For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வசை பாடுவது யார், நானா, ஜெ.வா?: கருணாநிதி

By Sridhar L
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: நான் ஏதோ ஜெயலலிதா மீது வசைமாரி பொழிவதாகச் சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டு மக்கள் அவருடைய அறிக்கையையும் படிக்கிறார்கள், என் அறிக்கையையும் படிக்கிறார்கள். அவர்களுக்கு தெரியும் யார்; யார் மீது வசைமாரி பொழிகிறார்கள் என்று என கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி - பதில் அறிக்கை:

கேள்வி: அறிக்கை அரசி- ஜெயலலிதா 14-ந் தேதி விடுத்துள்ள அறிக்கையில் கிண்டலாக உங்களுடைய 'பல மனைவிமார்கள்' மருத்துவமனையில் கவனித்துக்கொண்டதாக எழுதியிருக்கிறாரே?

பதில்: பத்தாண்டு காலம் முதல்-அமைச்சராக இருந்தவர்- தற்போதும் எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர்- மீண்டும் முதல்-அமைச்சராக வரத்துடிப்பவர்- ஒரு முதல்-அமைச்சரைப் பற்றி எந்த அளவிற்கு கிண்டல் செய்து சொல்லியிருக்கிறார் பாருங்கள்! நான் திரும்பி உமக்கு எத்தனை 'உடன் பிறவா சகோதரிகள்' என்று கேட்க எவ்வளவு நேரம் ஆகும்?

கேள்வி: உங்கள் குடும்ப உறுப்பினர்களின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கணக்குகளில் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் மற்றும் டாலர்கள் இருப்பதை நீங்கள் உறுதி செய்திருப்பதாக ஜெயலலிதா அறிக்கை கொடுத்திருக்கிறாரே?.

பதில்: நான் எங்கும், எப்படியும் அப்படியொரு அறிக்கை கொடுக்கவில்லை. அதற்கு அவசியமும் இல்லை. ஜெயலலிதா தான் அவருக்கு வெளிநாட்டுக்காரர் ஒருவர் 3 லட்சம் டாலருக்கான காசோலை அனுப்பியதாகவும், அதை யார் அனுப்பியது என்று தனக்கு தெரியாது என்றும், ஆனால் அதனை தன் பெயரிலே ஜெயலலிதா வங்கியிலே வரவு வைத்துக்கொண்டார் என்றும் அவரே ஒப்புக்கொண்டார். வருமான வரித்துறையில் அந்த பிரச்சினை விசாரணைக்கும் வந்தது.

கேள்வி: மாநில நிர்வாகம் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டதாக ஜெயலலிதா அறிக்கையிலே சொல்லுகிறாரே?.

பதில்: மாநில நிர்வாகம் எதுவும் பின்னுக்கு தள்ளப்படவில்லை. மருத்துவமனையிலே இருந்த போதே, அன்றாடம் நிதித்துறை செயலாளரை அழைத்து நிதிநிலை அறிக்கை தயாரிக்க நிதி அமைச்சருக்கு உதவியவன் நான் என்பதை அனைவரும் அறிவர்.

ஆம்புலன்ஸ் வண்டியிலேயே வந்து ஐகோர்ட்டு தலைமை நீதிபதியை சந்திக்க தயாராக இருக்கிறேன் என்று மருத்துவமனையில் படுத்துக்கொண்டே கடிதம் எழுதி அனுப்பியவன் நான்.

சக்கர வண்டியிலே அமர்ந்தவாறு தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு வந்து கலந்து கொண்டவன் நான்.

சிவகங்கையிலே மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல்- பாடியிலே மேம்பாலம்- தாமிரபரணி- கருமேனியாறு நதிநீர் இணைப்பு திட்டம்- 3 ஜி ஸ்பெக்ட்ரம் தொடக்கம் போன்றவைகள் எல்லாம் முதுகு வலியோடு மருத்துவமனையிலே நான் தொடங்கி வைத்த திட்டங்கள்.

எனவே, மாநில நிர்வாகம் பின்னுக்கு தள்ளப்பட்டு விடவில்லை. இதுவும் ஜெயலலிதா கூறும் பொய்களிலே ஒன்று தான்.

கேள்வி: சென்னை சட்டக்கல்லூரி மூடப்பட்டிருப்பதை பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற ஜெயலலிதாவின் குற்றச்சாட்டு குறித்து?

