For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தனியார் பள்ளிகளின் ஆன்லைன் வகுப்புகள்.. இது அவசியமா.. இத்தனை பிரச்சினை இருக்கே?

Google Oneindia Tamil News

இணைய வழி கல்வி, ஆன்லைன் வகுப்புகள் - இவை அண்மை காலமாக நம் காதுகளில் அதிகம் வந்து விழும் வார்த்தைகள். இது வெறும் வார்த்தைகள் அல்ல பல பெற்றோர்கள், மாணவர்கள் ஏன் ஆசிரியர்களையும் மன அழுத்தத்திற்கு கொண்டுச் சென்ற "ஆயுதமாக" மாறியுள்ளது என்பது தான் உண்மை.

சமீபத்தில் பெற்றோர் ஓருவர் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்கக்கோரி தொடர்ந்த வழக்கு மற்றும் பல பெற்றோர்களின் உள்ளக்குமுறல்கள், தனியார் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களான பெற்றோர்களின் தற்போதைய மன நிலையுமே இக்கட்டுரை உருவாகக் காரணம். கொரோனாவின் கோரத் தாண்டவத்தால் பள்ளிகளைத் மீண்டும் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் சில தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி வகுப்புகளில் துவங்கி 12ஆம் வகுப்பு வரையிலும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஆன்லைன் வகுப்புகள் யாருக்காக? மாணவர்களுக்காக தான் என்றால் எந்த வகையான மாணவர்களுக்கு என்பது அடுத்த கேள்வி. ஏனெனில் பெரும்பாலான தனியார் பள்ளிகள்தான் இந்த ஆன்லைன் வகுப்புகளில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. அப்படியென்றால் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நிலை என்ன? அரசு துவங்கியிருக்கும் கல்வித் தொலைக்காட்சி தனியார் பள்ளிகள் நடத்தும் ஆன்லைன் வகுப்பிற்கு இணையான செயல்பாட்டை மாணவர்களுக்கு அளித்திருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல முடியும். சரி, அப்படியென்றால் தனியார் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுமே இவ்வகையான வகுப்புகளின் மூலம் முழூப்பயனை அடைகிறார்களா என்றால் அதுவும் ஒரு கேள்விக்குறியே!

comprehensive story online classes are becoming popular in tamil nadu

பெற்றோர்களின் நிதி நெருக்கடிகள்:

ஏனென்றால் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவருமே வசதியான நிதி பின்பலத்துடன் இருப்பவர்கள் இல்லை. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பெரும்பாலான பெற்றோர்கள் தங்களின் பலவிதமான நிதி நெருக்கடியின் மத்தியில் தான் தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்கிறார்கள். ஒவ்வொரு நடுத்தரக் குடும்பத்திலும் குறைந்தது 2 கல்வி பயிலும் மாணவர்களாவது இருப்பர். அவ்வாறு இருப்பின் தற்போதைய நெருக்கடியான சூழலில் அவ்விருவருக்கும் ஆளுக்கு ஒரு ஸ்மார்ட்போன்களைப் பெற்று தர இயலுமா அல்லது அனைவரிடமும் மடிக்கணிணி அல்லது மேசைக்கணிணி இருக்குமா? என்ற கேள்வியும் பெற்றோர்கள் மனதில் எழுகிறது.

வேலைக்குச் செல்லும் பெற்றோர்களின் நிலை:

இது ஒரு புறம் இருக்க பெரும்பாலான குடும்பத்தில் பெற்றோர்கள் இருவருமே வேலைக்குச் செல்லும் நிலை இருக்கிறது. அவ்வாறான சூழ்நிலையில் தங்களிடம் இருக்கும் ஸ்மார்ட்போன்களை தங்கள் குழந்தைகளின் ஆன்லைன் வகுப்பிற்காக வீட்டில் வைத்துச் செல்ல முடியாதே என்று தங்கள் ஆதங்கத்தினைப் பகிர்கின்றனர் சில பெற்றோர்கள். மேலும் அவ்வாறு வாங்கித் தரும் ஸ்மார்ட்போனையோ, மேசைக்கணிணியையோ அல்லது மடிக்கணிணியையோ அவர்கள் பயன்படுத்த பெரியவர்களின் உதவியும், அவர்களின் மேற்பார்வையும் அவசியம் தேவைப்படுகிறது. ஏனென்றால் ஆன்லைன் வகுப்புகள், செயலிகள் மூலம் நடைபெறுவதால், சிறு குழந்தைகளுக்கு அதனை பயன்படுத்தும் வழிமுறைகள் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. அப்படி அவர்களை வழி நடத்த அவர்களின் பெற்றோர்களும் (ஸ்மார்ட்போன்களையும் பிற செயலிகளையும் கையாளத் தெரிந்த) 'ஸ்மார்ட் பெற்றோர்களாக' இருக்க வேண்டியது அவசியமாகிறது.

