திரசூடன் தன்னுடைய செல்போனை நாராயணியிடம் நீட்டி மெஸேஜ் ஆப்ஷனின் டிஸ்ப்ளேயைக் காட்டினார்.

நாராயணியின் பார்வை டிஸ்ப்ளேயில் பதிவாகியிருந்த வரிகளின் மேல் படிந்து வேகமாய் ஒடியது.

" ஏஸிபி ஸார்..... அதிரா அபார்ட்மெண்ட்டுக்கு போவதை முடிந்தவரை தவிர்க்கவும். மீறி சென்றால் உங்களுடைய வாழ்நாளின் கடைசி நாளாக அந்த நாள் அமைந்துவிடலாம் "
இப்படிக்கு
அதிரா

flat number 144 adhira apartment episode-8

வாசகத்தைப் படித்த விநாடியே நாராயணியின் முகம் அடியோடு மாறியது. நடுங்கும் பார்வையோடு மெதுவாக சந்திரசூடனை ஏறிட்டபடி பலஹீனமான குரலில் சொன்னாள்.

" வே.....வேண்டாங்க "

" என்ன வேண்டாம்.... ? "

" நீங்க அதிரா அபார்ட்மெண்ட்டுக்கு போக வேண்டாம் "

" பயந்துட்டீங்களா.... ? "

" பயப்படாமே எப்படி இருக்க முடியும்? இந்தப் பிரச்சினையில் நீங்க இறங்கினா உங்க உயிர்க்கு ஆபத்து வரும் போலிருக்கே ? " சந்திரசூடன் மெல்லச் சிரித்தார்.

" இது மாதிரியான மிரட்டல்களுக்கெல்லாம் பயந்தா இந்த போலீஸ் உத்யோகத்தை ராஜினாமா பண்ணிட்டு வீட்ல உட்கார்ந்து டி.வியில் சீரியல் பார்த்துட்டு இருக்க வேண்டியதுதான். நான் உயிரோடு இருக்கப் போகிற கடைசி நாள் அந்த கடவுளுக்கு மட்டும்தான் தெரியும். முன்னாடியெல்லாம் போலீஸ் டிபார்ட்மெண்ட்டுக்கு மொட்டை கடிதம் வரும். இப்ப ஃபேக் செல்போன் நெம்பரிலிருந்து மொட்டை மெஸேஜ் வருது ..... ஒரு வகையில் இப்படிப்பட்ட ஒரு மிரட்டல் வந்தது எனக்கு கொஞ்சம் சந்தோஷமாவும் இருக்கு "

" சந்தோஷமா .... ? "

" ஆமா.... இந்த கேஸ்ல எதிரி பதட்டப்படறது நல்லாவே தெரியுது. என்னோட இன்வெஸ்டிகேஷன் சரியான முறையில் போயிட்டிருக்குங்கிறதுக்கு ஒரு நல்ல அடையாளம் எதிரியோட பதட்டம்தான் "

" இருந்தாலும்.... எதுக்கும் யோசனை பண்ணி.....? " நாராயணி குரலை இழுக்க சந்திரசூடன் மெல்ல சிரித்தார்.

" நீங்க பயப்படாமே இருங்க...... நான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன். இப்ப நான் கேட்கிற சில கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுங்க....எனக்கு வந்த இந்த மிரட்டல் மெஸேஜில் இப்படிக்கு "அதிரா" ன்னு ஒரு வார்த்தை போடப்பட்டிருக்கு. அபார்ட்மெண்ட்டோட பேரு அதிரா. யார் இந்த அதிரா.... அபார்ட்மெண்ட்டைக் கட்டினது யாருங்கிற விபரம் உங்களுக்குத் தெரியுமா .... ? "

" தெ......தெரியும் "

" யாரு .... ? "

