For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆட்சியை கவிழ்க்க சதி: கருணாநிதி

By Sridhar L
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: இலங்கை தமிழர் பிரச்சனையை திருமாவளவன் காங்கிரஸ் கட்சியை எதிர்க்கும் பிரச்சனையாக்கிவிட்டதாகவும், மேலும் இந்த விவகாரத்தில் முழுப் பழியையும் திமுக மீது போட்டு ஆட்சியைக் கவிழ்க்க சதி ஜெயலலிதா தலைமையில் சதி நடப்பதாகவும், இதற்கு ராமதாஸ் போன்றவர்கள் துணை போகக் கூடாது என்றும் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

முரசொலியில் தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

50 ஆண்டு கால வேதனை வரலாறு கொண்ட இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தமிழ்நாட்டில் ஒட்டு மொத்தக் கருத்து என்றும், அதே நேரத்தில் தனித்தனி கட்சிகளின் அணுகுமுறை என்றும், பல்வேறு கோணங்களில் மக்களுக்கு திசைகள் அறிவிக்கப்பட்டு, அவர்களைத் திண்டாட்டத்திலும், திகைப்பிலும் தள்ளி விடப்படுகிற செயல்கள் பஞ்சமில்லாமலே நடைபெற்று வருகின்றன.

அனைத்துக் கட்சிகளை ஒருங்கிணைத்து அறவழியில் எத்தனை எழுச்சியைத் தமிழ் மக்கள் வாயிலாக உணர்த்த வேண்டுமோ, அந்த வழிகளில் எல்லாம் உணர்த்தி விட்டு, பிரதமரையே சந்தித்து, வெளியுறவுத் துறை அமைச்சர், இலங்கை சென்று முயற்சி மேற்கொள்வது என்ற திட்டத்துடன் இந்த அறப்போரில் ஒரு அத்தியாயம் முடிவுற்றது.

ஆனால் அந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படாததற்கான காரணங்களை முழுமையாக அறிந்து கொள்ளாத நிலையில், தமிழ்நாட்டில் உள்ள சில கட்சிகளின் நடவடிக்கைகள் காரணமாக, இது ஏதோ இலங்கைத் தமிழரைப் பாதுகாக்கும் பிரச்சினை என்றில்லாமல், காங்கிரஸ் கட்சியை எதிர்க்கும் பிரச்சனை என்ற கோணத்தில் திருப்பி விடப்பட்டுள்ளது.

தேர்தல் கூட்டணி, வெற்றி தோல்வி, ஆட்சி மாற்றம் என்பன போன்ற அரசியல் கட்சி தத்துவப் பிரச்சனைகளில் இலங்கைத் தமிழர் பிரச்சனையையும் ஒரு சில தலைவர்கள் இணைத்துக் குழப்புவது, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு பிரச்சினையை விட்டு, வெகு தொலைவு போய் விட்டதாகவே தெரிகிறது.

வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை சென்று வருவதற்கு இயலாத காரணம் எதுவும் இருந்தாலும் அதனையும் வெளிப்படையாகத் தெரிவித்திருக்கலாம். அல்லது எது தக்க காலம், நேரம் என்பதையாவது எடுத்துரைத்திருக்கலாம். அப்படியெதுவும் நடைபெறாதது, மாநில அரசைப் பொறுத்தவரையில் வேதனையான நிலையாக உணரக் கூடியதுதான்.

இப்போது வெளியுறவுத் துறைச் செயலாளர் இலங்கை சென்று ராஜபக்சேவை சந்தித்துப்பேசி விட்டு வந்துள்ளார். அதன் விபரங்களும் சரியாக வெளிவரவில்லை. ஒருவேளை பிறகு வரக்கூடும். கடந்த காலத்து ஜெயவர்த்தனே-ராஜீவ் ஒப்பந்தம் பரிசீலிக்கப்படலாம் என்பது போன்ற செய்திகள் உள்ளனவே தவிர, அது வரையில் போர் நிறுத்தம் என்று கூட அறிவிக்கப்படவில்லை.

