For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தனி ஈழமே தீர்வு-காங் சொல்லுமா..?-ராமதாஸ்

By Staff
Google Oneindia Tamil News

நாகர்கோவில்: இலங்கை பிரச்சினையில் தனி ஈழம் தான் தீர்வாக இருக்கும் என்று காங்கிரசை முதல்வர் கருணாநிதியால் சொல்ல வைக்க முடியமா என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் விறுவிறுவென நடந்து கொண்டிருக்கிறது. பாமக நிறுவனர் ராமதாஸ், அதிமுக கூட்டணியை ஆதரித்து தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

நேற்று நாகர்கோவிலில் நடந்து பொது கூட்டத்தில் கன்னியாகுமரி தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பெல்லார்மினை ஆதரித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

முதல்வர் கருணாநிதி மற்றும் காங்கிரஸ் பேசி வைத்துக்கொண்டு திட்டம் போட்டு தமிழக மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். இலங்கையில் போர் நிறுத்தம் வந்து விட்டது. வெற்றி பெற்று விட்டோம் என்று 6 மணி நேரம் உண்ணாவிரதம் நடத்தி நாடகத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார், கருணாநிதி.

தேர்தல் படுத்தும் பாடு...

போர் இலங்கையில் உள்நாட்டு பிரச்சினை அதை நிறுத்த வலியுறுத்த மாட்டோம் என 2 நாள் முன்பு கூட காங்கிரஸ் கட்சி சொன்னது. ஆனால் வற்புறுத்தினோம் என்று சிதம்பரம் இப்போது சொல்கிறார். எல்லாம் தேர்தல் படுத்தும் பாடு.

இவர்கள் ஏமாற்ற முயற்சிக்கிறார்கள். தமிழக மக்களை ஏமாற்ற முடியாது. தமிழக மக்கள் எல்லாவற்றையும் உணர்ந்து உள்ளார்கள். போரை முன்னின்று நடத்துவதே இந்திய அரசுதான் என்று தமிழக மக்கள் நம்புகிறார்கள்.

கோதயபாய வாக்குமூலம் கொடுத்துவிட்டார்...

சில தினங்களுக்கு முன்பு டிவிக்கு பேட்டி அளித்த இலங்கை அதிபர் ராஜபக்சேயின் சகோதரரும், பாதுகாப்புத்துறை செயலாளருமான கோதபாய ராஜபக்சே, இலங்கைக்கு இந்தியா என்னென்ன வகையில் உதவியிருக்கிறது என்பதை வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

இலங்கையின் வடபகுதியில் விமானப்படை தளங்களை இந்திய ராணுவம் செப்பனிட்டு கொடுத்ததாகவும், ஆயுதங்களை தந்ததாகவும், போர் பகுதியில் உளவு வேலை செய்யும் நவீன கருவிகளை வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த போரை முன்னின்று நடத்தியது இந்தியாதான் என்பதற்கு இவையெல்லாம் ஆதாரங்கள்.

இந்தியா நினைத்து இருந்தால் இந்த சண்டையை 3 மாதத்துக்கு முன்பு நிறுத்தியிருக்கலாம். போரை நிறுத்தாவிட்டால் எல்லாவிதமான உதவிகளையும் நிறுத்துவோம் என்று அறிவித்திருக்கலாம். இதையெல்லாம் செய்யாமல் இந்த தேர்தலில் தமிழக வாக்காளர்களை சந்திக்க வேண்டும் என்ற அச்சத்தில் போர் நிறுத்த நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள்.

கரியை பூசிவிட்டார் ராஜபக்சே...

போர் நிறுத்தம் வந்து விட்டது, வெற்றி என்று கருணாநிதி, சிதம்பரம் சொல்கிறார்கள். ஆனால் இவர்களது முகத்தில் கரியை பூசும் வகையில் போர் நிறுத்தம் இல்லை என்று ராஜபக்சே அறிவித்து உள்ளார். தமிழருக்கு எதிரான போரில் எங்களது ராணுவம் வெற்றி இலக்கை எட்டிவிட்டது.

எனவே, இதுவரை பயன்படுத்திய போர் விமானங்களையோ, ஏவுகணைகளையோ இனிமேல் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அதே நேரத்தில் டாங்கிகள், எந்திர துப்பாக்கிகள் ஆகியவற்றை பயன்படுத்தி தொடர்ந்து தாக்குவோம் என்று இலங்கை ராணுவம் அறிவித்து உள்ளது.

இதற்கு இந்திய அரசு, சிதம்பரம், முதல்வர் கருணாநிதி ஆகியோர் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?.

ஈழ போராட்டத்தை விடுதலை போர் என அறிவிக்க முடியுமா...

ஈழ தமிழருக்கு உதவ வேண்டும். அவர்கள் அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ வேண்டும் என்று கருணாநிதியும், அவர் தாங்கிப் பிடிக்கும் காங்கிரசும் விரும்பினால் நான் கூறும் நான்கினை அவர்களால் நிறைவேற்ற முடியுமா?

முதலாவதாக, தனி ஈழம் அமைவதுதான் ஈழ தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு என்று இந்திய அரசை, முதல்வர் கருணாநதி சொல்ல வைக்க வேண்டும், இரண்டாவதாக தனி ஈழம் அமைய எல்லா வகையிலும் உதவுவோம் என்று இந்திய அரசு அறிவிக்க வேண்டும், மூன்றாவதாக தனி ஈழ போராட்டத்தை ஈழ தமிழரின் விடுதலைப் போராட்டம் என்று அறிவிக்க வேண்டும்.