" ஆறு வருஷத்துக்கு முந்தி அந்த அதிரா அபார்ட்மெண்ட்டை மூணு ரியல் எஸ்டேட் ஒனர்ஸ் சேர்ந்து கட்ட ஆரம்பிச்சாங்க. ஒருத்தர் பேர் அருளானந்தம் இன்னொருத்தர் திருமூர்த்தி. மூணாவது நபர் ராவணன். இந்த மூணு பேரோட பெயர்களில் இருக்கிற முதல் எழுத்துக்களை மட்டும் எடுத்து அதிரா கன்ஸ்ட்ரக்சன்ஸ் என்கிற நேம்ல ஒரு கம்பெனியை நுங்கம்பாக்கம் ஏரியாவில் இருக்கிற காம்தார் நகர்ல ஆரம்பிச்சாங்க. பத்து தவணைகளில் பணம் கட்டினா போதும். ஒரு ஃப்ளாட்டுக்கு சொந்தக்காரர் ஆயிடலாம்ன்னு அவங்க பண்ணின விளம்பரம் எங்களுக்குப் பிடிச்சிருந்ததால நாங்களும் பணத்தை முறையாக கட்டி ஃப்ளாட்டை வாங்கிட்டோம். கிரகப்பிரவேசமும் பண்ணி முடிச்சோம். ஆனா எங்க சன் கபிலனுக்கு சிட்டியை விட்டுட்டு அவ்வளவு தூரம் போய் குடியிருக்க பிடிக்கலை. ஆபீஸ் போயிட்டு வர மூணு பஸ் மாறணும். அதனால அந்த ஃப்ளாட்டை வாடகைக்கு விட்டோம். வாடகைக்கு வந்த ஆட்களும் சரியில்லை. ஒழுங்கா வாடகை தராமே ஏமாத்தினாங்க. காலி பண்ண வெச்சோம். இந்த பிரச்சினைக்கு நடுவுல அபார்ட்மெண்ட்ல அடுத்தடுத்து ஆறு பேர் மர்மமான முறையில் இறந்து போனது எங்களுக்கு பெரிய அதிர்ச்சியாய் இருந்தது. அது ஒரு ராசியில்லாத அபார்ட்மெண்ட்ன்னு வெளியே ஒரு டாக் இருந்ததால ஃப்ளாட் வாங்கினவர்களில் சில பேர் வந்த விலைக்கு வித்துட்டு வேற பக்கம் போயிட்டாங்க. நாங்களும் ஃப்ளாட்டை வித்துடலாம்ன்னு முடிவு பண்ணி புரோக்கர் கிட்டே சொல்லி வெச்சிருந்தோம். ஃப்ளாட் வாங்க வந்தவங்க அடாவடியான விலைக்கு கேட்டதால எங்களால ஃப்ளாட்டை விக்க முடியலை "

சந்திரசூடன் நாராயணியின் பேச்சில் குறுக்கிட்டார். " அந்த ரியல் எஸ்டேட் ஒனர்ஸ் அருளானந்தம், திருமூர்த்தி, ராவணன் மூணு பேர்க்கும் அபார்ட்மெண்ட்ல நடந்த மர்மமான இறப்புகள் பற்றின விபரம் தெரியுமா.... ? "

" தெரிய வாய்ப்பில்லைன்னு நினைக்கிறேன் "

" என்ன காரணம் .... ? "

" இப்ப அந்த மூணு பேரும் இந்தியாவில் இல்லை..... அதிரா கன்ஸ்ட்ரக்சன்ஸ் என்கிற பெயரில் அந்த அபார்ட்மெண்ட் கட்டி முடிச்சதும் அவங்களுக்குள்ளே ஏதோ பிரச்சினை வந்து தனித்தனியா பிரிஞ்சு வேற பிசினஸ்களுக்கு போய் வெளிநாடுகளில் செட்டில் ஆகிட்டதாய் கேள்விப்பட்டேன் "

" கேள்விப்பட்டீங்களா..... இல்ல அதுதான் உண்மையா .... ? "

