நதிகளை இணைக்க ரூ.100 கோடி திரட்டி தர தயார்-சரத்
சென்னை: நதிகளை இணைக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரூ. 1 கோடி தருவதாக கூறினார். அப்படி ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டால் நடிகர் சங்கம் சார்பில் ரூ. 100 கோடி திரட்டிக் கொடுப்போம் என
நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறினார்.
அவர் கூறுகையில், சிறப்பாக மழை பெய்தால் இங்குள்ள அரசியல்வாதிகளும் சரி, அங்குள்ள அரசியல்வாதிகளும் சரி காவிரிப் பிரச்சினை குறித்து பேசுவதில்லை. மழை பெய்து விட்டால் பிரச்சினை இல்லை. ஆனால் மழை பெய்யாவிட்டால்தான் பிரச்சினை எழுகிறது.
இது இன்று நேற்று நடக்கும் பிரச்சினை இல்லை. 1924ம் ஆண்டு முதல் காவிரிப் பிரச்சினை குறித்து இதுவரை எத்தனையோ முறை பேச்சுவார்த்தை நடத்தி விட்டனர். ஆனால் இப்பிரச்சினைக்கு மாநில அரசால் மட்டும் தீர்வு காண முடியாது. மத்திய அரசு முழுமையாக கவனம் செலுத்தி ஒருங்கிணைந்த இந்தியா துண்டு துண்டாக போகாமல் இருப்பதற்கு மத்திய அரசு உடனடியாக கவனம் செலுத்தி பிரச்சினையைத் தீர்க்க முன்வர வேண்டும்.
சத்யராஜ் நாம் இனிமேல் மனிதனாக இருக்க வேண்டும் என்றால் தமிழனாக இருக்க வேண்டும் என்று கூறினார். அவர் பேச்சில் எந்தத் தவறும் இல்லை. அவர் பேசியது ஒரு தமிழனின் உணர்வு. அவரை யாரும் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது.
கர்நாடகத்தில் தேர்தல் வருகிறது என்றவுடன் பிரச்சினையை உருவாக்கப் பார்க்கிறார்கள். இதற்கு ஒரே தீர்வு நதிகளை தேசியமயமாக்குவது ஒன்றுதான். அப்படி நதிகளை தேசியமயமாக்கி, இணைக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரூ. 1 கோடி தருவதாக கூறினார். அப்படி ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டால் நடிகர் சங்கம் சார்பில் ரூ. 100 கோடி திரட்டிக் கொடுப்போம் என்றார் சரத்குமார்.
விவேக் பேசுகையில், தமிழகத்தில் தண்ணீர் வளம் இல்லை. இதற்காக பிற மாநிலங்களை நாட வேண்டிய நிலை உள்ளது. நாம் எல்லோரும் இந்தியர்கள். எனவே எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் தமிழர்களை அடிக்காதீர்கள். ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்ப் பிரச்சினை பேசித் தீர்க்க வேண்டியது என்றார்.