For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சசிகலா பிடியில் இருக்கிறார் ஜெ. கூறுகிறார் ஜோதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: சசிகலாவின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கிறார் ஜெயலலிதா. என்னை அவமதிக்கும் வகையில் சசிகலா நடந்து கொண்டதால்தான் அதிமுகவிலிருந்து விலகினேன் என்று கூறியுள்ளார் ராஜ்யசபா உறுப்பினரும், சமீபத்தில் அதிமுகவிலிருந்து விலகியவருமான வழக்கறிஞர் ஜோதி கூறியுள்ளார்.

கடந்த 12 ஆண்டுகளாக ஜெயலலிதா மற்றும் சசிகலா, தினகரன் உள்ளிட்டோரின் வழக்கு விவகாரங்களை பார்த்துக் கொண்டிருந்தவர் ஜோதி. ராஜ்யசபா தேர்தலில் மீண்டும் போட்டியிட சீட் கேட்டு ஜெயலலிதா மறுத்து விட்டதால் கோபமடைந்து அதிமுகவிலிருந்து விலகி விட்டார். மேலும் கேஸ் கட்டுக்களையும் அவர் ஜெயலலிதாவுக்கு அனுப்பி வைத்து விட்டார்.

இதையடுத்து ஜோதியை கடுமையாக சாடி அறிக்கை விட்டார் ஜெயலலிதா. இந்த நிலையில், நேற்று ஜோதி செய்தியாளர்களைச் சந்தித்து அதிமுகவிலிருந்து விலகியது ஏன் என்பதை விளக்கினார்.

செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நான் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட சீட் கேட்டது உண்மைதான். அதை மறுக்கவில்லை. ஆனால் எனக்குத் தராதது குறித்துக் கூட கவலைப்படவில்லை. வேறு ஒருவருக்கு சீட் கொடுக்கப்பட்டதை என்னிடம் மரியாதைக்குக் கூட சொல்லவில்லை.

பாலகங்காவுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய எனது ஜூனியரை அணுகியுள்ளனர். அப்போதுதான், அதாவது தற்செயலாகத்தான் எனக்குத் தெரிந்தது. இது எனக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

சசிகலா என்னைப் போன்றவர்களுடன் இன்டர்காமில்தான் பேசுவார். ஆனால் வாஸ்துக்காரர்கள், ஜவுளிக்கடைக்காரர்கள், ஜோசியக்காரர்களை நேரில் வரவழைத்துப் பேசுவார்.

எனது இனத்தையும், மானத்தையும் காப்பாற்றிக் கொள்ளத்தான் நான் கட்சியிலிருந்து விலகினேனே தவிர ஜெயலலிதா மீது எனக்கு எந்தக் கோபமும் இல்லை.

சசிகலாவின் போக்கு குறித்து ஜெயலலிதாவிடம் நான் பேசியபோது, மாவட்டச் செயலாளர்கள் பலரும் சசிகலாவின் ஆதரவாளர்கள். கட்சியின் அதிகார மையமாக அவர் விளங்குகிறார் என்றேன். அதற்கு ஜெயலலிதா, அப்படியெல்லாம் இல்லை. அவர் வீட்டை நிர்வகிப்பதையும், கணக்கு வழக்குகளையும் மட்டுமே பார்த்துக் கொள்கிறார் என்றார்.

ஆனால் உண்மை அப்படி இல்லை. ஜெயலலிதா முற்றிலும் சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறார். அவரது கட்டுப்பாடு நீடிக்கும் வரை அதிமுகவுக்கு எதிர்காலம் இல்லை.

இன்று பல தலைவர்கள் அதிமுகவிலிருந்து விலக சசிகலாவின் போக்கே முக்கிய காரணம்.

சசிகலாவின் ஆதிக்கம் நீடிக்கும் வரை நான் அதிமுகவுக்கு மீண்டும் போக மாட்டேன். அவரது ஆதிக்கம் அகன்றால் முதல் ஆளாக நான் அதிமுகவுக்கு திரும்பி வருவேன்.

பத்து மாதங்களுக்கு முன்பே நான் கட்சியிலிருந்தும், எம்.பி பதவியிலிருந்தும் விலக முடிவு செய்து விட்டேன். இதுதொடர்பாக ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் கூட நான் கடிதம் எழுதி விட்டேன். அதில் டிடிவி தினகரன் என்னை அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டியிருந்தேன் (செய்தியாளர்களிடம் கடிதத்தின் நகலைக் காட்டினார்).

இதையடுத்து என்னை அழைத்த ஜெயலலிதா, தினகரன் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். சில நாட்கள் கழித்து கட்சியின் பொருளாளர் பொறுப்பிலிருந்து தினகரனை ஜெயலலிதா நீக்கி விட்டார்.

கட்சி மீதோ, ஜெயலலிதா மீதோ எனக்கு வருத்தம் இல்லை. சசிகலாவின் முழுப் பிடியில் அதிமுகவும், ஜெயலலிதாவும் சிக்கிக் கொண்டுள்ளனர். அது நீடிக்கும் வரை கட்சி தப்ப முடியாது.

நான் வேறு எந்தக் கட்சியிலும் சேர மாட்டேன். ஜெயலலிதா தொடர்பான வழக்குகள் குறித்த விவரங்களை யாரிடமும் வெளியிட மாட்டேன். நான் ஜெயலலிதா மீது முதல்வர் கருணாநிதி தொடர்ந்த வழக்குகள், அரசியல் உள்நோக்கம் கொண்டவை, பழிவாங்கும் நடவடிக்கை என்று முன்பு சொன்ன கருத்தில் இப்போதும் உறுதியாக உள்ளேன். அதில் எந்த மாற்றமும் இல்லை என்றார் ஜோதி.

ஜோதி பத்திரிக்கையாளர் சங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் முத்துராஜ் என்பவர் தலைமையில் திரண்டு வந்து ஜோதிக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதில் முத்துராஜ், தான் காரில் வந்து கொண்டிருந்தபோது செல்போன் மூலம் மிரட்டல் விடுத்தார் என்று மாநகர காவல்துறை ஆணையரிடம் ஜோதி புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து அவரது அண்ணா நகர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X