பதில்: ஜெயலலிதா அதே அறிக்கையில்- 'மாணவர்களின் காட்டுமிராண்டித்தனமான செயலால் ஏற்படுத்தப்பட்ட சூழ்நிலை' என்று குறிப்பிட்டிருக்கிறார். மாணவர்களைப் பற்றி ஜெயலலிதா அப்படி கூறுவது தவறு. சட்டக் கல்லூரியில் உள்ள மாணவர்களில் இரு தரப்பினரிடையே நவம்பர் 12-ந் தேதி மோதல் ஏற்பட்டபோது; கல்லூரி மூடப்படா விட்டால்- அவர்களிடையேயான மோதல் முற்றி ஏதாவது விபரீதமாக ஆகிவிட கூடுமோ என்று நினைத்து தான் மூடப்பட்டது. இருதரப்பு மாணவர்களுமே நம்மவர்கள் தான்.

அவர்களின் காட்டுமிராண்டி செயல் என்றெல்லாம் ஜெயலலிதா அறிக்கையிலே கூறியிருப்பது, அவர் சட்டக்கல்லூரி மாணவர்களை எந்த அளவிற்கு மதிக்கிறார் என்பதை வெளிக்காட்டுவதாகும்.

நம்மைப் பொறுத்தவரையில் ஒரு சுமூகமான நிலை அந்த கல்லூரியிலே ஏற்பட வேண்டும் என்பதுதான். ஆனால் ஜெயலலிதா நவம்பர் மாதத்தில் இருந்து 4 மாதங்களாக மூடிக்கிடப்பதாக அறிக்கையிலே சொல்லியிருக்கிறார். அதுவும் தவறான தகவல்.

நவம்பரில் மூடப்பட்ட கல்லூரி டிசம்பர் 10-ந் தேதி திறக்கப்பட்டது. அதன் பின் தேர்வுகள் எல்லாம் நடைபெற்று முடிந்ததும், பொங்கல் கால விடுமுறை விடப்பட்டது. பொங்கலுக்கு பின் ஜனவரி 19 அன்று சட்டக்கல்லூரி திறந்து அந்த மாதம் முழுவதும் கல்லூரி முறையாக நடைபெற்றது.

ஜனவரி 31-ந் தேதி இலங்கை தமிழர் பிரச்சினைக்காக அனைத்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்த போது- சட்டக் கல்லூரி மாத்திரமல்லாமல், தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளும் மூடப்பட்டன.

அதற்கு பிறகு ஒவ்வொரு வகை கல்லூரியாக படிப்படியாக திறக்கப்பட்டு வந்த நிலையில் பிப்ரவரி 19-ந் தேதி சென்னை ஐகோர்ட்டில் வக்கீல்களுக்கும், போலீஸ் துறையினருக்கும் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக திறக்கப்படாமல் இருந்த சட்டக்கல்லூரி விரைவில் திறக்கப்பட உள்ளது. எனவே, 4 மாதமாக சட்டக் கல்லூரி மூடிக்கிடப்பதாக ஜெயலலிதா கூறியுள்ள இந்த குற்றச்சாட்டு தவறான ஒன்றாகும்.

கேள்வி: ஒரு நாள் கூட கருணாநிதி என்மீது வசைமாரி பொழிவதை நிறுத்தவில்லை என்று ஜெயலலிதா அறிக்கையில் சொல்லி இருக்கிறாரே?

பதில்: வசைமாரியா? நானா? சட்டப்பேரவையிலே அவரைக் குறிப்பிட்டுப் பேசும்போதும், கூட்டங்களில் பேசும்போதும், அவரை 'அம்மையார்' என்றுதான் அழைத்திருக்கிறேன். இது அ.தி.மு.க. நண்பர்களுக்கே தெரியும். ஆனால் அவர் மூச்சுக்கு முன்னூறு தடவை 'கருணாநிதி, கருணாநிதி' என்றும், 'மைனாரிட்டி தி.மு.க. அரசு' என்றும்- என்னையும், என் தலைமையிலே உள்ள தி.மு.க. அரசையும் குறிப்பிடத் தவறுவதே இல்லை.

உண்மையில் அவர் என் மீது எழுப்பும் குற்றச்சாட்டுகளுக்கு நான் பதில் அளிப்பதையே இழிவாக கருதுகிறேன். எனக்கு வேண்டிய எத்தனையோ பேர், எதற்காக அவருக்கு பதில் எழுதுகிறீர்கள் என்று கூட என்னைக் கேட்கிறார்கள்.

நான் முதல்-அமைச்சராகப் பொறுப்பிலே இருந்து கொண்டு, அவர் சாற்றுகின்ற குற்றச்சாட்டுகளை மறுக்காவிட்டால், பிறகு அதை ஏன் மறுக்கவில்லை, பார்த்தீர்களா நான் சாற்றிய குற்றச்சாட்டுகள் உண்மையாகிவிட்டது, என் குற்றச்சாட்டுகளை மறுக்க தைரியமில்லை என்றெல்லாம்- அண்ணா சொல்கின்ற 'குருவி கதை'யைப் போல ஜெயலலிதா கூறுவார் என்பதற்காகத்தான் உண்மை நிலவரங்கள் ஊருக்கு தெரியவேண்டும் என்பதற்காக விளக்கங்களை தருகிறேன்.

