For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பதவி பறித்த பஸ் நிலையம்-அதிர்ச்சியில் அதிமுகவினர்!

By Sridhar L
Google Oneindia Tamil News

கரூர்: தமிழக அரசியல் நிலவரங்களுக்கு சற்றும் சூடு குறையாத அளவில் கரூரில் அரசியல் அரங்கு எப்போதும் சூடு பறக்கும். தற்போதும் ஒரு பிரச்சனைக்கு பிள்ளையார் சூழி போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புகழ் பெற்ற நகரமாகவும், டெக்ஸ்டைல்ஸ், சாயப்பட்டறை, கொசுவலை, பஸ் பாடி கட்டுதல் என பல்வேறு தொழில்களின் சிறப்புக்களையும் கொண்டது கரூர்.

இந்த மாவட்டத்தில், கரூர் நகராட்சி, தாந்தோனி நகராட்சி, இனாம் கரூர் நகராட்சி, குளித்தலை நகராட்சி என 4 நகராட்சிகள் இருந்தாலும் கரூர் நகராட்சிக்கே எங்கும், எதிலும், ஏன் சர்ச்சையிலும் கூட முதலிடம்.

கரூர் நகரத்தில் வசிக்கும் மக்கள், மற்றும் கரூரை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினசரி பல்வேறு பணிகளுக்காக கரூர் பஸ் நிலையத்தை கடந்தே செல்ல வேண்டும். இதனால் ஒரு நாளைக்கு சராசரியாக சுமார் 5 லட்சம் மக்கள் வந்து போகும் நகரமாக உருவெடுத்துள்ளது.

இதனால் தான் பஸ் நிலையம் இங்கே வருகிறது. அங்கே வருகின்றது என்று நில புரோக்கர்கள் கிளப்பி விடும் புரளியால் தங்கத்தின் விலையை விட நிலத்தின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.

இந் நிலையில், பொட்டல் காடாக இருந்த நிலங்கள் இன்று பல லட்ச ரூபாய் என்ற நிலைக்கு சென்று விட்டது. முன்பு, கரூர் நகராட்சி சார்பில், கரூர் பஸ் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.

அப்போது, பசுபதிபாளையம் அருகில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடம், மற்றும் சுக்காலியூர், மற்றும் வெண்ணமலை போன்ற இடங்கள் ஆய்வுக்கு எடுதுக் கொள்ளப்பட்டன.

புதிய பஸ் நிலையம், ஆய்வில் இருக்கும் போதே கரூர் பஸ் நிலையத்தை உடனே மாற்ற கூடாது என்று அன்றைய திமுக நகர் மன்ற தலைவர் கே.வி. ராமசாமி தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் பொது மக்கள், மற்றும் பொது நல அமைப்புகள், அதிமுக உள்பட ஒரு சில கட்சிகள் மட்டுமே பஸ் நிலையத்தை மாற்ற வேண்டும் என்று அன்றைய மாவட்ட கலெக்டராக இருந்த ராமமூர்த்தி, சட்டமன்ற உறுதி மொழிக் குழு, மற்றும் பல உயர் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.

இந் நிலையில், கரூர் பஸ் நிலையத்தை மாற்றியே ஆக வேண்டும் திமுக தற்போது வரிந்து கட்டுகிறது.

இதில் ஒரு வேடிக்கை என்ன வென்றால், பஸ் நிலையம் மாற்றப்பட வேண்டும் என்பதில் ஒன்றாக குரல் கொடுக்கும் திமுக கவுன்சிலர்கள் பஸ் நிலையம் அமைக்கும் இடப் பிரச்னையில் இரு பிரிவாக பிரிந்து நிற்கின்றனர்.

கரூர் பஸ் நிலையம் சுக்காலியூரில் அமைக்கப்பட வேண்டும் என்று கரூர் நகர் மன்ற கொறாடா பிரபு தீர்மானம் கொண்டு வந்தார். அதை நகர் மன்றத் தலைவர் சிவகாம சுந்தரி , மற்றும் அதிமுக கவுன்சிலர்கள், சில திமுக கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர்.

ஆனால், பஸ் நிலையத்தை வெண்ணமலை அருகில் கொண்டு வர வேண்டும் என்று கரூர் நகர் மன்ற திமுக கட்சி தலைவர் மணிராஜ் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்திற்கு கரூர் நகர் மன்ற துணைத் தலைவர் எஸ்.பி. கனகராஜ் மற்றும் சில திமுக கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளார்.

முடிவில் கரூர் பஸ் நிலையம் சுக்காலியூரில் அமைக்க வேண்டும் என்ற தீர்மானம், அதிமுக கவுன்சிலர்கள் உதவியுடன் ஒரு வோட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இது குறி்த்து திமுகவைச் சேர்ந்த கரூர் நகர் மன்றத் தலைவர் சிவகாம சுந்தரி கூறுகையில், இப்போது உள்ள பஸ் நிலையம் சுமார் மூன்னறை ஏக்கரில் மட்டுமே அமைந்துள்ளது. இதில் தினசரி சுமார் 700 க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கிறன்றன.

