For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கட்சத் தீவு-அனைத்து கட்சிகளும் ஆதரித்தால் தீர்மானம்: கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: அனைத்துக் கட்சிகளும் ஆதரி்த்தால் கட்சத் தீவை மீட்பது குறித்து சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றத் தயாராக இருப்பதாக முதல்வர் கருணாநிதி கூறினார்.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்கக் கோரியும் கட்சத் தீவை மீட்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றக் கோரியும் கச்சத் தீவில் இலங்கை ராணுவத் தளம் அமைப்பதை தடுக்கக் கோரியும் இன்று சட்டசபையில் எதிர் கட்சிகள் சிறப்பு கவனஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தன.

அப்போது நடந்த விவாதம்:

ஜெயக்குமார் (அதிமுக): மத்தளத்துக்கு 2 பக்க அடி என்றால் மீனவர்களுக்கு 3 பக்கம் அடி. வடக்கே காசிமேட்டு மீனவர்களை ஆந்திர மீனவர்கள் துன்புறுத்துகிறார்கள். கிழக்கே ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களை இலங்கை கடற்படை கொல்கிறது. மேற்கே குமரி, தூத்துக்குடி மாவட்ட மீனவர்களை கேரள மீனவர்கள் தாக்குகிறார்கள்.

1974ம் ஆண்டு உங்கள் ஆட்சியில் தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. அதை மீண்டும் பெற அதிமுக ஆட்சியில் முயற்சி நடந்தது. இன்று நிலைமை மேலும் மோசமாகி விட்டது. தமிழக எல்லையில் கூட நம் மீனவர்களால் மீன்பிடிக்க இயலவில்லை. இனியும் காலம் தாழ்த்தாமல், கச்சத்தீவை மீட்க வேண்டும்.

ஞானசேகரன் (காங்கிரஸ்): கச்சத் தீவில் இலங்கை ராணுவம் கண்காணிப்புக் கோபுரம் அமைக்கிறது. ஆயுதங்கள் குவிப்பதாக செய்திகள் வந்துள்ளன. கச்சத்தீவு பகுதியில் மீன்கள் பிடிக்கவும் வலைகளை உலர்த்தவும் அங்குள்ள கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள நமக்கு உரிமை உண்டு. அதை மீண்டும் பெற வேண்டும்.

ஜி.கே. மணி (பாமக): கடந்த 8ம் தேதி முதல் இதுவரை சிங்கள கடற்படை 3 முறை அத்துமீறி தமிழ்நாட்டு மீனவர்களை தாக்கியுள்ளது. இலங்கையில் போர் முடிந்த பிறகும் கச்சத்தீவை பயன்படுத்தி தன் பாதுகாப்பை அதிகரிக்க இலங்கை முயல்கிறது.

இதன் மூலம் பாகிஸ்தானும் சீனாவும் கச்சத்தீவை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முயல்கின்றன. எனவே மத்திய அரசு உஷாராக இருக்க வேண்டும்.

மகேந்திரன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): தமிழக மீனவர்கள் பிரச்சகளை தீர்க்க இந்தியா ரோந்து கப்பல்களை அனுப்ப வேண்டும். ஒளிரும் மிதவை விளக்குகள் அமைக்க வேண்டும்.

சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட்): கச்சத்தீவில் இலங்கை அரசு தன் ராணுவத்தை நிறுத்தத் திட்டமிட்டுள்ளது. அங்கு நடக்கும் கட்டிட வேலைகளுக்கு தமிழக மீனவர்களைப் பிடித்துச் சென்று பயன்படுத்துகிறார்கள். இன்று கூட கைகளையும் கால்களையும் கட்டிய நிலையில் பல பிணங்கள் ஜெகதாபட்டினம் அருகே மிதப்பதாக செய்திகள் வந்துள்ளன.

எனவே தமிழக மீனவர்களை பாதுகாக்க கச்சத் தீவை மீட்க வேண்டும். அதை தீர்மானமாக கொண்டு வரவேண்டும்.

ரவிக்குமார் (விடுதலைச் சிறுத்தைகள்): ஒவ்வொரு சட்டசபை கூட்டத்திலும் கச்சத் தீவு பற்றி பேசப்படுகிறது. ஆனால் எந்த தீர்வும் இதுவரை கிடைக்கவில்லை. கச்சத் தீவு ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்ய வேண்டும் என்றார்.

கருணாநிதி பதில்...

இதற்கு முதல்வர் கருணாநிதி அளித்த பதில்:

கச்சத்தீவு குறித்து நமது உறுப்பினர்கள் இங்கு கருத்துக்கள் கூறியுள்ளனர். அனை வரின் ஒரே கருத்து, கச்சத் தீவு மீண்டும் நமக்கு தரப்பட வேண்டும் என்பதுதான்.

கச்சத்தீவை மீட்போம் என்று ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இதே கோட்டை கொத்தளத்தில் சூளுரைத்தார். அவ்வாறு சூளுரைத்தவர் சில மாதங்கள் கழித்து, மத்திய அரசுக்கு விடுத்த கோரிக்கையால் எந்த பலனும் இல்லை. அவ்வளவு விரைவாக அதை மீட்க முடியாது என்றார்.

