For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வேண்டாம் விமர்சனங்கள்-இ.யூனியன் முஸ்லீம் லீக்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: “இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் குழப்பம் ஏன்?"" என்ற தலைப்பில் டாக்டர் சித்தீக், தட்ஸ்தமிழில் எழுதிய கட்டுரைக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அதன் மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் காயல் மகபூப் அளித்துள்ள மறுப்பு:

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் வேலூர் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில செயற்குழு 04-04-2009 அன்று சென்னையில் நடைபெற்று வேலூர் தொகுதியின் வேட்பாளராக தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. அவர்களை ஏக மனதாக தேர்ந்தெடுத்ததோடு, கேரள மாநில முஸ்லிம் லீகின் சின்னமான “ஏணி"" சின்னத்தில் போட்டியிடுவதென்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவு அனைத்து செய்தி ஊடகங்களிலும் வெளிவந்தது.

இதனிடையே அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருப்பதாக அறிவித்திருந்த 5 முஸ்லிம் அமைப்புக்கள் அக்கூட்டணியில் சார்பில் தங்களுக்கு தொகுதி கிடைக்கும் என அறிவித்திருந்தனர். ஆனால் அதிமுக இவர்களுக்கு ஒரு தொகுதியை கூட ஒதுக்கவில்லை என்பதோடு அக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள எந்தவொரு கட்சியும் ஒரு முஸ்லிம் வேட்பாளரை கூட நிறுத்தவில்லை.

எனவே திமுக கூட்டணி தரப்பில் ஒதுக்கித் தரப்பட்டுள்ள வேலூர் தொகுதியில் முஸ்லிம் வேட்பாளர் வெற்றி பெற வேண்டுமென்பது காலத்தின் கட்டாயமாகி விட்டது.

புதிய சின்னமாகிய “ஏணி"" சின்னத்தில் போட்டியிடுவதால் குறுகிய கால அவகாசத்தில் பரந்த நாடாளுமன்றத் தொகுதியில் அந்த சின்னத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க முடியமா என்ற தயக்கம் ஏற்பட்டுவிட்டது. காரணம் இந்திய தேர்தல் ஆணையம் போஸ்டர் அடிப்பதற்கும் சின்னங்களை சுவரில் வரைவதற்கும் தடைவிதித்து விட்டது.

எனவே அறிமுகமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடலாம் என்கின்ற பரிசிலனையில் இருந்த போது, இந்தியாவின் பல பகுதிகளில் ஏணி சின்னத்தில் போட்டியிடக்கூடிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் சிலரது வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ள செய்தி கிடைத்தது. அதற்கான சட்டரீதியான காரணம் தெரியாத வரை கேரள மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சியின் சின்னத்தில் போட்டியிடும் பலப் பரிட்சையில் இறங்குவதை விட உதயசூரியனில் போட்டியிடுவதே சிறந்தது என்று முடிவு செய்யப்பட்டது.

உதய சூரியனில் போட்டி என்று முடிவாகிவிட்ட பிறகு வேட்பாளரை மாற்ற வேண்டும் என்பது நிர்பந்தமாகிவிட்டது. காரணம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்பது இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி. அதன் தேசிய பொதுச் செயலாளர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி, உதயசூரியனில் போட்டியிட்டால் கட்சித் தாவல் தடைச்சட்டம் வரலாம் அல்லது வேட்பு மனுவை கூட நிராகரிக்கப்படலாம்.

ஆகவே வேட்பாளரை மாற்றுவது என்று முடிவு செய்தோம். யார் வேட்பாளர் என்பது இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பொறுப்பைச் சார்ந்தது.

அதற்கு வெளியில் உள்ள எவருக்கும் இதை விமர்சிக்கின்ற தகுதி கிடையாது. கட்சியில் மாநில நிர்வாகிகள், மாவட்டங்களின் பொறுப்பாளர்களில் வேட்பாளர் தகுதிக்குள்ள பலர் இருக்கிறார்கள். ஆனால் யாரையாவது ஒருவரைதான் வேட்பாளராக முடிவு செய்ய முடியும்.

