For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"ஆர் யூ ஷ்யூர்?".. ஃப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (7)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

சந்திரசூடன் திகைப்புக்குள் விழுந்து, ஒரு சில விநாடிகள் சுவாசிக்கத் திணறிய பிறகு மறுபடியும் செல்போனின் மறுமுனையில் இருந்து ஈஞ்சம்பாக்கம் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் நன்மாறனிடம் அழுத்தத்திருத்தமான குரலில் கேட்டார்.

" யோசிச்சுச் சொல்லுங்க.... அதிரா அபார்ட்மெண்ட் என்கிற பேர்ல உங்க ஸ்டேஷன் பீட் எல்லைக்குள்ளே எந்த ஒரு அபார்ட்மெண்ட்டும் இல்லையா .... ? "

" இல்ல ஸார் "

" ஆர் யூ ஷ்யூர் .... ? "

" இதுல பொய் சொல்ல என்ன ஸார் இருக்கு.... ? "

Flat number 144 Adhira apartment episode 7

" அப்படியொரு அபார்ட்மெண்ட் இருக்கிறது ஒரு வேளை உங்களுக்குத் தெரியாமே இருக்கலாம். ஸ்டேஷன்ல இருக்கிற எஸ்.ஐ.கிட்டேயும், மத்த கான்ஸ்டபிள்கிட்டேயும் கேட்டுப் பாருங்க நன்மாறன் "

" ஸாரி.... ஸார்...... இந்த ஸ்டேஷனோட பீட் எல்லைக்குள் இருக்கிற எல்லா இடமும் எனக்கு அத்துப்படி. கடந்த ரெண்டு வருஷ காலமா ட்ரான்ஸ்ஃபர்ல போகாமே இதே ஸ்டேஷன்ல இருக்கேன். தினசரி ராத்திரி பத்து மணிக்கு மேல பேட்ரோலிங் போயிட்டு ஒரு ஏரியா விடாமே பார்த்துட்டு வர்றேன். எல்லா இடமும் எனக்கு அத்துபடி ஸார்... பை...த.....பை வாட்ஸ் த ப்ராப்ளம் ஸார்.... லெட் மீ நோ..தட்.... ? "

" ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு மறுபடியும் உங்களுக்கு போன் பண்றேன் "

" வெல்கம் ஸார்.... அயாம் வெயிட்டிங் "

சந்திரசூடன் செல்போனை அணைத்துவிட்டு குழப்பமான முகத்தோடு திரும்ப நாராயணி அவரை நோக்கி வந்தபடி சொன்னாள்.

" என்னோட மகன் கபிலனுக்கு போன் பண்ணிட்டேன். அடுத்த அரை மணி நேரத்துக்குள்ளே அவன் இங்கே வந்துடுவான். உங்களை அந்த அதிரா அபார்ட்மெண்ட்டுக்கு கூட்டிட்டு போவான் "

சந்திரசூடன் பதிலொன்றும் பேசாமல் சில விநாடிகள் நாராயணியையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு கேட்டார்.

" நீங்க சொன்ன அந்த அதிரா அபார்ட்மெண்ட்டுக்கு வேற பேர் ஏதாவது இருக்கா .... ? "

" இல்லையே .... ? "

" அதிரா அபார்ட்மெண்ட் என்கிற பேர்ல ஈஞ்சம்பாக்கம் ஏரியாவில் அபார்ட்மெண்ட்டே இல்லைன்னு அந்த பீட் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சொல்றாரே .... ? "

சந்திரசூடன் சொன்னதைக் கேட்டு நாராயணி வெகுவாய் முகம் மாறினாள்.

" அப்படி தெரியாமே இருக்க வாய்ப்பில்லையே.... ஏன்னா அந்த அபார்ட்மெண்ட் ஈஞ்சம்பாக்கம் ஏரியாவின் முக்கியமான ஒரு லேண்ட் மார்க்..... யாரைக் கேட்டாலும் சொல்வாங்களே.... ?" சந்திரசூடன் மேற்கொண்டு நாராயணியிடம் பேச முயன்ற விநாடி அவருடைய செல்போன் டயல்டோனை வெளியிட்டது.

எடுத்துப் பார்த்தார்.

செல்போனின் டிஸ்ப்ளேயில் ஒரு புது எண் ஸ்காரலிங் செய்துக் கொண்டிருந்தது. எடுத்து காதில் வைத்தார்.

மெல்ல குரல் கொடுத்தார்.

" எஸ் "

" ஸார்.... நான் இன்ஸ்பெக்டர் நன்மாறன்"

சந்திரசூடன் லேசாய் திகைத்து " என்ன நன்மாறன்? " என்றார்.

