For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை இனப் படுகொலை: சாட்டிலைட் படங்களை கையில் எடுக்கும் யுஎஸ்

By Staff
Google Oneindia Tamil News

Satellite images of the same area taken by the US two months apart show thousands of refugees arriving
நியூயார்க்: வட இலங்கையில் கடந்த சில மாதங்களில் நடந்த கடும் போரின்போது அப்பாவி மக்கள் ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டது தொடர்பான சாட்டிலைட் படங்களை அமெரிக்கா தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. இவற்றை இலங்கை மீதான போர்க் குற்றங்களுக்கான ஆதாரமாக முன்வைக்க அமெரிக்கா திட்டமிடுவதாக தெரிகிறது.

கடந்த சில மாதங்களாகவே குறிப்பாக கடந்த சில வாரங்களில் நடந்த கடைசிக் கட்ட போரின்போது நடந்த நிகழ்வுகளை அமெரிக்க உளவு செயற்கைக் கோள்கள் துல்லியமாக படம் பிடித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படங்களை இப்போது அமெரிக்க அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இலங்கையின் போர்க் குற்றங்களுக்கான வலுவான ஆதாரங்களாக இவை அமையும் எனத் தெரிகிறது.

அமெரிக்க உளவு செயற்கைக் கோள்கள் எடுக்கும் படங்கள் படு துல்லியமானவை. கீழே என்ன நடந்தது என்பதை அப்படியே வெளிச்சம் போட்டுக் காட்டக் கூடியவை.

அடுத்த வாரம் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை விவகாரம் குறித்து சிறப்பு விவாதம் நடைபெறவுள்ளது. இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் முயற்சியால் இந்த விவாதம் நடைபெறுகிறது.

அந்தக் கூட்டத்தின்போது அமெரிக்கத் தரப்பில் இந்த செயற்கைக் கோள் படங்கள் வைக்கப்படக் கூடும் என்ற பேச்சும் அடிபடுகிறது.

ஒருவேளை இந்தப் படங்களை அமெரிக்கா மனித உரிமைக் கவுன்சிலில் வெளியிட்டால் அதை வைத்து ஐ.நா.வை வலியுறுத்தி, இலங்கை அரசு மீது போர்க் குற்ற வழக்கு தொடரப்படும் வாய்ப்புகளும் உள்ளன.

அமெரிக்காவின் மேரிலான்ட்டில் உள்ள பெதஸ்டா ஜியோ ஸ்பேசியல் புலனாய்வு ஏஜென்சிதான் இந்தப் படங்களை எடுத்துள்ளது. அமெரிக்க பாதுகாப்புத் துறையின் ஒரு அங்கம்தான் இந்த ஏஜென்சி. அதேசமயம், பிற நாடுகள் கேட்டால், அவர்களுக்கும் இந்த செயற்கைக் கோள் படங்களை கொடுக்க இந்த ஏஜென்சிக்கு அரசு அதிகாரம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள் இந்த செயற்கைக் கோள் படங்களை வாங்கி இவற்றை ஆதாரமாக வைத்து இலங்கைக்கு நெருக்குதல் கொடுக்கக் கூடிய வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

இதுகுறித்து இந்த ஏஜென்சியின் செய்தித் தொடர்பாளர் மார்ஷல் ஹட்சன் கூறுகையில், இலங்கைப் போர்ப் பகுதியை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இதுவரை எடுக்கப்பட்டுள்ள படங்களை அமெரிக்க வெளியுறவுத்துறையிடம் கொடுத்துள்ளோம். சில படங்களை நாங்கள் கடந்த மாதம் மீடியாக்களுக்கு வழங்கினோம்.

இருப்பினும் அனைத்துப் படங்களையும் நாங்கள் வெளியிடவில்லை. வெளியிடப்படாத படங்கள் குறித்து நாங்கள் சொல்ல அதிகாரம் இல்லை என்றார்.

