ஓகனேக்கல் வெள்ளத்தில் மூழ்கி 4 பேர் பலி
ஓகனேக்கல்: ஓகனேக்கலுக்கு சுற்றுலா வந்த சேலம் மாவட்டத்தைச் ேசர்ந்த நான்கு பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பலியானார்கள். ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார்.
சேலம் அம்மாப்பேட்டையைச் ேசர்ந்தவர் அசோக்குமார். அதே பகுதியைச் சேர்ந்த யுவராஜ், திருஞானம், சங்கர், ராஜேந்திரன், ஆனந்தன், ரமேஷ் ஆகியோருடன் அசோக்குமார் ஓகனேக்கலுக்கு சுற்றுலா வந்தார்.
மதியம் ஒரு கடையில் மீன் சாப்பாடு தயாரிக்கச்சொல்லி ஆர்டர் கொடுத்து விட்டு அனைவரும் அருவியில் குளிக்கச் சென்றனர். பின்னர் குளித்து விட்டு சாப்பிட்டனர். பின்னர் தொங்கு பாலம் வழியாக மாறுகொட்டாய் பகுதிக்கு வந்தனர்.
நல்ல குடிபோதையில் இருந்த அனைவரும் மீண்டும் குளிக்க முடிவு செய்தனர். ஆனால் ரமேஷும், ஆனந்தனும் முடிவை மாற்றிக் கொண்டு கரையிலியே இருந்து விட்டனர். மற்ற ஐந்து பேரும் ஆற்றில் இறங்கிக் குளித்தனர்.
அப்போது திடீரென ஆற்று வெள்ளம் அதிகரித்ததில் ஐந்து பேரும் அடித்துச் செல்லப்பட்டனர். நீர்ச் சுழலில் சிக்கியதாலும், ஆழமான பகுதிக்குப் போய் விட்டதாலும் ஐந்து பேராலும் நீந்த முடியாமல் அடித்துச் செல்லப்பட்டனர். இதை கரையிலிருந்து பார்த்த ரமேஷும், ஆனந்தனும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
இந்த நிலையில் பரிசல் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த குருவம்மாள் என்ற பெண், ராஜேந்திரனை மட்டும் உயிருடன் மீட்டார். மற்றவர்களை மீட்க முடியவில்லை.
தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மற்ற நால்வரையும் தேடினர். ஆனால் இரவு வரை அவர்கள் கிடைக்கவில்லை. தொடர்ந்து தேடுதல் பணி நடந்து வருகிறது.
இச்சம்பவம் ஓகனேக்கலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.