For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உளவு விமானம் மூலம் பிரபாகரனை கண்காணிக்கும் 'ரா': திருமா.

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: இந்திய உளவு அமைப்பான ரா, தனது உளவு விமானத்தை விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனைக் கண்காணிக்கவே பயன்படுத்தி வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

அண்மைக் காலமாக, சிங்கள இனவெறி அரசு, ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்க, இந்திய அரசு ராணுவ உதவிகளும், பண உதவிகளும் பெருமளவில் செய்து வருவது உறுதிப்பட்டு வருகிறது.

கிளிநொச்சியை விட்டு விடுதலைப்புலிகளும் பொது மக்களும் இடம் பெயர்ந்துள்ள ஓரிரு நாட்களுக்குள், இந்திய அரசின் உளவு நிறுவனமான ரா' அமைப்பின் நவீன விமானம் ஒன்று தமிழீழத்தின் கடலோரப்பகுதிகளையும் காடுகளையும் கண்காணிப்பு ஆய்வு செய்வதற்கு 3-ம் தேதி அதிகாலை சென்னை, மீனம்பாக்கம் விமான நிலை யத்திலிருந்து சில ரா' அதிகாரிகளுடன் புறப்பட்டுச் சென் றுள்ளது.

உயர்ந்த தொழில் நுட்ப வேவு கருவிகளைக் கொண்ட இந்த வானூர்தி இரவு நேரத்திலும், தரையில் நடந்து செல்லும் ஒருவரை மிகத்துல்லியமாக புகைப்படம் எடுக்குமளவிற்கு ஆற்றலுடையது என்று தெரிய வருகிறது.

முதல்-அமைச்சர் கருணாநிதியின் முயற்சியில் இந்திய பிரதமரை சந்தித்து அனைத்துக்கட்சித் தலைவர்களின் கோரிக்கையையும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட போர் நிறுத்தத்தை வலியுறுத்திய தீர்மானத்தையும் புறந்தள்ளியது மட்டுமில்லாமல் முல்லைத்தீவுப் பகுதிகளைக் கண்காணிக்க ரா' அமைப்பின் அதிகாரிகளை உயர் தொழில் நுட்ப உளவு விமானத்தில் அனுப்பியிருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

பிரபாகரனை காட்டிக் கொடுக்கும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது என்பதையே இது உறுதிப்படுத்துகிறது. தமிழீழ விடுதலைப்போரை நசுக்கவும், அதன் தலைவரை அழித்தொழிக்கவும் இந்திய அரசு வெளிப்படையாக ஈடுபட்டிருப்பது தமிழ்ச் சமூகத்தால் மன்னிக்கவே முடியாத செயலாகும்.

இந்திய அரசு, இந்தக் காட்டிக் கொடுக்கும் கேவலத்தை உடனடியாகக் கைவிடவில்லையெனில் பொங்கியெழும் தமிழக மக்களுக்கு பதில் சொல்லியேத் தீர வேண்டும் என்று கூறியுள்ளார் திருமாவளவன்.

வாக்குறுதி என்ன ஆனது - வீரமணி:

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து அகதிகளாக தனுஷ்கோடிக்கு தப்பி வந்த தமிழ் குடும்பத்தினர் அளித்த பேட்டி பெரும் வேதனையை ஏற்படுத்தியது.

தமிழக அனைத்துக்கட்சித் தலைவர்கள் பிரதமரிடம் அளித்த வேண்டுகோளை பரிசீலித்து பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்புவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் ஒரு மாதத்துக்கு மேலாகியும் அது செயல்படுத்தப்படவில்லை.

தமிழர்கள் ஏமாளிகளா?,பிரதமரின் வாக்குறுதி காற்றில் பறந்து விட்டதா? இதன் காரணமாக கடும் விலையை மத்திய அரசு பெற வேண்டியிருக்கும்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி ஆலோசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X