" ஸாரி ஸார் "

" உங்ககிட்ட பொய் சொன்னதுக்காக "

" பொய்யா ? "

" எஸ் ஸார்... ஈஞ்சம்பாக்கம் ஏரியாவில் அதிரா அபார்ட்மெண்ட் இருக்கான்னு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீங்க ஸ்டேஷன் லேண்ட் லைனுக்கு போன் செஞ்சு கேட்டப்ப நான் அந்தப் பேர்ல எந்த ஒரு அபார்ட்மெண்ட்டும் இல்லைன்னு சொன்னேன். அது பொய் ஸார். உண்மையில் அந்தப் பேர்ல அபார்ட்மெண்ட் இருக்கு ஸார் "
சந்திரசூடன் அதிர்ந்தார்.

" ஈஸிட்..... எதுக்காக அப்படியொரு பொய் சொன்னீங்க .... ? "

" ஸார்... நான் இப்போ ஸ்டேஷனுக்கு வெளியே வந்து ஜீப்ல உட்கார்ந்து என்னோட பர்சனல் செல்போன் மூலமா பேசிட்டிருக்கேன். ஸ்டேஷன் லேண்ட் லைனுக்கு நீங்க போன் பண்ணிப் பேசினதும் ஸ்டேஷன்ல இருந்த எஸ்.ஐ.யும் நாலு கான்ஸ்டபிள்களும், ரைட்டரும் நான் என்ன பேசறேன்னு உன்னிப்பா கவனிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அதை அவாய்ட் பண்ணத்தான் பொய் சொன்னேன் "

சந்திரசூடன் லேசாய் எரிச்சலானார்.

" இப்ப நீங்க என்ன சொல்ல வர்றீங்க .... ? "

" ஸார்.... நான் ஈஞ்சம்பாக்கம் ஸ்டேஷனுக்கு வந்து சார்ஜ் எடுத்து ரெண்டு வருஷமாச்சு. இந்த ரெண்டு வருஷ காலத்துல அதிரா அபார்ட்மெண்ட்ல நாலு பேர் மர்மமான முறையில் இறந்து போயிருக்காங்க. நான் ட்யூட்டி ஜாய்ன் பண்றதுக்கு ரெண்டு வருஷத்துக்கு முந்தியே ரெண்டு பெண்கள் மர்மமான முறையில் மரணம் அடைந்ததாக ஸ்டேஷன் ரிஜிஸ்டர்ல பதிவாகியிருக்கு. அதாவது இதுவரைக்கும் மொத்தம் ஆறு பேர் இறந்து போயிருக்காங்க. அந்த ஆறு பேர்ல நாலு பேர் இளம் பெண்கள் " நன்மாறன் பேசப்பேச சந்திரசூடன் நாராயணியை விட்டு விலகி வராந்தாவின் ஒரமாய் போய் நின்று கொண்டு குரலைத் தாழ்த்தினார்.

" அந்த அபார்ட்மெண்ட்ல இறந்து போன அந்த ஆறு பேரின் மரணங்கள் எதுமாதிரியானவை ? கொலைகளா இல்லை தற்கொலைகளா ? "

" ரெண்டுமே இல்லை ஸார் "

" தென்..... ? "

" நேச்சுரல் டெத்ஸ் "

" யூ...மீன் இயற்கையான முறையில் இறந்து போயிருக்காங்க "

" ஆமா ஸார் "

" போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்ல அப்படி சொல்லப்பட்டிருக்கா ? "

" இறந்து போன நபர்களின் உடல்கள் போஸ்ட்மார்ட்டமே செய்யப்படாத போது ரிப்போர்ட் எப்படி ஸார் கிடைக்கும் ? "

" அப்புறம் எப்படி ஆறு பேரும் இயற்கையான முறையில் இறந்து போனதா சொல்றீங்க ..... ? "

" அந்த இறப்புகளில் சம்பந்தப்பட்ட நபர்களின் ஃபேமிலி டாக்டர்ஸ் கொடுத்த ரிப்போர்ட்களின் மருத்துவ ரீதியான அடிப்படையில் அப்படியொரு முடிவுக்கு வர வேண்டியிருக்கு. எதையும் மறுத்து பேச முடியாத நிலைமை. ஆனா எனக்கு மட்டும் உள்ளூர ஒரு சின்ன.... சந்தேகம் இருந்துட்டே இருந்தது.... ஸார் "

" நடந்தது இயற்கையான மரணங்களாய் இருக்காதுங்கிற சந்தேகமா ..... ? "

" ஆமா ஸார் "

" உங்களுக்கு அப்படியொரு சந்தேகம் வர என்ன காரணம் ..... ? "

