காலவரையறைப்படி ஓகனேக்கல் திட்டம் நிறைவேற்றப்படும்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil
Karunanidhi
சென்னை: ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் கிடப்பில் போடப்படவில்லை. திட்டமிட்டபடி, காலவரையறைப்படி இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

ஓகனேக்கல் திட்டத்தை நிறைவேற்றுவதில், தமிழக அரசு அக்கறையில்லாமல் இருப்பது போல், இனி தயக்கமோ, மெத்தனமோ காட்டக் கூடாது என்றும், கர்நாடக அசுக்கு மத்திய அரசு கடிதம் எழுத வேண்டும் என்றும், அதற்கு பிரதமரை வலியுறுத்தி முதல்வர் கருணாநிதி கடிதம் எழுத வேண்டும் என்றும், இந்தத் திட்டத்தின் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்றும், இந்தத் திட்டத்தை நிறைவேற்ற கருணாநிதி என்ன செய்யப் போகிறார் என்றும் கேட்டு சிலர் அறிக்கை விடுத்தவண்ணம் உள்ளனர். அவர்களின் ஆர்வத்தை நான் பாராட்டுகிறேன். ஆனால் ஒன்று:

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தல் காரணமாக 2 மாநிலங்களிலும் ஓகனேக்கல் திட்டம் குறித்து கிளர்ச்சிகளும், வன்முறை வெறியாட்டங்களும் நடைபெற்றால், அப்பாவி பொதுமக்கள்தான் அதனால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இதற்காக தேர்தல் முடிகிற வரை அமைதி காப்போம் என்று அறிக்கை விடுத்தேன்.

அப்படி அறிக்கை விடுத்ததன் காரணமாக கிளர்ச்சிகளும், வன்முறை வெறியாட்டங்களும் நிறுத்தப்பட்டதே தவிர, ஓகனேக்கல் திட்டம் நிறைவேறுவதில் எந்தவிதமான ஒத்திவைப்பும் அறிவிக்கப்படவில்ைல என்பதை உண்மை அறிந்தோர் உணர்வார்கள்.

கர்நாடக பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ள பாஜகவின் தமிழ் மாநிலத் தலைவர் இல.கணேசன், இந்தத் திட்டத்தை நிறைவேற்ற நாம் கர்நாடகாவிடம் அனுமதி கேட்கத் தேவையில்லை என்று தெளிவாகத் தெரிவித்திருக்கிறார்.

நான் ஏற்கனவே ஓகனேக்கல் திட்டத்தை எப்படி நிறைவேற்றுவது என்பதற்காக அரசின் சார்பில் மாதாந்தி வாரியாக காலமுறைப்பட்டியல் ஒன்று, இந்தத் திட்டத்துக்காக நிதி வழங்கவிருக்கும் ஜப்பான் வங்கியின் ஒப்புதலுடன் வகுக்கப்பட்டுள்ளது என்பதையும், அந்த பட்டியல்படி பணிகள் நடைபெற்று வருவதாகவும், விளக்கமாக கடந்த 10.4.08 அன்று அறிக்கை வெளியிட்டு அனைத்துப் பத்திரிக்கைகளிலும் வெளி வந்துள்ளது.

ஓகனேக்கல் திட்ட செயல்பாட்டு கால அட்டவணை வருமாறு:-

- இதுபோன்ற பெரிய திட்டங்களுக்கு முதலில் திட்ட மேற்பார்வை ஆலோசகர் நியமிக்கப்பட வேண்டும். இவரை நியமனம் செய்வதற்கு இந்த ஆண்டு பிப்ரவரியில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது.

- ஒப்பந்தப்புள்ளி பெற இறுதி நாள் - மார்ச் 2008

- இதில் முடிவெடுத்தல் - ஜூலை 2008

- விரிவான திட்ட அறிக்கையையும், ஒப்பந்தப்புள்ளி ஆவணங்களையும் திட்ட மேற்பார்வை ஆலோசகர் ஆய்வு - அக்டோபர் 2008

- திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகளை பரிசீலனை செய்து முடிவெடுத்து திட்டத்தைத் தொடங்குதல் - மார்ச் 2009

- திட்டம் முடிவடைதல் - டிசம்பர் 2012.

இவ்வாறு முறைப்படி மாத வாரியாக வகுக்கப்பட்டு அதன்படிதான் ஓகனேக்கல் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. எனவே கர்நாடக பொதுத் தேர்தல் காரணமாக இந்தத் திட்டத்திலே எந்தவிமான தடையும், தயக்கமும் ஏற்பட்டு, இந்தத் திட்டம் கிடப்பில் போடப்படவில்லை. பேசி முடித்து முறையாக வகுக்கப்பட்டுள்ள திட்டம் காலவரையறைப்படி நடைபெற்று வருகிறது.

தற்போது திட்ட மேற்பார்வை ஆலோசகரை தேர்ந்தெடுப்பதற்கான காலம். எனவே இதில் தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கோ, கர்நாடக அரசுக்கோ கடிதம் எழுத எந்தவித முகாந்திரமும் கிடையாது என்று கூறியுள்ளார் முதல்வர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...