
வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி வால்ஷ் சாதனை - கபில் தேவின் சாதனை முறியடிப்பு
கிங்ஸ்டன்:
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கார்ட்னி வால்ஷ் சாதனை படைத்துள்ளார். ஜிம்பாப்வே அணிக்கு எதிராக கிங்ஸ்டனில் நிடைபெற்று வரும் 2-வது கிரிக்கெட் டெஸ்ட்டின் போது அவர் இச் சாதனையைப் படைத்தார். இதன் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவின் சாதனையை வால்ஷ் முறியடித்தார்.
ஜிம்பாப்வேயின் 2-வது இன்னிங்ஸில் வால்ஷ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் கபில்தேவின் 434 விக்கெட்டுகள் என்ற சாதனை முறியடித்ததுடன் தனது விக்கெட் எண்ணிக்கையை 435 ஆக உயர்த்திக் கொண்டு அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில் முதலிடத்தையும் அவர் பிடித்தார்.
37 வயதாகும் வால்ஷ், தான் விளையாடும் 114-வது டெஸ்டில் இச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதுவும் தனது சொந்த ஊரான கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் இச் சாதனையை அவர் புரிந்துள்ளார்.
1984-ல் இங்கிலாந்துக்கு எதிரான தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கிய வால்ஷ், சிறந்த வேகப் பந்து வீச்சாளராகத் திகழ்ந்தார். மார்ஷல், ஹோல்டிங், ராபர்ட்ஸ் போன்ற உலகின் சிறந்த வேகப் பந்து வீச்சாளர்களை அடுத்து மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சிறந்த வேகப் பந்து வீச்சாளராகத் திகழ்ந்தார். தனது வேகப் பந்து வீச்சால் உலகில் உள்ள அனைத்து நாடுகளின் பேட்ஸ்மேன்களையும் அவர் நடுநடுங்க வைத்தார்.
தான் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் எல்லாம் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினார் வால்ஷ். 1998-ம் ஆண்டில் தனது 376-வது விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் என்ற மால்கம் மார்ஷலின் சாதனையை முறியடித்தார். பிறகு 400-வது விக்கெட்டைக் கடந்தார். இச் சாதனையின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் கபில்தேவ், ரிச்சர்ட் ஹாட்லி ஆகியோருடன் சேர்ந்தார்.
இப்போது ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் 435-வது விக்கெட்டை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை வால்ஷ் எட்டியுள்ளார்.
தனது 114-வது டெஸ்டில் விளையாடி வரும் வால்ஷ், ஒரு டெஸ்டில் 10 விக்கெட்டுகளை இரு முறையும், ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை 17 முறையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கபில் தேவ் பாராட்டு:
டெஸ்ட் கிரிக்கெட்டில் 435 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது சாதனையை முறியடித்து அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற சாதனையைப் புரிந்த வால்ஷை இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை இதுநாள் வரை தக்க வைத்துக் கொண்டிருந்தவருமான கபில்தேவ் பாராட்டியுள்ளார்.
எனது சாதனையை வால்ஷ் முறியடித்தது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அவர் தனது நாட்டுக்காக இச் சாதனையை நிகழ்த்தியுள்ளார் என்றார் கபில் தேவ்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியல்:
பெயர் | நிாடு | டெஸ்டுகள் | விக்கெட்டுகள் | சிறப்பான பந்து வீச்சு | 5 விக். | 10 விக். |
கார்ட்னி வால்ஷ் | மே.இ. தீவுகள் | 114 | 435 | 7/37 | 17 | 2 |
கபில் தேவ் | இந்தியா | 131 | 434 | 9/83 | 23 | 2 |
ரிச்சர்ட் ஹாட்லி | நியுசிலாந்து | 86 | 431 | 9/52 | 36 | 9 |
வாஸிம் அக்ரம் | பாகிஸ்தான் | 92 | 383 | 7/119 | 22 | 4 |
இயான் போத்தம் | இங்கிலாந்து | 102 | 383 | 8/34 | 27 | 4 |
ஆம்புரோஸ் | மே.இ. தீவுகள் | 90 | 377 | 8/45 | 22 | 3 |
மால்கம் மார்ஷல் | மே.இ. தீவுகள் | 81 | 376 | 7/22 | 22 | 4 |
ஷேன் வார்னே | ஆஸ்திரேலியா | 83 | 363 | 8/71 | 16 | 4 |
இம்ரான் கான் | பாகிஸ்தான் | 88 | 362 | 8/58 | 23 | 6 |
டென்னிஸ் லில்லி | ஆஸ்திரேலியா | 70 | 355 | 7/81 | 23 | 7 |