
கருப்பு தொப்பியில் ரஜினி-யுஎஸ்சிலிருந்து வந்த கமல்
சென்னை: கர்நாடகத்தை கண்டித்து சென்னையில் நடந்த திரையுலக உண்ணாவிரதத்தில் நடிகர் ரஜினியும் பங்கேற்றார். அமெரிக்காவிலிருந்து திரும்பிய கமல்ஹாசனும் விமான நிலையத்திலிருந்து 2.30 மணிக்கு உண்ணாவிரத மேடைக்கு வந்தார்.காலை 8 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கிய நிலையில் அவர் 11.15 மணிக்கு உண்ணாவிரத மேடைக்கு வந்தார்.
கருப்புத் தொப்பி அணிந்து வித்தியாசமாக வந்த ரஜினி மேடையில் ஏறியவுடன் அங்கு கூடியிருந்தவர்களை தலைக்கு மேல் கையை உயர்த்தி ஒரு கும்பிடு போட்டார்.
பின்னர் தொப்பியைக் கழற்றிவிட்டு கூட்டத்தை நோக்கி கையை அசைத்தார். அவரை சரத்குமார், ராம.நாராயணன் உள்ளிட்ட அனைவரும் வரவேற்றனர்.
சரத்குமாருக்கும், மனோரமாவுக்கும் இடையில் அமர்ந்தபடி உண்ணாவிரதத்தில் பங்கேற்றார் ரஜினிகாந்த்.
சரத்குமார் அருகே அமர்ந்துள்ள சத்யராஜும் ரஜினிக்கு கைகொடுத்து வரவேற்றார். ரஜினி கட்டாயம் உண்ணாவிரதத்துக்கு வர வேண்டும் என்று காட்டமாகக் குரல் கொடுத்தது சத்யராஜ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கமலும் வந்தார்:
பகல் 2.30 மணிக்கு நடிகர் கமல்ஹாசனும் உண்ணாவிரத மேடைக்கு வருகை தந்தார். அவரை ரஜினி, சரத்குமார், ராமநாராயணன் உள்ளிட்டோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
மர்மயோகி படப் பிடிப்பு தொடர்பாக அமெரிக்கா சென்றிருந்த கமல், உண்ணாவிரதத்தில் பங்கேற்பற்காக அங்கிருந்து அவசரமாக புறப்பட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சேலத்தில் ரஜினி ரசிகர்கள் உண்ணாவிரதம்:
இந் நிலையில் சேலத்தில் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் உண்ணாவிரதம் நடந்தது. இதில் ஏராளமான ரஜினி ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
அதே போல சேலம் மாவட்ட பாமக சார்பிலும் கர்நாடகத்தை கண்டித்து போராட்டம் நடந்தது. அதில் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்டோரின் படங்களுக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது.
சேலம் சட்டக் கல்லூரி மாணவர்களும் கர்நாடக அரசை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.