ஜூன் 3 முதல் எம்பிபிஎஸ்-பிடிஎஸ் விண்ணப்பங்கள்
சென்னை: இந்த ஆண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய மருத்துவப் படிப்புகளில் சேர ஜூன் 3ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படவுள்ளன.
இந்த விண்ணப்பங்கள் ஜூன் 17ம் தேதி மாலை 3 மணி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 17ம் தேதி, மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் தர வரிசைப் பட்டியல் ஜூலை 1ம் தேதி வெளியிடப்படும்.
இதையடுத்து முதற்கட்ட கவுன்சிலிங் ஜூலை 8ம் தேதி தொடங்கும். இந்த கவுன்சிலிங் 16ம் தேதி வரை சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்கக அலுவலகத்தில் நடக்கும்.
இந்த கவுன்சிலிங் மூலம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1,398 எம்.பி.பி.எஸ். இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 251 இடங்களும், அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 85 இடங்களும், தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 850 இடங்களும் நிரப்பப்படும்.
இந்த ஆண்டு புதிதாகத் துவக்கப்படும் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மூலம் 85 இடங்களும், புதிதாக துவக்கப்படும் ஆதிபராசக்தி தனியார் மருத்துவக் கல்லூரி மூலம் 97 இடங்களும் கூடுதலாக கிடைக்கும்.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு ரூ. 4,000மும், பல் மருத்துவக் கல்லூரிகளில் பி.டி.எஸ். படிப்பிற்கு ரூ. 2,000மும் கட்டணமாக வசூலிக்கப்படும்.
இதற்கிடையே எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்பிற்காக முதற்கட்ட கவுன்சிலிங் முடிவடைந்த பிறகே பொறியியல் படிப்பிற்கான கவுன்சிலிங் நடத்தப்படவுள்ளது.
மருத்துவ படிப்புகளில் சேர இடம் கிடைக்காத மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர வசதியாக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.