" அது உண்மைதான்.... நாங்க எங்க ஃப்ளாட்டை விக்க முயற்சி பண்ணினபோது வாங்க வந்த ஒருத்தர் பேரண்டல் டாக்குமெண்ட்டோட காப்பியைக் கேட்டார். அதை வாங்குறதுக்காக நானும் என்னோட ஹஸ்பெண்ட்டும் நுங்கம்பாக்கத்தில் இருந்த அதிரா அபார்ட்மெண்ட் கன்ஸ்ட்ரக்சன்ஸ் ஆபீஸூக்குப் போனோம். அந்த இடத்துல ஃபர்னீச்சர் கடையொண்ணு இருந்தது. அந்த ஃபர்னீச்சர் கடையில் இருந்தவர்தான் அந்த மூணுபேர்க்குள்ளே ஏதோ பிரச்சினை வந்து பிரிஞ்சு வெவ்வேறு பிசினஸ்களுக்குப் போய் வெளிநாடுகளில் செட்டிலாயிட்டதாய் சொன்னாங்க..... "

" அவங்க எந்தெந்த வெளிநாடுகளில் இருக்காங்கிற விபரம் ஏதாவது தெரியுமா .... ? "

" அவங்களோட செல்போன் நெம்பர்களை வெச்சுகிட்டு ரெண்டு மூணு இடத்துல விசாரிச்சுப் பார்த்தோம். சரியான தகவல்களை யாரும் சொல்லலை..."

" அந்த போன் நெம்பர்கள் உங்ககிட்ட இருக்கா .... ? "

" இருக்கு "

" அந்த நெம்பர்களை ஒரு பேப்பர்ல நோட் பண்ணிக் கொடுங்க..... " சந்திரசூடன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே வராந்தாவின் ஒரமாய் இருந்த லிஃப்டில் இருந்த வெளிப்பட்ட ஒரு இளைஞன் வேகவேகமாய் நடந்து வியர்த்த முகமாய் நாராயணிக்கு முன்பாய் வந்து நின்றான்.

" எதுக்கம்மா..... ஆபீஸிலிருந்து உடனே புறப்பட்டு வரச் சொன்னே..... அப்பாவுக்கு மறுபடியும் பி.பி.சூட்டப் ஆயிடுச்சா .... ? "

நாராயணி சந்திரசூடனிடம் திரும்பினாள்.

" இவன்தான் என்னோட மகன் கபிலன் கம்ப்யூட்டரிங் படிச்சுட்டு ஒரு சாஃப்ட்வேர் கம்பெனிக்கு வேலைக்குப் போயிட்டிருக்கான்" என்று சொன்னவள் மகன் கபிலனை ஏறிட்டாள்.

" கபில்..... அப்பாவுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. பி.பி.நார்மலுக்கு வந்து நல்லாத் தூங்கிட்டிருக்கார். இப்ப வேற ஒரு பிரச்சினை "

கபிலனின் முகம் மாறியது.

" வேற ஒரு பிரச்சினையா..... நீ என்னம்மா சொல்றே.... ? "

சந்திரசூடன் மெதுவான நடையில் கபிலனை நெருங்கி அவனுடைய தோளின் மேல் கையை வைத்தார். சொன்னார்.

" பிரச்சினை என்னான்னு நான் சொல்றேன்..... வா.... கபிலன் "

*******

ஈஞ்சம்பாக்கம் மத்தியப் பகுதியில் இருந்தது அதிரா அபார்ட்மெண்ட்.

நான்கு மாடிகளோடு அழுக்கான பிங்க் நிறத்தில் பாசிபிடித்து தெரிந்தது. காம்பெளண்ட் கேட்டையொட்டியிருந்த முகப்பு ஆர்ச்சில் அதிரா அபார்ட்மெண்ட் என்று சிமெண்டால் உருவாக்கப்பட்ட எழுத்துக்கள் உடைந்து போய் கான்க்ரீட் கம்பிகளை வெளியே காட்டியது.

