
அதிமுக-பாஜக சேர்ந்தால் திமுக கூட்டணிக்கு சரிவு: கருத்துக் கணிப்பு
டெல்லி: மக்களவைத் தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் சேர்ந்து கூட்டணி அமைத்தால், தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு பெரும் சரிவு ஏற்படும் என கருத்துக் கணிப்பில் தெரிவிக்கிறது. அதேபோல மத்தியிலும் காங்கிரஸ் கூட்டணிக்கு சரிவு ஏற்படுமாம்.
ஜீ டிவிக்காக தி சண்டே இந்தியன் வார இதழும், சி வோட்டர் மற்றும் ஐசிஎம்ஆர் ஆகியவை கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளன.
200 லோக்சபா தொகுதிகளில் 20,000 பேரிடம் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
அதில் உடனடியாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டால் மூன்று முக்கிய சரிவுகள் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1. ஒன்று, இடது சாரிக் கூட்டணிக்கு இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் சரிவு ஏற்படும்.
2. இரண்டாவது, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும் கடந்த முறையை விட இந்த முறை மிகவும் குறைந்த அளவிலான இடங்களே கிடைக்கும்.
3. அதிமுகவும், பாஜகவும் இணைந்து கூட்டணி வைத்தால், தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு கடந்த முறை கிடைத்தது போல 40 இடங்களும் கிடைக்காது, சரிவு உண்டாகும்.
2004-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ், திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த அணியில் பாமக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெற்றிருந்தன. தேர்தலில் தமிழகம், புதுவையில் உள்ள 40 இடங்களிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
ஆனால் 2006-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு 165 இடங்களே கிடைத்தன. ஆனால் அதிமுக கூட்டணி 68 இடங்களில் வென்றது. தமிழக சட்டசபை வரலாற்றிலேயே முதல் முறையாக அதிக அளவிலான இடங்களைக் கொண்ட எதிர்க்கட்சி என்ற பெருமையும் அதிமுகவுக்குக் கிடைத்தது.
தற்போது அதிமுகவும், பாஜகவும் வேகமாக நெருங்கி வருகின்றன. இரு கட்சிகளும் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால், வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ், திமுக கூட்டணிக்கு அது பெரும் சரிவை ஏற்படுத்தும் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலைவாசி உயர்வே காரணம்...:
விலைவாசி உயர்வுதான் மத்தியிலும், மாநிலத்திலும் ஆளுங்கட்சிகளுக்கு மிகப் பெரிய பலவீனமாக மாறியுள்ளது. அதிமுக, பாஜக கூட்டணி கணிசமான இடங்களில் வெற்றி பெற முடியும் என்று அந்த கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.
(இந்தக் கருத்துக் கணிப்பில் தேமுதிகவின் வளர்ச்சி, செல்வாக்கு, தாக்கம் குறித்து எதுவும் இடம் பெறவில்லை. இதனால் தமிழகத்தைப் பொறுத்தவரை இந்தக் கருத்துக் கணிப்பை முழுமையானதாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதே உண்மை)
கிங் மேக்கர் மாயாவதி:
அதே போல இந்தக் கருத்துக் கணிப்பில் அகில இந்திய அளவில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கிங் மேக்கராக மாயாவதி உருவெடுப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
அவரது கட்சிக்கு 46 இடங்கள் கிடைக்குமாம். இதன் மூலம் அடுத்த ஆட்சி யாருடையது என்பதை நிர்ணயிக்கும் சக்தியாக மாயாவதி திழ்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுக்கும் என்றும், அப்போது ஆட்சியை நிர்ணயிக்கும் நிலைமை அக்கட்சிக்கு ஏற்படும் என்றும் கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.
இடதுசாரிகளுக்கு தற்போதுள்ள 61 இடங்களுக்குப் பதிலாக, 42 ஆக குறையுமாம்.
பாஜக கூட்டணிக்கும் வெற்றி கிடைக்காது..:
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 31 சதவிகித வாக்குகளும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 32 சதவிகித வாக்குகளும் கிடைக்கும் என்றும்,
இடதுசாரி வாக்குகள் 5 சதவிகிதமாக குறையும் என்றும் பகுஜன் சமாஜ் கட்சி வாக்குகள் 6 சதவிகிதமாக உயரும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வாக்குகளின் அடிப்படையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி ஆகிய இரண்டு பெரிய கூட்டணிகளுக்கும் 180 முதல் 190 இடங்களே கிடைக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாயாவதி-இடதுசாரிகள் தீர்மானிப்பர்:
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும், பாஜக தலைமையிலான கூட்டணிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு இடங்கள் கிடைக்காது. எனவே இடதுசாரிகள் அல்லது மாயாவதி போன்றோரின் ஆதரவுடன்தான் இந்த இரு கூட்டணிகளில் ஒன்றால் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை ஏற்படும்.
விலைவாசி உயர்வு, ஊழல், பண வீக்கம் ஆகியவற்றால் மக்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயக் கடன் தள்ளுபடியும், ஊதியக் குழு பரிந்துரையும் காங்கிரஸ் கூட்டணிக்கு ஓரளவுக்கே கை கொடுக்கும் என கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.