எல்லா சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு அப்துல் ரஹ்மான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அந்த அறிவிப்பு தன்னிசையாக நடைபெறவில்லை. 09.04.2009 இரவு 8 மணிக்கு துவங்கிய மாநில செயற்குழு கூட்டம் இரவு 12 மணி வரை நடைபெற்று மாநில மாவட்ட நிர்வாகிகள் 26 பேர் கருத்துக்களை சொல்லி, வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை தலைவருக்கு வழங்கி ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்பின் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் எம்.பி. அவர்கள் மாநில நிர்வாகிகளிடமும், வேலூர் தொகுதிக்குட்பட்ட மாவட்டங்களின் நிர்வாகிகளிடமும் கலந்து ஆலோசனை செய்து அப்துல் ரஹ்மான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

எம்.அப்துர் ரஹ்மான் முஸ்லிம் லீகிற்கு வெளியில் உள்ளவரும் அல்ல புதியவரும் அல்ல. அவர் ஒரு பிறவி முஸ்லிம் லீகர், அவர் தந்தை நாட்டாமை மொகிதீன் அப்துல் காதர் பிரிக்கப்படாத தஞ்சை மாவட்ட முஸ்லிம் லீக் நிர்வாகி.

கடந்த 20 ஆண்டுகளில் அப்துர் ரஹ்மான் பங்குபெறாத முஸ்லிம் லீக் நிகழ்ச்சிகளே இல்லை எனலாம். கல்லூரி போராட்டத்தில் சிறை சென்றவர். 1990லேயே வெளிநாடு வாழ் இந்திய முஸ்லிம்களிடம் முஸ்லிம் லீகின் உணர்வை வளர்க்க காயிதே மில்லத் பேரவை தொடங்கி அதன் ஐக்கிய அமீரக தலைவராகவும் சர்வதேச ஒருங்கிணைப்பளாரகவும் பணி செய்து கொண்டிருப்பவர்.

அந்த ஈடுபாட்டின் காரணமாகவே அப்துஸ் ஸமது, அப்துல் லத்தீப் இருதரப்பையும் ஒருங்கிணைப்பதற்கு பெரும் துணைபுரிந்தவர்.

வரலாறு படைத்த பொன்விழா மாநாடு, முஸ்லிம் லீக் வரலாற்றில் பெருமை சேர்த்த மணிவிழா மாநில மாநாடு, மண்டல மாநாடுகள் இவைகளெல்லாம் மிகச்சிறப்பாக அமைவதற்கு அவருடைய பங்களிப்பு முக்கிய காரணம். நாங்கள் இன்று அமர்ந்து பணி செய்யும் முஸ்லிம் லீகின் தலைமை நிலையம் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்கள் பிரம்மாண்டமாக உருவாக்குவதற்கு இவர் ஒத்துழைப்பு மிக அதிகம்.

முஸ்லிம் லீகின் கொள்கை முழக்கமான மணிச்சுடர் நாளிதழ் வெளிவர இவர் காட்டிய அர்வம் அளவிட முடியாதது. சென்ற தேர்தல்களில் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் லீகின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட இவர் செய்த உதவிகள் மிக அதிகம்.

சமுதாய நலனில் அக்கரை கொண்ட இவர் வாதத்திறமைமிக்க பேச்சாளர். நல்ல விஷயஞானமுள்ள அறிவாளி தமிழை போன்றே ஆங்கிலம், உருது, அரபி, மளையாளம் மொழிகளை பேசத் தெரிந்தவர். நாடாளுமன்ற உறுப்பினராக செல்வதற்கு இதைவிட என்ன தகுதி வேண்டும்?.

அவருக்கெதிரான விமர்சனம் இங்கே எழந்திருந்தால் கூட பராவாயில்லை, எத்தனையோ பேருக்கு விளம்பரத்தின் வெளிச்சமின்றி உதவிக் கொண்டிருக்கின்றவருக்கு அமீரகத்தில் எதிர்ப்பு வருகிறது என்றால் அது எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது.

சட்டமன்றத் தேர்தல் வரட்டும், சட்டப் பிரச்சனைகளில் தெளிவான விளக்கங்களை பெற்று தனிச் சின்னத்தில் வெற்றி காண்போம், அதுவரை வேண்டாம் விமர்சனங்கள் என்று கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X