இதனால் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்துள்ளது. அதனால் தான் கரூர் புதிய பஸ் நிலையத்தை சுக்காலியூர் அருகில் அமைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம் என்கிறார்.

அதிமுகவைச் சேர்ந்த தாந்தோனி நகர் மன்றத் தலைவர் ரேவதி ஜெயராஜ் கூறுகையில், தாந்தோனி நகராட்சி எல்லைக்குட்பட்ட சுக்காலியூரில் பஸ் நிலையம் அமைந்தால் எல்லா மக்களுக்கும் வசதியாக இருக்கும். அதனால் தான் கட்சி பாகுபாடு இன்றி மக்கள் நலனுக்காக பஸ் நிலையத்தை கரூர் நகராட்சியே பராமரிக்க எங்கள் நகர சபை சார்பாக ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றித் தந்துள்ளோம் என்கிறார்.

சுக்காலியூர் பகுதியில் பஸ் நிலையம் அமைந்தால் கரூர் மக்களுக்கு நன்மையும் இல்லை. இரவு நேரங்களில் பாதுகாப்பும் இல்லை. அதனால் மக்கள் நெசரிசல் குறைந்த வெண்ணமலை பகுதியில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்கின்றனர் சிலர்.

சுக்காலியூர் பகுதி அருகில் தான், கரூர் கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகம், ஆர்டிஓ அலுவலகம் போன்ற பல அரசு அலுவலகம் உள்ளது. போக்குவரத்து நெரிசல் குறைந்த பகுதி. அதனால் அங்கு பஸ் நிலையம் வருவதே உகந்தது என்கின்றார் மக்கள் புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் முனுசாமி.

கரூரில் ஆளும் கட்சி, எதிர்க் கட்சி என்ற பாகுபாடு இன்றி கூட்டணி அமைத்து செயல்படுகின்றனர். கிடைத்த இடத்தை எல்லாம் வாங்கி போடுகின்றனர். லாபம் மக்களுக்கு இல்லை, அரசியல்வாதிகளுக்குத் தான்.

அதற்கு உதாரணமாக கரூர் நகராட்சியில் திமுக கொண்டு வந்த தீர்மானத்தை அதிமுகவைச் சேர்ந்த கவுன்சிலர்களே ஆதரித்துள்ளனர். இதற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்ன செய்யப்போகிறார் என்று வினா எழுப்புகிறார் கைவினைஞர் முன்னேற்ற கழக மாநில செயலாளர் விசு. சிவக்குமார்.

கரூர் நகராட்சி கவுன்சிலர்களில் திமுக 21, அதிமுக 9, காங்கிரஸ் 5, சுயேச்சை 1 என மொத்தம் 36 பேர் உள்ளனர். சுக்காலியூரில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது அதிமுகவை சேர்ந்த கவுன்சிலர்கள் 8 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஒரு அதிமுக கவுன்சிலர், ஒரு திமுக கவுன்சிலர், ஒரு காங்கிரஸ் கவுன்சிலர் சபைக்கு வரவில்லை.

இந்த பிரச்னையில் கவுன்சிலர்கள் சிலர் பணம் பெற்றுக் கொண்டு இரு தீர்மானத்திற்கும் வாக்களித்தாகவும் மக்கள் மத்தியில் பரவலான பேச்சு எழுத்துள்ளது.

இந் நிலையில், திமுக கொண்டு வந்த தீர்மானத்தற்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக கவுன்சிலர்கள் சீனிவாசன், பிரகாஷ், கணேசன், முத்துசாமி, ராஜா, வளர்மதி, பானுமதி, கமலா ஆகிய 8 பேரை நீக்கி உத்தரவிட்டுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

இந்த நிலையில், கரூர் அதிமுக மாவட்ட செயலாளரும், கரூர் சட்ட மன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி தங்களுக்கு எதிராகவும், தலமைக்கு தவறான தகவல் கொடுத்துள்ளதாகவும் கூறி, தங்களது நிலைப்பாட்டை விளக்க அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வசிக்கும் போயஸ் கார்டனுக்கும், தலைமை கழகத்திற்கும் படையெடுத்து சென்று புகார் மனு அளித்துள்ளனர் நீக்கப்பட்ட கவுன்சிலர்கள்.

இந்த விவகாரத்தில் அதிர்ச்சி அடைந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, இது குறித்து தீவிர விசாரணை நடத்தி, கரூர் அதிமுக மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜியை வறுத்தெடுத்துள்ளாராம்.

அடுத்து, கரூர் தொகுதி தேர்தல் பணிக்குழு தலைவராக பதவி வகித்து வந்த கரூர் சின்னசாமிக்கும் பதவி பறிப்பு செய்துள்ளார்.

இதனால் அடுத்து யாருக்கு ஆப்பு என்ற எதிர்பார்ப்பில் கரூர் அதிமுகவினர் திக் திக் திகிலில் மூழ்கியுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X