பண்ணையில் மின்னல் தாக்கி 3000 கோழிகள் பலி
பனப்பாக்கம்: அரக்கோணம் அருகே மின்னல் தாக்கி கோழிப்பண்ணையில் தீப்பிடித்ததால் அங்கிருந்த 3000 கோழிகள் நெருப்பில் சிக்கி பலியாயின.
அரக்கோணம் அருகே தென்மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தீலமுருகன். கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன் என்பவருடன் சேர்ந்து தென் மாம்பாக்கத்தில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இதில் 3,000 கோழிகளை வளர்த்து வந்தனர்.
இந்நிலையில் வேலூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக கோடைமழை பரவலாக பெய்து வருகிறது. நேற்று இரவு 8 மணி அளவில் திடீரென்று பயங்கர இடி மின்னலுடன் தென்மாம்பாக்கம் பகுதியில் பலத்த மழை பெய்தது.
அப்போது எதிர்பாராதவிதமாக தீலமுருகன் கோழிப்பண்ணை கூரை மீது பயங்கர மின்னல் தாக்கியது. இதனால் கூரையில் தீப்பிடித்து மளமளவென பக்கத்து ஷெட்டுகளுக்கும் பரவியது.
ஷெட்டுக்குள் இருந்த கோழிகள் மீது நெருப்பு துண்டங்கள் விழுந்ததால் அவை எரிந்து சாம்பலாயின. இதுபற்றி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தரப்பட்டு அவர்கள் விரைந்து வந்து தீயை அணைப்பதற்குள் கோழிப்பண்ணை ஷெட்டுகள் முற்றிலும் எரிந்து சாம்பலாயின.
அங்கிருந்த 3000 கோழிகளும் இதில் கருகி பலியாயின.