" அந்த மரணங்கள் சம்பந்தப்பட்ட ஃபைல்கள் வேகவேகமாய் பார்க்கப்பட்டு முடிக்கப்பட்டதுதான் முதல் காரணம் ஸார். ரெண்டாவது காரணம் எனக்கு வந்த ஒரு மிரட்டல் "

" எ...எ.....என்னது மிரட்டலா ..... ? "

" ஆமா ஸார்..... என்னோட வாட்ஸ் அப்க்கு வந்தது அந்த மிரட்டல். நீ ஸ்டேஷனில் இருக்கும் போது பொழுது போகவில்லையென்றால் பழைய குப்பைகளை கிளறாதே. புதிய குப்பைகளை மட்டும் சுத்தம் செய்.... அது மட்டும் போதும் "

" அந்த வாட்ஸ் அப் மிரட்டல் வாசகம் இன்னமும் உங்களுடைய செல்போனில் இருக்கா ..... ? "

" இல்ல ஸார் .... அந்த வாசகம் வாட்ஸ் அப்க்கு வந்து நான் அதைப் பார்த்துட்டேன்னு தெரிஞ்சதுமே அனுப்பிய நபர்கள் அதை டெலிட் பண்ணிட்டாங்க. ஆனா அந்த போன் நெம்பரை நான் நோட் பண்ணி வெச்சிருந்து அது யாரோட நெம்பர்ன்னு ட்ரேஸ் அவுட் செஞ்சு பார்த்தபோது அது ஒரு ஃபேக் நெம்பர்ன்னு தெரிஞ்சுது "
சந்திரசூடன் குரலைத் தாழ்த்தினார்.

" நீங்க வேலை பார்க்கிற ஸ்டேஷனிலேயே அதிரா அபார்ட்மெண்ட்டைப் பற்றின உண்மைகள் தெரிஞ்ச நபர் யாரோ இருக்கிறாங்கன்னு நீங்க நினைக்கிறீங்களா நன்மாறன் .... ? "

" ஆமா ஸார் "

" அப்படிப்பட்ட எண்ணம் வந்ததுக்கு என்ன காரணம் .... ? "

" ஸார்.... நான் அந்த அதிரா அபார்ட்மெண்ட் சம்பந்தப்பட்ட ஃபைல்களை எப்போ என்னிக்கு எடுத்துப் பார்த்தாலும் சரி, அடுத்த நாள் என்னோட வாட்ஸ் அப்க்கு அந்த மிரட்டல் வாசகம் வந்துடும். ஆனா அனுப்பின போன் நெம்பர்கள் மட்டும் மாறியிருக்கும் "

" கடைசியா அந்த ஃபைல்களை என்னிக்கு எடுத்துப் பார்த்தீங்க ? "

" ஒரு ஆறு மாசம் இருக்கும் "

" அதுக்கு அடுத்த நாள் மிரட்டல் வாசகம் வந்ததா? "

" வந்தது ஸார்... ஆனா அந்த வாசகம் கொஞ்சம் கடுமையாய் இருந்தது "

" கடுமைன்னா எது மாதிரி .... ? "

" பழைய குப்பைகளை கிளறாதே.... அப்படி கிளறினால் உன்னை சுத்தம் செய்ய வேண்டியிருக்கும் "
சந்திரசூடன் அதிர்ந்தார்.

" இப்படியொரு கடுமையான மிரட்டல் வந்திருக்கு. நீங்க உடனடியாய் இந்த விஷயத்தை உங்க ஏரியா போலீஸ் ஹை அஃபிஷியல்ஸோட கவனத்துக்கு கொண்டு போகலையா .... ? "

" கொண்டு போனேன் ஸார் "

" என்ன சொன்னாங்க .... ? "

" க்ளோஸ் பண்ணின ஃபைல்ஸையெல்லாம் நீ ஏன்ய்யா ஒப்பன் பண்றே.... கையை வெச்சுகிட்டு சும்மா இருக்க வேண்டியதுதானேன்னு என்னையத்தான் ப்ளேம் பண்ணினாங்க ஸார்"

" அப்படி சொன்ன ஆபீஸர் யார்ன்னு தெரிஞ்சுக்கலாமா .... ? "

" டெப்டி போலீஸ் கமிஷனர் விஜயராகவன் ஸார் "

" அவரா.... காக்கி யூனிஃபார்ம் போட்ட ஒரு அரசியல்வாதி அவர். அவரால அப்படித்தான் பேச முடியும்... பை...த....பை இந்த அதிரா அபார்ட்மெண்ட் சம்பந்தமாய் உங்ககிட்ட கொஞ்சம் பேச வேண்டியிருக்கு. நாளைக்கு காலையில் நாம சந்திக்கலாமா .... ? "

