For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத்-முஸ்லீம்களை போலி என்கவுண்டரில்கொன்ற 3 ஐபிஎஸ் அதிகாரிகள் கைது

By Staff
Google Oneindia Tamil News

அகமதாபாத்:குஜராத்தில் முஸ்லீம்களை என்கவுண்டர் என்ற பெயரில் விரட்டி விரட்டிக் கொலை செய்த 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Inspector General Vanzaraகடந்த 2005ம் ஆண்டு சொராபுதீன் ஷேக் என்பவர் தனது மனைவி கெளசர் பீபியுடன் அகமதாபாத்திலிருந்து சங்க்லி என்ற ஊருக்குப் பேருந்தில் போய்க் கொண்டிருந்தார்.

அகமதாபாத் அருகே நரோல் என்ற இடத்தில் பேருந்து வந்தபோது போலீஸார் பேருந்தை நிறுத்தி இருவரையும் இழுத்துச் சென்றனர்.

3 நாட்கள் கழித்து ஷேக்கை லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி என்றும், அவர் மோட்டார் சைக்கிளில் ஏறித் தப்ப முயன்றபோது போலீஸார் அவரை சுட்டுக் கொன்றதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், ஷேக் தீவிரவாதி அல்ல என தெரியவந்தது. இது குறித்து எதிர்க் கட்சிகள் கேள்வி எழுப்பியபோது, முதல்வர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க மறுத்தார்.

இதையடுத்து ஷேக்கின் சகோதரர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் தனது சகோதரருக்கும் தீவிரவாதிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், ஷேக் போலியான என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.SP Rajkumar Pandiyan

இதையடுத்து இந்த என்கவுண்டர் தொடர்பாக விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால் வழக்கு சிபிஐக்கு போகும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவசர அவசரமாக சிஐடி விசாரணைக்கு மோடி உத்தரவிட்டார்.

அதில், ஷேக் போலி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது உறுதியானது.SP Dinesh

ஷேக்குடன் சேர்த்து அழைத்துச் செல்லப்பட்ட அவரது மனைவி கெளசர் பீபி என்ன ஆனார் என்பது இதுவரை தெரியவில்லை. அவரும் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அவரது உடலை என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை.

ஷேக் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்படட்டதை நேரில் பார்த்தவரான துல்சிராம் பிரஜாபதி என்பவரும் சில மாதங்களில் போலீஸாரால் என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரையும் தீவிரவாதி என குஜராத் போலீசார் கூறினார்.

ஆனால், இந்தப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்ததையடுத்து போலி என்கவுண்டர் மூலம்தான் ஷேக்கும், பிரஜாபதியும் சுட்டுக் கொல்லப்பட்டதாக குஜராத் அரசு நீதிமன்றத்தில் ஒத்துக் கொண்டது.

இதையடுத்து இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன், திணேஷ் குமார் ஆகிய மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகளும் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

ஷேக்கை கொலை செய்ததற்கு குஜராத் போலீஸ் கூறிய காரணங்கள் என்னவென்றால், அவர் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர். குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியிருந்தார் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

ஆனால் சிஐடி விசாரணையில் இவை அனைத்தும் பொய், ஷேக் அப்பாவி என்று தெரிய வந்தது. மேலும், ஷேக் மோட்டார் சைக்கிளில் ஏறித் தப்ப முயன்றார் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டதும் பொய் என்பதும் தெரிய வந்தது.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள 3 போலீஸ் அதிகாரிகளில் ராஜ்குமார் பாண்டியன் என்பவர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சொந்த ஊராகக் கொண்டவர் என்பது தெரிய வந்துள்ளது.

ஷேக் மட்டுமல்லாது மேலும் பலரும் போலி என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டதாக தற்போது தெரிய வந்துள்ளது.

2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் துல்சிராம் கங்காராம் பிரஜாபதி என்பவர் உள்ளூர் போலீஸாரால் என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டார். ஷேக் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை நேரில் பார்த்தவர் பிரஜாபதி. பிரஜாபதி சுட்டுக் கொல்லப்பட்டபோது, அந்த சரகத்தின் தீவிரவாத ஒழிப்புப் பிரிவு டிஐஜியாக இருந்தவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ள வன்சாரா.

2004ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதி 19 வயது கல்லூரி மாணவர் இஷ்ரத் ஜகான் உள்ட நான்கு பேர் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டனர். அவர்களையும் தீவிரவாதிகள் என்றுதான் போலீஸார் கூறினர். அந்த சம்பவத்தின்போது வன்சாரா தான், குற்றப் பிரிவு துணை ஆணையராக இருந்தார்.

2003ம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி நரோடா என்ற இடத்தில் சாதிக் ஜமால் மெஹ்தார் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மோடி, அத்வானி, வி.எச்.பி. தலைவர் பிரவீண் தொகாடியா உள்ளிட்டோரைக் கொலை செய்ய அவர் சதித் திட்டம் தீட்டியிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். அப்போதும் வன்சாரா குற்றப் பிரிவில்தான் பணியாற்றி வந்தார்.

இதேபோல 2002ம் ஆண்டு அக்டோபர் 22ம் தேதி அகமதாபாத் நகரின் உஸ்மான்புரா கார்டன் என்ற இடத்தில் சமீர்கான் பதான் சுட்டுக் கொல்லப்பட்டார். மோடியைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக அப்போதும் போலீஸார் குற்றம்சாட்டினர்.

மோடியைக் கொல்ல முயன்றதாக கூறியும், தீவிரவாதிகள் என்று கூறியும் முஸ்லீம்களை விரட்டி விரட்டி குஜராத் போலீஸார் போலி என்கவுண்டர்ள் மூலம் தீர்த்துக் கட்டியுள்ள கொடூர செயல் அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் கிளப்பியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X