For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராமதாஸ் போன் ஒட்டுக் கேட்பா?: கருணாநிதி-மணி கடும் வாதம்

By Staff
Google Oneindia Tamil News

Ramdoss

சென்னை: தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் சட்டசபையில் இன்று பெரும் புயலை கிளப்பியது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் போன் ஒட்டுக் கேட்கப்படுவதாக வெளியான செய்தி தொடர்பாக முதல்வர் கருணாநிதிக்கும், பாமக தலைவர் ஜி.கே.மணிக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. முதல்வர் கருணாநிதி கோபமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் மூத்த அரசியல்வாதிகள், சில கல்வி நிறுவன அதிபர்கள் தொழிலதிபர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களின் செல்போன்கள், தொலைபேசிகளை உளவுத் துறையினர் ஒட்டு கேட்டு வருவதாக ஒரு ஆங்கிலப் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விவகாரம் இன்று சட்டசபையில் எழுப்பப்பட்டது. கேள்வி நேரம் முடிந்தததும் பாமக சட்டமன்ற கட்சித் தலைவர் ஜி.கே.மணி இப்பிரச்சனையை எழுப்பினார்.

ஜி.கே.மணி: தமிழகத்தில் அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், முக்கிய இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள் ஆகியோரது தொலைபேசிகள் காவல் துறையின் புலனாய்வுப் பிரிவினரால் ஒட்டுக் கேட்கப்படுவதாக ஒரு ஆங்கில பத்திரிகையில் செய்தி வெளியாகியிருக்கிறது.

யார் யாருடைய தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுகிறது என்று ஒரு பெரிய பட்டியலே அதில் வெளியாகி உள்ளது. அந்த பட்டியலில் பாமக நிறுவனர் ராமதாசுடைய தொலைபேசியும், நான் உட்பட பாமக எம்எல்ஏக்களின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

அரசியல் தலைவர்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்பதை மத்திய அரசு தடுத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. நாட்டில் எவ்வளவோ கொலை, கொள்ளை சம்பவங்கள் நடக்கின்றன. அதில் எல்லாம் காவல்துறை கவனம் செலுத்தாமல் இப்படி அரசியல் தலைவர்களின் தொலைபேசிகளை ஒட்டு கேட்பதுதான் அவர்களது வேலையா?

அப்போது முதலமைச்சர் கருணாநிதி ஆவேசமாக குறுக்கிட்டு பேசினார்.

முதல்வர் கருணாநிதி: இது ஒரு பொய்ச் செய்தி. வந்திருக்கும் செய்தி உண்மைதானா என்று பார்த்து பேச வேண்டும். அந்த ஆங்கில பத்திரிகை எப்படி சென்னைக்கு வந்தது? ஏன் வந்தது? யாரால் வந்தது? என்பதெல்லாம் எனக்கு தெரியும்.

பத்திரிகைகளில் எத்தனை பொய்ச் செய்திகள் வருகின்றன. அது அத்தனையும் உண்மைதானா? உங்கள் (பாமகவின்) 'தமிழ் ஓசை'யில் கூட கனிமொழி மந்திரியாகிறார் என்று செய்தி வெளியிட்டு இருந்தீர்கள்? அது உண்மையா? அதுமாதிரி தான் இந்த செய்தியும்.

ஜி.கே.மணி: முதலமைச்சர் உணர்ச்சிவசப்படுகிறார். இதில் உண்மை இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வதற்காக அந்த செய்தி போடப்பட்டது.

முதல்வர்: நான் உணர்ச்சிவசப்படவில்லை. உணர்ச்சி இருப்பதால் பேசுகிறேன். போன் ஒட்டுக் கேட்பு செய்தி அடிப்படையற்ற ஒன்று. விஷமத்தனமானது. காலையில் இந்த செய்தி வந்தவுடன் அதிகாரிகளை அழைத்து உடனடியாக விசாரித்தேன். பொய் செய்தி என்பது தெரிய வந்தது.

நாட்டுக்கு, சமூகத்துக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் ஆகியோரது தொலைபேசிகளை கண்காணித்து தடுப்பது நடவடிக்கை எடுப்பது தான் உளவுத்துறையினரின் வேலையே தவிர, அரசியல் தலைவர்களின் பேச்சுக்களை ஒட்டுக் கேட்பதல்ல.

மொத்தத்தில் இந்த செய்தி அடிப்படையற்ற, இந்த அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு வெளியிடப்பட்ட செய்தியாகும் என்றார் முதல்வர்.

டிஜிபி மறுப்பு:

இதற்கிடையே அரசியல் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக வெளியாகியுள்ள செய்தி விஷமத்தனமானது என்று தமிழக டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக டிஜிபி அலுவலகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் அரசியல் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்களின்த தொலைபேசிகளை உளவுத்துறை ஒட்டுக் கேட்பதாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இது விஷமத்தனமான செய்தி.

இந்திய இறையாண்மைக்கும், தேச நலனுக்கு எதிராக செயல்படுவோர் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் மட்டுமே கண்காணிக்கப்படுகின்றனர்.

எனவே இந்த செய்தி அரசுக்குக் களங்கம் கற்பிக்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X