For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'வணங்காமண்' நிவாரண கப்பலை திருப்பி அனுப்பிய இலங்கை

By Staff
Google Oneindia Tamil News

Vanangaman Ship
கொழும்பு: புலம் பெயர்ந் தமிழர்களால் வன்னி தமிழர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட உணவு, மருந்து உள்ளிட்ட நிவாரணப் பொருட்களுடன் இலங்கை வந்த கப்பலை, அப்படியே திரும்பிப் போய் விடுமாறு இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.

புலம் பெயர்ந்த தமிழர்கள், வன்னிப் பகுதியில் வாடி வரும் தமிழ் மக்களுக்காக உணவு, மருந்து, உடைகள் உள்ளிட்டவற்றை சேகரித்து கேப்டன் அலி என்ற சிரிய நாட்டுக் கப்பலில் (இக்கப்பலுக்கு தமிழர்கள் வணங்கா மண் என்று பெயரிட்டிருந்தனர்) வன்னிப் பகுதிக்கு அனுப்பி வைத்தனர்.

நிவாரணப் பொருட்கள் அடங்கிய இக்கப்பல் வன்னிப் பகுதி கடல் பகுதியில் பிரவேசித்தபோது இதை இலங்கை கடற்படை தடுத்து நிறுத்தி கொழும்புக்குக் கொண்டு சென்றது.

அங்கு கப்பலில் இருந்த 15 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்தக் கப்பல் விடுதலைப் புலிகளின் கப்பல் என்றும், இதை அனுமதிக்க முடியாது என்றும் கூறி வந்தது இலங்கை.

இந்த நிலையில் கப்பல் முழுவதையும் சல்லடை போட்டு தேடுதல் வேட்டை நடத்திய கடற்படையினர், கப்பலில் உணவு, உடை, மருந்துப் பொருட்களைத் தவிர வேறு எதுவும் இல்லாததைக் கண்டு ஏமாந்து போனது.

மேலும் கப்பலில் இருந்தவர்களில் ஒருவர் ஐஸ்லாந்து, ஒருவர் இங்கிலாந்தைச் சேர்ந்த தமிழர், சிரியா மற்றும் எகிப்தைச் சேர்ந்த 13 ஊழியர்கள் எனவும் கடற்படை கண்டுபிடித்துள்ளது.

இதையடுத்து கப்பல் மீதான இலங்கையின் சந்தேகம் தீர்ந்தது. இதையடுத்து விரைவில் இக்கப்பல் விடுவிக்கப்படும் என கோத்தபாய ராஜபக்சே கூறியிருந்தார்.

இதுகுறித்து பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், இந்தக் கப்பலில் அபாயகரமான நோக்கத்துடன் யாரும் இல்லை, எந்தப் பொருளும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

வணங்கா மண் கப்பலில் ஆயுதங்களோ அல்லது தடை செய்யப்பட்ட வேறு பொருட்களோ இல்லை. முழுக்க முழுக்க நிவாரண உதவிப்பொருட்கள்தான் உள்ளன. இலங்கைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோக்குடன் இக்கப்பல் வரவில்லை.

இக்கப்பலில் வந்தவர்கள் செய்த ஒரே தவறு அனைத்துலக கடல் விதிகளை மீறி இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்ததுதான். இது தொடர்பாக கப்பலில் வந்த பணியாளர்கள் மற்றும் மனித ஆர்வலர்களிடம் நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம்.

இந்த விசாரணை முடிவடைந்த பிறகு அவர்கள் 2 நாளில் விடுதலை செய்யப்படுவார்கள் என்றார்.

இந்த நிலையில் இன்று இக்கப்பலை திரும்பிப் போய் விடுமாறு இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. நிவாரணப் பொருட்களை இறக்கவும் அது தடை விதித்து விட்டது.

இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்குச் சென்று நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு பிரான்ஸ் துறைமுகத்திலிருந்து இந்த கப்பல் இலங்கைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொன்றையும் இந்தியாவிடம் சொன்னோம்...

இதற்கிடையே, பிடிஐ செய்த நிறுவனத்திற்கு கோத்தபாய அளித்துள்ள பேட்டியின்போது, போரின் கடைசி நாட்களில் நடந்தவற்றை தினசரி, எம்.கே.நாராயணன், எஸ்.எஸ்.மேனன், இந்திய பாதுகாப்பு துறை செயலாளர் விஜய் சிங் ஆகியோருக்கு தினசரி சொல்லி வந்தோம் என்று கூறியுள்ளார். இந்தியா, அந்த வகையில், மிக மிக உதவியாக இருந்ததாகவும், அவர் பாராட்டியுள்ளார்.