போர் சிங்கள ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் என்ற பெயரால் அப்பாவித் தமிழர்கள் அன்றாடம் அங்கே உயிர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஜெயவர்த்தனே-ராஜீவ் காந்தி உடன்பாடு பற்றிப் பேசி முடிக்கிற வரையில் போர் நிறுத்தப்படுகிற முயற்சியை மேற்கொள்வதில் பெரிய தவறு ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை.

அந்த ஒப்பந்தம் பற்றிய கருத்துக்களையும், உடன்பாடு பற்றிய எண்ணங்களையும், ஒப்புதலையும் இலங்கைத் தமிழர்கள் மீது இங்கிருந்து நாம் திணித்திட முனைவதில்லை என்ற நிபந்தனையுடன் அணுகுவதே ஆரோக்யமானது மட்டுமல்ல, அமைதி வழியும், அமைதி நிலையும் இலங்கையில் "மறு பிறவி'' எடுப்பதற்கு ஏற்றதுமாகும்.

இது எப்படி உருவாகும், எப்படித் தீர்வாகும் என்ற வினாக்களுக்கு விடை கிடைப்பதற்கு முன்னர் இப்போது நம்மைப் பொறுத்தவரையில், நமது தமிழ் மாநில அரசைப் பொறுத்த வரையில் இதனை மையமாக வைத்து ஏதேனும் விஷப் பரிசோதனைகளில் இறங்கி இதனை வீழ்த்தி விட்டுத் தாங்கள் ஆட்சிக்கு வந்து விடலாமா என்றும் அவர்களோடு சேர்ந்து நாமும் பலன் பெற முடியுமா என்றும் சில மூளைகள் யோசனையில் ஈடுபட்டிருக்கின்றன.

அம்மையார் ஜெயலலிதாவின் அறிக்கைகளில் இந்த ஆண்டு முடிவதற்குள் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி மலரும் என்றும், சட்டமன்றத்துக்கும் எப்படியாவது தேர்தல் வரவழைக்க வேண்டும் என்பது தான் அவரது விருப்பம் என்றும், விரைவில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல் வருவதற்கும் அவர் எல்லா முயற்சிகளையும் எடுத்துக் கொண்டிருப்பதாக தனது தொண்டர்களுக்கு உறுதி அளிப்பது எதற்காக என்று எல்லோர்க்கும் புரியுமென நம்புகிறேன்.

மாநிலத்தில் இன்னும் இரண்டு ஆண்டுகள் வரை நீடித்திட வேண்டிய கழக ஆட்சியை, இது போன்ற பிரச்சினைகளில் வன்முறை அராஜகம் போன்ற கிளர்ச்சிகளை உசுப்பி விட்டு, கலைத்து விடலாம் என்று அவர் கருதுகிறார். அப்படிக் கலைத்தால் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக, நாம் மூன்றாவது முறையாக ஆட்சியை இழக்க நேரிடலாம்.

திட்டமிட்டு, இந்த அம்மையார் நடத்திட முனையும் அரக்கு மாளிகை சதி'யை நாம் புரிந்து கொண்டு தானிருக்கிறோம். இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக நாம் மீண்டும் ஏதாவது செய்ய வேண்டும் என்று ஜனவரி 12ம் நாள் என்னிடம் விவரித்து முடிவெடுக்க வேண்டுமென்று என் வீட்டுக்கு வந்த டாக்டர். ராமதாஸ், கி.வீரமணி, தொல். திருமாவளவன் ஆகிய மூவரும், முதல்வர் எடுக்கிற முடிவை ஏற்று அவ்வாறு திட்டம் வகுப்போம்' என்று தான் உறுதி அளித்தனர்.

உடனடியாக டெல்லியுடன் பேசுமாறு வேண்டினர். நானும் அன்று திருமங்கலம் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையைக் கூட கவனிக்க நேரமில்லை. அந்த மூவருடனும் அந்தச் சமயத்திலும் ஒரு மணி நேரம் என்கிற அளவுக்கு பேசி, அனுப்பி வைத்தேன்.

