• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"என்ன நடக்குதுன்னு பாருங்க" .. ஃப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (10)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

செல்போனை கையில் எடுத்த கோபிகா அதை ஆன் செய்து வெளிச்சமாக்கிக் கொண்டே கேட்டாள்.

" ஸார்..... இந்த அமானுஷ்ய விஷயங்களில் உங்களுக்கு நம்பிக்கை இல்லைன்னு நினைக்கிறேன் "

சந்திரசூடன் தன் இதழ்கோடியில் ஒரு சின்னப்புன்னகையை தவழவிட்டபடியே தலையாட்டினார்.

" எஸ்..... "

flat number 144 adhira apartment episode 10

" ஏன் .... ? "

" ஒரு போலீஸ்காரன் அதையெல்லாம் நம்ப ஆரம்பிச்சுட்டா வேலையை ராஜினாமா பண்ணிட்டு வீட்டுக்குப் போகவேண்டியதுதான்"

" இன்னிக்கு நான் காட்டப்போகிற வீடியோ காட்சிகளைப் பார்த்துட்டு நீங்க உங்களோட அபிப்ராயத்தை மாத்திக்கப் போறீங்க ஸார் "

சொன்ன கோபிகா செல்போனின் SAVED VIDEO LINK COPY ஆப்ஷனுக்குப் போய் விரலை வைத்து தேய்த்துவிட்டு ஆடியோ வால்யூமை உயர்த்திய பின் அந்த செல்போனை அவரிடம் கொடுத்தாள்.

" ஹேவ் ஏ லுக் ஆன் திஸ் வீடியோ...... என்ன நடக்குதுன்னு பாருங்க "

சந்திரசூடன் செல்போனை வாங்கிப் பார்த்தார். ஆர்வமாய் கபிலனும் அவரோடு இணைந்து கொண்டான்.
இருவரின் விழிகளிலும் அந்த வீடியோ காட்சி பட்டு பார்வையில் விரிந்தது.

கண் கூசுகிற அளவுக்கு நல்ல வெயில் நேரத்தில் காலி மைதானம் ஒன்று தெரிய, பொக்லைன் எந்திரங்கள் இரண்டு தன்னுடைய முன்பக்க எந்திரக் கைகளால் நிலத்தை ஆழமாய் குழி பறித்து, மண்ணை அள்ளி அள்ளி இன்னொரு பக்கம் குவித்துக் கொண்டிருந்தது. வேலை செய்யும் ஆட்கள் தள்ளித்தள்ளி நின்றிருக்க, அவர்களுக்குப் பின்னால் செங்கற்கள் வரிசையாய் அடுக்கப்பட்டு தெரிந்தது. தற்காலிகமாய் போடப்பட்டிருந்த ஆஸ்பெஸ்டாஸ் கூரைக்குக் கீழே சிமெண்ட் மூட்டைகள் நெருக்கியடித்துக்கொண்டு இடம் பிடித்திருக்க, நீளமான ஒரு லாரியில் டன்டன்னாய் கான்கீரிட் கம்பிகள் நீட்டிக்கொண்டு தெரிந்தன. அந்த வீடியோ காட்சியை ஒரு நிமிஷ நேரம் வரை உற்றுப் பார்த்து விட்டு கோபிகாவை ஏறிட்டார்.

" ஏதோ ஒரு கன்ஸ்ட்ரக்சன் ஒர்க் நடக்குது. இதுல என்ன அமானுஷ்யம் இருக்குன்னு புரியலையே .... ? "
கோபிகா கேட்டாள். " அந்த பொக்லைன் என்ன பண்ணிட்டிருக்கு? "

" மண்ணைத்தோண்டி எடுத்து ஒரு பக்கமா கொட்டிகிட்டு இருக்கு..."

" மறுபடியும் அந்த வீடியோவை பிக் ஸ்கிரீன் பண்ணிப் பாருங்க.... ஸார்...... பொக்லைன் என்ன பண்ணிட்டிருக்குன்னு தெரியும்... "

சந்திரசூடன் குழப்பமான முகத்தோடு அந்த வீடியோவை பிக் ஸ்கீரின் ஆப்ஷனுக்குப் பெரிதுபடுத்தினார்.

ஆடியோவையும் அதிகப்படுத்தி பார்வையை கூர் தீட்டினார்.