மேலும் மீனவர்கள் சர்வதேச எல்லைப் பகுதியை கடந்து சென்று, கச்சத் தீவு அருகில் மீன் பிடித்தால் தான் நல்ல மீன்கள் கிடைக்கிறது என்றும் ஜெயலலிதா குறிப்பிட்டார்.

அப்படியென்றால் நல்ல மீன்கள் கிடைப்பதற்காக சில மீனவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ கடல் எல்லையை கடந்து விடுகிறார்கள். இதனால்தான் இலங்கை படை துப்பாக்கி சூடு நடத்துகிறது. இப்படிப்பட்ட தகவலை சொன்னவர் ஜெயலலிதா.

திமுக ஆட்சியில் தான் மீனவர்கள் இப்படிப்பட்ட தொல்லைகளை அனுபவிக்கிறார்களா என்றால் இல்லை. இது எப்போதும் நடந்து வருகிறது.

கச்சத்தீவை திமுக தாரை வார்த்ததாக சொல்வது சரியல்ல. தாரை வார்ப்பது என்பது திருமணத்தில் பெண்ணை மணமகனிடம் ஒப்படைப்பதாகும். தாரை வார்ப்பது என்பது தமிழ்ச் சொல் அல்ல.

1974ல் கச்சத் தீவை இலங்கை அரசுக்கு கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு முன்வந்தபோது, திமுக பெரும் எதிர்ப்பை காட்டியது என்றாலும் அதற்கான சில காரணங்களை சொல்லி இலங்கைக்கு கச்சத் தீவு கொடுக்கப்பட்டது.

என்றாலும் மீன் பிடிக்கும் உரிமை, யாத்திரை செல்லும் உரிமை, வலைகளை காய வைக்கும் உரிமை வேண்டும் என்று திமுக வாதாடி அந்த ஷரத்துகள் சேர்க்கப்பட்டன.

ஆனால், மக்கள் ஆட்சி இல்லாதபோது, கவர்னர் ஆட்சி நடந்தபோது, யாருக்குமே தெரியாமல் அந்த ஷரத்துகள் பறிபோய் விட்டன. அதை மீண்டும் சேர்க்க மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

கச்சத் தீவில் கோபுரம் அமைக்கப்பட்டு வருவதாகவும், படைகளை அங்கு நிறுத்த ஏற்பாடு நடப்பதாகவும் இங்கு பேசினார்கள். அப்படி ஒரு நிலை உருவானால் இந்தியா வேடிக்கை பார்க்க முடியாது. வேடிக்கை பார்க்கவும் கூடாது.

அனைத்துக் கட்சிகளையும் கூட்டி முடிவு எடுக்க வேண்டும் என்று சிவபுண்ணியம் கூறினார். அப்படி ஒரு ஏற்பாடு செய்தால் சிலர் வர முடியாது என்பார்கள். முழு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டார்கள்.

அப்படி ஒரு நிலை வந்தால் இலங்கையில் உள்ளவர்களுக்கு நாமாகவே இடம் கொடுத்தது போல் ஆகிவிடும். கச்சத்தீவை தாரை வார்க்க திமுக ஒப்புக் கொள்ளவில்லை. கச்சத்தீவை கொடுக்கும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் வந்த போது திமுக வெளிநடப்பு செய்தது.

30.9.94 அன்று அன்றைய முதல்வர் ஜெயலலிதா, அன்றைய பிரதமர் நரசிம்மராவுக்கு எழுதிய கடிதத்தில், கச்சத் தீவு இலங்கை தீவுடன் நல்லுறவு ஏற்படுத்த கொடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

அதே நல்லுறவு என்ற பதிலைத்தான் மத்திய அரசும் சொல்லி கொண்டிருக்கிறது. இதுபற்றி எல்லாம் நான் விவாதம் செய்ய விரும்பவில்லை.

தமிழக மீனவர்கள் தாக்கப்படும்போது, அனைவரும் ஒற்றுமையாக இருந்து அவர் களைகாக்க முன்வர வேண்டும். இதற்காக பல தடவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்போதும் தீர்மானம் நிறைவேற்ற நான் தயாராக உள்ளேன்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் கச்சத் தீவை மீட்க தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது திமுக அதை ஆதரித்தது. வெளிநடப்பு செய்யவில்லை.

இப்போதும் அப்படி ஒரு தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்றால் அதை ஆதரிப்பதாக எதிர்க்கட்சிகளும் உத்தரவாதம் அளிக்க வேண்டும். பாமக தலைவர் ராமதாசும் தீர்மானம் கொண்டு வர சொல்லி உள்ளார்.

தீர்மானம் கொண்டு வர நான் தயாராக இருக்கிறேன். அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்க தயாராக இருப்பதாக பாமக தலைவர் ஜி.கே. மணி உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றார் கருணாநிதி.

முன்னதாக இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேச மதிமுக உறுப்பினர்கள் அனுமதி கோரினர். ஆனால், இது குறித்து முன் கூட்டியே நோட்டீஸ் தராததால் அவர்களுக்கு பேச சபாநாயகர் ஆவுடையப்பன் அனுமதி மறுத்தார்.

இதைக் கண்டித்து மதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X