" வித் ப்ளஷர் ஸார்.... நான் எந்த இடத்துக்கு வரணும்ன்னு சொல்லுங்க "

" ஆபீஸூக்கு வரவேண்டாம். கோயம்பேடு மார்க்கெட்டுக்குள்ளே கனித்தோட்டம் என்கிற பேர்ல ஒரு பெரிய பழக்கடை இருக்கு. அது என்னோட கஸின் பிரதரோட கடை. அங்கே வந்துடுங்க "

" நாளைக்கு காலை பத்து மணிக்கெல்லாம் வந்துடறேன் ஸார் "

" யூனிஃபார்ம் வேண்டாம்... வேஷ்டி சர்ட்ல வாங்க.... ஃப்ரூட்ஸ் வாங்கற மாதிரி கொஞ்சம் பாவ்லா பண்ணிகிட்டே உள்ளே வந்துடுங்க. என் கஸின் பிரதரோட பேர் ராமஜெயம். அவர்கிட்ட உங்களைப்பத்தி சொல்லிடறேன். நீங்க அங்கே வெயிட் பண்ணுங்க.... நானும் சொன்ன நேரத்துக்குள்ளே அங்கே வந்துடறேன்

" எஸ் ஸார் "

சந்திரசூடன் செல்போனை அணைத்து சட்டைப் பையில் போட்டபடி சற்று தொலைவில் சுவரோரமாய் நின்றிருந்த நாராயணியை நோக்கி போனார். ஒரு சின்னப் புன்னகையோடு பேசினார்.

" ஸாரி..... ஈஞ்சம்பாக்கம் ஏரியாவில் அதிரா அபார்ட்மெண்ட் இருக்குன்னு அந்த பீட் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சொல்றார். நான் கேட்ட கேள்வியை இதுக்கு முன்னாடி சரியா புரிஞ்சுக்கலை. அதுதான் அந்தப் பேர்ல அபார்ட்மெண்ட் இல்லைன்னு சொல்லிட்டார். தேவையில்லாமே ஒரு குழப்பம் "

சந்திரசூடன் சொல்ல நாராயணி ஒன்றும் பேசாமல் சில விநாடிகள் மெளனமாய் இருந்துவிட்டு கண்களில் மின்னும் நீரோடு ஏறிட்டாள்.

" உங்க ஃப்ரண்ட்டுக்கு எந்த பிரச்சினையும் வராமே பார்த்துக்க வேண்டியது உங்க பொறுப்பு. காரோட டிக்கியில் சடலமாய் அடைக்கப்பட்டு இருந்த அந்தப் பொண்ணு யார்ன்னு சத்தியமா எங்களுக்கு தெரியாது. அதிரா அபார்ட்மெண்ட்டில் எங்க கார் நின்னுட்டிருந்தபோதுதான் யாரோ காரோட டிக்கியை ஒப்பன் பண்ணி அந்தப் பொண்ணோட டெட்பாடியை அடைச்சிருக்காங்க "

" இதையெல்லாம் நீங்க சொல்ல வேண்டியதில்லை. இனிமே இந்த கேஸை எப்படி டீல் பண்ணனும்ன்னு எனக்குத் தெரியும்... உங்க சன் கபிலன் அரைமணி நேரத்துக்குள்ளே இங்கே வந்துடுவாரா..... உடனடியாய் அபார்ட்மெண்ட்டுக்கு போகணும்" நாராயணி அவசர அவசரமாய் தலையாட்டினாள்.

" அவன் இந்நேரம் ஆபீஸிலிருந்து புறப்பட்டு வந்துட்டிருப்பான். இன்னும் பதினைந்து நிமிஷத்துக்குள்ளே இங்கே இருப்பான் "நாராயணி சொல்ல சந்திரசூடன் அங்கே சுவரோரமாய் போடப்பட்டிருந்த நாற்காலிக்கு சாய்ந்தார்.

அதே விநாடி -

அவருடைய செல்போனின் மெஸேஜ் அலர்ட் டோன் காற்றின் ஒலியலைகளை சிதறவிட்டது.

சட்டென்று எடுத்துப் பார்த்தார்.

மெஸேஜ் மூளைக்குள் பாய கண்கள் திகைத்தது. முகப்பரப்பில் வியர்வை அரும்பி ஸ்லோமோஷனில் பரவியது.

( தொடரும்)

[அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7]

English summary
Flat number 144 Adhira apartment (Episode 7) is a new crime thriller serial written by writer R Rajeshkumar. பிரபல நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதும் ' ஃப்ளாட் நெம்பர் 144 அதிரா அப்பார்ட்மெண்ட்' கிரைம் நாவலின் முதல் எபிசோடை இந்த பக்கத்தில் காணலாம்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X