கேபிள் டிவி சேவை சீர்திருத்தம்: 'டிராய்' இறுதி கெடு
டெல்லி: கேபிள் டிவி சேவைகள் சீர்திருத்தம் தொடர்பான கருத்துகளை வரும் 23ம் தேதிக்குள் டிவி நிறுவனங்கள் சமர்பிக்க வேண்டும் என்று 'டிராய்' கெடு விதித்துள்ளது.
'கேபிள் டிவி சேவைகள் மறுவரையறை' திட்டம் தொடர்பாக சாட்டிலைட் சானல் டிவி நிறுவனங்கள் ஏப்ரல் 15ம் தேதிக்குள் தங்கள் கருத்துகளை தெரிவிக்குமாறு இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) கேட்டுக்கொண்டது.
கேபிள் டிவி சேவைகள் தொடர்பான புதிய வரையறை திட்ட முன்வடிவை கடந்த மார்ச் 4ம் தேதியன்று டிராய் வெளியிட்டிருந்தது. இந்த முன்வடிவு பற்றிய கருத்துக்களை சில டிவி நிறுவனங்கள் இன்னும் வழங்கவில்லை.
டிவி நிறுவனங்கள் தங்களுக்குள் ஆலோசனை நடத்திவருவதால், இதுபற்றி முடிவெடுக்கக் கூடுதல் அவகாசத்தை கோரின.
இந் நிலையில், கெடுவை டிராய் தளர்த்தியுள்ளது. வரும் 23ம் தேதிக்குள் தங்கள் கருத்துக்களை டிவி நிறுவனங்கள் தெரிவித்துவிடவேண்டும் என்றும் அதற்கு மேல் கால அவகாசம் தரமுடியாது என்று டிராய் அறிவித்துள்ளது.