அணு ஒப்பந்தம் அவசியம் - தற்போதைய மின் திட்டங்கள் போதாது: கலாம்
ராமநாதபுரம்: இந்தியாவுக்கு 2020ம் ஆண்டுவாக்கில் 3 லட்சம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படும். அதற்கு தற்போதுள்ள மின் திட்டங்கள் போதாது. அணு சக்தி ஒப்பந்தம் இதை தீர்க்க உதவும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சையது அம்மாள் என்ஜீனியரிங் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலாம் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா மிக சிறந்த இடத்தில் உள்ளது. இந்த மாத இறுதியில் நிலவுக்கு சந்திராயன்-1 என்ற விண்கலம் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. இதில் அதி நவீன கேமராக்கள் உள்ளன.
இந்திய - அமெரிக்கா அணு சத்தி ஒப்பந்தம் நாட்டிற்கு அவசியமான ஒன்று. வரும் 2020ம் ஆண்டில் நாட்டின் மின் தேவை 3 லட்சம் மெகாவாட்டாக இருக்கும். தற்போதைய மின் உற்பத்திக்கான செயல் திட்டங்கள் வரும் காலத்திற்கு உகந்தவை அல்ல. தற்போது 20 அணு உலைகள் இருப்பினும், யுரேனிய தேவைகளுக்கு நாம் வெளிநாட்டை நம்பியே உள்ளோம். அணு ஒப்பந்தம் மூலம் யுரேனியம் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் என்றார்.