For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை வந்த ரயில் ஒரிசாவில் தடம் புரண்டது - 15 பேர் பலி

By Sridhar L
Google Oneindia Tamil News

Coromandel Express derailed
புவனேஸ்வர்: மேற்கு வங்க மாநிலம் ஹௌராவிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒரிசா மாநிலத்தில் தடம் புரண்டது. இதில் 15 பேர் பலியானார்கள். 200 பேர் காயமடைந்தனர்.

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் நேற்று பிற்பகலில் ஹௌராவிலிருந்து புறப்பட்டது. இன்று மாலை அது சென்னைக்கு வரவிருந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு 7.50 மணிக்கு ஒரிசா தலைநகர் புவனேஸ்வரிலிருந்து 120 கி.மீ. தொலைவில் உள்ள ஜாஜ்பூர் ரோடு ரயில் நிலையம் அருகே ரயில் தடம் புரண்டது.

ரயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்து விழுந்தன.

சரக்கு வைக்கும் மற்றும் தூங்கும் வசதி கொண்ட ஒரு பெட்டி, முன்பதிவு வசதி அல்லாத 2 பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் ஆகியவை தடம் புரண்டன.

இதில் 4 பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி நசுங்கி விட்டன. குளுகுளு வசதி கொண்ட பெட்டிகள், பின்பகுதியில் இருந்ததால் அவை கவிழாமல் தப்பின. என்ஜின் அருகே இருந்த பெட்டிகள்தன் பெரும் சேதத்தை சந்தித்தன.

இந்த கோர விபத்தில், 15 பேர் உயிரிழந்தனர். 200 பேர் படுகாயமடைந்தனர்.

ஒரிசா பேரிடர் விரைவு அதிரடிப்படையினரும், மருத்துவ குழுவினரும் விபத்து பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நடுவழியில் சிக்கி தவித்த பயணிகளை அழைத்துச் செல்வதற்காக, சிறப்பு நிவாரண ரெயில்களும் விபத்து பகுதிக்கு விரைந்து சென்றன.

போலீசாரும், உள்ளூர் மக்களும் வெறும் கையால் உடல்களையும், காயம் அடைந்தவர்களையும் மீட்க முயன்றனர். ஆனால், நசுங்கிய பெட்டிகளுக்குள் கிடந்த உடல்களை மீட்பது சிரமமாக இருந்ததால், ரெயில்வே அதிகாரிகள், கேஸ் கட்டர்'களை வரவழைத்து பெட்டிகளை வெட்டி எடுத்து உடல்களையும், காயமடைந்தவர்களையும் மீட்டனர்.

இரவு நேரமாக இருந்ததால் மீட்புப் பணி பெரும் பாதிப்பை சந்தித்தது.

தகவல் அறிய ..

விபத்தில் சிக்கியவர்கள், உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் குறித்த தகவல் அறிய 0674-2303728, 2303714, 2534694 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளளாம் என கிழக்குக் கடற்கரை ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னையிலும் தகவல் மையம் தொடங்கப்பட்டுள்ளது. தகவல் அறிய விரும்புவோர் 044-25024545, 25024548 என்ற தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

ரூ. 5 லட்சம் நிவாரணம் ..

விபத்து குறித்து ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் அதிர்ச்சி வெளியிட்டுள்ளார். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிவாரண நிதி, குடும்பத்தில் ஒருவருக்கு வேலையை அவர் அறிவித்துள்ளார்.

ரயில்வே இணை அமைச்சர் வேலு, ரயில்வே வாரிய தலைவர் ஆகியோரை சம்பவ இடத்திற்கும் அவர் அனுப்பி வைத்தார்.

விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

விபத்து காரணமாக, இன்று இரவு 11.35 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய சென்னை-ஹௌரா மெயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X