ஆனால் என்னைக் கலந்தே எதுவும் நடவடிக்கை என்று சென்றவர்கள், என்னைக் கலந்து பேசாமலே அந்த மூவரில் ஒருவர், நண்பர் தொல்.திருமாவளவன் தன்னிச்சையாக உண்ணாவிரதம் என அறிவிக்கப்பட்ட நிலையில், உண்ணாவிரதப் பந்தலில், சிங்கள அரசை விட இங்குள்ள காங்கிரஸ் கட்சியுடன் தான் தமக்குப் போராட்டம் என்பது போல விரிவுரைகள் ஆற்றிக் கொண்டிருந்தனர்.

இலங்கைத் தமிழர் பிரச்சனையின் உயிரோட்டத்தை எப்படி அங்கே போராளிகளுக்குள் நடந்த சகோதர யுத்தம் பலவீனப்படுத்தியதோ, அதைப் போலவே, இலங்கைத் தமிழர்களுக்காக வாதாடிடும் நமக்குள்ளேயும் சகோதர யுத்தங்கள்' எல்லாம் மொத்தப் பிரச்சினையை மூளியாக்கி விடுகிற கதை நடப்பதற்குத் தான் காரணமாகி வருகின்றன.

எப்படியோ, மூவர் கூடி முதல்வருடன் பேசினோமே, அடுத்த நாளே, இப்போது உண்ணா நோன்பு அறிவிக்கிறோமே என்று கூட எண்ணாது, அரசு பேருந்துகள் பல எரிக்கப்பட்டனவே இத் துணை அவசரத்துடன், இப்போது நிறுத்திக் கொண்டிருக்கிறோமே என்பதை சற்றுக் கூட சிந்திக்காமல் இலங்கை தேசியக் கொடி எரிப்பு' என்று திருமாவளவன் அறிவித்திருப்பது ஏன் என்று நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஆனால் அவருக்குப் புரிகிறதோ இல்லையோ, இந்த ஆட்சியைக் கவிழ்க்க வேண்டுமென்று திட்டமிட்டு செயல்படுகிறவர்களுக்கு ஒன்று புரிகிறது.

தமிழ்நாட்டையே ஸ்தம்பிக்க வைக்கும் போராட்டத்தை கருணாநிதி நடத்த வேண்டும் என்பதையும், காங்கிரஸ் ஆட்சிக்கு இனி இங்கே இடமே இல்லை என்று சபதம் செய்வதையும், அப்படியொரு ஒட்டு மொத்தமான அராஜகப் புரட்சி மூலமாகவாவது, கருணாநிதியை வீட்டுக்கு அனுப்பி விட முடியாதா என்ற கவலை மிகுந்த ஆவலால் தானே தவிர வேறல்ல.

உடன் பிறப்பே கேரளத்து மாவலி மன்னனை வீழ்த்தியோர் கதையை மறந்து விட முடியுமா?

கருணாநிதி வீட்டுக்குப் போகவும் தயார், தமிழர்களின் ஒட்டுமொத்த நல் வாழ்வுக்காக காட்டுக்குப் போகவும் தயார்.

அது இலை தழை நிறைக் காடாகவும் இருக்கலாம், அல்லால் இடு காடாகவும் இருக்கலாம், எதுவாயினும் ஏற்பதில் எனக்கொரு மகிழ்ச்சியே! அதுவும் என் நாட்டுக்காக-நண்பர்களினால் கிடைத்தால், இரட்டிப்பு மகிழ்ச்சியே!

முதலில் மூவரும் கலந்து யோசிப்போம்-அதில் ஒரு முடிவெடுப்போம் என்பது பின்னர் தனித்தனியே முடிவெடுத்து அறிவித்து அதற்கேற்ப செயல்படுவது, என்னையே இறுதியாகப் பழி கூறத்திட்டமிடுவது நல்ல அரசியல் தந்திரங்களாக இருக்கலாம்.

அதற்கு நான் ஒருவன் மயங்கி பலிக்கடா ஆகத் தயாராக இருக்கலாம். ஆனால் அறிஞர் அண்ணா அவர்கள் வளர்த்து எம்மிடம் அளித்து விட்டுப் போன இந்த இயக்கத்தை ஆம், ஒரு கோடி உறுப்பினர் கொண்ட இந்த இயக்கத்தை பலியிட முனைவோருக்குத் துணை போக நான் தயாராக இல்லை.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X