For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேபி பாதுகாப்பு-'சர்வதேச நாடுகள் உறுதி செய்ய வேண்டும்'

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு: சட்டவிரோதமாக நாடு கடத்தப்பட்டு இலங்கை பாதுகாப்புப் படையினர் பிடியில் வைக்கப்பட்டுள்ள குமரன் பத்மநாதன் என்கிற செல்வராசா பத்மநாதனின் பாதுகாப்பை உறுதி செய்ய சர்வதேச சமுதாயம் இதில் தலையிட வேண்டும் என்று நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான செயற்குழுவின் இணைப்பாளர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய அரசியல் ராஜதந்திரப் பாதையைத் தலைமைதாங்கி வழிநடத்தி வந்த செல்வராசா பத்மநாதன் அவர்கள் ஆகஸ்ட் 5ம் நாள் தாய்லாந்தில் வைத்துக் கைது செய்யப்பட்டு இலங்கைத் தலைநகர் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகளை ஆதாரம் காட்டி இலங்கை மற்றும் அனைத்துலக ஊடகங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து நாட்டின் எல்லைக்குள் இவ்வாறான கைது நடைபெற்றதென்பதை தாய்லாந்து அரசு மறுத்துள்ளது. மேலும் பத்மநாதன் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வைத்துக் கடத்தப்பட்டதாக சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நெருக்கமானவர்கள் உட்பட, தமிழ்ச் சமூகத்தில் பல்வேறு தரப்புகளிடமிருந்து பெறாப்பட்ட தகவல்களின் அடிப்படையில், கோலாலம்பூரில் உள்ள 'டியூன்' விடுதியில் இக்கடத்தல் நடத்தப்பட்டதாக நாம் அறிகின்றோம்.

இவ்வாறான சட்ட விரோத நடவடிக்கை, இலங்கையின் ராணுவப் புலனாய்வுத் துறையினரால், மலேசிய பாதுகாப்பு அல்லது புலனாய்வு நிறுவனத்தின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டதாக நாம் கருதுகின்றோம்.

செல்வராசா பத்மநாதன் அவர்களின் இயற்பெயர் இன்டர்போலின் தேடப்படுவோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாயின் அனைத்துலக அரசுகள் அவற்றின் துறைகளினால் மேற்கொள்ளப்படும் எவ்வகையான கைது நடவடிக்கைகளும் உள்நாட்டு சட்ட ஒழுங்கு நடைமுறைகளுக்கும் அனைத்துலக சட்ட ஒழுங்குகளுக்கும் அமைவாக மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதை நாம் தீர்க்கமாக நம்புகின்றோம்

செல்வராசா பத்மநாதன், சித்திரவதைகளுக்கெதிரான சட்டமுறையின் மூன்றாம் ஷரத்திற்கு ஏற்ப பாதுகாப்பு உரிமை உடையவர். அதன்படி எந்தவொரு நாட்டிலும் ஒருவர் சித்திரவதைக்குட்படுத்தப்படும் சாத்தியமிருந்தால் அந்நாட்டுக்கு அவர் எடுத்துச் செல்லப்படுதல் தடை செய்யப்படுகிறது.

ஆனால் செல்வராசா பத்மநாதன் கைதில், அனைத்துலக நடைமுறைகள் மீண்டும் சட்ட நியமங்கள் மீறப்பட்டுள்ளதையே காண்கின்றோம். பத்மநாதன் அவர்கள் சட்டங்கள் எதனையும் மீறியிருந்தால் சட்ட நியமங்களுக்கு அப்பாற்பட்டு சூறையாடும் கூட்டங்கள் காடையர் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்கள் போல் இயங்கி அவரைச் சிறைபிடிப்பதற்கு பதிலாக நாடு கடத்தலுக்கான ஆணையைப் பெற்று அவரைப் பெறுவதே சரியான முறையாக இருந்திருக்கும்.