ஆனால், நான் ஏதோ அவர் மீது வசைமாரி பொழிவதாகச் சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டு மக்கள் அவருடைய அறிக்கையையும் படிக்கிறார்கள், என் அறிக்கையையும் படிக்கிறார்கள். அவர்களுக்கு தெரியும் யார்; யார் மீது வசைமாரி பொழிகிறார்கள் என்று! ஆனால் தமிழ்நாட்டு மக்கள் நம்மை திரும்பக் கேட்பார்கள். ஜெயலலிதா வசைமாரி பொழியாவிட்டால் தானே ஆச்சரியம், அவருடைய வசைமாரிக்கு தப்பியவர்கள் தமிழகத்திலும், ஏன் இந்தியாவிலும் யார் என்று கேட்க செய்வார்கள்.

ஜெயலலிதாவின் அறிக்கையிலே உள்ள சில வாசகங்களை மட்டும் இங்கே தேதி வாரியாக தருகிறேன். வசைமாரி பொழியும் அறிக்கைகள் யாருக்கு சொந்தம் என்பதை மக்களே புரிந்து கொள்ளட்டும்!

* கருணாநிதி; பேச்சு, மூச்சற்றுப் போவார், வாய் மூடிக் கிடப்பார்- 4-10-2008

* அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவதற்கான எந்த தார்மீக உரிமையும் கருணாநிதிக்கு இல்லை- 10.10.2008

* தன்னுடைய பொழுதை கழிக்க வேண்டுமென்பதற்காக இது போன்ற அனைத்து கட்சி கூட்டத்தை கருணாநிதி கூட்டுகிறார்- 10.10.2008

* இது கருணாநிதியின் கண்துடைப்பு நாடகம்- கபட நாடகம்- 15.10.2008

* மீண்டும் தேசத் துரோகச் செயலில் கருணாநிதி ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்- 22.10.2008

* எந்த பிரச்சினையானாலும் அதை அரசியலாக்கி ஆதாயம் தேடுவதில் கருணாநிதி கை தேர்ந்தவர்- 23.10.2008

* முதலில் கைது செய்யப்பட வேண்டியவர் கருணாநிதி தான்- 23.10.2008

* சுயநலவாதி கருணாநிதி- 28.10.2008

* நாட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிற இந்த வேளையில், நாடகத்தை சுவாரஸ்யமாக நடத்திக் கொண்டிருக்கிறார் கருணாநிதி- 28.10.2008

* கபட நாடகங்களை தொடர்ந்து நடத்திக் கொண்டே இருப்பார் கருணாநிதி- 28.10.2008

* கருணாநிதி ஒரு திட்டத்தை அறிவிக்கிறார் என்றாலோ அல்லது ஒரு போராட்டத்தை நடத்துகிறார் என்றாலோ அல்லது நிதி திரட்டுகிறார் என்றாலோ அதில் நிச்சயமாக சுயநலம் இருக்கும்- 2.11.2008

* கருணாநிதியின் கையாலாகாத்தாலும், நிர்வாகத் திறமை இன்மையாலும் சுய நலத்தினாலும்- 2.11.2008

* தமிழகத்தை காப்பாற்றுகின்ற யோக்கியதை இல்லாத கருணாநிதி- 2.11.2008

* கருணாநிதி திடீரென்று குட்டிக்கரணம் அடித்தார்- 4.11.2008

* கருணாநிதி தனக்கு பிடித்தமான பொழுதுபோக்காகிய பண வசூலிப்பில் சுறுசுறுப்பாக இருக்கிறார்- 4.11.2008

* சொல்வது ஒன்று, செய்வது ஒன்று- இது தான் கருணாநிதியின் தாரக மந்திரம்- 24.11.2008

* சுயநலவாதி என்றால் உடனடியாக தமிழக மக்களின் நினைவுக்கு வரும் பெயர் கருணாநிதி- 26.11.2008

* வன்முறைக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் மக்களுக்கு உள்ளது- 19.1.2009

* இலங்கை தமிழர்களுக்காக கருணாநிதி திரட்டிய நிதி பாதிக்கப்பட்டவர்களுக்கு போய்ச் சேர்ந்ததாக இதுவரை தகவல் இல்லை. அந்த நிதியை கருணாநிதி தன்னுடைய குடும்ப நிதியில் சேர்த்துக் கொண்டு விட்டாரோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது- 22.1.2009