பாதுகாப்பு படையினர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்திய இறுதி யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து புலிகள் இறுதியில் தோற்கடிக்கப்பட்டது வரை வடக்கின் நிலைமை குறித்து இந்தியாவுக்கு விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

இறுதி யுத்தத்தின் முதல் நாளிலிருந்து கடைசி வரை இந்தியாவுக்கு அனைத்து விவரங்களையும் நாங்கள் தெரிவித்து வந்தோம். சீனாவுடனோ, பாகிஸ்தானுடனோ அல்லது வேறெந்த நாட்டுடனோ நாங்கள் வைத்துள்ள உறவு தொடர்பாக இந்தியாவுடன் எந்தவித பிரச்சினையும் ஏற்பட்டு விடாத வகையில் நடந்து கொண்டோம்.

இந்திய அதிகாரிகளுடன் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்தி வைத்திருந்தோம். அதன்படி, வெளியுறவுத்துறை செயலாளர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன், பாதுகாப்புத்துறை செயலாளர் விஜய் சிங் ஆகியோருக்கும், நான், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பசில் ராஜபக்சே ஆகியோருக்கும் இடையே தினசரித் தொடர்பு இருந்தது.

நாங்கள் ஆறு பேரும் தினசரி மாறி மாறி தொடர்பு கொண்டு போர் நிலவரங்களைப் பகிர்ந்து கொண்டோம்.

அவ்வப்போது இந்த குழுக்கள் இரண்டும் சந்தித்தும் ஆலோசனை நடத்தின.

ஒருபக்கம் நாங்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக போரை தீவிரமாக்கி வந்தபோது, மறுபக்கம் தமிழ்நாடு, இந்திய அரசை நெருக்கிக் கொண்டு வந்தது.

ஆனால் நாங்கள் செய்த சில காரியங்களால், இந்தியா எங்களுக்கு சாதகமாக நடந்து கொண்டது. புலிகளுக்கு எதிரான போரின்போது இந்தியாவுடன் எங்களுக்கு நெருங்கிய நட்பு ஏற்பட்டது. இதை நாங்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டோம்.

இந்தியாவுக்கு விடுதலைப் புலிகள் மீது அக்கறை இல்லை. இதை நாங்கள் புரிந்து கொண்டோம். புலிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பது மட்டுமே இந்தியாவின் எண்ணமாக இருந்தது.

மக்கள் இழப்பைத் தடுக்க பல நடவடிக்கைகளை நாங்கள் எடுத்திருந்தோம். கனரக ஆயுதங்களின் பயன்பாட்டையும் நாங்கள் கட்டுப்படுத்தியதை இந்தியா வரவேற்றது.

புலிகளுக்கு எதிரான போரில் எங்களுக்கு வெற்றி உறுதி என்று தெரிய வந்தவுடன், எந்தவித நெருக்கடிக்கும் பணிவதில்லை என்ற முடிவுக்கு வந்தோம். புலிகள் தரப்பு போர் நிறுத்தத்திற்கு முன்வந்தபோதிலும் அதை நாங்கள் ஏற்கவில்லை. யாருக்காகவும், எதற்காகவும் எங்களது வெற்றியை விட்டுக் கொடுக்க நாங்கள் தயாராக இல்லை. அதிபரும் இந்த விஷயத்தில் உறுதியாக இருந்தோம்.

இந்தியத் தேர்தல் காரணமாகவே இலங்கை விமானப்படையின் தாக்குதல்கள் சில காலம் நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. அதற்கும், இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

இது ஒரு கூட்டு முடிவு. ஜனாதிபதி, படைத் தளபதிகளுடன் கலந்து ஆலோசித்து எடுத்த முடிவுதான் இது என்று கூறியுள்ளார் கோத்தபாயா.

போர்க் குற்றம் எதையும் செய்யவில்லை:

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை படைகளோ, அரசோ போர்க்குற்றம் எதையும் புரியவில்லை. இதுதொடர்பாக எந்தவித விசாரணையும் தேவையற்றது. இதுதொடர்பான முயற்சிகளை வீழ்த்த இலங்கை தொடர்ந்து பாடுபடும் என்று கூறியுள்ளார் இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோகித பொகல்லகாமா.

இதுகுறித்து அவர் கூறுகையில், அப்பாவி மக்களை ராணுவம் சுடவில்லை. 20 ஆயிரம் பேரை ராணுவம் சுட்டுக் கொன்று விட்டதாக கூறுவதில் உண்மை இல்லை.

போர்க்குற்றம் எதையும் நாங்கள் செய்யவில்லை. எனவே இதுதொடர்பான விசாரணை அவசியமற்றது என்றார் பொகல்லகாமா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X