நான்காவதாக ஈழ தமிழர் போராட்டத்தில் இதுவரை 3 லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இந்த படுகொலையை போர் குற்றமாக கருதி, அதிபர் ராஜபக்சே, அவரது தளபதி பொன் சேகா, பாதுகாப்புத்துறை செயலாளர் கோதபயா ராஜபக்சே ஆகியோரை கைது செய்து போர்க் குற்றவாளியாக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும்.


நீலிக்கண்ணீர் வடிக்கிறார் கருணாநிதி...

இந்த 4 அறிவிப்புகளையும் வாக்குறுதிகளாக வெளியிட காங்கிரசும், இந்திய அரசும், கருணாநிதியும் தயாரா? இல்லாவிட்டால் ஈழ தமிழருக்காக இவர்கள் வடிக்கும் கண்ணீர், நீலிக்கண்ணீர் என்றும், தேர்தலுக்காக நடத்தும் மோசடி நாடகம் என்றும் கருதி அவர்களுக்கு மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள் என்றார் ராமதாஸ்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,

நிருபர்: மத்தியில் எந்த அணிக்கு ஆதரவு?

ராமதாஸ்: அதிமுக முடிவுக்கு ஆதரவு.

நிருபர்: நீங்கள் தவறான கூட்டணியில் இருக்கிறீர்கள் என்று திருமாவளவன் சொல்கிறாரே?

ராமதாஸ்: ஒருவரை ஒருவர் சொல்ல வேண்டியதுதான். அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு நாங்கள் பேசினோம். ஆனால் என்ன காரணத்துக்கோ அவர் அங்கேயே இருக்கிறார்.

காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் வேரோடு அழிக்கப்பட வேண்டும் என்று உண்ணாவிரதத்தின்போது அவர் பேசினார். இப்போது அங்கேயே இருக்கிறார். 2 தொகுதிகளிலும் அவர் தேர்தல் வேலை செய்யாமல் இருக்கலாம்.

நிருபர்: இந்த நான்கு வாக்குறுதிகளை தேர்தலுக்கு முன்பு சொல்ல வேண்டுமா? பின்பு சொல்ல வேண்டுமா?

ராமதாஸ்: தேர்தலுக்கு முன்னதாகவே தனி ஈழம் அமைய வேண்டும் என்று சொல்ல வேண்டும். 1989ல் பாமக ஆரம்பிக்கப்பட்டது. அப்போது இருந்தே தனி ஈழம்தான் தீர்வு என்று சொல்லி வருகிறோம்.

1985ல் கருணாநிதி 5 உறுதிமொழிகளை சொன்னார். அந்த உறுதி மொழிகள் தமிழனுக்கு ஒரு நாடு தமிழ் ஈழ நாடு என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டு உள்ளது. அதில் இலங்கையில் தமிழ் ஈழம் அமைய ஆதரவு தருவோம். இலங்கை தமிழருக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை ஓய மாட்டோம்.

தமிழ் போராளிகளுக்கு ஆதரவு தருவதில் இருந்து தவற மாட்டோம். இலங்கை தமிழரை பாதுகாக்க தியாகம் செய்ய தயாராக இருக்கிறோம். இந்த கடமையை செய்யும்போது மத்திய அரசு அடக்குமுறைகள் மேற்கொண்டால் அதை இன்முகத்துடன் ஏற்போம் என்று கூறப்பட்டு உள்ளது.

நிருபர்: அப்படியென்றால் திமுக எதையும் செய்யவில்லை என்று சொல்கிறீர்களா?

ராமதாஸ்: ஆமாம். எல்லாமே நாடகம்தான்.

நிருபர்: இலங்கை தமிழர் பிரச்சினையில் கருணாநிதி 2 முறை ஆட்சி இழந்திருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறாரே?

ராமதாஸ்: பொய். விடுதலைப்புலிகள் அமைப்பு தொடங்குவதற்கு முன்பே கருணாநிதியின் ஆட்சி முதலாவதாக கலைக்கப்பட்டது. அடுத்த முறை அரசியல் காரணங்களுக்காக கலைக்கப்பட்டது. அதில் விடுதலைப்புலிகளும் ஒரு காரணம் என்று சொல்லப்பட்டது. அவ்வளவுதான்.

நிருபர்: கூட்டணியை விட்டு நீங்கள் வெளியேறும்போது திமுக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும் என்று சொன்னீர்கள். இப்போது தேர்தலுக்கு பின்பு புதிய ஆட்சி வரும் என்று சொல்லியிருக்கிறீர்களே?

ராமதாஸ்: இப்போது திமுக மைனாரிட்டியாகத்தான் உள்ளது. தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி மூன்றாவது அணிக்கு ஆதரவு கொடுத்தால் அங்குள்ள 35 பேரின் நிலைப்பாடு என்ன? அந்த மாதிரி சூழ்நிலையில் வேறு ஆட்சி வரலாம். அப்போது தேர்தலும் நடக்கலாம். நடக்காமல் அதிமுக ஆட்சியும் அமைக்கலாம்.

நிருபர்: இது ஒரு கற்பனையாக தெரிகிறதே?

ராமதாஸ்: அரசியலில் எதுவும் நடக்கலாம் என்றார் ராமதாஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X