இரண்டு பொக்லைன் எந்திரங்களும் இரைச்சலோடு குழியைப் பறித்து மண்ணை அள்ளியது. அள்ளிய மண்ணை இன்னொரு பக்கம் கொட்ட கொட்டிய மண்ணோடு கலந்து மனித எலும்புகளும், மண்டையோடுகளும் விழுந்தது.

சந்திரசூடன் அதிர்ந்து போனவராய் வீடியோவினின்றும் பார்வையைத் திருப்பி கோபிகாவை ஏறிட்டார். அவள் மெலிதான புன்னகையுடன் கேட்டாள்.

" என்ன ஸார்.... பொக்லைன் ஒவ்வொரு தடவையும் மண்ணைத் தோண்டி எடுக்கும்போதும் சரி, அந்த மண்ணை இன்னொரு பக்கம் கொட்டும்போதும் சரி, மனித மண்டையோடுகளும், மற்ற கை, கால் எலும்புகளும் சேர்ந்த விழறது தெரியுதா இல்லை தெரியலையா .... ? "

" தெரியுது..... எந்த இடத்துல இது நடந்தது.... ? "

" இந்த வீடியோ க்ளிப்பிங்கில் கான்கீரிட் கம்பிகளோடு நின்னுட்டு இருக்கிற லாரிக்கு வலதுபுறம் ஒரு போர்டு தெரியும். அதுல என்ன எழுதியிருக்குன்னு பாருங்க "

சந்திரசூடன் பார்த்தார். மெல்ல வாய்விட்டு படித்தார்.

" அதிரா கன்ஸ்ட்ரக்சன்ஸ் "

கோபிகா தன்னுடைய உதட்டில் இருந்த புன்னகை சிதையாமல் பேசினாள்.

" ஆறு வருஷத்துக்கு முந்தி இந்த அதிரா அபார்ட்மெண்ட்டை கட்டறதுக்காக பூமி பூஜை போட்டு பில்லர்களை கன்ஸ்ட்ரக் பண்றதுக்காக பொக்லைன் எந்திரங்களை உபயோகப்படுத்தி நிலத்தை தோண்டியபோது எடுத்த வீடியோ ஸார் இது "

சந்திரசூடன் அதிர்ச்சி அகலாமல் அந்த வீடியோவை பார்த்துக்கொண்டே கேட்டார்.

" எ....எ.....எப்படி இவ்வளவு மண்டையோடுகள் எலும்புகள் ? "

" ஒரு மயானம் இருந்த இடத்துல அபார்ட்மெண்ட் கட்டறதுக்காக அஸ்திவாரம் தோண்டினா மண்டையோடுகளும் எலும்புகளும் கிடைக்காமே கனிம வளங்களா ஸார் கிடைக்கும்? "

" அப்படீன்னா இந்த அதிரா அபார்ட்மெண்ட் ஒரு மயானத்தின் மேல்தான் கட்டப்பட்டிருக்கா ? "

" ஆமா "

" அது எப்படி உனக்குத் தெரியும் ? இந்த வீடியோவை உனக்கு அனுப்பினது யாரு ? "

"ஒரு என்ஜினியர் அவர் பேர் அச்சுதன். அதிரா அபார்ட்மெண்ட்டை கட்டறதுக்காக அஞ்சு பேர் கொண்ட என்ஜினியர் டீம் ஒண்ணு செயல்பட்டுகிட்டு இருந்தது. அதுல ஒருத்தர் அச்சுதன். அவர்தான் இந்த வீடியோவை எனக்கு அனுப்பி வெச்சார் "

" எப்ப அனுப்பி வெச்சார் ? "

