மேட்ச் பிக்ஸிங் புகார்கள் கிரிக்கெட் ரசிகர்களைப் பாதிக்காது: கவாஸ்கர்
டாக்கா:
மேட்ச் பிக்ஸிங் புகார்கள் காரணமாக இளம் கிரிக்கெட் ரசிகர்கள் மனது பாதிக்கப்படாது என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சுனில்கவாஸ்கர் கூறியுள்ளார்.
ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் தனியார் தொலைக் காட்சி வர்னணையாளராக டாக்கா சென்றுள்ள சுனில் கவாஸ்கர், ஞாயிற்றுக்கிழமைடி.விக்கு அளித்த பேட்டி:
15-16 வயதுடைய இளம் ரசிகர்கள் இன்னும் தங்களது கிரிக்கெட் ஹீரோக்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளனர். கிரிக்கெட்டையும்,கிரிக்கெட் வீரர்களையும் அவர்கள் இன்னும் நேசிக்கிறார்கள். அவர்களைப் பொருத்தவரை கிரிக்கெட் என்பது ஒரு லட்சியம்.
விசாரணையை வீரர்கள் எதிர்கொள்ள வேண்டும்:
மேட்ச் பிக்ஸிங் புகார்கள் அதிகரித்து வருவது விளையாட்டுக்கு ஏற்பட்ட களங்கம். மோசமான சூழ்நிலையில் கிரிக்கெட் இப்போது உள்ளது. இது மிகவும்வருத்தமாக இருக்கிறது. புகழ் வெளிச்சத்தில் இருக்கும் கிரிக்கெட் வீரர்கள், விசாரணை என்று வந்தால் அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.பத்திரிகைகளின் கேள்விகளுக்கும் பதில் சொல்லத் தயங்கக் கூடாது.
தற்போது அணியில் உள்ள வீரர்கள் மீது கூறப்படும் மேட்ச் பிக்ஸிங் புகார்கள் குறித்த விசாரணைகள, அடுத்த கிரிக்கெட் சீசன் துவங்கும் முன் முடிவடையவேண்டும். முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் மீதான புகார்களை விசாரிக்க காலதாமதம்ஆகலாம். ஆனால் தற்போது விளையாடிக்கொண்டிருக்கும் வீரர்கள் மீதான விசாரணையை செப்டம்பர் மாதத்திற்குள் முடித்து விட வேண்டும்.
சாதனைகள் ரத்து செய்யப்பட வேண்டும்:
மேட்ச் பிக்ஸிங் புகார்கள் நிரூபனமான வீரர்களின் சாதனைகளை, சாதனைப் புத்தகத்திலிருந்து அகற்ற வேண்டும். அவர்களது சாதனைகளை ரத்து செய்யவேண்டும். சட்டரீதியான தண்டனையைத் தவிர இதையும் செய்தாக வேண்டும்.
மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக விரிவானவிசாரணை தேவை. அப்போதுதான் எதிர்காலத்தில் இதுபோன்ற புகார்களைத் தவிர்க்கலாம். வீரர்கள் தலை நிமிர்ந்துநடக்க வேண்டும். அவர்களைப் பார்த்து வரும் காலத்தினர் அவதூறாகப் பார்க்கும் நிலை ஏற்படக் கூடாது.
வீரர்கள் தவறு செய்தவர்களாக இருக்கலாம். அவர்களைக் குறித்துக் கவலை இல்லை. ஆனால் கிரிக்கெட் தூய்மையானதாக இருக்க வேண்டும்என்றார் அவர்.