For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராமர் பாலம்: மாற்றுப் பாதை குறித்து பரிசீலிக்க கமிட்டி அமைப்பு

By Staff
Google Oneindia Tamil News

R.K.Pachauri
டெல்லி: ராமர் பாலத்தை இடிக்காமல் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பான மாற்றுப் பாதையை பரிசீலிக்க 6 பேர் கொண்ட கமிட்டியை நியமித்துள்ளதாக மத்திய அரசு இன்று சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது.

இந்தக் கமிட்டியில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற டாக்டர் ஆர்.கே.பச்சோரியும் இடம் பெற்றுள்ளார்.

சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்தும், ராமர் பாலத்தை இடிப்பதை எதிர்த்தும் உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்து வரும் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச், ராமர் பாலத்தை இடிக்காமல் இத்திட்டத்தை நிறைவேற்ற முடியுமா என்பதை பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்தியிருந்தது.

அதுகுறித்து பரிசீலிப்பதாக மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலி நாரிமன் சுப்ரீம் கோர்ட்டில் உறுதியளித்திருந்தார்.

இதற்கிடையில், ராமர் பாலத்தை சீதையுடன் நாடு திரும்பிய பின்னர் ராமரே இடித்து விட்டதாக கம்ப ராமாயணத்தில் கூறப்பட்டிருந்தது. மேலும், ராமர் பாலத்தை தேசிய பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க இயலாது. அதற்கான தகுதி பாலத்திற்கு இல்லை என்றும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வாதிட்டிருந்தது.

இந்த நிலையில், ராமர் பாலத்தை இடிக்காமல் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றவும், அதற்குரிய மாற்றுப் பாதையை தீர்மானிக்கவும் 6 பேர் கொண்ட ஆய்வுக் கமிட்டி ஒன்றை நியமித்திருப்பதாக உச்சநீதிமன்றத்தில் இன்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வழக்கறிஞர் பாலி நாரிமன் இதுதொடர்பாக மத்திய அமைச்சரவை செயலாளர் கே.எம்.சந்திரசேகர் எழுதிய கடிதம் ஒன்றை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அதில், டாடா எனர்ஜி ஆய்வுக் கழக இயக்குநர் டாக்டர் ஆர்.கே.பச்சோரி தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவை பிரதமர் மன்மோகன் சிங் நியமித்துள்ளார்.

இந்தக் குழுவில், நீரி எனப்படும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வுக் கழக தற்காலிக இயக்குநர் டாக்டர் டி.சக்கரவர்த்தி, தேசிய கடலியல் கழக இயக்குநர் எஸ்.ஆர். ஷெட்யே, சென்னை தேசிய கடலியல் தொழில்நுட்பக் கழக இயக்குநர் டாக்டர் எஸ். கதிரொளி, மத்திய அரசின் தலைமை நீரியில் நிபுணர் ரியர் அட்மிரல் பி.ஆர். ராவ், மத்திய புவியியல் ஆய்வுக் கழக இயக்குநர் பி.எம். தேஜலே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் தவிர தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் சுந்தரத்தேவன், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கிர்தோஷ்குமார் ஆகியோர் சிறப்புப் பார்வையாளர்களாக கமிட்டியில் இடம் பெற்றுள்ளனர்.

இந்த குழு உச்சநீதிமன்ற ஆலோசனைக்கிணங்க, மாற்று வழி அமைப்பதற்கான தொழில்நுட்பம், திட்ட செலவை குறைப்பது, சமூக மற்றும் பொருளாதார தாக்கம், சுற்றுச்சூழல் தாக்கம், சட்ட ஒழுங்கு நிலைமை உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து, தனது ஆய்வறிக்கையை எவ்வளவு விரைவில் தர முடியுமோ அவ்வளவு விரைவாக அரசிடம் சமர்ப்பிக்கும்.

தனது ஆய்வுக்குத் தேவையான தகவல்களை எந்த நிபுணர்களிடமிருந்தோ அல்லது நிறுனத்திடமிருந்தோ பெற கமிட்டிக்கு முழு சுதந்திரமும் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. மேலும், வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் எழுத்துப் பூர்வமான தங்களது வாதங்களை 2 வாரத்திற்குள் சமர்ப்பிக்குமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நோபல் வென்ற பச்சோரி:

தேரி எனப்படும் டாடா எரிசக்தி ஆய்வுக் கழகத்தின் இயக்குநராக உள்ள டாக்டர் ஆர்.கே. பச்சோரி, மிகப் பிரபலமான விஞ்ஞானி ஆவார். ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட உலகத் தட்பவெப்ப மாற்றம் குறித்த சர்வதேச அமைப்பின் தலைவராக முன்பு பணியாற்றினார்.

இந்தப் பதவியில் இருந்தபோதுதான் அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X