For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏழு கோடித் தமிழனுக்கும் கோபாலபுரம்தானே புனிதத் தலம் - ஜெகத்ரட்சகன் புகழாரம்!!!!

By Staff
Google Oneindia Tamil News

Jagathratchagan
சென்னை: மெக்காவையும் மெதினாவையும் புனிதத்தலம் என்பார்கள் - இஸ்லாமிய சகோதரர்கள்; கிறிஸ்துவப் பெருமக்களுக்கு புனிதத்தலம் ஜெருசலேம் என்பார்கள். இந்துக்களுக்கோ திருப்பதி, காசி, ராமேஸ்வரம். ஆனால் எங்களுக்கு மட்டுமல்ல, ஏழு கோடி தமிழனுக்கும் கோபாலபுரம் தானே புனிதத்தலம் என்று முதல்வர் கருணாநிதியை புகழ்ந்து தள்ளியுள்ளார் மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன்.

பாடிடுவோம் பல்லாண்டு...

இதுதொடர்பாக மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

கோடிகள் (வீடு) கொடுத்த உனக்கு பாடிடுவோம் பல்லாண்டு! மெக்காவையும் மெதினாவையும் புனிதத்தலம் என்பார்கள் - இஸ்லாமிய சகோதரர்கள்; கிறிஸ்துவப் பெருமக்களுக்கு புனிதத்தலம் ஜெருசலேம் என்பார்கள். இந்துக்களுக்கோ திருப்பதி, காசி, ராமேஸ்வரம். ஆனால் எங்களுக்கு மட்டுமல்ல, ஏழு கோடி தமிழனுக்கும் கோபாலபுரம் தானே புனிதத்தலம்.

இந்த மண்ணில் கால்பதித்த குடியரசுத் தலைவர்கள் உண்டு, பிரதமர்கள் உண்டு, முதல்வர்கள் உண்டு, அயல்நாட்டு தலைவர்கள், அறிஞர்கள் உண்டு, அருந்தமிழ் வாணர்கள் உண்டு, சமயச் சான்றோர்கள் உண்டு, தத்துவ மேதைகள் உண்டு. இதற்கு மேல் இன்றைக்கு கோடிக் கோடி உடன்பிறப்புகளின் இதயங்கள் குடியிருப்பது கோபாலபுரத்தில் தானே! அந்தக் கருணைக் கோயிலின் மூலவரும் நீதான். முதல்வரும் நீதான்!

தமிழனின் அறியாமை நோயை அகற்றிய அந்த இடம் இனி ஏழை மக்களின் உடல்நோயை தீர்க்கும் இடமாக திகழப்போகிறது. தன் மூதாதையர்கள் சம்பாதித்த சொத்தை தன் கட்சிக்கு தந்தவர்கள் உண்டு, கல்விக்குத் தந்தவர்கள் உண்டு, மயிலுக்கு ஆடை தந்தவர்கள் உண்டு, முல்லைக்குத் தேர் தந்தவர்கள் உண்டு. தன்னை புகழ்ந்து பாடிய புலவர்களுக்கு நாட்டைக் கொடுத்தவர்கள் உண்டு, அரசில்கிழாரின் அருந்தமிழ் கேட்டு பரிசு தந்த பெரும்சேரல் இரும்பொறை உண்டு, வாடிய பயிரைக் கண்ட வள்ளல் பெருமான் உண்டு.

துயர் தீர வீடு கொடுத்த வள்ளல்...

ஆனால், தன் முயற்சியால், வியர்வையால், ரத்தத்தால் இரவும், பகலும் அயராது உழைத்து ஈட்டிய செல்வத்தில் வாங்கிய ஒரு வீட்டையும், இந்த நாட்டிற்கு அர்ப்பணித்து, ஏழைகள் ஏற்றம்பெற தந்த உங்கள் கொடை ஈடு இணையற்றதல்லவா! உலகத்தில் மக்கள் துயர்தீர வீட்டையே கொடுத்த வள்ளல் நீங்கள் மட்டும்தானே!

தத்துவத்தின் தேரோட்டமே...

தங்கள் மூச்சுக்காற்றால் சூழப்பட்டிருக்கும் கோபாலபுரம், எதிர்காலத்தில் ஏழைகளின் சுவாசக் காற்றல்லவா சூழப் போகிறது. கண்ணை, கருத்தை கடன் கொடுத்து நின்ற மக்களை தன்னை உணர்ந்து தலை நிமிர வைத்த எங்கள் தத்துவத்தின் தேரோட்டமே!

மழைத்துளி சிப்பியில் விழுந்தால் முத்தாகிறது, பூவில் விழுந்தால் தேனாகிறது, புல்லில் விழுந்தால் நட்சத்திரமாகிறது. ஆனால், எங்கள் இதயத்தில் விழுந்து என்றும் தேனாய் இனிக்கின்றத் தலைவா! பள்ளத்தில் கிடப்பவர்கள் மீது உள்ளத்தைச் செலுத்தும் கருணைக்கடலே!

நந்தா விளக்கே, குல விளக்கே...

சொல்லோடும், பொருளோடும், புல்லோடும், கல்லோடும், பொன்னோடும், மணியோடும் வாழ்கின்ற தமிழனை காக்க வந்த எங்களின் நந்தா விளக்கே! குலவிளக்கே! சிறைச்சாலைகள் செதுக்கித்தந்த சிந்தனை சிற்பியே! நெருக்கடிநிலை பிரசவித்த நெருப்புச் சூரியனே!

21ம் நூற்றாண்டின் வரலாற்றுச் சாசனத்தை இளைஞர் தளபதியைக் கொண்டு செதுக்கப் புறப்பட்டிருக்கும் புதிய புறநானூறே!

கடைகோடித் தமிழனுக்கும், கடைமடைத்தமிழனுக்கும் கடைசி நம்பிக்கையாய் திகழும் எங்களின் கற்கண்டுத் தலைவா! உன்னை சொற்கொண்டு வாழ்த்த சுந்தரத்தமிழில் வார்த்தைகள் இல்லை! நீ நடந்துவரும் பாதையில் அன்று கல்லும், முள்ளும் இருந்தது, இன்று எங்கள் இதயமல்லவா இருக்கிறது.

என்றைக்கும் ஒரு தாயின் பரிவுடனும், ஒரு போர் வீரனின் ஆவேசத்துடனும் காட்சித்தரும் 86 அகவை இளைஞனே! உலகத்தில் உன் வரலாற்றைப்போல் இதுவரை இருந்ததுமில்லை, இனி இருக்கப் போவதுமில்லை. இதுவரையில் நாங்கள் உன் பாதங்களைத்தான் பார்த்தோம். இன்று நீ கொடுத்த கொடையால் உன் படிவங்களையே பார்க்கிறோம்.

குணத்தில் குழந்தை - கொடுப்பதில் தந்தை...

குணத்திலே குழந்தை நீ! கொடுப்பதிலே தந்தை நீ! அணைப்பதிலே அன்னை நீ! அன்புக்கோர் தெய்வம் நீ! ஏழ்மையில் பிறந்து, ஏழ்மையை உணர்ந்து, ஏழைகள் உயர இதயம் விரித்தத் தலைவா! தமிழனின் அறிவாலயமே! வாசமலரிட்டு வணங்கிய தங்களின் திருவடிகளை அடியேன் பாசமலரிட்டு பணிந்து வணங்குகிறேன். நன்றி மலர்களைக் குவிக்கின்றேன் என்று கூறியுள்ளார் ஜெகத்ரட்சகன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X