செல்வராசா பத்மநாதன் அவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் மீள் உருவாக்க முயற்சிகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருந்தார் என்பதையும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைகளுக்கான போராட்டத்தினை அரசியல் ராஜதந்திர அணுகுமுறைகளை நோக்கி வழிநடத்திக் கொண்டிருந்தார் என்பதையும் குறிப்பிட விரும்புகின்றோம்.

இப்பணியில் அவர் பெரும் சவால்களை எதிர்கொண்டிருந்த போதும் இலங்கைத் தீவில் தமிழர்களுக்கான நீதியான அரசியல் எதிர்காலம் நோக்கிய நகர்வினை நம்பிக்கையுடனும் தீவிர மன உறுதியுடனும் முன்னெடுத்து வந்தார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை மக்கள் வாக்களிப்பின் மூலம் உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கான அடிமட்டத்திலிருந்து உருவாகும் ஒரு ஜனநாயக நிறுவனமாக ஏற்றுக்கொள்வதன் மூலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு மக்களாட்சி வழியானதொரு தலைமைத்துவத்தை கட்டியெழுப்புவதை அவர் ஆதரித்தார்.

பத்மநாதனை வழிப்பறிக் கும்பல் பாணியில் கடத்தியவர்கள், புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இந்த அரசியல் மீள் உருவாக்க முயற்சியைத் தடுக்கவே விரும்புகின்றனர். ஆயினும் தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்கான தமிழீழ தேசியச் செயல் திட்டம் ஒரு தனி மனிதனின் ஆற்றல் அர்ப்பணிப்பில் மட்டும் தங்கியிருப்பதில்லை என்பதால் எண்ணிலடங்காத உறுதி மிக்க பலரது உழைப்பின் மூலம் இத்திட்டம் வெற்றி கிட்டும் வரை தொடரும் என்பது உறுதி.

பத்மநாதன் அவர்கள் மலேசிய அதிகாரிகளின் உதவியுடன் கடத்தப்பட்டிருப்பின் அக்கடத்தல் தொடர்பான விபரங்களை வெளியிடுமாறு மலேசிய அரசாங்கத்தினை உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் சார்பாக நாம் வேண்டுகின்றோம்.

மலேசிய அரசாங்கத்திடம் இது தொடர்பாக தகவலேதும் இல்லையெனில் நடந்தேறிய இச்சட்ட விரோத கடத்தல் தொடர்பான விசாரணைகளை மலேசிய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென உறுதியாக வேண்டுகிறோம்.

பத்மநாதன் அவர்கள் இலங்கை அரசாங்கம் கூறுவது போல் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தால் அனைத்துலக நியமங்களுக்கு ஏற்ப அவரது பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும் அவருக்கு வேண்டிய சட்ட அறிவுரைகளைப் பெறுவதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தவும், அனைத்துலக சமூகம் இதில் தலையிட வேண்டும் எனவும் அறை கூவல் விடுக்கின்றோம்.

இலங்கை அரசு மூன்று லட்சம் தமிழ் மக்களை நாஜி முகாம் போன்ற வதைமுகாம்களில் கால வரையறையின்றி தடுத்து வைத்திருப்பதையும் கவனத்தில் கொண்டுவர விரும்புகின்றோம். பத்மநாதன் அவர்களது உயிர்ப் பாதுகாப்பு தொடர்பாக அஞ்சுவது போலவே இந்த மக்களது பாதுகாப்பு தொடர்பாகவும் நாம் அஞ்சுகின்றோம்.

இதனால் மூன்று லட்சம் மக்களின் பரிதாப நிலைக்கு விரைவில் தீர்வு காண்பதிலும், பத்மநாதன் அவர்கள் எல்லாவித அனைத்துலக நியதிகளுக்குட்பட்ட பாதுகாப்பினை பெறுவதையும் உறுதிப்படுத்துமாறு அனைத்துலக சமூகத்தை வேண்டுகிறோம் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X