" ரெண்டு வருஷத்துக்கு முந்தி நானும் என்னோட கணவர் தனசேகரும் சொந்தமா ஒரு ஃப்ளாட் வாங்க முடிவு பண்ணி இந்த ஈஞ்சம்பாக்கம் ஏரியாவில் தேடிட்டு இருந்தோம். இந்த அதிரா அபார்ட்மெண்ட்ல ஃப்ளாட்டை வாங்கியிருந்த ஒருத்தர் ஃப்ளாட்டை விற்கப் போறதா முடிவு பண்ணி பேப்பர்ல விளம்பரம் கொடுத்திருந்தார். நானும் என்னோட ஹஸ்பெண்ட்டும் அவரைப் பார்த்து பேசினோம். நாங்க எதிர்பார்த்த விலையைவிட கம்மியா அவர் தொகையைச் சொன்னதும் எங்களுக்கு ஒரே சந்தோஷம், டாக்குமெண்டேஷனையெல்லாம் சரி பார்த்தோம். எந்த ஒரு வில்லங்கமும் இல்லாமே எல்லாமே பர்ஃபெக்டாய் இருக்கவும், அந்த வாரத்திலேயே இருந்த ஒரு மூகூர்த்த நாளில் ரெஜிஸ்ட்ரேஷனை முடிச்சுகிட்டோம். நல்ல நாள் பார்த்து பால் காய்ச்சி குடிவந்தோம். ஒரு வாரம்தான் சந்தோஷமாய் இருந்தோம். அன்னிக்கு ஆபீஸிலிருந்து வந்த என்னோட கணவர் டல்லடிச்ச மாதிரியாயிருந்தார். ஏன் இப்படி இருக்கீங்கன்னு கேட்டதுக்கு தலைவலின்னு சொன்னார். ஆனா அவர் அப்படி இருந்ததுக்குக் காரணம் தலைவலியல்லன்னு அன்னிக்கு ராத்திரியே எனக்கு புரிஞ்சுது. தூக்கம் வராமே புரண்டு புரண்டு படுத்துட்டு இருந்தார். நான் எந்திரிச்சு உட்கார்ந்து கண்டிப்போடு காரணம் கேட்கவும் மெல்ல மெல்ல விஷயத்தை சொன்னார். இந்த அதிரா அபார்ட்மெண்ட்ல இருக்கிற ஃப்ளாட்டை வாங்க முடிவு பண்ணியதும் என்னோட கணவர் அவரோட என்ஜினியர் ஃப்ரண்ட் ஒருத்தர்கிட்ட இந்த ஃப்ளாட்டை வாங்கலாமா வேண்டாமான்னு ஒபீனியன் கேட்டிருக்கார். அவரும் வாங்கலாம்ன்னு சொல்லியிருக்கார். அதுக்குப்பிறகு ஒரு வாரம் கழிச்சு மறுபடியும் அந்த என்ஜினியர் ஃப்ரண்ட் என்னோட கணவர்க்கு போன் பண்ணி அந்த ஃப்ளாட்டை வாங்க வேண்டாம். அது மயானத்தின் மேல் கட்டப்பட்ட ஒரு அபார்ட்மெண்ட். அந்த அபார்ட்மெண்ட்டைக் கட்டின என்ஜினியர் டீம்ல எனக்கு ரொம்பவும் வேண்டிய அச்சுதன் என்கிற என்ஜினியர் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் இந்தத் தகவலைச் சொல்லி ஒரு வீடியோ க்ளிப் பிங்ஸ்யையும் அனுப்பினார்ன்னு சொல்லி அந்த வீடியோவையும் அனுப்பி வெச்சிருக்கார். அந்த வீடியோவைப் பார்த்ததும் என்னோட கணவர் அப்செட் ஆயிட்டார்"

சந்திரசூடன் கோபிகாவின் பேச்சில் இடைமறித்தார்.

" அதிரா அபார்ட்மெண்ட் ஒரு மயானத்தின் மேல்தான் கட்டப்பட்டிருக்கு என்கிற விஷயம் இங்கிருக்கிற எத்தனை பேர்க்குத் தெரியும் ? "

" யார்க்கும் தெரியாது ஸார். நாங்க இதை யார்கிட்டேயும் ஷேர் பண்ணிக்கலை "

" என்ன காரணம் ? "

" என் கணவரோட என்ஜினியர் ஃப்ரண்ட் ரொம்பவும் பயபட்டார். விஷயம் வெளியே தெரிஞ்சா அவரோட நண்பரான என்ஜினியர் அச்சுதன் பெயரை வெளியே சொல்ல வேண்டியிருக்கும். அது நாளைக்கு அவர்க்கு பாதகமாய் கூட முடியலாமேன்னார் "

கபிலன் சின்ன தயக்கத்தோடு கோபிகாவை ஏறிட்டான்.

