For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அச்சமின்றி வாக்களிக்கலாம்-நரேஷ் குப்தா

By Sridhar L
Google Oneindia Tamil News

Naresh Gupta
மதுரை: திருமங்கலம் தொகுதியில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மத்திய அரசு அலுவலர்களே தேர்தல் பார்வையாளர்களாக இருப்பார்கள் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா கூறியுள்ளார்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா மதுரையில் நேற்று நிருபர்களுக்கு அவர் பேசுகையில்,

வாக்களிப்பது ஒரு புனிதமான உரிமை. நாம் நாட்டிற்கு செலுத்த வேண்டிய ஒரு கடமை. மின்னணு இயந்திரத்தில் வாக்களிக்கும் உங்கள் வாக்கு ரகசியமாக இருக்கும். மின்னணு ஓட்டு எந்திரங்களில் எந்த முறைகேடும் செய்ய முடியாது.

எந்திரங்களில் மோசடி சாத்தியமில்லை:

ஓட்டுப் பதிவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் முன்னிலையில் மாதிரி வாக்குப் பதிவு செய்து மின்னணு எயந்திரங்கள் பரிசோதிக்கப்படும். எந்திரத்தில் ஏதாவது குறைபாடு இருந்தால் மாற்று இயந்திரம் கொண்டு வரப்பட்டு மீண்டும் ஏஜெண்டுகள் முன்னிலையில் மாதிரி வாக்குப் பதிவு செய்து அதன் பிறகு ஓட்டுப்பதிவுக்கு பயன்படுத்தப்படும்.

மத்திய அரசு ஊழியர்களே:

திருமங்கலம் தொகுதியில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மத்திய அரசு அலுவலர்களே தேர்தல் பார்வையாளர்களாக இருப்பார்கள். வாக்குச் சாவடிகளில் ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகள் பற்றி தெரியவந்தால் அவர்கள் நேரடியாக தேர்தல் பார்வையாளர்களிடம் தெரிவிப்பார்கள்.

வாக்காளர்கள் ஓட்டுப்போட வரும்போது அவர்களிடம் உரிய ஆவணங்கள் இருக்கிறதா, அடையாள அட்டை அல்லது தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட 9 ஆவணங்களில் ஏதேனும் ஒன்று வைத்திருக்கிறார்களா, வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை சரிபார்த்த பிறகே ஓட்டுப் போட அவர்கள் அனுமதிக்கப்படுவர்.

வீடியோ:

வாக்குச் சாவடிகளில் வீடியோ படம் எடுக்கப்படும். அதே நேரத்தில் வாக்குப் பதிவு ரகசியமாக நடக்கும். வாக்குப் பதிவு வீடியோவோ, புகைப்படமோ எடுக்கப்படாது. அது சட்டப்படி குற்றம்.

ஓட்டுப் போட அச்சமாக உள்ளதாக மத்திய தேர்தல் ஆணைய துணை கமிஷனரிடம் புகார்கள் வந்துள்ளன. ஆனால் அச்சமின்றி வாக்காளர்கள் ஓட்டுப்போட எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. எந்தவித இடையூறும் இல்லாமல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் வாக்குப்பதிவு நடப்பதை உறுதி செய்ய இந்திய தேர்தல் ஆணையத்தின் 2 பார்வையாளர்கள் கண்காணிப்பார்கள்.

துணை ராணுவ பாதுகாப்பு:

துணை ராணுவத்தினர் தீவிர பாதுகாப்பில் ஈடுபடுவார்கள். வாக்குச் சாவடியில் பணியில் உள்ள பார்வையாளர்கள் வாக்குப் பதிவில் முறைகேடுகள், வாக்காளர்களை அச்சுறுத்துவது போன்றவை நிகழ்ந்தால் அது குறித்து தேர்தல் ஆணைய பார்வையாளருக்கு நேரடியாக அறிக்கை அளிப்பார்கள்.

அச்சம் வேண்டாம்:

எனவே வாக்காளர்கள் எந்தவித பயமும் இன்றி வாக்களிக்கலாம். ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் உள்ளே வரும் வாக்காளர்களை, அவர்களை அடையாளம் காண்பதற்கு வீடியோ எடுக்கப்படும். வாக்குச் சாவடியில் நுழைந்தபின்னர், வாக்காளர் எந்த ஒரு வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாவிட்டால் தேர்தல் நடத்தை விதி 49 (ஓ) படிவம் 17 (ஏ)ல் பதிவு செய்யலாம்.

வேட்பாளர்களின் ஏஜெண்டுகளாக அந்தப் பகுதியை சேர்ந்த ஓட்டுரிமை உள்ளவர்களே அனுமதிக்கப்படுவார்கள். தொகுதியில் வெளியூரை சேர்ந்தவர்கள் இருப்பதாக புகார்கள் வந்தால் அவர்களை வெளியேற்ற தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

'அல்வா' கொடுக்கிறார்கள்:

வாக்குச் சாவடிகளில் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டால் துணை ராணுவத்திடமோ அல்லது 100 அடி தூரத்தில் உள்ள வருவாய் துறை அலுவலரிடமோ புகார் தெரிவிக்கலாம். வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக ஏராளமாக புகார்கள் வந்துள்ளன. தற்போது மொபைல் (செல்போன்), அல்வா போன்றவற்றை கொடுப்பதாக புகார்கள் வந்துள்ளன. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

பணம் பட்டுவாடா செய்ததாக அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓட்டுக்காக பணம் பட்டுவாடா செய்ததாக அதிமுக, திமுக இரு கட்சிகளுக்கும் தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

காஷ்மீர், பிகார் மாநில தேர்தல்களை கமிஷன் அமைதியாக நடத்தி முடித்துள்ளது. அதேபோல் திருமங்கலம் தொகுதியிலும் தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மாற்றத்துக்கு பிறகு திருமங்கலம் தொகுதியில் சட்டம்-ஒழுங்கு பரவாயில்லை என்றார்.

இதெல்லாம் சகஜம்:

உங்கள் மீது அரசியல் சாயம் பூசப்பட்டுள்ளதே என்று கேட்ட போது, அரசியல் சாயம் பூசப்படுவது புதிதல்ல. இதற்கு முன் இருந்த தேர்தல் அதிகாரிகள் மீதும் இதேபோன்ற குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இது சகஜம் தான் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X