பெண் மானபங்கம்-2 ஆண்டுக்கு பின் சிக்கிய வாலிபர்
நெல்லை: இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தலைமறைவாகியவர் 2 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.
நெல்லை வடக்கு விஜயநாராயணம் அருகே உள்ள பார்பரவம்மாள்புரத்தை சேர்ந்தவர் குமார். சைக்கிள் கடை உரிமையாளர். இவருக்கு திருமணாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குமாருக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டது.
திருமணம் செய்து கொள்வதாக கூறி அந்த பெண்ணை குமார் பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார். இதையடுத்து வடக்கு விஜயநாராயண் போலீசில் அந்த பெண் புகார் செய்தார். இதையறிந்த குமார் தலைமறைவானார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குமாரை தேடி வந்தனர். இந்நிலையில் குமார் ஆந்திரா மாநிலம் வாரங்கல்லில் உள்ள ஒரு மிட்டாய் கடையில் வேலை செய்வது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து நாங்குநேரி டிஎஸ்பி சிதம்பரநாதன் உத்தரவின்படி எஸ்ஐ அமிர்தநாதசாமி தலைமையிலான போலீசார் அங்கு சென்றனர்.
இதையறிந்த குமார் அங்கிருந்து தப்பி பார்வதம்மாள்புரத்துக்கு சென்றார். இதுகுறித்து நாங்குநேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் காரியாண்டி பஸ் நிலையத்தில் குமாரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.