" நீங்க இப்ப சொன்ன இந்த விஷயம் எனக்கு அதிர்ச்சியாவும் பயமாவும் இருக்கு. ஆனா நீங்களும் உங்க கணவரும் இந்த மயான உண்மையை தெரிஞ்சு வெச்சுகிட்டே எப்படி இங்கே குடியிருக்கீங்க ? "

" ஒரு பரிகாரம் பண்ணினோம் "

" என்ன பரிகாரம்? "

" எங்க குடும்ப ஜோஸியர்கிட்ட விஷயத்தைச் சொன்னோம். அவர் எங்க ரெண்டு பேரையும் காஞ்சிபுரத்தில் இருக்கிற சித்ரகுப்தர் கோயிலுக்குப் போய் பொங்கல் வெச்சுட்டு வரச்சொன்னார். நாங்களும் போய்ட்டு வந்தோம்...... "

கபிலன் மேற்கொண்டு பேசும் முன்பாக ஃப்ளாட்டின் வாசல் கதவு மெதுவாய் தட்டப்படும் சத்தம் கேட்டது.

கோபிகா லேசாய் கலவரமாக கபிலன் அவளை கையமர்த்தினான்.

" பயப்படாதீங்க...... நீங்களும் ஸாரும் அந்த ரூமுக்குள்ளே போய் பேசிட்டிருங்க..... நான் போய் யார்ன்னு பார்த்து பேசி அனுப்பிட்டு வர்றேன் "

சந்திரசூடனும் கோபிகாவும் எழுந்து பக்கத்து அறைக்குள் போய் நுழைந்து கதவைச் சாத்திக் கொள்ள கபிலன் சற்றே பதட்டத்தோடு போய் கதவின் தாழ்ப்பாளை விலக்கி திறந்தான்.

வெளியே -

அந்த நபர் நின்றிருந்தார்.

அறுபது வயது இருக்கலாம். அணிந்திருந்த வேஷ்டி சட்டைக்குள் சற்றே மெலிவான உடம்பு. தாடையையும், கன்னப்பகுதியையும் வெள்ளை ரோமம் மொய்த்திருக்க, நெற்றியில் இருந்த குங்குமப் பொட்டு வியர்வையில் இளகியிருந்தது. லேசாய் மூச்சு வாங்கினார்.

கபிலன் கேட்டான்.

" நீங்க ? "

அவர் குரலைத் தாழ்த்தினார்.

" தம்பி..... நீங்க கங்காதரனோட பையன்தானே ? "

" ஆமா..... "

சுற்றும் முற்றும் பார்த்த அவர் இன்னமும் குரலைத் தாழ்த்தினார்.

" தம்பி எம் பேரு ஆதிகேசவன். சென்னை செக்ரட்ரியேட்டில் ஒரு பொறுப்பான உத்யோகம் பார்த்து ரிடையரானவன். உங்க அப்பாவுக்கு என்னை நல்லாவே தெரியும் "

" சரி..... என்ன விஷயம் சொல்லுங்க "

அந்த ஆதிகேசவன் கபிலனுக்கு மட்டும் கேட்கும்படியாக குரலை கிசுகிசுப்பாக்கிக்கொண்டு பேசினார்.

" கோபிகா... உள்ளேதானே இருக்கா ? "

கபிலன் திகைப்பாய் அவரைப் பார்க்க, அவருடைய இதழ்க்கோடியில் ஒரு சிறு சிரிப்பு உற்பத்தியாயிற்று.

" என்ன தம்பி அப்படி பார்க்கறீங்க.... கோபிகா என்னோட பொண்ணுதான் "

கபிலன் அவர்க்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே ஆதிகேசவன் கேட்டார்.

" தம்பி.... உங்க கூட கார்ல வந்தவர் அஸிஸ்டெண்ட் போலீஸ் கமிஷனர் சந்திரசூடன்தானே? "

" ஆ....ஆமா...... "

" அவங்க ரெண்டு பேரும் உள்ளேயே இருக்கட்டும்.... நீங்க ஒரு அஞ்சு நிமிஷம் அப்படி தனியா வர முடியுமா....நான் உங்க கூட கொஞ்சம் பேசணும் "

( தொடரும்)

[அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10]


English summary
Flat number 144 Adhira apartment (Episode 10) is a new crime thriller serial written by writer R Rajeshkumar. பிரபல நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதும் ' ஃப்ளாட் நெம்பர் 144 அதிரா அப்பார்ட்மெண்ட்' கிரைம் நாவலின் முதல் எபிசோடை இந்த பக்கத்தில் காணலாம்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X