For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பரபரப்பாக உலா வரும் இலங்கை இனப்படுகொலை குறித்த சிடி

By Staff
Google Oneindia Tamil News

Lanka Children
சென்னை: இலங்கையில் நடந்து வரும் இனப்படுகொலை குறித்த சிடிக்கள் படு பரபரப்பாக தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியில் உலா வந்து கொண்டுள்ளன.

அப்பாவி மக்கள் மீது விழுந்து வெடித்துச் சிதறும் குண்டுகள், கதறித் துடிக்கும் பெண்கள், கோரமான மரணங்கள், சிதறுண்டு கிடக்கும் தமிழ் மக்களின் உடல்கள், நீண்ட வரிசையில் சாப்பாட்டுக்காகவும், குடிநீருக்காகவும் காத்திருக்கும் மக்கள் என அவலங்கள் அடங்கிய அந்த சிடிக்கள் பார்ப்போர் மனதை சோகத்தின் உச்சத்திற்கு இட்டுச் செல்லும் வகையில் உள்ளது.

இந்த காட்சிகளின் பின்னணியில் உணர்ச்சிப் பெருக்குடன் கூடிய கவிதை ஒன்றும் இடம் பெற்றுள்ளது.

இனி என்ன செய்யப் போகிறோம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சிடியை பெரியார் திராவிட கழகம் தயாரித்து புழக்கத்திற்கு விட்டுள்ளது. 16 நிமிடங்கள் ஓடக் கூடிய இந்த சிடியில், தமிழ் மக்களின் இந்தத் துன்பத்திற்கும், அவலத்திற்கும் காரணமான காங்கிரஸுக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டுப் போடாதீர்கள் என்ற கோரிக்கையும் இடம் பெற்றுள்ளது.

இந்த சிடி மக்கள் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

புதுச்சேரியைச் சேர்ந்த எழிலரசி என்ற பெண் இந்த சிடி குறித்து கூறுகையில், முதலில் எனக்கு இலங்கைப் பிரச்சினை குறித்து முழுமையாகத் தெரியாமல் இருந்தது. ஆனால் இந்த சிடியைப் பார்த்த பிறகு நான் அதிர்ந்து போய் விட்டேன். ஈழத் தமிழர்களுக்காக நான் மிகவும் கவலைப்படுகிறேன், அனுதாபப்படுகிறேன்.

இப்படிப்பட்ட ஒரு கொடுமைக்கு இந்திய அரசு துணை போவது ஏன் என்று புரியவில்லை. என்னைப் போலவே இந்த சிடியைப் பார்த்த பிற பெண்களும் கூட இந்திய அரசின் ஏன் தமிழ் மக்களின் சாவைக் கண்டும் காணாமல் இருக்கிறது என்று புரியாமல் கேட்டனர்.

நிச்சயம் எங்களது ஓட்டு காங்கிரஸுக்கு இல்லை. ஈழத் தமிழர்களுக்கு யார் உதவுவார்களோ அவர்களுக்கே வாக்களிப்போம் என்கிறார்.

சிடியில், இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் சேர்ந்து நிற்பது போல ஒரு படம் இடம் பெற்றுள்ளது.

கோபத்தில் காங்கிரஸ்...

இந்த சிடி காங்கிரஸார் மத்தியில் பெரும் கவலையையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதை தடை செய்ய வேண்டும் என காங்கிரஸ் கோரியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறுகையில், நான் இந்த சிடியைப் பார்த்தேன். தடை செய்ய வேண்டும் என கோரியுள்ளேன். இருப்பினும் இன்னும் இது சட்டவிரோதமாக உலா வந்து கொண்டுள்ளது.

இந்த சிடியில் காங்கிரஸ் மீது கூறப்பட்டுள்ள புகார்கள் அனைத்தும் பொய்யானவை என்றார்.

தற்போது இந்த சிடிக்களை போலீஸார் வளைத்து வளைத்துப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

தாம்பரம் அருகே 3 பேர் கைது

தாம்பரம் அருகே நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்த சிடி ஒளிபரப்பு செய்யப்பட்டதை அடுத்து அதிமுக, பாமக கட்சியினர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 1ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் அதிமுக கூட்டணி கட்சியினரின் பொதுக்கூட்டம் பீர்க்கன்கரணை சீனிவாச நகரில் நடந்தது. அதில் அந்த தொகுதி பாமக வேட்பாளர் ஏ.கே மூர்த்திக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப்பட்டது. அப்போது கூட்டத்தில் இலங்கை தமிழர் தொடர்பான சிடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதையடுத்து அங்கு சென்ற போலீசார் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்த பீர்க்கன்கரணை அதிமுக செயலாளர் குரு நேருஜி, பாமக செயலாளர் மனோகரன் மற்றும் சவுண்ட் சர்வீஸ் அமைத்து கொடுத்த பார்த்திபன் ஆகிய மூன்று பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று, விசாரித்தனர்.

அவர்கள் மூவர் மீதும் வீடியோ சட்டம் 188வது விதியின் 7வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அதிமுகவினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X