குறைந்தபட்சம் 12 வயதுக்கு மேல் உள்ள மாணவர்களை தினமும் 1 மணி நேரம் மட்டும் ஒரு பாடம் என அவர்களை ஆன்லைன் வகுப்புகளுக்குப் பழக்கப்படுத்தலாம் என வலியுறுத்தப்பட்டது. ஆனால் அதிலும் ஆபத்துக்களும், சிக்கல்களும் உள்ளன. இந்த பருவத்திலுள்ள மாணவர்கள் இணையத்தளங்களைக் கையாளும்போது அறிந்தோ அறியாமலோ தங்களுக்குத் தேவையற்றவைகளைக் காணவோ, படிக்கவோ நேரலாம். இதைத் தவிர்க்க பெற்றோர்கள் என்ன தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைப்பேசியில் சில அமைப்புகளை மாற்றி அமைத்து வைத்தாலும் பெற்றோர்களின் மேற்பார்வை அவசியமாகிறது.

உடல் நலத்திற்குக் கேடு:

சில பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் என்ற பெயரில் காலை முதல் மாலை வரை தொடர்ந்து வகுப்புகளை நடத்தி வருகின்றது. இது மாணவர்களின் உடல் நலத்திற்கு மிகவும் கெடுதல் தரக்கூடியது என்று மருத்துவர்களும் உளவியல் நிபுணர்களும் கருத்து தெரிவிக்கின்றனர். பொருளாதார சூழ்நிலைக் காரணமாகவும், குடும்பச் சூழ்நிலைக் காரணமாகவும் இந்த ஆன்லைன் வகுப்புகளில் கலந்துக் கொள்ள இயலாத மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் ஆன்லைனில் எடுக்கப்பட்ட பாடங்கள், பள்ளிகள் திறந்தபின் மீண்டும் நடத்தப்படுமா அல்லது தாங்கள் பாடங்களை தவற விட்டு விட்டோமா என்ற அச்சமும் அவர்களின் மன உளைச்சலை மேலும் அதிகரிக்கச் செய்கின்றன.

இவை அனைத்திற்கும் மேல் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தி விட்டு தங்களின் சிறு குழந்தைகளுக்கு அவர்களின் ஆன்லைன் வகுப்புகளுக்கு உதவ முடியாமலும் பெற்றோராக தங்கள் பங்களிப்பைக் கொடுக்க முடியாமலும் வருந்துபவர்களையும் கூட காண நேர்கிறது.

சவால்களை சந்திக்கும் ஆசிரியர்கள்:

இந்த ஆன்லைன் வகுப்புகளானது பெற்றோர்களுக்கு, மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் ஆசிரியர்களுக்கும் மிகப் பெரிய தொழிற்நுட்ப சவால்களையும் நெருக்கடிகளையும் தந்த வண்ணம் உள்ளன. தற்போதைய தொழிற்நுட்ப வளர்ச்சிக்கு தகுந்தவாறு ஆசிரியர்கள் தங்களை ஆயத்தப்படுத்தப்ப்டுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. ஒரு மணி நேர ஆன்லைன் வகுப்பிற்குத் தேவையான ஒளித்திரை படங்கள், பவர் பாயிண்ட் ஸ்லைடுகள் என அனைத்தையும் தயார் செய்ய ஆசிரியர்களுக்குக் குறைந்தது 2 அல்லது 3 மணி நேரம் தேவைப்படுகிறது.இத்தகைய சவால்களில் அனைத்து ஆசிரியர்களும் தங்களின் செயல்பாடுகளைச் சிறப்பாகச் செய்து முடிக்கக் கடுமையாகப் போராடி வருகிறார்கள்.

