பன்றி காய்ச்சல் புனேவில் அதிக பாதிப்பை ஏற்படுத்துவது ஏன்?

பன்றி காய்ச்சல் நோய் காரணமாக இந்தியாவில் மற்ற நகரங்களை விட புனே தான் அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. நாட்டில் இதுவரை பலியான 23 பேரில் 15 பேர் புனே நகரை சேர்ந்தவர்கள் என்பது அதிர்ச்சிக்குரியது. அதாவது பலியானவர்களில் சுமார் 65 சதவீதம் பேர் இந்த நகரை சேர்ந்தவர்கள்.
இது குறித்து மத்திய சுகாதார அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், புனேவில் உள்ள சில பகுதிகளில் வசிக்கும் மக்களை ஹெச்1என்1 வைரஸ் ஒட்டுமொத்தமாக தாக்கியுள்ளது. ஆனால், அவர்களில் யாரும் சமீபத்தில் வெளிநாடுகளுக்கு செல்லவில்லை என்றார்.
இதையடுத்து பன்றி காய்ச்சல் புனேவில் மட்டும் ஏன் இவ்வளவு அதிக உயிர்களை பலி வாங்கியுள்ளது, அதிகம் பரவுவது ஏன், அங்குள்ள அதிகாரிகள் நோய் தடுப்புக்கு என்ன செய்தார்கள் போன்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்து வருகின்றன.
இந்த கேள்விகளுக்கு சில பதில்கள் கிடைத்துள்ளது. முதலாவதாக, அங்குள்ள மக்கள் ஆரம்பத்தில் போதிய விழிப்புணர்ச்சி இல்லாமல் பன்றி காய்ச்சல் நோயாளிகளிடம் நெருங்கி பழகியுள்ளனர். இதனால் இந்த நோய் வேகமாக பரவியுள்ளது.
இரண்டாவது, மாநில அரசு இந்த நோய் தாக்குதலை தடுக்க போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. கண்கெட்ட பின் சூரியனை வணங்குவது போல், நோய் தொற்றி பல நாட்களுக்கு பின்னர் தான் நோய் தடுப்புக்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை செய்துள்ளது.
அடுத்ததாக, இங்குள்ள வானிலை ஹெச்1என்1 வைரஸ் வேகமாக பரவுவதற்கு ஏற்றதாக இருப்பதாக கூறப்படுகிறது.
புனேவில் இந்த நோயின் தாக்கம் குறித்து தேசிய தொற்று நோய் கழக விஞ்ஞானி ஒருவர் கூறுகையில், ஆரம்பக்கட்டத்தில் மாநில அரசு போதிய நடவடிக்கை எடுக்க தவறியதால் வேகமாக பரவியுள்ளது என்றார்.
சென்னை பெண்ணுக்கு ஸ்வைன் இல்லை...
வாரனாசியில் காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சென்னை பெண்மணிக்கு பன்றி காய்ச்சல் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 11ம் தேதி சென்னையை சேர்ந்த பிரேமலதா என்ற பெண்மணி பன்றி காய்ச்சல் அறிகுறிகளுடன் வாரனாசியில் உள்ள எஸ்பிஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
தற்போது பரிசோதனை முடிவில் அவருக்கு பன்றி காய்ச்சல் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவருக்கு சாதாரண வைரஸ் காய்ச்சல் தான் தெரிகிறது.
இது குறித்து அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி ஆர்எஸ் வர்மா கூறுகையில், லக்னெள ஆய்வுகூடம் அவருக்கு பன்றி காய்ச்சல் இல்லை என்பதை உறுதி செய்துள்ளது. இருந்தாலும் அவர் உடனடியாக டிஸ்சார்ஜ் செய்யப்பட மாட்டார். அவர் இன்னும் சில நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்படுவார் என்றார்.