காரின் வேகத்தைக் குறைத்த சந்திரசூடன் தனக்கு அருகே உட்கார்ந்திருந்த கபிலனைப் பார்த்தார்.

" இந்த அபார்ட்மெண்ட் கட்டி ஆறு வருஷம்தானே ஆச்சு .... ? "

" ஆமா..... ஸார் "

" பின்னே ஏன் எல்லாமே பாழடைஞ்ச மாதிரி இருக்கு "

" சரியான மெயிண்டனென்ஸ் கிடையாது ஸார்... இதுக்கும் இந்த அபார்ட்மெண்ட்ல இருக்கிறவங்க எல்லாருமே படிச்சவங்க. கல்ச்சர்ட் பீப்பிள். ஏதாவது பிரச்சினைன்னு வந்துட்டா குப்பத்து ஜனங்க மாதிரி சண்டை போட்டுக்குவாங்க..... அந்த சமயத்துல அவங்க பேசற வார்த்தைகளை காது கொடுத்து கேட்க முடியாதபடி இருக்கும் "

காரை அபார்ட்மெண்ட்டுகளுக்கு இடையே போடப்பட்டிருந்த சாலையில் மெதுவாக செலுத்தினார் சந்திரசூடன்.
கபிலன் சொன்னான். " லெஃப்ட்ல கட் பண்ணி நேரா போங்க.... ஸார்... கே ப்ளாக் வரும். அதுல ஃப்ளாட் எண் 427 தான் எங்களுடையது. அதுக்கு கீழ் இருக்கும் பேஸ்மெண்ட்ல நாம காரைப் பார்க் பண்ணிக்கலாம் "

காரை மெதுவாய் செலுத்தியபடி சந்திரசூடன் தன்னுடைய பார்வையை சுற்றும் முற்றும் அலையவிட்டார்.
அந்தப் பகல் நேரத்தில் கூட ஆள் நடமாட்டம் இல்லாமல் ஒட்டு மொத்த அபார்ட்மெண்ட்டும் ஏதோ ஒரு பாலைவனத்தின் நடுவே இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியது.

" கபிலன் "

" ஸார்.... "

" அபார்ட்மெண்ட்ல ஆட்கள் இருக்காங்களா இல்லையா... நாம இங்கே வந்ததிலிருந்து ஒருத்தர் கூட பார்வைக்குத் தட்டுப்படலையே .... ? "

" ஸார்... நான் ஏற்கனவே சொன்ன மாதிரி இந்த அபார்ட்மெண்ட்ல முன்னாடி குடியிருந்த நிறைய பேர் காலி பண்ணிட்டு வேற பக்கம் குடி போயிட்டாங்க. ஃப்ளாட் ஒனர்ஸ் மட்டுமே வேற வழியில்லாமே இங்கே குடியிருக்காங்க. அதுல பலபேர் ஃப்ளாட்டை வித்துட்டு போகவும் முயற்சி பண்ணிட்டு இருக்காங்க. அதுவுமில்லாமே இன்னிக்கு ஒர்க்கிங் டே..... நிறைய பேர் ஆபீஸ் போயிருப்பாங்க. சாயந்தரம் ஆறு மணிக்கு மேல ஒரளவுக்கு நடமாட்டம் இருக்கும் ஸார்...." சொன்ன கபிலன் வலது பக்கம் கையைக் காட்டினான்.

" ஸார்.... அதுதான் நாம போக வேண்டிய " கே " ப்ளாக் . காரை பார்க் பண்ண வேண்டிய இடம் அதோ மார்க் பண்ணியிருக்கிற அந்த எல்லோ லைன் ஏரியா " சந்திரசூடன் காரை கபிலன் சுட்டிக்காட்டிய அந்த மஞ்சள் கோடுகளுக்கு நடுவில் கொண்டு போய் நிறுத்திவிட்டு கேட்டார்.