ஆசிரியர்களின் நிலை:

வகுப்பறைகளில் பாடம் கற்றுத் தருகையில் அவர்களுக்கு வகுப்புச் சுதந்திரம் இருந்தது. மேலும் மாணவர்களைத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடிந்தது இது அவர்களுக்கு தங்களின் கற்பித்தல் செயலினைச் சிறப்பாகச் செய்து முடிக்க உதவியாக இருந்தது. ஆனால் ஆன்லைன் வகுப்பில் மாணவர்களை மட்டுமின்றி அவர்களின் பெற்றோர்களையும் சில நேரங்களில் அவர்களின் உற்றார் உறவினர்களையும்கூட சந்திக்க நேர்கிறது. இதன் மூலம் சில நேரங்களில் அவர்களின் விமர்சனங்களுக்கும் ஆளாகின்றனர். மேலும் சில மாணவர்கள் ஆன்லைன் வகுப்பின்போது தொழிற்நுட்ப சிக்கல்களையும், சவால்களையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஆசிரியர்களைக் கேலி கிண்டல் செய்யும் நிகழ்வுகளும்கூட அரங்கேறுகிறது. இதனை இணையத்தளங்களிலும் கேலிச் சித்திரமாகச் சித்தரித்து மகிழ்கின்றனர். இவ்வகையான செயல்கள் ஆசிரியர்களின் மன உளைச்சலை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. இவையல்லாமல் ஆன்லைன் வகுப்புகளின் போது கேமராவையும், மைக்கையும் செயலிழக்கச் செய்து விட்டு தங்கள் வேலைகளைப் பார்ப்பதும், உறங்குவதுமாக நேரத்தை செலவழிக்கின்றனர். இதனால் ஆன்லைன் வகுப்புகளின் பயன்கள் மாணவர்களை முழுமையாகச் சென்றடைவதில்லை.

இது தீர்வாகாது:

தற்போதைய நெருக்கடியான சூழலில் மாணவர்களின் கல்வி பயிலும் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. மேலும் மாணவர்கள் தொடர்ந்து விடுமுறையில் உள்ளதால் அவர்களுக்கு கல்வியுடனான தொடர்பு மிகக் குறைவாக இருப்பதும் மறுக்க இயலாத ஒன்றுதான். ஆனால் இதற்கு ஆன்லைன் வகுப்புகள் முழுமையான தீர்வாகாது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பெற்றோர்கள் என்ன செய்யலாம்:

இச்சூழ்நிலையினைக் கையாள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தச் செய்யலாம், கையெழுத்துப் பயிற்ச்சி மேற்கொள்ளச் செய்யலாம். குழந்தைகள் அவர்களின் வேலைகளை அவர்களே செய்துக் கொள்ளப் பழக்கப்படுத்தலாம். உதாரணத்திற்கு அவர்களாகவே உணவு உண்ணப் பழக்கலாம், கழிவறைப் பயன்படுத்தினால் செய்ய வேண்டியவைகளைக் கற்றுத் தரலாம். இது அவர்களுக்கு மீண்டும் பள்ளிச் செல்லும்போது உதவியாக இருக்கும். சிறிது நேரம் கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காணச் செய்யலாம். கைப்பேசி விளையாட்டுக்களைத் தவிர்த்து நம்முடைய பண்டைய கால விளையாட்டுக்களைக் கற்றுத் தரலாம்.

தற்போது நிலவி வரும் கடுமையான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டுதான் அரசும் வரும் கல்வியாண்டின் பாடத்திட்டங்களின் அளவுகளைக் குறைக்கத் தேவையான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இதை உணர்ந்துக் கொண்டு பள்ளிகள் மாணவர்களுக்கு மன நெருக்கடியையும், பெற்றோர்களுக்கு பண நெருக்கடியையும் அளிக்காதவாறு செயல்பட்டால் மிகவும் நன்றாக இருக்கும் என்பது பலரது கருத்துக்களாக உள்ளன.

- வருணி

English summary
Comprehensive story: Online classes are becoming big issue in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X