ஆனால் வெளியிடப்படாத படங்களில் இலங்கை அரசின் இனப்படுகொலை தொடர்பான வலுவான ஆதாரங்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்தப் படங்களைத்தான் தற்போது அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகளும், போர்க் குற்றங்களுக்கான அலுவலகமும் ஆராய்ந்து கொண்டுள்ளனவாம்.

தரை மார்க்கமாக போய் நடந்ததை அறிய முடியாத நிலை தற்போது இலங்கையில் உள்ளதால், இந்த செயற்கைக்கோள் படங்களை மட்டுமே நம்ப வேண்டியுள்ளது.

இலங்கையில் கடந்த கால போரின்போது இரு தரப்பும் (அரசும், விடுதலைப் புலிகளும்) செய்த போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் மற்றும் இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள் யூனியன் ஆகியவை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தீர்மானத்தை தடுக்க இலங்கை தீவிரம்

இதற்கிடையே, ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படாமல் தடுக்கும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது.

கூட்டத்தில் இலங்கை விவகாரம் குறித்து விவாதிக்க இதுவரை ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 47 உறுப்பினர்களில் 17 பேர்தான் இதுவரை ஆதரவு தந்துள்ளனர்.

இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக உள்ளன. இந்த ஆதரவை வைத்து கூட்டத்தைக் குழப்பி விடலாம் என இலங்கை நப்பாசையில் உள்ளது.

ஒரு வேளை இந்தக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டால், அதையடுத்து அமெரிக்கா தனது செயற்கைக் கோள் படங்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

அப்படி செய்தால், நிச்சயம் ஐ.நா. தலையிட்டாக வேண்டும். போர்க் குற்ற வழக்குக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அது ஏதுவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச போர்க் குற்றங்களுக்கான கோர்ட்டில் தற்போது இலங்கையை நேரடியாக கொண்டு போய் நிறுத்த முடியாது. காரணம், அந்தக் கோர்ட்டில் தற்போது இலங்கை உறுப்பினராக இல்லை. எனவே ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றித்தான் இலங்கை மீது போர்க் குற்றங்களுக்கான வழக்கை தொடர முடியும்.

அங்கேயும் கூட சீனா, ரஷ்யா போன்ற வீட்டோ அதிகாரம் கொண்ட நாடுகள் இலங்கையைத் தாங்கிப் பிடிக்க காத்திருப்பதால் இந்த விவகாரம் சற்று இழுபறியாகவே தோன்றுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் கவலையில் உள்ளனர்.

இருப்பினும் இலங்கையின் முகத்திரையைக் கிழிக்க முடியும், அதற்கு தன்னிடம் உள்ள செயற்கைக் கோள் ஆதாரங்களை அமெரிக்கா வெளியிட வேண்டும் என அவர்கள் கோருகின்றனர்.

உள்நாட்டுப் பிரச்சினையில் தலையிடக் கூடாது-இலங்கை:

இதற்கிடையே, ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை இனப்படுகொலை குறித்து விவாதிப்பதை தடுக்கும் வகையில், ஐ.நா.விடம் ஒரு புதிய மனு ஒன்றை அளித்துள்ளது இலங்கை அரசு.

ஜெனீவாவில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை இனப்படுகொலை, போர்க் குற்றம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

இதைத் தடுக்கும் வகையில் ஐ.நாவுக்கு ஒரு மனுவை அனுப்பியுள்ளது இலங்கை.

அதில் இலங்கையில் நடப்பது அந்த நாட்டின் உள் விவகாரம். அதில் பிற நாடுகள், அமைப்புகள் தலையிட முடியாது. அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என அதில் இலங்கை கோரியுள்ளது.

இலங்கையின் இந்த தீர்மான ஆவணத்தை ஆதரித்து இந்தியா, சீனா, பாகிஸ்தான், எகிப்து, மலேசியா, கியூபா, இந்தோனேசியா, பொலீவியா, நிகாரகுவா, பிலிப்பைன்ஸ், சவூதி அரேபியா ஆகிய 12 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X