* கருணாநிதி ஒரு இந்தியரா, உண்மையான தமிழரா அல்லது மனைவிகள், குழந்தைகள், பேரக்குழந்தைகள் ஆகியோர் மீது அசாதாரணமான பற்றுள்ள வெறும் குடும்பத் தலைவரா?- 29.1.2009

* கருணாநிதி மக்கள் நலப் பணியில் நாட்டம் செலுத்தாமல், மகாபலிபுரத்தில் ஓய்வு, பெங்களூரில் ஓய்வு, மருத்துவமனையில் ஓய்வு, புதுப் புது படங்களைப் பார்ப்பது, அருவருக்கத்தக்க தன்னுடைய கதைகளை எல்லாம் படமாக்கி பணம் சம்பாதிப்பது, புகழ் பாடுபவர்கள் மத்தியில் உலா வருவது, குறுந்தகடு வெளியீட்டு விழா என்று உல்லாசமாக நாட்களை வீணடித்துக் கொண்டிருக்கிறார்- 1.2.2009

* தமிழகத்தை கொள்ளை அடித்துக் கொண்டிருக்கும் ஒரு சுய நலவாதி, மக்களின் ஜனநாயக உரிமைகளை பறித்து, ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைத்துள்ள கருணாநிதி- 1.2.2009.

* முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு எந்த தகுதியும் அறவே கிடையாது- 1.2.2009

* மத்திய அரசுக்கு பக்க பலமாக இருந்து கைகட்டி வாய்மூடி மவுனம் சாதித்தவர் கருணாநிதி- 8.2.2009

* பச்சோந்தி போல் இடத்திற்கு இடம் மாற்றிக் கொண்டு முன்னுக்குப் பின் முரணாக பேசிவருகிறார் கருணாநிதி - 8.2.2009

* கையாலாகாத இது போன்ற முதல்-அமைச்சரை இந்திய நாடு இதுவரை கண்டதில்லை- 23.2.2009.

* வன்முறையின் மறு உருவம் கருணாநிதி- 23.2.2009

* முதல்-அமைச்சர் பதவியில் தொடர கருணாநிதிக்கு எந்த விதமான அருகதையும் இல்லை- 23.2.2009

* முதல்-அமைச்சர் பதவி வகிப்பதற்கு அடியோடு லாயக்கற்றவர்- 23.2.2009

* ஒரு செயல் இழந்த முதல்-அமைச்சராக கருணாநிதி இருக்கிறார்- 23.2.2009

* தன் மனம் போன போக்கில் தனது அறியாமையை தனது அறிக்கையின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் கருணாநிதி- 4.3.2009

* அரசியலில் இருந்து நிரந்தர ஓய்வு எடுத்துக்கொள்வதுதான் கருணாநிதிக்கு நல்லது- 4.3.2009

* இலங்கை தமிழர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கும் கருணாநிதி- 8.3.2009

* தமிழர்கள் நலன் என்று வரும் போது வாய்மூடி மவுனியாக காட்சி அளிப்பார் கருணாநிதி- 8.3.2009

* அதிமேதாவித்தனமான கருணாநிதி - 8.3.2009

* கருணாநிதிக்கு மக்களைப்பற்றி அக்கறை சிறிதளவும் இல்லை - 9.3.2009

* தமிழர்களின் காவலன் என்ற கருணாநிதியின் முகமூடி கிழிக்கப்பட்டு விடுகிறது- 9.3.2009

* கண்துடைப்பு நாடகங்கள்தான் கருணாநிதியால் நடத்தப்பட்டது - 10.3.2009

* பல்வேறு சிரிப்பு நாடகங்களை அரங்கேற்றி, இலங்கை தமிழர்களுடைய அழிவிற்கும், துன்பத்திற்கும், துயரத்திற்கும், இன்னலுக்கும் காரணமாகியுள்ள கருணாநிதி- 12.3.2009

* இலங்கை தமிழர்கள் குறித்து யாரையும் விமர்சிக்க கருணாநிதிக்கு அருகதை இல்லை- 12.3.2009

* தமிழக மக்கள் கருணாநிதியை விரட்டியடிக்க தயாராகி விட்டார்கள்- 12.3.2009

* கருணாநிதி தன் அறிக்கையின் மூலம் தான் ஒரு தமிழினத் துரோகி என்பதை நிரூபித்துவிட்டார்- 12.3.2009

தமிழ்நாட்டு மக்கள், இப்போது சொல்லட்டும். வசைமாரி பொழிவது நானா? ஜெயலலிதாவா?

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X