For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்த 'நீலி' மேய்ச்சலுக்கு வர முடியாது-கருணாநிதி

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: சாத்தானான ஒரு பெண்மணியை (ஜெயலலிதா) தமிழகத்தை மேய விட்டுவிட்டு நான் நிரந்தர ஓய்வு பெறுவதா என்று தான் யோசிக்கிறேன் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

"உயர் நீதிமன்ற வன்முறைக் கலகத்திற்கு முதல்வர் கருணாநிதி பொறுப்பேற்றிட வேண்டும்''. இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழுவில் தீர்மானம் நிறை வேற்றியிருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் முதல்வர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று சிபிஎம் சொல்லுமேயானால்- நீதிமன்றத்தில் வீசப்பட்ட அந்த முட்டைகளும்- அவற்றை வீசிய ஒரு சில வழக்கறிஞர்களும்- தங்களுக்குள்ள "பொறுப்பை'' யாரோ தட்டிப் பறிக்கிறார்களோ என்று கோபிக்கக் கூடுமல்லவா?

அது மட்டுமல்ல; மார்க்சிஸ்ட் கட்சி நண்பர்களுக்கு பணிவன்புடன் ஒரு வினா எழுப்புகிறேன்-

"தோழர்களே! மேற்கு வங்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு நந்தி கிராமம் பகுதியில் நடைபெற்ற வன்முறை- அடக்கு முறை- பல விவசாயிகள் பலி- இதற்கெல்லாம் மேற்கு வங்க முதல்வர் தான் பொறுப்பு என்பதை முதலில் ஒத்துக்கொண்டு விட்டு; அதற்குப் பரிகாரம் தேடி விட்டு- அடுத்து முட்டையால் முளைத்த கலவரம் பற்றி பேச முன் வருவீர்களா?

"அரசியலில் இருந்து நிரந்தர ஓய்வு எடுத்துக் கொள்வது தான் கருணாநிதிக்கும் நல்லது, தமிழக மக்களுக்கும் நல்லது'' என்று ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

"இடையிடையே ஓய்வு எடுத்துக்கொண்டு, உழைத்திடுக'' என்று உற்றார், உறவினர், நண்பர்கள், மருத்துவர்கள் என்னை வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். 13வது வயதிலிருந்து இன்று 85வது வயது வரையில் எழுதுகிறேன், எழுதுகிறேன்- எழுதிக்கொண்டே இருக்கிறேன்.

களைப்பில்லாமல் கடுமையான அரசியல் களப்பணி புரிந்து, சட்டமன்றப் பொன் விழா கொண்டாடியுள்ளேன்.

சுமார் 70 ஆண்டுகளுக்கு மேலாகப் பொது வாழ்வில் பெரியாரின் தொண்டனாய்- பேரறிஞர் அண்ணாவின் தம்பியாய்- தாய்த் தமிழகத்தின், இந்தியத் திருநாட்டின் மூத்த தலைவர்களுக்கும், கட்சிகளின் முன்னோடிகளுக்கும் உடன்பிறப்பாக விளங்கி வருகிறேன்.

அரசியலில் அன்று தொட்டு இன்று வரை கடைக்கோடி மனிதர்களுக் கான ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியதோடு

வள்ளுவர் கோட்டம், குமரி முனையில் வள்ளுவர் சிலை, சிலப்பதிகாரக் கலைக்கூடம், பூம்புகார், தமிழைச் செம்மொழியாக அறிவிக்கச் செய்தது, தை திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு நாளாக அறிவிப்பு மெட்ராஸ் என்பதற்கு சென்னை என்று பெயர் மாற்றம், தமிழ் கட்டாயப் பாட மொழியாக அறிவிப்பு என உருவாக்கியதோடு-

பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களாக சேலம் உருக்காலை திட்டம், நெய் வேலி நிலக்கரி இரண்டாவது சுரங்கம் - மின் திட்டம், தூத்துக்குடி ரசாயன உரத்தொழிற்சாலை, சிறுதொழில் வளர்ச்சிக் கழகம், சிப்காட் வளாகங்கள், பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம், பசுமைப் புரட்சித் திட்டம், உழவர் சந்தைகள், வருமுன் காப்போம் திட்டம், அணைக்கட்டுகள், மேம் பாலங்கள், அண்ணா மறு மலர்ச்சித் திட்டம், நமக்கு நாமே திட்டம், புதிய புதிய பல்கலைக் கழகங்கள், பொறி யியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், புதிய புதிய தொழிற்சாலைகள், 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு என்றாக்கி - சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம்- அண்ணா நூற்றாண்டு அவனி புகழ் நூலகம்-

பெரியார் நினைவு சமத்துவ புரங்கள், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்கள், பிற்படுத்தப்பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் தனித்தனியாக அமைச்சகம், பிற்படுத்தப்பட்டோர் நலக் குழு அமைத்து அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்தியது, மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கு தனி இட ஒதுக்கீடு, இஸ்லாமியருக்கு தனி இட ஒதுக்கீடு. அருந்ததியருக்கு தனி இட ஒதுக்கீடு, பெண்களுக்குச் சொத்துரிமை, அம்பேத்கர் பெயரில் முதல் சட்டப் பல்கலைக்கழகம்,

சிறுபான்மையோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நல வாரியங்கள், மத மாற்றத் தடைச்சட்டம் ரத்து என பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்து

மேலும் அடித்தட்டு மக்களுக்கான நல்வாழ்வுத் திட்டங்களாக ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய், 50 ரூபாய்க்கு மளிகைப் பொருட்கள், 7000 கோடி ரூபாய் கூட்டுறவு கடன் ரத்து, பயிர்க் கடன்களுக்கு வட்டி ரத்து, இலவசக் கல்வி, அரசு அலுவலர் குடும்பப் பாதுகாப்புத் திட்டம், மீனவர்களுக்கு இலவச வீட்டு வசதித் திட்டம், ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித் திட்டம், கர்ப்பிணிப் பெண்களுக்கு தலா 6000 ரூபாய் அளிக்கும் திட்டம்,

மகளிர் சுய உதவிக் குழுக்கள், உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு, சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு முட்டைகள், வாழைப் பழங்கள், மாணவர் களுக்கு இலவச பஸ் பாஸ், மக்கள் நலப் பணியாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டம், அரசு அலுவலர் களுக்கும், ஆசிரியர்களுக்கும் எண்ணற்ற சலுகைகள்

என்று இப்படி பட்டியலிட முடியாத அளவிற்கு இத்தனை சாதனைகளையும்- நான் ஏற்றுக் கொண்ட கொள்கைகளின் வண்மையாலும் எண்ணத்தின் செயல்பாட்டினாலும் நிறைவேற்றி வருகின்றேன். இவைகளையெல்லாம் இன்று நான் என் சாதனைகளுக்கு சான்றுகளாக தமிழ்நாட்டில் நான் விட்டுச் செல்வதென்றால் அந்த ஓய்வு பற்றி எனக்கு உற்சாகம் தான்.

எனினும் இத்தனை சாதனைகளையும் அழிக்கத் துடிக்கும் சாத்தானாம் ஒரு பெண்மணியை தமிழகத்தை மேய விட்டுவிட்டு; நான் நிரந்தர ஓய்வு பெறுவதா என்று தான் ஏங்குகிறேன்.

ஆனாலும் ஒரு ஆறுதல், ஆயிரம், லட்சம், கோடியென அய்யா கண்ட அறிவுலக அரிமாக்கள்- அண்ணா உருவாக்கிய ஆற்றல் மிகு தம்பிமார்கள்- என்னால் அணிவகுத்து வழி நடத்தப்பட்டுவரும் உடன் பிறப்புகள் இருக்கும் வரை, நான் நிரந்தர ஓய்வு பெற நினைப்பதும்- அதன் காரணமாக இந்த "நீலி'' மேய்ச்சலுக்கு வரலாம் என்று கனவு காண்பதும்- இரண்டுமே நடக்கவே நடக்காது. நீலியின் ஆசை நீர் மேல் குமிழி போல் ஆகும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X