" நேற்றைக்கு ராத்திரி இந்த இடத்துலதான் உங்கப்பா காரைக்கொண்டு வந்து நிறுத்தியிருந்தாரா .... ? "

" ஆமா ஸார்...... ஃப்ளாட் வாங்கும்போதே இந்த இடத்துலதான் காரை நிறுத்தணும்ன்னு விதியே இருக்கு "

இருவரும் காரை விட்டு இறங்கினார்கள்.

பேஸ்மெண்ட் பார்க்கிங் ஏரியா அவ்வளவு சுத்தமாக இல்லை. பயன்படுத்தப்பட்ட பாலீதீன் கவர்கள் ஆங்காங்கேயிருந்த பில்லர்களில் ஒட்டிக்கொண்டு வீசிய காற்றுக்கு படபடத்தன. நான்கைந்து தெருநாய்கள் சுருண்டு படுத்து கொண்டிருந்தன. ட்ரய்னேஜ் குழாய்கள் அடைத்துக் கொண்டதற்கு அடையாளமாய் வயிற்றைப் புரட்டும் அளவுக்கு நாறியது.

சந்திரசூடன் கர்ச்சீப்பை எடுத்து மூக்கைப் பிடித்துக்கொண்டே லிஃப்ட் இருந்த திசை நோக்கி நடக்க, கபிலன் தயக்கமான குரலில் சொன்னான்.

"ஸ....ஸார்..... லிஃப்ட் ரிப்பேர்.... நாம மாடிப்படி வழியாகத்தான் போகணும்.... நாலாவது மாடி கொஞ்சம் சிரமமாய்த்தான் இருக்கும். வேற வழியில்லை ஸார்"

" இட்ஸ் ஒ.கே.... மாடிப்படி எங்கே இருக்கு .... ? "

" இந்தப்பக்கம் வாங்க ஸார் " கபிலன் அவரை அழைத்துக்கொண்டு அந்த குறுகலான வழியில் நடந்து மாடிப்படிகள் ஆரம்பமாகும் இடத்துக்கு வந்தான். வேண்டாத பொருள்களை போட்டு வைத்திருந்த அந்த இடத்தின் ஒரு ஒரமான இடத்திலிருந்து படிகள் அரையிருட்டில் அழுக்காய் தெரிந்தன. சந்திரசூடன் கேட்டார்.

" என்ன பகல் நேரத்திலேயே இவ்வளவு இருட்டாய் இருக்கு .... ? "

" சூரிய வெளிச்சம் வர்ற கண்ணாடி உடைஞ்சிருச்சு ஸார்... அந்த இடத்தை காட்போர்டு வெச்சு அடைச்சிருக்காங்க. அதான் இருட்டு. இந்த அபார்ட்மெண்ட்ல எதுவுமே சரியில்லை ஸார் " கபிலன் சொல்ல சந்திரசூடன் தன்னுடைய செல்போனின் டார்ச் லைட் வெளிச்சத்தோடு அவனுடன் படிகள் ஏற ஆரம்பித்தார். தூசு மண்டிய மாடிப்படிகள்.

மூச்சு வாங்க இருவரும் இரண்டாவது தள மாடிப்படிகளை முடித்துக்கொண்டு மூன்றாவது தளத்துக்கு இருவரும் ஏற முயன்றபோது -

பின்னால் அந்த சத்தம் கேட்டது.

நிதானமான நடையில் மாடிப்படிகளில் யாரோ ஏறி வரும் சத்தம்.

( தொடரும்)

[அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7]

English summary
Flat number 144 Adhira apartment (Episode 8) is a new crime thriller serial written by writer R Rajeshkumar. பிரபல நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதும் ' ஃப்ளாட் நெம்பர் 144 அதிரா அப்பார்ட்மெண்ட்' கிரைம் நாவலின் முதல் எபிசோடை இந்த பக்கத்தில் காணலாம்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X