For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் புலிகள் ஊடுருவல்-காங். சந்தேகம்

By Sridhar L
Google Oneindia Tamil News

Assembly
சென்னை: இலங்கை விவகாரத்தில் தமிழகத்தில் வன்முறை சம்பவங்கள் தூண்டி விடப்படுவதை பார்த்தால் விடுதலைப் புலிகளின் ஊடுருவல் இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படுவதாக சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூறினர்.

சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. இதில் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூறியதாவது:

ரெங்கராஜன்: இலங்கை பிரச்சனை குறித்து நேற்று முளைத்த காளான் கட்சிகள் எல்லாம் நாங்கள் தான் தமிழர்களை காக்க பிறந்தவர்கள் என்று கூறி வருகிறார்கள். இலங்கை தமிழர் பிரச்சனையில் தன்னுடைய இன்னுயிரை தியாகம் செய்தவர் எங்கள் தலைவர் ராஜீவ் காந்தி. இதைவிட பெரிய தியாகத்தை யாரும் செய்ய முடியாது.

சில குட்டி தலைவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்வியை மறைக்க இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களை இரும்புகரம் கொண்டு ஒடுக்க வேண்டும். ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், சோனியா காந்தியை மனிதநேயம் மிக்க தலைவர் என்று கூறியிருக்கிறார். குற்றம் சாட்டப்பட்டவரே இப்படியொரு பாராட்டை கூறுகிறார் என்றால், காங்கிரஸ் கட்சியினரை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

எம்.ஆர். சுந்தரம்: இலங்கை பிரச்சனையில் அரசியல் ஆதாயத்திற்காக இன்று யார் யாரோ கூக்குரல் இடுகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் தலைவர்களின் வீடுகள், அலுவலகங்கள் தாக்கப்படுகின்றன. நாங்கள் பதவியில் இருக்கின்ற காரணத்தால் இதையெல்லாம் பொறுத்துப் போகிறோம். ரவுடித்தனத்தில் ஈடுபடுகின்ற அவர்களுக்கு அதே முறையில் பதிலளிக்க எங்களாலும் முடியும். நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. எங்கள் பொறுமையை சோதிக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம்.

இங்கே பல்வேறு போராட்டங்களை நடத்துகின்ற இவர்களெல்லாம் தமிழர்களின் உரிமைகளுக்கு இடையூறாக உள்ளார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கை தமிழருக்காக உயிர்த்தியாகம் செய்த எங்கள் தலைவரின் படுகொலையை நாங்கள் எப்படி மன்னிக்க முடியும்?

பழனிச்சாமி: தமிழ்நாட்டில் இப்போது ஒரு விசித்திரமான நிலைமை ஏற்பட்டுள்ளது. இலங்கை தமிழர்களுக்காகவே வாழ்கிறோம் என்ற பெயரில் அரசியல் ஆதாயம் தேடும் சில தலைவர்கள் காங்கிரஸ் கட்சியையும், திமுகவையும் இலங்கை தமிழர்களுக்கு எதிரான கட்சிகள் என்று முத்திரைகுத்த முயற்சிக்கின்றன.

இலங்கை தமிழர்களுக்கு முதல் முதலாக ஓட்டுரிமை பெற்று தந்தவரே முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆவார். வரலாற்றை திரும்பிப் பார்த்தால் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் இலங்கை தமிழர்களுக்காக செய்த உதவிகளை யாரும் மறக்க முடியாது.

உலக நாடுகளை பகைத்து கொண்டு இலங்கை தமிழர்களுக்காக உணவளித்த இந்தியாவை பிரமதேசாவுடன் சேர்ந்து கொண்டு பிரபாகரன் வெளியேற சொன்னார். ராஜீவின் இழப்பு எங்களுக்கு மட்டுமல்ல, இந்த தேசத்துக்கே ஏற்பட்ட இழப்பாகும்.

இலங்கை தமிழர்களுக்கு நாங்கள் தான் பாதுகாவலர்கள் என்று கூறுகிறார்கள். காங்கிரஸ்காரர்களும், திமுகவினரும் தமிழர்கள் இல்லையா?. நாங்கள் என்ன அமெரிக்காவிலா பிறந்தோம்?. உங்களை மாதிரி பாதியில் போய்விட்டு திரும்ப வருபவர்கள் அல்ல நாங்கள். சிலைகளுக்கு ராத்திரியில் மாலை போடுகிறீர்கள். துணிச்சல் இருந்தால் பகலில் வந்து பாருங்கள்.

இலங்கையில் அரசும், விடுதலைப் புலிகளும் தவறு செய்வதாக ஐ.நாவே கூறுகிறது. ஆனால் இங்கே உள்ள சில தலைவர்கள் விடுதலைப் புலிகளின் எடுபிடிகளாய் இலங்கை பிரச்சனையை அரசியல் வியாபாரமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் ஈரோட்டு பாதையில் வந்தவர்கள். எந்த சலசலப்புக்கும் அஞ்சமாட்டோம். இங்கே நடைபெறுகின்ற, தூண்டி விடப்படுகின்ற சம்பவங்களையெல்லாம் பார்க்கும் போது விடுதலைப் புலிகள் ஊடுருவியிருப்பார்களே என்ற அச்சம் ஏற்படுகிறது.

இங்கே உள்ள சிலருக்கு குளிர்விட்டுப் போய்விட்டது. அவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் உள்ளே தள்ளி தமிழகத்தை அமைதிப் பூங்காவாக்க வேண்டும். இலங்கை தமிழர்களுக்காக நாங்கள் உயிரையும் தரத் தயாராக இருக்கிறோம். இந்த பிரச்சனையில் நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X