For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போயஸ் தோட்டத்தில் சசிகலாவுக்கு சரிவு- இளவரசி கை ஓங்கியது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர் யார் என்பதில் சசிகலா குடும்பத்துக்குள்ளேயே பெரும் பூசல் ஏற்பட்டுள்ளதாம்.

போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவுக்கு அடுத்த இடத்தில் அசைக்க முடியாத சக்தியாக இருந்தவர் சசிகலா. இப்போது அந்த இடத்தை அவரது அண்ணி இளவரசி பிடித்துவிட்டதாக சொல்கிறார்கள்.

இளவரசியின் ஆலோசனைப்படியே ஜெயலலிதா கட்சி நிர்வாகிகளை நியமித்து வருவதாகத் தெரிகிறது. இதனால் கட்சியில் சசிகலா, நடராஜனுக்கு நெருக்கமானவர்களுக்கு வரிசையாக வேட்டு வைக்கப்பட்டு வருகிறது.

ஜெயலலிதாவின் ஹைதாராபாத் பண்ணை வீட்டில் கட்டுமான வேலைகளைப் பார்வையிடச் சென்றபோது மின்சாரம் தாக்கி பலியானார் இளவரசியின் கணவர். இதையடுத்து இளவரசியும் சசிகலாவுடன் போயஸ் தோட்டத்தில் குடியேறினார்.

முதலில் சசிகலாவுக்கு அடுத்த நிலையில் வைத்துத் தான் இளவரசியைப் பார்த்தார் ஜெயலலிதா. ஆனால், காலம் செல்லச் செல்ல சசிகலாவுக்கு இணையான இடத்தை ஜெயலலிதாவிடம் பிடித்தார் இளவரசி.

இப்படியே வளர்ந்த இளவரசி இப்போது சசிகலாவை விட முக்கியத்தும் பெற்றுவிட்டாராம். சமீபத்தில் நடராஜன் திருச்சியில் பங்கேற்ற விழாவில் கலந்து கொண்ட அதிமுகவினரை வரிசையாக கட்டம் கட்டி தூக்கினார் ஜெயலலிதா. இவர்கள் சசிகலாவின் ஆதரவாளர்கள் என்பது தான் முக்கியமான விஷயம். இதற்கு முக்கிய காரணம் இளவரசி தான் என்கிறார்கள்.

சசிகலாவால் ஆதரிக்கப்பட்டு கட்சியில் முக்கிய இடங்களைப் பிடித்தவர்களை நடராஜனின் விழாவில் கலந்து ெகாண்டதாக ஜெயலலிதா கட்சியை விட்டு நீக்கியதைக் கண்டு அதிர்ந்து போயுள்ளனர் அதிமுகவினர்.

போயஸ் தோட்டத்தில் இப்போது சசிகலாவின் ஆதிக்கம் இல்லை என்பது மட்டும் அவர்களுக்கு புரிந்து போயுள்ளது. அதே நேரத்தில் இளவரசி பக்கமாக திரும்பியவர்களுக்கு முக்கிய பதவிகள் கிடைக்க ஆரம்பித்துள்ளன.

இதைப் பார்த்து நடராஜனின் தம்பியே சசிகலா தரப்பை விட்டுவிட்டு இளவரசியின் ஆதரவாளராகிவிட்டார். இதையடுத்து அவருக்கு முக்கிய மண்டல பொறுப்பாளர் பதவி தரப்பட்டுள்ளது.

இது தவிர இளவரசின் சம்பந்திக்கும் மண்டல பொறுப்பாளர் பதவி தரப்பட்டு 5,6 மாவட்ட அதிமுகவை கட்டுப்படுத்தும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் சசிகலாவின் நெருங்கிய உறவினரான கவிஞர் சினேகனை கட்சியை விட்டு நீக்கியுள்ளார் ஜெயலலிதா. இதன் மூலம் சசிகலாவுக்கு போயஸ் தோட்டத்தில் ஏற்பட்டுள்ள சரிவு தெளிவாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இன்று ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அதிமுகவினர் நடராஜனுடன் எந்த வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று ஏற்கனவே பலமுறை தெளிவாக அறிக்கை வெளியிட்டுள்ளேன்.

அதையும் மீறி நடராஜன் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் சிலர் பங்கேற்று கட்சியின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டுள்ளனர்.

கழகத்தின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்துக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் திருச்சி மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் சந்துரு என்கிற வேலுசந்தர்,

சிவகங்கை மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் பாஸ்கரன், தேவகோட்டை ஒன்றிய அதிமுக செயலாளர் மோகன் மற்றும் கவிஞர் சினேகன் ஆகியோர் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

கட்சி தொண்டர்கள் யாரும் இவர்களுடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X